மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 18

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 18
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 18

“நண்பன் வீட்டு விருந்தில், புதிய பகை முளைத்ததுமுண்டு. பகைவன் வீட்டு விருந்தில், பல வருடப் பகை அழிந்ததுமுண்டு!” - மூர்க்கர்கள்

கிறிஸ்துமஸ் நெருங்க நெருங்க தூத்துக்குடி கடைவீதியும் பெரியகோயில் பாதையும் களைகட்டத் தொடங்கியது. எல்லா கிறிஸ்தவ வீடுகளிலும் ஜோடிப்பு பலமாகயிருந்தது. நிறைய வீடுகளில், தெருமுனைகளில், மாட்டுக்காடியில் பிறந்த பாலகன் ஏசு சுரூபம் கிடத்தப்பட்டு, அதனருகில் மேரி மாதாவும் ஜோசப்பும் நிற்கும் மண் சுரூபங்களை வைத்து குடில் போட்டிருந்தார்கள். பர்லாந்துகளின் வீடு முழுக்க வெள்ளையடித்து தோரணமும், சீரியல் பல்பும், வைத்து அலங்காரம் செய்திருந்தார்கள். பெரிய பர்லாந்தின் மனைவியும் மகளும் அந்த மாதம் முழுக்க யார் வந்து கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் பணமோ, துணிமணியோ கொடுத்து உதவி செய்தார்கள். சின்ன பர்லாந்து வீட்டிலும் பெண்கள் அதேபோலத்தான். கிறிஸ்துமஸுக்கு ஒரு வாரம் முன்பாகவே பாளையங்கோட்டையிலிருந்து அமலியின் அத்தை கன்னியாஸ்திரீ ஸ்டெல்லாவும் வந்திருந்தார்.

கிறிஸ்துமஸ் நேரத்தில் தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் இரண்டு செட் உடுப்பு எடுத்துக்கொள்ளச் சொல்லி பர்லாந்து குடும்பத்தினர்கள் அகமது டெக்ஸ்டைல்ஸ் கடையில் சொல்லிவிட்டார்கள். இது வருடா வருடம் நடப்பதுதான். அகமதுபாய் கடையில் மொத்தமாகப் பொங்கல் முடிந்து கணக்கு கொடுத்து, பணம் பெற்றுச்செல்வார்கள். அகமது கடை முதலாளியை எல்லோரும் `காக்கா’ என்றுதான் அழைப்பார்கள். பெரிய பர்லாந்தும் அப்படித்தான் அழைப்பார். அவருக்குப் பள்ளித்தோழன். எல்லா வருடமும் அவருக்குக் கணக்கில் பிசகு வரும். பெரிய பர்லாந்து அதெல்லாம் சரிபார்க்க மாட்டார். பெரிய பர்லாந்து ஆட்களின் பில்லை பல நேரம் சின்ன பர்லாந்து பேரிலும், சின்ன பர்லாந்தின் ஆட்கள் கணக்கைத் தவறுதலாக இவர் கணக்கிலும் எழுதிவிடுவார். இந்தத் தவறு எல்லா வருஷமும் தவறாமல் நடக்கும். யாருடைய ஆள், இப்போது யாரோடு இருக்கிறார்கள் என்பதில் அவருக்குக் குழப்பம். அவர் எப்போதும் பர்லாந்து சகோதரர்கள் ஒற்றுமையாக இருந்த காலத்தை நினைவுகூர்ந்து கொண்டேயிருப்பார். இந்த நான்கைந்து வருடங்களில் அவர்களை எத்தனையோ முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டார். இருவரும் ஒருசேர உட்கார மறுத்துவிட்டார்கள்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 18

சில நேரங்களில் காக்கா “அது உன் தம்பி ஆளுக வீட்டு பில்லு, தவறுதலா உன்கிட்ட குடுத்துட்டேன். இந்தா நீ குடுத்த பணம்’’ என்று அவர் திரும்பக் கொடுக்கும் போதெல்லாம், “அதனால என்ன..?” என்று சொல்லிவிட்டு, வாங்காமல் போய்விடுவார் பெரிய பர்லாந்து. சமுத்திரத்துக்கும் துணிமணி எடுக்கப் போகச் சொன்னார். “எனக்கெதுக்கு... அதெல்லாம் வேண்டாம்” என்று சொல்லி மறுத்தான். “ஹேய்...ரோசம்மா வீட்டுல எல்லாத்துக்கும் எடுத்துக் குடு... மும்மூணு செட்டு எடுத்துக்கச் சொல்லு...’’ சமுத்திரம் சிறியதாகப் புன்னகைத்துவிட்டுக் கிளம்பினான்.

ஊரில் பெரிய கடையென்பதால் ரோசம்மா, மகளோடு தயங்கித் தயங்கி அகமது கடைக்குப் போனாள். காக்கா எந்த வித்தியாசமும் காட்டாமல் ரோசம்மாவை நன்றாக உபசரித்தார். அருகிலேயே இருந்து நல்ல மதிப்பான உடைகளைத் தேர்வுசெய்து கொடுத்தார். விலையைப் பத்தி ஒண்ணும் கவலைப்படாதீங்க... பிடிச்சத எடுத்துக்கோங்க... அரை மணிக்கொருமுறை டொரினோவும் காபியும் வந்தன. ரோசம்மா மரியதாஸுக்கும் சேர்த்தே வாங்கினாள். பனிமலர்தான் அவள் அப்பாவுக்கு உடைகளைத் தேடித் தேடிப் பிடித்தாள்.

காக்கா, பனிமலருக்கு விசேஷமாகத் தன் மகள்கள் உடுத்துவதைப்போலவே விலையுயர்ந்த சுடிதாரைக் கொடுத்தார். “இது வடக்க இருக்குறவங்க போடுறதுல்ல..?’’ என்று ரோசம்மா சொன்னதும், “அதெல்லாம் இல்ல... இப்போம் மெட்ராஸுல வயசுப் பிள்ளைங்கல்லாம் இதான் உடுத்துதுங்க. இனிமே வாற காலத்துல தூத்துக்குடி முழுக்க பிள்ளைங்க இதத்தான் போட்டுட்டுச் சுத்துவாங்க பாருங்க. என் பிள்ளைங்களும் இதத்தான் காலேஜுக்கு உடுத்துதுங்க. வாங்கிக்கச் சொல்லுங்க. காசெல்லாம் வேண்டாம்” பனிமலருக்கு சுடிதார் மிகவும் பிடித்திருந்தது.

இரண்டு பர்லாந்து வீடுகளுக்கும் தினமும் ஆட்கள் வரப்போக இருந்தார்கள். இரண்டு பக்கமும் நெருக்கமானவர்களுக்குப் பரிசுப்பொருள்கள் பட்டுவாடா நடந்துகொண்டேயிருந்தது. நாலைந்து நாள்களுக்கு முன்பாகவே பத்திருபது ஆடுகள் வெட்டுக்கு வந்து இறங்கின. பெரிய பர்லாந்து வீட்டு கிறிஸ்துமஸ் பார்ட்டி கூடுகை மிகப்பிரபலம். முதல்நாள் பார்ட்டியைத் தன் வணிகம் சார்ந்த ஆட்களுக்கும், கஸ்டம்ஸ் ஆபீஸர்களுக்கும், இரண்டாம் நாள் பார்ட்டியைத் தன் வெளி நண்பர்களுக்கும், மூன்றாம் நாள் பார்ட்டியைத் தன் நெருங்கிய உறவினர்களுக்கும் கொடுப்பார். கிறிஸ்துமஸ் அன்று நடக்கும் நான்காவது நாள் பார்ட்டிக்குத் தனது உலகத்தில், தனக்கு மிகவும் நெருக்கமான இருபது ஆட்களை மட்டுமே அழைப்பார். அன்று ஊர் முழுக்க, ‘யார் அந்த இருபது பேர்?’ என்பதே பேசுபொருளாயிருக்கும். அந்த பார்ட்டிக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு பெரிய பர்லாந்து தன் கையாலேயே சமைத்த வான்கோழி பிரியாணியைப் பரிமாறுவார். முந்தைய நாள் தானே கடலுக்குப் போய் பிடித்த பால்சுறாவைக் கழுவி சுத்தம் செய்து, இட்லி கொப்பரையில் வேகவைத்து, புட்டாக்கி உதிர்த்துப் போட்டு, அதன்மேல் புளி ஊறிய மண்டைக்குழம்பை ஊற்றுவார். அருகில் அதோடு குடிக்க மரப்பட்டைகளைப் போட்டு அவரே வடித்த வடிசாராயம். சாராயம் விரும்பாதவர்களுக்கு அவரே தயாரித்த விசேஷமான ஒயின்.

கோடை தொடக்கத்தில், ஈஸ்டர் பண்டிகை முடிந்த அதே வாரத்தில் கூடை கூடையாகப் பன்னீர் திராட்சைகளை வாங்கிக் கழுவி, அதை மிதித்து நசுக்கி, பெரிய பெரிய பானைகளில் ஊற்றி மூடி, வீட்டின் பின்பக்கம் மண்ணுக்குள் புதைத்து ஊறல் போடுவார். ஊறல் புளித்து, நுரைத்து எட்டு மாதங்கள் கழித்து ஒயினாகி, டிசம்பர் மாதத்தில் மணக்க நிற்கும். சில நேரம் பானையைத் தாண்டிக்கூட நுரைத்து மண்ணுக்கு மேல்வந்து ஈரமாக இருக்கும். புளிப்பும் துவர்ப்பும் நொதிப்பும்கூடிய அதன் மணம், வீட்டில் இருக்க விடாது. வெளியே வந்து, `என்னைத் தோண்டி எடுத்துக் குடி’ என்பதுபோலிருக்கும். கிறிஸ்துமஸ் முடியும் வரை வீடு ஒயின் மணத்தோடுதான் இருக்கும். அங்கேயும் இங்கேயுமாய் வீட்டுக்குள் சுற்றுபவர்கள், தண்ணீர் குடிப்பதுபோல் மொண்டு ஒரு டம்ளர் குடித்துவிட்டுப்போவார்கள். குறிப்பாக, அந்த வீட்டுப் பெண்கள். அமலிக்கு ஒயின் தயாரிப்பதைப் பார்க்க மிகவும் பிடிக்கும். தன் அப்பாவோடு சேர்ந்து அவளும் திராட்சைகளை மிதிப்பாள். பின் மண்ணைத் தோண்டி அந்தப் பானைகளை வெளியே எடுப்பதை, அதன் மேல்கட்டை அவிழ்ப்பதை, கிறக்கும் அதன் முதல் வாடையை நுகர்வதை அவள் மிகவும் விரும்புவாள்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 18

கிறிஸ்துமஸ் மாதம் மட்டும் பர்லாந்து வீட்டுப் பெண்களும் ஒயின் அருந்துவார்கள். அமலியும் குடிப்பாள். போன வருடம் ஜானைத் தெரியாதென்பதால் இந்த வருடம் அவனுக்கு நிச்சயம் தன் வீட்டு ஒயினையும், தன் அப்பா சமைக்கும் வான்கோழியையும் கொடுக்க வேண்டுமெனப் பல நாள்கள் யோசித்து வைத்திருந்தாள்.

பெரிய பர்லாந்து வீட்டில் நடக்கும் பார்ட்டியில், இது எல்லாவற்றையும்விட மிகவும் விசேஷமான ஒன்று உண்டென்றால் அது பர்லாந்தின் மனைவி தயாரிக்கும் மக்ரூன்தான். வாயில் போட்டதுமே சரசரவெனக் கரைந்து ஓடும். பார்ட்டி முடிந்து வீட்டுக்குக் கிளம்பும் தறுவாயில், நிச்சயம் எல்லா ஆண்களும் தயக்கத்தோடு `வீட்டுக்கு எடுத்துப்போக இன்னும் கொஞ்சம் கிடைக்குமா?’ என்று பர்லாந்திடம் கேட்டு வாங்கிச் செல்வார்கள். பெண்கள் சமையற்கட்டுக்கு வந்து அமலியின் அம்மாவிடம் அதன் செய்முறை விளக்கம் கேட்டு வாங்கிப்போவார்கள். ஆனால், அவர்களுக்கு ஒருபோதும் அந்தச் சுவை கைகூடி வந்ததில்லை. அமலியின் அம்மா பல வருடப் பிரயத்தனங் களுக்குப் பிறகு அதைத் தன் மாமியாரிடமிருந்து கைக்கொண்டார். பர்லாந்தின் அம்மாவுக்கு ஒரு போர்ச்சுக்கீசிய மாலுமியின் மனைவி கற்றுக் கொடுத்தது. முற்றாத நல்ல கொல்லம் முந்திரி, இரண்டாம் அடை நாட்டுக் கோழிமுட்டையின் வெள்ளைக் கரு, சீன அஸ்கா எல்லாம் கலந்துதான் இந்த போர்ச்சுக்கீசிய சுவை கிடைத்தது.

பெரிய பர்லாந்து வீட்டில் நடக்கும் இந்த நான்கு நாள் பார்ட்டிகளிலும் இருக்கக்கூடிய இரண்டு நபர்கள் காக்காவும் சமுத்திரமும் மட்டும்தான்.

சின்ன பர்லாந்து தன் அண்ணனோடு இருக்கும்வரை இந்த கிறிஸ்துமஸ் பார்ட்டிகள் ஒரே பார்ட்டியாகத்தான் நடந்து. பிரிந்து வந்த பிறகு சில வருடங்களாக அவரும் தன் வீட்டில் நடத்துகிறார். இதில் கஸ்டம்ஸ் ஆபீஸர்களும், வியாபார ஆட்களும் மட்டும்தான் இரண்டு பக்கமும் நடக்கும் பார்ட்டிகளுக்குச் செல்பவர்கள். இரண்டு பக்கமும் கொடுக்கும் பரிசுப் பொருள்களையும் வாங்கிக்கொள்கிறவர்கள். அவர்கள் இரண்டு பக்கமும் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. இரண்டு நாள்கள், இரண்டு வீட்டிலும் வான்கோழி சாப்பிட்டுக்கொண்டார்கள்.

அவர்கள் போக, இந்த இரண்டு வீடுகளுக்குமே பார்ட்டிக்குச் செல்லக்கூடியவர்கள் காக்காவும், கன்னியாஸ்திரீ ஸ்டெல்லாவும் மட்டும்தான். இந்த வருடமும் முதல் பார்ட்டிக்கு, பெரிய பர்லாந்து எல்லா கஸ்டம்ஸ் ஆபீஸர்களையும் அழைக்க நேரில் வந்திருந்தார். ராமின் அப்பா ஞானவேல் தலைமை அதிகாரி என்பதால், முதலில் அவரின் அறைக்குச் சென்றார். “எதுக்கு இதெல்லாம் பண்றீங்க... கூப்பிட்டுச் சோறு போட்டு, குடிக்க ஊத்தி அதெல்லாம் வேண்டாம். கவர்ன்மென்ட்டுல எங்களுக்கு நல்ல கொழுத்த சம்பளம் குடுக்குறாங்க. போதும்... இத்தன வருஷம் எல்லாரும் பார்ட்டிக்கு வந்தாங்க... நானும் வந்தேன். குடிச்சாங்க... நானும் குடிச்சேன். பரிசு குடுத்தீங்க... வாங்குனாங்க... நானும் வாங்கிக்கிட்டேன். திரும்ப நீங்க சில சலுகைகள் கேட்டீங்க. அவங்க குடுத்தாங்க. நானும் அனுமதிச்சேன். போதும். இனிமே உங்க பார்ட்டிக்கு யாரும் வர மாட்டாங்க’’ என்றார்

“சார்... இந்தக் கடல் எங்களோடது. இதுக்குள்ள நீங்க என்ன சலுக தர்றது... நான் கிளம்புதேன். சமைச்சு வெச்சுருப்பேன். நிச்சயம் நீங்க வருவீங்க...’’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விறுவிறுவெனக் கிளம்பினார். அவர் போனதும், ஞானவேல் தனக்குக் கீழ் வேலை செய்யும் அத்தனை பேரையும் எச்சரித்தார். ``யாரும் இந்த வருஷம் ரெண்டு பர்லாந்து வீட்டுக்கும் பார்ட்டிக்குப் போகக் கூடாது.’’

(பகை வளரும்...)