மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 16

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 16
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 16

“பகை கொண்டவனுக்கும், பழி கொண்டவனுக்கும் அச்சமற்ற இரவுகளும், ஆயுதங்களற்ற பயணங்களும் சாத்தியமில்லை!” - மூர்க்கர்கள்

ரோசம்மா சமுத்திரத்துக்குக் கறிசமைத்து, தோணிக்கு எடுத்து வந்திருந்தாள். தூக்குச்சட்டியை ஓரமாக வைத்துவிட்டு, சமுத்திரத்தின் முன்னால் ரோசம்மா தன் உடுப்புகளை ஒவ்வொன்றாகக் களையத் தொடங்கினாள். சமுத்திரத்துக்கு அவளின் நிர்வாண உடலும் வனப்பும் கொஞ்சமும் கிளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ‘என்ன ஆச்சு இன்னிக்கி?’ என்பதுபோல் அவனைக் கேள்வியோடு பார்த்தாள் ரோசம்மா.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு, “சரி... வா சாப்பிடலாம்” என்று ரோசம்மாவே அவனை அழைத்தாள். வட்டிலில் சோறு போட்டு, தூக்குச்சட்டியிலிருந்து கறியைக் கிளறியெடுத்து நல்ல துண்டுகளாக எடுத்துப்போட்டாள். சமுத்திரம் வட்டிலிலிருந்து வித்தியாசமாகத் தெரிந்த ஒரு பிஞ்சுத் துண்டை எடுத்து வாயில் போட்டு மென்றான். அவ்வளவுதான் ஓங்கலித்து வாந்தியெடுத்தான். காரணமே இல்லாமல் அவனுக்கு ஏனோ கடாபாண்டியின் ஞாபகம் அந்த நேரத்தில் வந்து வந்து போனது.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 16

தீபாவளிக்கு எல்லா தியேட்டர்களிலும் புதுப்படம் போட்டிருந்தார்கள். லட்சுமி டாக்கீஸில் இளைஞர்கள் கூட்டம் குவிந்திருந்தது. தியேட்டர் வாசலில் ரஜினிகாந்த் ஒரு சிறிய யானையோடு நிற்கும் ‘அன்னை ஓர் ஆலயம்’ சினிமா போஸ்டர் பெரிதாக ஒட்டப்பட்டிருந்தது. ரசிகர்கள், முந்தைய நாள் இரவு முழுக்க தியேட்டர் வாசலெங்கும் கலர் தோரணங்கள் கட்டியிருந்தார்கள். பழைய சைக்கிள் டயரில் தட்டிவைத்துக் கட்டி, போஸ்ட் கம்பங்களில் தொங்கவிட்டிருந்தார்கள். நிறைய தட்டிகளில் கடாபாண்டியின் பெயர் எழுதப்பட்டிருந்தது.

கடாபாண்டியும், அவன் நண்பர்களும் அன்றைக்கு நான்கு ஷோவும் தலைவர் படத்தைப் பார்க்க வேண்டுமென்று ஏற்கெனவே தீர்மானித்திருந்தார்கள். ஆனால், அவனை நேற்றிலிருந்து காணவில்லை என்பதால் நான்கைந்து முறை வீட்டுக்கே ஆளனுப்பித் தேடினார்கள். ஒவ்வொரு ஷோ முடிந்து வெளியே வந்தபோதும், தியேட்டரின் எதிரேயிருக்கும் வெற்றிலை பாக்குக்கடையில் வைத்து, பீடியை இழுத்தபடி அவர்கள் கடாபாண்டியைக் காட்டமாக வைதார்கள்.

“வேற செட்டோட சேர்ந்து எங்குனயாவது குடிச்சுட்டுக் கிடப்பானா இருக்கும்.’’

“அந்த மேரியக்கா மவகூட எங்கனயாச்சும் சுருண்டு கெடக்கானான்னு தெரியல. நைட்டு கொடி ஒட்டவும் வராம, தலைவர் படத்துக்கும் வராம சுத்திட்டு திரியுறான்ல… வரட்டும். மன்றத்துல நாளப்பின்ன போஸ்ட்டிங் கேட்டு வந்து நிப்பான்ல... அப்போ இருக்கு கச்சேரி.”

தியேட்டரில் அடுத்த ஆட்டத்துக்கான பெல்லடித்ததும் பீடியைத் தூக்கிப் போட்டுவிட்டு, மீண்டும் அடுத்த ஷோவுக்குப் பாய்ந்தார்கள்.

மேரியக்காவின் மகள் தியேட்டர் வாசலிலேயே சுற்றிக்கொண்டிருந்தாள். கடாபாண்டி எங்காவது தென்படுகிறானா என்று தேடினாள். ஸ்டாண்டில் அவன் சைக்கிள் நிற்கிறதா என அங்கிருந்த ஆட்களிடம் விசாரித்தாள். அவன் செட்டு ஆட்களைக் கண்டபோது அவர்களிடம் கேட்கலாமா என்று யோசித்து, பிறகு தயக்கத்தோடு அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.

மதியக் காட்சி பார்க்க பனிமலர், ராம், ஜான் மூவரும் ஒரே பைக்கில் லட்சுமி டாக்கீஸ் வாசலில் வந்து நின்றார்கள். கூட்டத்தைப் பார்த்த மாத்திரத்தில் டிக்கெட் கிடைக்குமென்ற நம்பிக்கையே அவர்களுக்கு இல்லை.

“ஆம்பளய்ங்க பக்கம் கூட்டமா இருக்கும். நீ பொம்பளய்ங்க ரோவுக்குப் போயி, மூணு டிக்கெட்டா எடுத்துரு. நாங்க இரும்புக்கதவு வழியா வாங்கிட்டு உள்ள வந்துடுறோம்.’’ பைக்கிலிருந்து இறங்காமலேயே ஜான், தன் அக்காவிடம் டிக்கெட் வாங்க வழி சொல்லிக்கொண்டிருந்தான்.

அப்போது ராமை யாரோ பெயர் சொல்லி அழைத்தார்கள். குரல் கேட்ட திசையைத் திரும்பிப் பார்த்தான். அங்கு ராமின் அப்பா ஞானவேலும், அம்மாவும் ஒரு ஜீப்பின் அருகே நின்றுகொண்டிருந்தார்கள். ராம் தயக்கத்தோடு வண்டியில் அவர்கள் அருகே சென்றான். மூவரும் ஒரே பைக்கில் வருவதைக் கண்ட ராமின் அம்மாவுக்குக் கடும் அதிர்ச்சி.

“யாருன்னு தெரியல... ஒரு பொம்பளப் புள்ளைய உக்காரவெச்சுக்கிட்டு எப்படி வாராம் பாருங்க...’’ இறுக்கமான முகத்தோடு தன் கணவர் காதில் கிசுகிசுத்தார் ராமின் அம்மா.

ராம் முதலில் ஜானை அவர்களிடம் அறிமுகப்படுத்தினான். “ப்பா… இது ஜானு... இது அவன் அக்கா பனிமலர். கோவில்பட்டில டீச்சர் ட்ரெயினிங் படிக்கிறாங்க.’’ பனிமலர் அவர்களைப் பார்த்து வண்டியில் அமர்ந்தவாறே கும்பிட்டாள்.

“ஒ... அக்காவா...” தங்கள் மகனைவிட மூத்த பெண் என்பதால் ராமின் பெற்றோருக்கு `அப்பாடா’ என்றிருந்தது.

“செரிடா, வண்டிய ஸ்டாண்டுல நிப்பாட்டிட்டு வா...’’

“டேய் வண்டிய நான் போயி நிப்பாட்டிட்டு வாறேன். நீ பேசிக்கிட்டு இரு’’ என்று ஜான் வாங்கிக்கொண்டான்.

ஞானவேல் கஸ்டம்ஸில் உயரதிகாரி என்பதால், தியேட்டர் முதலாளியே கும்பிட்டு வரவேற்க அங்கு வந்தார். வண்டியை எடுத்துக்கொண்டு முன்னால் பத்தடி போன ஜான், வண்டியை நிறுத்தி ராமை அழைத்தான்.

“டேய்… உங்க அப்பாட்ட சொல்லி நமக்கும் சேர்த்து டிக்கெட் கேளுடா...’’

“ஏண்டா, நாங்க படத்துக்குக் கூப்பிட்டப்போ வரலேன்னு சொன்ன...’’

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 16

“நீங்க… ‘உதிரிப்பூக்கள்’ போவீங்கன்னு நினைச்சேன். இங்க வருவீங்கன்னு யாருக்குத் தெரியும்.’’

தியேட்டர் முதலாளி ஞானவேலை உள்ளே வரவழைத்து, ஆபீஸில் ஃபேனுக்கடியில் உட்கார வைத்து டொரினோ கொடுத்தார்.

“எங்களுக்கும் மூணு டிக்கெட் வாங்கிக் குடுங்கப்பா...’’

“எல்லாருக்கும் சேத்து பால்கனிக்கு அஞ்சு டிக்கெட்டா சொல்லிட்டேன்டா...’’

“ம்ஹூம்... நாங்க மூணு பேரும் கீழ தனியா உக்காந்துக்கிறோம்...’’

“ஏண்டா... பால்கனில உக்காந்து பாக்கலாம்ல?’’ என்றார் ராமின் அம்மா.

“நாங்க கத்திக்கிட்டு, விசில் அடிச்சுக்கிட்டு பாப்போம். இங்க உக்காந்தா சத்தமாச் சிரிக்கக்கூட முடியாது.’’

“நீங்க ரெண்டு பேரும் ஆம்பளப் பசங்க... ஆடிக்கிட்டு, விசிலடிச்சுக்கிட்டு இந்தப் பக்கம் ஜாலியா இருப்பீங்க... பொம்பளப்புள்ள பாவம்... தடுப்புக்கு அந்தப் பக்கம் தனியா உக்காந்துக்கிட்டு இருக்கும். கீழயிருந்து அடிக்கிற விசில இங்கயிருந்து அடி. நான் முதலாளிகிட்ட பேசிக்கிறேன்… என்ன அண்ணாச்சி பால்கனில விசில் அடிக்கலாம்ல...’’

“ஐயா இதென்ன கேள்வி... நம்ம தியேட்டருன்னு நினைச்சுக்கங்க…” என்றார் தியேட்டர் முதலாளி சிரித்தபடியே.

பனிமலருக்கு ராமின் அப்பாவுக்குக் கிடைத்த மரியாதையையும் செல்வாக்கையும் பார்த்து ஆச்சர்யமாகயிருந்தது. `ராமும், அவன் அப்பாவும் எப்படி இவ்வளவு நெருக்கமான நண்பர்கள்போல் பழகுகிறார்கள்…’ என்று பனிமலருக்கு ஏக்கமாகயிருந்தது.

படம் தொடங்கி தேவர் ஃபிலிம்ஸ் யானையைக் காட்டியதும் ஒரே கத்தல். துப்பாக்கியோடு ஜீப்பின் முன்னால் உட்கார்ந்தபடியிருக்கும் ரஜினி ஸ்க்ரீனில் தெரிந்ததும், தியேட்டர் முழுக்க விசில் பறந்தது. கிழித்துவைக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள் மின்னி மின்னிப் பறந்தன.

ஜான், பால்கனியில் அமைதியாக உட்கார்ந்திருந்தான். ராம் அவனை, `விசில் அடி... விசில் அடி’ என்று தூண்டியபோதும் அவன் அமைதியாகவே இருந்தான். பனிமலர், ராமின் அம்மாவுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். இரண்டு சீட் தள்ளியிருக்கும் ராமை அவள் கண்கள் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியிருந்தன.

“அம்மா, நீங்க ஒரு சீட் தள்ளி உக்காருங்க” ராம், பனிமலரைத் தன் அருகில் அமர அழைத்தான். ராமின் அம்மா ஒரு நிமிடம் திடுக்கிட்டார். பனிமலருக்கும் அது திடுக்கென்றுதான் இருந்தது. ஆனாலும், அவன் காட்டிய தைரியம் அவளுக்குப் பிடித்திருந்தது.

ராமின் அம்மா மனதுக்குள் தயங்கினாலும் எதையும் காட்டிக்கொள்ளாதவராக, “அவனும் உன் தம்பி மாதிரிதானம்மா… பரவால்ல சேர்ந்து உக்காருங்க” என்றபடி சீட் மாறி அமர்ந்தார். பனிமலரின் மனதில் பிரகாசமாக எரிந்த வெளிச்சம் சட்டென்று இருளானது.

பனிமலர் இடம் மாறி அமர்ந்தாள். ஆனால், மனதில் படம் ஒட்டவேயில்லை. திரையில் ரஜினிகாந்த் பேசும் எந்த வசனமும் அவள் காதுகளில் ஒலிக்கவேயில்லை. “அவனும் உன் தம்பி மாதிரிதானம்மா” என்று ராமின் அம்மா சொன்ன வார்த்தைகளே அவளுக்குள் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தன.

திடீரென்று ஏதோ யோசனை வந்தவளாக, “நீ ஏண்டா அமைதியா இருக்க...’’ என்று ஜானைப் பார்த்துக் கேட்டாள் பனிமலர்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, நீ படத்தப் பாரு…” என்றபடி திரையையே பார்த்துக்கொண்டிருந்தான். என்ன நினைத்தானோ திடீரென்று, “நீ எதுக்கும் கவலப்படாதக்கா… நான் இருக்கேன்’’ என்பதுபோல பனிமலரின் தலைமேல் கைவைத்து அவளை வருடிக்கொடுத்தான் ஜான். அப்போது அவளுக்கு அது புதுவிதமான தெம்பைக் கொடுத்தது.

படம் முடிந்து வெளியே வரும்போது ராம்தான் முதலில் கவனித்தான். அங்கே பெரிய பர்லாந்தின் குடும்பம் காரிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தது. அவர்களை எதிரெதிராகப் பார்த்துவிட்ட ராமின் அப்பா, பெரிய பர்லாந்தைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தார். ஜானின் கண்கள் இப்போது அமலியைத் தேடின. இருவரும் ஒருவரையொருவர் கண்டுகொண்டதும் அவர்களின் முகங்கள் பிரகாசமாகின. பர்லாந்து, ஜானையும் அவன் அக்காளையும் அங்கே ஒன்றாகப் பார்த்ததும் சற்று நிதானித்து, “நல்லாருக்கியாம்மா?” என்று நலம் விசாரித்தார். தியேட்டர் முதலாளி, பெரிய பர்லாந்து காரைப் பார்த்ததும் அவர்களை வரவேற்க ஓடோடி வந்தார்.

மேரியக்காள் மகள், இப்போது மீண்டும் தியேட்டர் வாசலில் வந்து நின்றுகொண்டிருந்தாள். கடாபாண்டியின் செட்டு ஆட்களைக் கண்டதும் வேகமாக அவர்கள்கிட்டே சென்று, “பாண்டிய எங்கயாச்சும் பாத்தீங்களா... ஒங்ககூட அவன் படத்துக்கு வரலையா?” என்று ஏக்கமான பார்வையோடு கேட்டாள்.

அவர்கள், `இல்லையே...’ என்பதுபோலத் தலையாட்டவும்… தன் உள்ளங்கையில் மூடிவைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து வேகமாகப் பிரித்து அவர்களிடம் நீட்டினாள்.

“பன்னியோட கண்ணு இந்த மாதிரிதான் இருக்குமா?” என்றாள் அவள்.

(பகை வளரும்...)