மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 15

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 15
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 15

“இழந்தவன், கடுமையாய் இழப்பை ஏற்படுத்துவான்!” - மூர்க்கர்கள்

கொடிமரமும் அவனின் ஆட்களும் சேர்ந்து கடா பாண்டியைக் கொன்றழித்துப்போட்டார்கள். போதாக்குறைக்கு மேட்டுக்குக் கறிவாங்க வந்த ரோசம்மாவின் தூக்குச்சட்டியிலும், அவன் காதலியின் பாத்திரத்திலும் பன்றிக்கறியோடு அவன் உடற்சதைகளையும் வன்மத்தோடு கலந்துவிட்டிருந்தான் கொடிமரம்.

சமுத்திரத்தின் ஆட்கள் கடாபாண்டியை ஊர் முழுக்கச் சல்லடையாகச் சலித்துப்பார்த்தார்கள். எங்கேயும் காணவில்லை. திரும்ப ஆற்றங்கரைக்குப் போய்ப் பார்த்தார்கள். கரையில் போட்டிருந்த சாரம் வரை கிடந்ததால், ஒருவேளை அவனை ஆற்று நீர் இழுத்துக்கொண்டு போயிருக்குமோ எனச் சந்தேகத்தோடு ஆற்றின் கரைப்பக்கமாக நடந்துபோய் தேடினார்கள். குரூஸ் அண்ணன்தான் சொன்னார். “ஆத்துல எத்தாம் பெரிய வெள்ளம் வந்தாலும் பாலத்துலயிருந்து குதிச்சு நீந்துவான். இந்தக் கழுத்து வரைக்கும் ஓடுற தண்ணில விழுந்தெல்லாம் அவனுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது. எந்த லெக்குலயாவது ஒளிஞ்சு கிடப்பான். வெளிய வந்திருவான்” எல்லோரும் கலைந்துபோனார்கள்.

ஊரில் எல்லோர் முகத்திலும் தீபாவளி சந்தோஷம். சினிமாக் கொட்டகைகள் நிரம்பிவழிந்தன. சமுத்திரத்தின் ஆட்களும் பாண்டியை மறந்து குடியும் புதுத்துணியும் தீபாவளி விருந்துமாக உற்சாகத்திலிருந்தார்கள். கடா பாண்டியின் காதலி அங்கேயும் இங்கேயுமாக அலைபாய்ந்தாள். நல்ல உடுப்பை உடுத்திக்கொண்டு பாண்டி நாளைக்கு வருகிறேனென்று சொன்ன எல்லா இடங்களிலும் போய் தேடிவிட்டு, ஏமாற்றமான முகத்தோடு திரும்பி வந்தாள். பாண்டியை எங்கேயும் காணவில்லை.

வீட்டினர் கறியை அலசிக் கொடுக்கச் சொன்னபோது, அதை வாங்கி அலசத் தொடங்கினாள். கறியைக் கைகளால் அளைந்தபோது வித்தியாசமாக ஏதோ தட்டுப்பட, அதைக் கைகளால் எடுத்தாள். கறுப்பும் வெள்ளையுமாக உருண்டையாக மனிதக்கண் ஒன்று அவள் கையில் சிக்கியிருந்தது. அதிர்ந்து கத்தியவளாகக் கறிப்பாத்திரத்தை கீழே விட்டாள். கறித்துண்டுகள் சிதறி கீழே தரையில் விழுந்தன. கீழே கிடந்த அந்த ஒற்றைக்கண் அவளையே கூர்மையாகப் பார்த்தபடியிருந்தது.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 15

அவளுக்குள் அந்தக் கண்ணைப் பலமுறை மிக நெருக்கமாகப் பார்த்த ஞாபகம் வந்துபோனது. வீட்டினர் ஓடி வந்து அவளைத் திட்டிக்கொண்டே, மண்ணில் விழுந்த கறியை மீண்டும் எடுத்து அலசினார்கள். அவள், அப்பாவிடம் அந்தக் கண்ணைத் தூக்கி எறியச் சொன்னாள். அவர் அதைக் கழுவிக்கொண்டே, “பன்னியோட கண்ணு சாப்பிட்டா பார்வை நல்லாத் தெரியும்மா... விடு நீ சாப்பிடாட்டி அப்பா சாப்பிட்டுக்கிடுதேன்’’ அவர் அதைக் கையிலெடுத்து கழுவி, கறிப்பாத்திரத்துக்குள் போட்டு, தன் மனைவியிடம் கொடுத்தார். அவர் மனைவி அதை வாங்கிக்கொண்டுபோய் வதக்க அடுப்பிலேற்றினார்.

அவளுக்குத் திரும்ப திரும்ப அந்தக் கண்ணின் ஞாபகம் வந்துவந்து போனது. நேற்று அவ்வளவு காதலோடும் காமத்தோடும் தன்னை விழுங்குவதுபோல் பார்த்த பாண்டியின் கண்தான் அது. சர்வ நிச்சயமாக அது அவனுடைய கண்தான். அடுப்பில் கறி வதங்கிக் கொண்டிருந்தது. அவள் அம்மாவை விலகச் சொல்லிவிட்டு அடுப்பிலிருந்த சூடான பாத்திரத்தை அப்படியே வெறுங்கையால் பிடித்துக் கீழே இறக்கினாள். கையைவிட்டு அந்தக் கண்ணைத் தேடி எடுத்தாள். உப்பும் மிளகாயும் மஞ்சள் மசாலாவும் இறங்கி, அது காமாலை கண்டதுபோல மஞ்சளாகியிருந்தது. பாதி வதங்கி, சுருங்கி, இடுங்கி அடையாளம் காண முடியாமல் இருந்தது.

அவளின் அம்மா பொடணியில் இரண்டு போட்டார். “பிள்ள... உனக்கென்ன கோட்டி கீட்டி பிடிச்சிருக்கா. போ... அந்தாள...’’

ரோசம்மாவைவிட பனிமலரின் கைக்குப் பன்றிக்கறி நன்றாக ருசி கூடிவரும். இருந்தும் இன்றைக்கு “அந்த ஆளுக்கெல்லாம் என்னால சமைச்சுத் தர முடியாது போம்மா...” என்று கறாராகச் சொல்லிவிட்டாள். ரோசம்மா உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு அடுப்பு மூட்டத் தொடங்கினாள். பிறகு என்ன நினைத்தாளோ, “நீ எந்திரிம்மா...’’ என்றபடி அலசிய கறியை பனிமலர் தன் கையில் வாங்கிக்கொண்டாள்.

என்றைக்குமில்லாமல் இன்று எங்கேயும் வெளியே போகாமல் சிறுவர்கள் வெடி போடுவதைப் பார்த்துக்கொண்டு வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார் மரியதாஸ். மதியம் சாப்பாட்டு நேரம் நெருங்கியதும் சமைத்த கறியை சமுத்திரத்துக்கு, தன் மகனிடம் கொடுத்துவிடலாம் என்று யோசித்திருந்தாள். அதனாலேயே ஜானிடம் “எங்கேயும் சோலியா போயிராத... வேல இருக்கு’’ என்று மட்டும் சொல்லிவைத்திருந்தாள். பனிமலர், அலசிய கறியைச் சட்டியில் போடும்போதே பார்த்துவிட்டாள். “என்னம்மா இது... நாலஞ்சு துண்டு மட்டும் இலசா எதோ வேற கறி மாதிரி இருக்கு... பன்னிக்கறி நல்லா வார் வாரால்ல இருக்கும்?’’

“கறி இளசா இருக்குடி... குட்டி பன்னியா இருக்கும்... ஊர்ல காவாசி சனம் பன்னிக்கறி வாங்கத்தான் நிக்குது. அவ்வளவு பன்னிக்கி எங்க போக... பொறந்த குட்டியைக்கூட வெட்டியிருப்பானுங்க. விடு... கறி இளசா இருந்தா நல்லாத்தான் இருக்கும்” பனிமலருக்கு ஒரு பக்கம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாலும், ரோசம்மாவின் கண்கள் நொடிக்கொரு தரம் வாசலையே எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தன. மரியதாஸ் எங்கேயும் நகராமல் வெடிச்சத்தத்துக்கு நடுவே வாசலில் அமர்ந்திருந்தார்.

அடுப்பில் கறி வெந்து, கொழுப்பு கரைந்து எண்ணெயாகத் திரண்டு மிதக்கத் தொடங்கிய நேரத்தில், ரோசம்மாள் யதார்த்தமாக வாசலைப் பார்த்தாள். அப்போது வாசலில் மரியதாஸைக் காணவில்லை. மெல்ல வெளியே வந்து பார்த்தாள். மரியதாஸ் எங்கோ கிளம்பிப்போயிருந்தார். அவசரமாகச் சந்தன சோப்புப் போட்டு முகத்தைக் கழுவி, வேறு சீலை மாற்றி நொடிக்குள் கிளம்பினாள். சிறிய அடுப்புக்கரித்துண்டைத் தூக்குச்சட்டியில் போட்டு மூடி காலில் செருப்பை மாட்டிக்கொண்டு அவசர அவசரமாகக் கிளம்பினாள்.

பாவம்... நல்ல நாளும் அதுவுமா சமுத்திரம் சாப்பிடாமல் கிடப்பான் என்று அவள் மனது சொல்லிக்கொண்டேயிருந்தது. அவள் தெருவில் இறங்கவும், வாசலில் ராமின் பைக் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. நடந்து செல்ல நினைத்தவள் திரும்பி வந்து ஜானிடம், “ராம்கிட்ட வண்டிய வாங்கிட்டு வந்து அம்மாவ இறக்கிவிட்டுடுறியா?” என்று கேட்டாள்.

அம்மாவுக்காகவெல்லாம் இல்லை. சமுத்திரத்துக்காகச் சரி என்று ஒத்துக்கொண்டான். ராமிடம் சாவியை வாங்கிக்கொண்டு அம்மாவைப் பின்னால் அமரச் சொன்னான்.

போகிற வழியில் அம்மாவிடம் கேட்டான். “எப்பம்மா வருவ..?”

“ஏண்டா?’’

“சும்மா கேக்கேன். சொல்லேன்.”

“சாயந்தரம் ஆகும்டா.’’

“ம்...”

“ஏன் கேக்குற?’’

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 15

“இல்ல... நானு, அக்கா, ராம்... மூணு பேரும் சினிமாக்குப் போலாம்னு...”

“டேய்... வீட்ல உங்கப்பா தனியா இருப்பாரு... பேசாம கிடங்க...”

ஜான் இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு வண்டி ஓட்டினான்.

“சரி... வெரசாப் போயிட்டு பொழுதுக்குள்ள வந்துருங்க...’’

“ம்ம்ம் சரிம்மா...”

வண்டி சமுத்திரம் தங்கியிருக்கும் தோணிக்கருகே வந்து நின்றது. ஜான் தன் அம்மாவை இறக்கிவிட்டதும் அங்கிருந்து கிளம்பத் தயாரானான். “நல்ல நாளும் அதுவுமா... வந்து மூஞ்சக் காட்டிட்டு போலாம்ல... வா.”

வண்டிச் சத்தத்தைக் கேட்டதுமே சமுத்திரம் தோணியிலிருந்து கீழே இறங்கி வந்தான். ரோசம்மாவுடன் ஜானையும் அங்கே பார்த்தது அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது. “வாய்யா...” என்று அழைத்தவாறே தோணிக்கு மேலே கூப்பிட்டான்.

“இல்ல. அவன் சினிமாக்குப் போறானாம். நான்தான் உங்ககிட்ட முகத்தக் காட்டிட்டுப் போடேன்னு சொன்னேன்.”

“ச்செரி...” சமுத்திரம் மடித்துக் கட்டியிருந்த வேட்டியைச் சிறிது ஏற்றி, டிரவுசர் பையிலிருந்து இரண்டு இருபது ரூபாய் நோட்டுகளை எடுத்து அவன் சட்டைப் பையில் திணித்தான். ஜான் வேண்டாமென்று மறுத்தான். ரோசம்மா, “இருக்கட்டும். வெச்சுக்க... நீ கிளம்பு” என்று அவனை அனுப்பிவைத்தாள்.

ஜானோ, மரியதாஸோ திரும்ப வந்துவிடுவதற்குள்... பயத்தோடு வாசலை எட்டி எட்டிப் பார்த்தவாறு பனிமலரும் ராமும் கட்டித் தழுவிக்கொண்டிருந்தார்கள். பனிமலர் தன் கைகளால் ராமின் எலும்புகள் நொறுங்குவதுபோல் இறுக்கிக் கட்டிப்பிடித்திருந்தாள். அவன் தலைமுடியை இறுக்கமாகப் பிடித்து தன் மார்களில் சாய்த்துக்கொண்ட வேளையில், பைக் சப்தம் கேட்டது.

(பகை வளரும்...)