
“திம்மராசண்ணன் வீட்டு விசேஷத்துக்குக் கடா உரிக்க வரச் சொன்னாங்க சார். உப்புத்தூர்லருந்து வாறோம்.”
“நெருப்பு அணைகிறேனென்றாலும் காற்று விடுவதாயில்லை!” - மூர்க்கர்கள்
1979, மழைக்காலம், அதிகாலை 3 மணி (குதிரைக்குளம் - ஒட்டப்பிடாரம் தாலுகா).
ஊர் உறங்கிக்கொண்டிருந்தது. ஊரின் மேற்கு கண்மாய் பாதைக்குக் கறுப்பு உருவங்களாக சைக்கிளில் இரண்டு பேர் தலையில் உருமா கட்டோடு வேகு வேகுவென்று மிதித்துக்கொண்டு வருவது தெரிந்தது. ஊரின் நுழைவிலிருக்கும் கணேசன் டீக்கடை மரபெஞ்சில் ஓட்டப்பிடாரம் ஸ்டேஷனிருந்து வந்த போலீஸ்காரர் படுத்துக்கிடந்தார். சைக்கிளில் வந்திருந்தவர்கள் ஊருக்குள் நுழைந்தார்கள். டீக்கடையில் படுத்துக்கிடந்த காவலர், சைக்கிளின் சிறிய `லொட லொட’ அரவம் கேட்டு விழித்து, சத்தம் கொடுத்தார்.
“ஏ யாருய்யா அது... நில்லு!”
டீக்கடைக்குள்ளிருந்து சத்தம் வருவதைக் கேட்டு, ஓட்டிவந்தவன் சைக்கிளை நிறுத்தினான். ஊர்க்காரர்கள் யாராவது இருக்கும் என்று நினைத்தவர்களுக்கு, காக்கிச் சட்டையோடு தலையில் மப்ளர் சுற்றி, கையில் டார்ச்சோடு ஒரு போலீஸ்காரர் வருவதைப் பார்த்ததும் வெலவெலத்துப்போனது. போலீஸ்காரர் கையிலிருந்த டார்ச்சை முடுக்கி அவர்கள் மேல் வெளிச்சத்தை அடித்துப் பார்த்தார்.

“வக்காலி, எந்த ஊருக்காரய்ங்கடா நீங்க... மூஞ்சைப் பாத்தா திருட்டுப்பயலுக மேறி இருக்கு. கைல என்னடா?’’
சாக்குத்துணியில் எதையோ சுற்றி, பின்னால் உட்கார்ந்திருந்தவன் பிடித்துக்கொண்டிருந்தான்.
“ஓங்கி ஒரு அழுத்து அழுத்திப் போயிடுவோமாண்ணே?”
“வாய மூடுலே... அவம் சத்தம் போட்டான்னா ஊரே எந்திரிச்சி வந்து கொன்னுப்புடுவாய்ங்க. நான் பாத்துக்கிடுதேன். மூடிட்டு பேசாம இருல.’’ முனங்கலான சிறிய குரலில் பேசினார்கள். போலீஸ்காரர் அருகில் வந்து சாக்குத் துணியை விரித்துக் காட்டச் சொன்னார். பின்னால் உட்கார்ந்திருந்தவன், சைக்கிள் ஓட்டியவனைச் சிறிய தயக்கத்தோடு பார்த்தான்.
“ம்... சார்கிட்ட காட்டுல. நாம என்ன கொள்ளயடிச்சிட்டா போய்க்கிட்டுருக்கோம்...”
தயக்கத்தோடு அவன் திறந்து காட்டினான்.
நாலைந்து கனத்த இரும்புக்கத்திகள். வெள்ளை நிறத்தில் நீளமான பால் கயிறு. அதில் நிறைய உலர்ந்த ரெத்தக்கறை. கத்திகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசாயிருந்தன. போலீஸ்காரருக்குச் சட்டென உறக்கச் சடவு தெளிந்து முகம் இறுக்கமானது.
“என்னடா இதெல்லாம்..?”
“திம்மராசண்ணன் வீட்டு விசேஷத்துக்குக் கடா உரிக்க வரச் சொன்னாங்க சார். உப்புத்தூர்லருந்து வாறோம்.”
“இது என்னடா?” கையில் எடுத்துப் பார்த்தபடியே கேட்டார்.
“கொக்கி சார். ஆட்டை உறிச்சு இதுலதான் மாட்டித் தொங்கவிடுவோம்.”
போலீஸ்காரருக்கு அப்பாடா என்றிருந்தது “ஏண்டா உப்புத்தூர்லருந்தா சைக்கிளை மிதிச்சிட்டு வாறீங்க...”
“வயிறு இருக்குல்ல சார். ஒரு கடா உரிச்சா தோலும், அம்பது ரூபாயும் தர்றாங்க. இந்த எச்சக் காசுக்குத்தான் இம்புட்டு தூரம் வங்கொலையா மிதிச்சிட்டு வாறோம்.”
“செரி போங்கடா... வீடு தெரியும்ல..?”
“தெரியும் சார்...”
சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தவன் வேறு போலீஸ்காரர்கள் யாரும் இருக்கிறார்களா எனச் சுற்றிலும் பார்த்துக்கொண்டே வந்தான்.
“இப்ப... இவன் மட்டும்தான். காலைலதான் மொத்த ஸ்டேஷனும் இங்க வரும்” சைக்கிள் மிதிப்பவன் சொன்னான்.
ஊரின் கடைக்கோடியில் ஒரு வீட்டில் நாலைந்து டியூப் லைட் கட்டப்பட்டு, ஒரு விசேஷ வீட்டுக்கான அம்சத்தோடு இருந்தது. ஓலைத் தடுக்குப் போட்டு ஒத்தத் தட்டு பந்தல் வேய்ந்திருந்தார்கள்.
சைக்கிளை தூரமாக நிறுத்திவிட்டு, விசேஷ வீட்டின் அருகில் வந்து அவர்கள் நின்றபோது, எதிர்த் திண்ணையிலிருந்து ஒரு கிழவி சத்தம் கொடுத்தது.
“யாருய்யா அது..?”
“திம்மராசு கடா உரிக்க வரச் சொன்னாப்ல...’’
“என் மயன்தான். இம்புட்டு தேரத்துலயே வந்துட்டீங்க. இவ்வளவு நேரம் ஆளும் பேருமா சீட்டாடிட்டு இப்பதான் போயி படுத்தாய்ங்க... கடா அந்தா... கிழக்கால வேப்பமரத்துல கெட்டிக்கிடக்குப் பாருங்க. இருங்க வாறேன்.”
கிழவி சேலையை அள்ளி மேலே சாத்திவிட்டு, அருகிலிருந்த அலுமினியப் பாத்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு புட்டாணியைத் திண்ணையில் தேய்த்து தேய்த்து இறங்கி வந்தது.
“ரெத்தத்தை இந்தப் பாத்திரத்துல பிடிச்சுக்கோங்க. நல்லா வெங்காயம், மிளகாயப் போட்டு வதக்கிக் குடுத்தா ராசு நல்லாச் சாப்பிடுவான்.”
“ம்... வாங்கிக்கோடா...”
“ராசு அந்தா மூணாம் வீட்டுத் திண்ணையில தூங்குதாம் பாருங்க...”
அப்போதுதான் சுற்றி கவனித்தார்கள். எல்லா வீட்டுத் திண்ணையிலும் ஆட்கள் படுத்திருந்தார்கள்.
“செரி ஆத்தா... நீ படுத்துக்கோ.” கிழவி மீண்டும் திண்ணையில் தன் புட்டாணியைத் தேய்த்துத் தேய்த்துப் போய் படுத்துக்கொண்டார்.
“பாத்து... வேற ஆட்கள் யாரையும் எழுப்பி விட்டுடாதீங்க. எல்லாம் சொக்கராய்ங்க... சொந்தக்காரய்ங்க... அப்புறம் தூக்கத்துல எழுப்பிட்டோம்னு சடவு வந்துடும்.”
“நீங்க வருவீகன்னுட்டுத்தான் இம்புட்டு நேரம் முழிச்சிருந்தேன்...” என்று சொல்லிவிட்டுக் கிழவி போர்த்திப் படுத்துக்கொண்டார்.
நான்கு மணியிருக்கும். குதிரைக்குளம் பஸ் ஸ்டாப்புக்கு லோடு ஏற்றிச் செல்லும் ஒரு கூண்டு வேன் வந்து நின்றது. டிரைவர் இன்ஜினை ஆஃப் செய்யாமல் ஓடவிட்டுக்கொண்டிருந்தார் அதன் `டுறு... டுறு... டுறு...’ சத்தத்தில், டீக்கடைக்குள் உறங்கிக்கொண்டிருந்த போலீஸ்காரர் திரும்பவும் எழுந்து உட்கார்ந்துகொண்டார். எரிச்சலோடு கண்ணைக் கசக்கியவாறே பார்த்தார். வேனின் பின்பக்கமிருந்து அழுக்குக் கைலியோடு இறங்கிய ஒருவன், “போலாம்...” என்று டிரைவரின் பக்கமாகக் கத்திச் சொல்லிவிட்டு, பீடி பற்ற வைத்துக்கொண்டே மூத்திரம் பெய்ய வேலிக்கருவேலம் பக்கம் ஒதுங்கினான். புகை மூட்டத்தோடு வேன் கிளம்பிச் சென்று மறைந்தது.
மூத்திரம் பெய்துவிட்டு வருபவனை போலீஸ்காரர் அழைத்து, அவன் கக்கத்தில் மடித்துவைத்திருக்கும் துணியால் மூடப்பட்ட பொருளை விரித்துக்காட்டச் சொன்னார். வந்தவன் விரித்துக் காட்டினான். அதில் நல்ல தடிமனான இரண்டு கசாப்புக் கத்திகள் இருந்தன.
“திம்மராசு வீட்டுக்குக் கடா உரிக்க வந்தேங்க.”
போலீஸ்காரருக்கு ஏதோ உறுத்த, அவனை இழுத்துக்கொண்டு ஊருக்குள் ஓடினார். எல்லோரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஆட்டுக்கிடா ஓர் ஓரத்தில் கட்டியிருந்தது.
சற்றுத் தள்ளியிருக்கும் மரத்தைப் பார்த்த போலீஸ்காரர் அப்படியே உறைந்துபோய்விட்டார். அழுக்கு கைலிக்காரன் அதிர்ந்து கத்திவிட்டான். ஊரே திடுமென எழுந்து ஓடி வந்தது. தொடர்ந்து அவன் கத்தியதைப்போலவே நிறைய கத்தல்கள்... அழுகுரல்கள்...
வேப்பமரத்தில் மாட்டப்பட்ட கொக்கியில், தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு கழுத்து வெட்டி எடுக்கப்பட்ட திம்மராசுவின் உடல் தொங்கிக்கொண்டிருந்தது. கிழவி ஆட்டு ரெத்தம் பிடிக்கக் கொடுத்த அலுமினியப் பாத்திரம் தலையில்லாத கழுத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. பாத்திரம் ரத்தத்தால் நிறைந்து மண்ணில் வழிந்துகொண்டிருந்தது.
கிழவிதான் கத்தியது. “ஐயய்யோ... சொன்ன மாறியே பண்ணிப்புட்டாய்ங்களே... இப்ப நான் என்ன பண்ணுவேன்...”
திம்மராசுவின் தலையைத் தேடியும், கொன்றவர்களைத் தேடியும் அவனின் உறவினர்கள் தூத்துக்குடி திசைக்கு ஆட்களை முடுக்கிவிட்டார்கள்.
1979, கோடைக்காலம், அதிகாலை 3:45 மணி (முத்துசாமிபுரம் - தூத்துக்குடி வட்டம்).
ஊரின் கக்கடைசி சலவைக்கார வீடு. பின்பக்கம் கழுதைக் கொட்டகையில் மூன்று கழுதைகள் நின்றுகொண்டே தூங்கிக்கொண்டிருந்தன. வீட்டின் வெளியே போட்டிருந்த தகரச் சாய்ப்பில் அழுக்குத் துணிகள் பெரிய பெரிய பொட்டலங்களாகக் கட்டப்பட்டு காலையில் கண்மாயில் அலசுவதற்காகக் கிடந்தன. முருகாயி, சம்போகம் முடிந்தும் அழுக்குத் துணிகளின் மேல் அப்படியே படுத்துக்கிடந்தாள். ராயப்பன், தன் தொடையில் சிந்தியிருந்த ஈரத்தை அருகில் அவிழ்ந்து கிடந்த கைலியை எடுத்துத் துடைத்துவிட்டு, ஈரப்பக்கத்தை வெளிப்புறமாக வைத்துக் கைலியை உடுத்திக்கொண்டான். முருகாயி, தன் உடு துணிகளை அப்படியே கைகளில் மொத்தமாக அள்ளிக்கொண்டு, செம்பட்டை படிந்த நீளமான முடியை முன்னுக்கு இழுத்துவிட்டு மறைத்தபடி, எந்த ஆடையும் அணியாமல் குளிப்பதற்காகக் கழுதைக் கொட்டகைப் பக்கம் சென்றாள். வீட்டைச் சுற்றிலும் நெஞ்சளவுக்குப் பனைமட்டையால் வேலி அடைத்திருந்தார்கள்.
ராயப்பன் வெளிச்சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலை எடுத்துப்போட்டு உடலைச் சாய்த்தான். அவனுக்கு அசதியும் உறக்கமுமாக வந்தது. கிளம்ப மனமில்லாமல் அப்படியே கண்ணை மூடிப் படுத்தான். அவசர அவசரமாக நாலு சொம்பு ஊற்றிவிட்டுச் சேலையைச் சுற்றிக்கொண்டு வந்தவள், அவன் தூங்குவதைப் பார்த்து அவனை உசுப்பினாள்.
“இங்க பாரு, இந்த சோலில்லாம் வெச்சுக்காத. கிளம்பு. இன்னும் கொஞ்ச நேரத்துல தேரம் விடிஞ்சிரும். யாராவது பாத்தா எனக்கு அசிங்கமாப் போயிரும் பாத்துக்கோ.”
“ஏண்டி விரட்டுற...”
“சும்மாவே எங்க அம்ம வேற திட்டிக்கிட்டே இருப்பா. கிளம்பு.”
“நீ போயித் தூங்கு... நான் செத்த நேரம் தலையைச் சாச்சுட்டு கிளம்பிருவேன்... தூங்கலாமில்ல.”
முருகாயிக்கு அவனைப் பார்த்தால் பாவமாக இருந்தது.
“சரி அங்க தகரக் கொட்டகையிலயாவது தூங்கு.” வெளியிலிருந்து பார்த்தால் யாருக்கும் தெரியாது என்பதற்காகச் சொன்னாள்.
“உள்ள வெக்க... இங்கயே கொஞ்ச நேரம் கெடக்கேன். நீ போ...”
இதற்கு மேல் அவன் சொன்னாலும் கேட்க மாட்டான் என்பதால், அவள் உள்ளே போய் படுத்தாள். அவள் அம்மா, முருகாயியிடம் ஏதோ அதட்டும் குரலில் பேசுவது அவனுக்குக் கேட்டது. எல்லோரும் தூங்கிவிட்டார்கள். வேலிப்படலைத் திறந்துகொண்டு மூன்று பேர் உள்ளே நுழைந்தார்கள். அதிலொருவன் ராயப்பனை உசுப்பினான். ராயப்பன் மெல்ல கண்விழித்துப் பார்த்துவிட்டு மருண்டு கத்த வாயைத் திறந்தபோது, ஒருவன் துண்டால் அவன் வாயை மூடினான். கையையும் காலையும் ஒவ்வொருவர் பிடித்துக்கொள்ள, ஒருவன் அவன் காதின் அருகில் வந்து சொன்னான். “தூங்கிட்டேன்னு வெய்யி... யாரு உன்னைக் கொன்னான்னு உனக்குத் தெரியாமப் போயிடும்லா... அதான் உன்னை எழுப்பி விடுதோம்.” ராயப்பனின் கண்களில் பயமும் கெஞ்சலும் தெரிந்தன.
பேசியவன், ஒரு சிறிய ஆட்டு உரலை எடுத்து வந்து, தூக்கி அவன் நெஞ்சில் ஓங்கிப் போட்டான். நெஞ்செலும்பு உடைந்து ராயப்பனுக்கு மூச்செடுக்கச் சிரமமானது. நெஞ்சில் கிடந்த ஆட்டுரலை மீண்டும் ஒரு முறை எடுத்து ராயப்பனின் தலையில் போட்டான். ஒரு வண்டு காலில் மிதிபட்டு நசுங்கும் சப்தம். காலைப் பிடித்திருந்தவனுக்கு உயிர்த் துடிப்பு மொத்தமாக அடங்கிவிட்டதை உணர முடிந்தது. கையை எடுத்தான். எந்த அசைவுமில்லை.

கல்லை முகத்திலிருந்து எடுக்காமல் அப்படியே கிளம்பினார்கள். அவர்கள் வேலியைத் தாண்டி சிறிது தூரம் போனதுமே, கழுதைகள் விடாமல் கத்தத் தொடங்கின.
எரிச்சலாக வீட்டுக்குள்ளிருந்து முருகாயியின் அம்மா வெளியே வந்து பார்த்தார். கயிற்றுக் கட்டிலின் அடியில் ரெத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. பதறி உள்ளே போய் முருகாயியை ஓங்கி எத்தினார். உறக்கக் கலக்கத்தோடு எழுந்த முருகாயிக்கு எதுவும் புரியவில்லை.
அழுகையோடு ரகசியக் குரலில் முருகாயியிடம் சொன்னார்... “ரௌடிப்பயகூட சகவாசம் வெச்சுக்காதன்னு சொன்னா கேக்குறியாடி... புருஷன் போயிட்டான்னா நீயும் எங்கயாவது விழுந்து சாவேன்... வெளிய போய் பாருடி.”
முருகாயி வெளியே வந்து பார்த்ததுமே, அப்படியே `தொம்’மென்று மண்தரையில் உட்கார்ந்துவிட்டாள்.
முருகாயியின் அம்மாதான் அவளிடம் அவசர அவசரமாக வந்து சொன்னார்.
“விடியுறதுக்குள்ள எங்கயாவது எடுத்துட்டுப் போயி போட்டுறலாம்.”
இருவரும் அவசர அவசரமாக கனத்த துணியால் அவன் உடலைப் பொதிபோலச் சுற்றிக் கட்டி, பெரிய கழுதையின் முதுகின் மேல் போட்டார்கள். முருகாயியின் அம்மா ரெத்தம் வடிந்துகிடந்த மண்தரையை நிறைய மண்போட்டு மூடினாள்.
அம்மா, மகள் இருவரும் கழுதையை அழைத்துக்கொண்டு பதற்றமாகக் கிளம்பினார்கள். முதுகிலிருந்து உடல் கீழே சரிந்து விழுந்தது. தூக்கிவைக்க இருவரும் சிரமப்பட்டார்கள். தோட்டக் காவலுக்கு நிற்கும் யாரோ, ஆளரவம் கேட்டுச் சத்தம் போட்டார்கள். பிணத்தை அப்படியே போட்டுவிட்டு வேகமாக வீட்டுக்குள் வந்து கதவடைத்துக்கொண்டார்கள்.
- பகை வளரும்

எழுத்தாளர் நரன், விருதுநகரைப் பூர்வீகமாகக்கொண்டவர். 2002-லிருந்து நவீன இலக்கிய தளத்தில் இயங்கி வருகிறார். இதுவரை நான்கு கவிதை நூல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல் எழுதியிருக்கிறார். இவரது சிறுகதைகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன. தற்போது சில படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதிவருகிறார். சிறந்த சிறுகதைத் தொகுப்புக்காக விகடன் விருது பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு ‘ஆனந்த விகடனில்’ வெளிவந்த இவரது “ஏழு கடல் ஏழு மலை” தொடர்கதை வாசகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. ஜூனியர் விகடனில் வெளிவரும் இவரது முதல் தொடர்கதை இது!