மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 19

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 19
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 19

“பகைவன் வீட்டு விருந்தில் நாம் உண்ணும் எல்லா உணவிலும் வெறுப்பின் சுவையை உணரலாம்!” - மூர்க்கர்கள்

பெரிய பர்லாந்து வீட்டில் நடக்கும் கிறிஸ்துமஸ் விருந்துக்கு இந்த ஆண்டு யாரும் போகக் கூடாதென கஸ்டம்ஸ் ஆபீஸர் ஞானவேல் தன் சக பணியாளர்களை எச்சரித்திருந்தார். விருந்து நடைபெறும் நாளின் காலையில் பெரிய பர்லாந்தின் வீட்டினர் ஒருவித தயக்கத்தோடே இருந்தார்கள். இன்னும் யாரும் விருந்து சமையலுக்கு ஆயத்தமாகவில்லை. அதிகாலையில் வெளியில் சென்றுவிட்டுத் திரும்பிய பெரிய பர்லாந்து, வீடு நிசப்தமாயிருப்பதைக் கண்டு சமையற்கட்டுக்குள் நுழைந்தார். அங்கே மக்ரூன் தயாரித்துக்கொண்டிருந்த தன் மனைவியிடம் வந்து நின்றார். “என்னத்துக்கு இன்னும் சமையல் ஆட்க யாரும் வரல... அடுப்புகூட பத்தவெக்கல...”

“இன்னிக்கி விருந்து கிடையாதுன்னு உங்க தங்கச்சி ஸ்டெல்லாதான் சொன்னா... அவகிட்டதான் கேக்கணும்.”

“அவளுக்கு யாரு சொன்னா... கஸ்டம்ஸ் ஆபீஸருங்க வந்தாலும் சரி... வராட்டின்னாலும் சரி... விருந்து நிச்சயம் உண்டு.’’

“எனக்கென்னத் தெரியும்... அவதான் சொன்னா.”

“ஏய்... கன்னியாஸ்திரீ படிக்கப்போனவள அவ இவன்னு பேசுத... மரியாதையாப் பேசு. கடவுளுக்கு சேவகம் செய்றான்னு மறந்துட்டியோ?”

“ஸ்கூல் படிக்கும்போது என்னைவிட சின்ன கிளாஸ் படிச்சவதான ஸ்டெல்லா... நான் அவளைவிட ரெண்டு வருஷம் மூப்பு. சிஸ்டர் உடுப்பு போட்டா நானே சிஸ்டர்னு கூப்பிட்டுக்கிடுதேன். உடுப்பக் கழத்திட்டு இப்போம் என் சேலையத்தான் கட்டியிருக்கா...’’

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 19

“இப்போம் எங்க?’’

“உங்க தம்பி வீட்டுக்குப் போயிருக்கா...’’

பர்லாந்து பேசிக்கொண்டிருக்கும்போதே அவரின் வளர்ப்பு நாய்களின் குரைப்பொலி கேட்டு வாசலைப் பார்த்தார். நான்கைந்து ஆட்கள் கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே வந்தனர்.

அவர்கள் உள்ளே வரவும் நாய்கள் இடைவிடாமல் குரைத்துக்்கொண்டேயிருந்தன. பர்லாந்து அவற்றை அமர்த்தினார்.

வந்தவர்கள் சமையல் செட்டு சாமான்களோடு பின்கட்டில் நுழைந்து சிறிது நேரத்தில் அடுப்பு கூட்டினார்கள். பர்லாந்தின் மனைவியும் ஸ்டெல்லாவும் செபம் சொல்ல, அமலி தன் கையால் முதல் நெருப்பை உரசிப்போட்டாள். அடுப்பில் முதலில் பால் சட்டியை ஏற்றினார்கள். வரிசையாக விறுவிறுவென வேலைகள் தொடங்கின. சிறிது நேரத்திலேயே சமுத்திரம் பெரிய பர்லாந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

பர்லாந்தும் சமுத்திரமும் சேர்ந்து ஏழெட்டு வான்கோழிகளை உரித்துக்கொடுத்தார்கள். வீட்டின் பின்பக்கம் குடும்பத்தினர் சுற்றி நிற்க, குழிதோண்டி ஊறலை வெளியே எடுத்தார்கள். புளிப்பும், இனிப்பும், துவர்ப்பும் கூடிவந்த ஒயின் வாசனை வீடு முழுவதும் பரவியது. அந்தி சாய்வதற்குள் விருந்துக்கான எல்லா உணவுகளையும் தயாரித்து உணவு மேசையில் அடுக்கிவிட்டார்கள். வீட்டு ஆட்கள் எல்லோரும் நல்ல உடை உடுத்தி, விருந்தினர்களை வரவேற்கத் தயாரானார்கள். பெரிய பர்லாந்தும், சமுத்திரமும்கூடத் தயாராகி நின்றிருந்தார்கள். காக்கா சற்று நேரம் பிந்தி வந்துசேர்ந்திருந்தார். ஆனால், கஸ்டம்ஸ் ஆபீஸிலிருந்து ஒரு ஈ, காக்காகூட அதுவரை விருந்துக்கு வந்து சேரவில்லை.

கஸ்டம்ஸ் ஆபீஸில் வேலை நேரம் முடிந்து எல்லா ஆபீஸர்களும் வீட்டுக்குக் கிளம்பத் தயாரானபோது, கடைசியாக ஒரு முறை ஞானவேலிடம் பேசிப் பார்க்கலாம் என அதிகாரிகள் சிலர் அவரின் அறைக்குள் நுழைந்தார்கள்.

“எதுக்காக பர்லாந்து குடும்பத்த பகைச்சிக்கணும்... அவங்க குடும்பம் எத்தனையோ வருஷமா இந்தக் கடல்ல தொழில்பாடு பாக்குறவங்க. அதுவும் நம்ம கண்காணிப்புலதான் அவங்க வியாபாரம் நடக்குது. திடீர்னு ஏன் அவங்ககூட முரண்படணும். இத்தனைக்கும் ஹார்பர் லேபர் யூனியன் மொதக்கொண்டு அவங்க கைலதான் இருக்கு. நாளப்பின்ன ஏதாவது பிரச்னைன்னா, ஸ்ட்ரைக் அது இதுன்னு ஏதாச்சும் ஆரம்பிச்சா நம்ம வேலையெல்லாம் கெட்டுரும். நாலு வருஷத்துக்கு முன்ன அப்படி நடக்கவும் செஞ்சுருக்கு. சரக்கு புக்கிங் சங்கமும் அவங்க கன்ட்ரோல்லதான் இருக்கு. ரெண்டு பர்லாந்துகளும் அவங்களுக்குள்ள அடிச்சுக்கிட்டாலும் எல்லாமே அவங்க குடும்பத்து கைலதான் இருக்கு. எது நடந்தாலும் நம்மளதான் பாதிக்கும். வழக்கம்போல வருஷத்துல ஒரு நாளா அங்க போயி விருந்துல கலந்துக்குறதுதான் சரியா இருக்கும்னு எனக்குத் தோணுது சார்...” எல்லோரின் மனநிலையையும் ஒருசேர ஒப்பிப்பதாக அதிகாரி ஒருவர் பேசினார்.

“நீங்கல்லாம் கவர்ன்மென்ட் ஆபீஸருங்கன்னு வெளிய சொல்லிக்காதீங்க. இந்தக் கடலோட கட்டுப்பாடும், இந்த கஸ்டம்ஸ் ஆபீஸும் கவர்மென்டோடது. சின்ன பர்லாந்தோ, பெரிய பர்லாந்தோ யாரா இருந்தாலும் அவங்கதான் நமக்கு பயப்படணும். நாம இல்ல. இந்த ஹார்பர்ல அவங்க என்னென்ன பண்றாங்கன்னும், அதுக்கு நீங்கல்லாம் எப்படி சப்போர்ட்டுன்னும் எனக்கு நல்லாவே தெரியும். போதும், கிளம்புங்க. என்ன ஆனாலும் பரவாயில்ல. இன்னிக்கி நீங்க மட்டுமில்ல, இந்த ஆபீஸ்லருந்து ஒரு பியூன்கூட அவங்க வீட்டு விருந்துக்குப் போகக் கூடாது. இது என் ஆர்டர்...” கோபமாகச் சொல்லி முடித்தார் ஞானவேல்.

அவரின் அறையிலிருந்து வெளியே வந்த அதிகாரிகள் தங்களுக்குள் முனகிக்கொண்டார்கள். “எதுக்கு இந்த தேவையில்லாத வேல பாக்குறார்... பர்லாந்துகளை ஏன் தேவையில்லாம பகைச்சிக்க நினைக்கிறார்... வருஷத்துக்கு ஒருதரம் கொஞ்சமா குடிச்சுட்டு, நல்லா சாப்பிட்டுட்டு, கிஃப்ட் வாங்கிட்டு வரப்போறோம். இத ஏன் இவ்ளோ சீரியஸா எடுத்துக்குறாரு... ச்சே!” எல்லோரும் எரிச்சலுடன் தங்கள் ஆபீஸர் குவார்ட்டர்ஸுக்குக் கிளம்பினார்கள்.

பர்லாந்து வீட்டினர் விருந்தினர்களை எதிர்பார்த்து வாசலைப் பார்த்தபடியிருந்தார்கள். பர்லாந்து ஒரு சிகரெட் பற்றவைத்தபடியே அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார். திடீரென, “வந்துருவாங்க.... அதுவரைக்கும் கார்ட்ஸ் விளையாடலாமா?” செருமிக்கொண்டே மகள் அமலியிடம் கேட்டார் பெரிய பர்லாந்து. அமலிக்குத் தன் அப்பாவோடு கார்ட்ஸ் விளையாடுவது மிகவும் பிடிக்கும். ஸ்டெல்லாவுக்கும்தான். ஆனால், அவள் இப்போது சற்று யோசித்தாள். உணவு மேசைக்கு அருகிலிருந்த பெரிய டேபிளில் அவர்களோடு காக்காவையும் சமுத்திரத்தையும் விளையாட அழைத்தார் பர்லாந்து.

கஸ்டம்ஸ் ஆபீஸர்கள் விருந்துக்குப் புறப்படவில்லை என்ற செய்தி பிசினஸ் ஆட்களின் காதுகளையும் அடைந்திருந்தது. அவர்களும் இப்போது இருதலைக்கொள்ளிகளாகத் திணறினார்கள். பர்லாந்துகளைப் பகைத்துக்கொள்ள முடியாது. அதேநேரத்தில் ஆபீஸர்களை மீறியும் முடிவெடுக்க முடியாது. விருந்துக்காக வாங்கிவைத்திருந்த பரிசுப்பொருள்களுடன் டெலிபோன் அருகிலேயே காத்திருந்தார்கள். யாரேனும் ஒருவர் புறப்பட்டுச் செல்வதாகத் தகவல் கிடைத்தாலும் போதும், தானும் கிளம்பிவிடலாமென்று ஒவ்வொருவரும் சிந்தித்தபடியிருந்தார்கள்.

ஞானவேல் வீட்டில் அவரின் மனைவி, பர்லாந்துகளின் விருந்துக்குச் செல்ல ஆயத்தமாகக் கிளம்பியிருந்தார். அவர் அணிந்திருந்த உடை, நகைகளைப் பார்த்தபோதே ஞானவேல் விஷயத்தைப் புரிந்துகொண்டார்.

“நான் மட்டுமா இப்படி ரெடியா இருக்கேன். கோட்ரஸ்ல எல்லா கஸ்டம்ஸ் ஆபீஸர்ஸ் வீட்லயும் அவங்கவங்க பொண்டாட்டியும் கிளம்பி ரெடியாத்தான் இருக்காங்க. உங்க ஒருத்தர் முடிவால எல்லாம் வீணாப்போச்சு...’’

“......”

“எதுக்கு இந்தத் தேவையில்லாத பிரச்னை... எல்லாம் நல்லாத்தான போய்க்கிட்டிருந்தது... இப்போ எதுக்கு தேவையில்லாத பிரச்னைய வீட்டுக்குக் கூட்டிட்டு வாறீங்க.’’

ஞானவேல் எதுவும் பதில் பேசாமல் அமைதியாக இருந்தார். அப்போதுதான் ஹாக்கி விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்த ராம், கை கால், முகம் கழுவிவிட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தான்.ஞானவேல் வீட்டுக்குள்வைத்தே ஒரு வில்ஸ் சிகரெட்டைப் பற்றவைத்தார். ராமுக்கு தன் அப்பா சிகரெட் குடிப்பதைப் பார்க்கப் பிடிக்கும். நிதானமாக, ஸ்டைலாக அதை அனுபவித்துக் குடிப்பார்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 19

“வீட்டுக்குள்ளவெச்சு இவன் முன்னாடி சிகரெட் பிடிக்காதீங்கன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன்...” ஞானவேலின் மனைவி பொரிந்து தள்ளினார். அந்த நேரத்தில், டெலிபோன் அலறியது. சத்தத்தை வைத்தே அது எஸ்.டி.டி கால் என்பது தெரிந்தது. சட்டென்று எடுத்துப் பேசினார் ஞானவேல். எதிர்முனையில் ஒலித்த குரலால் அவரின் முகம் இருளடையத் தொடங்கியது. ரிசீவரை அவர் கீழே வைத்தபோது அவரின் மனைவியும், ராமும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். ஞானவேல் பதில் பேசாமல் அமைதியாக இருந்தார்.

சில நிமிடங்கள் இடைவெளிவிட்டு மனைவியிடம் சொன்னார். “கிளம்பு, விருந்துக்குப் போயிட்டு வந்துடலாம். டேய் நீயும் வாடா...” ராம் தன் அம்மாவைப் பார்த்தான்.

“ஏங்க என்ன ஆச்சு... போன்ல யாரு?” ராமின் அம்மா பதறினார்.

“ஹே... அது என் ஃப்ரெண்டுதான்... நீ ஏதும் போட்டுக் குழப்பிக்காத. நான் கிளம்பச் சொன்னதுக்கும், போன் காலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல... புறப்படு... போகலாம்.”

பேசிக்கொண்டே ஞானவேல் குவார்ட்டர்ஸில் இருக்கும் சக ஆபீஸரின் டெலிபோன் எண்ணுக்கு டயல் செய்தார். முதல் ரிங்கிலேயே அவர் ரிசீவரை எடுத்து ‘ஹலோ’ சொன்னார். அடுத்த பத்தே நிமிடங்களில் செய்தி தீயாகப் பரவியது. ஆபீஸர்ஸ், பிஸினஸ் ஆட்கள் வீடுகளில் ஒவ்வொருத்தரின் கார்களும் பரபரப்பாகின.

பெரிய பர்லாந்து ஆட்டத்தை முடித்து தன் கார்ட்ஸைக் கவிழ்த்தினார். வெளியே கார் ஹாரன் சத்தமும், அதைத் தொடர்ந்து கேட் திறக்கப்படும் சத்தமும் கேட்டது. அது காசி அண்ணாச்சியின் கார். அதிலிருந்து காசி அண்ணாச்சியும், அவரின் இரண்டாவது மனைவி பத்மாவும் வந்திறங்கினார்கள். அவர்களைப் பெரிய பர்லாந்து குடும்பத்தினர் வாசல்வரை சென்று வரவேற்றனர். அண்ணாச்சி சம்பிரதாயமாக ஒரு வணிகச் சிரிப்பு சிரித்தார். உள்ளுக்குள் அவரின் பகை கூடிக்கிடந்தது. வரிசையாக கார்கள் வரத் தொடங்கின. ஞானவேல் குடும்பத்துடன் நுழைந்தார். விருந்து மெல்ல களைகட்டத் தொடங்கியது. விருந்தில் கலந்துகொண்டவர்களுக்குள் ஞானவேலுக்கு வந்த போன் கால் பற்றிய விவரம் பரவியது. அது யாருடைய அழைப்பாக இருக்கும் என்று தங்களுக்குள் ரகசியமாகப் பேசிக்கொண்டார்கள். யூகமாகச் சிலர் ‘பம்பாயிலிருந்து மஸ்தான்’ என்றார்கள். ‘இல்லை நிச்சயமாக திரவியம் அண்ணாச்சிதான்’ என்று சிலர் முணுமுணுத்தார்கள்.

‘க்ளிங்’ எனும் சத்தம். ஒரு ஒயின் பாட்டில் உடைந்து சிதறி, இளம் ரத்தம்போல விரிந்தது!

(பகை வளரும்...)