மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 20

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 20
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 20

“பெருந்தீ சிற்றனலிலிருந்து கிளம்புவதுபோலபெரும் யுத்தம் சிறு புறக்கணிப்பிலிருந்தும் துவங்கும்.” - மூர்க்கர்கள்

பெரிய பர்லாந்து வீட்டில் நடக்கும் கிறிஸ்துமஸ் விருந்துக்கு ஞானவேல் உட்பட எல்லோருமே வந்துவிட்டார்கள். பர்லாந்து குடும்பத்தோடு வணிகத் தொடர்புகொண்ட ஆட்களும் அங்கு வந்திருந்ததால், அந்த இடமே களைகட்டத் தொடங்கியிருந்தது. விருப்பப்பட்டவர்களுக்கு மது பரிமாறப்பட்டது. விருந்து நடக்கும் இடம் முழுக்க ரகசியப் பேச்சாக ஞானவேலுக்கு வந்த டெலிபோன் அழைப்பு பற்றியே இருந்தது. `அந்த அழைப்பு மட்டும் வராமல் போயிருந்தால், அவர் இங்கே கிளம்பி வந்திருக்கவே மாட்டார். மற்றவர்களும் விருந்தில் கலந்துகொண்டிருக்க மாட்டோம்’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

திடீரென மொத்த விருந்தினர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியது அந்த ஒயின் பாட்டில் உடையும் சப்தம். அது யார் யார் என்று எல்லோரின் கண்களும் தேடின. அது காசி அண்ணாச்சியின் இரண்டாவது மனைவி பத்மாதான். எல்லா மேசைகளுக்கும் போய், அங்கிருந்த ஒயின், ரம் கோப்பைகளைக் கண்மண் தெரியாமல் எடுத்து, `மடக் மடக்’கெனக் குடித்தபடியிருந்தாள் பத்மா. அவள் கைகள்பட்டு ஒயின் பாட்டிலும், கண்ணாடி கிளாஸ்களும் சிதறி விழுந்தன. அவள் அதைக் கொஞ்சம் சட்டை செய்யவில்லை. விருந்துக்கு வந்திருந்த ஆண்கள் அவளை விழுங்கும் கண்களோடு பார்த்தார்கள். அவளின் இளமையும் வனப்பும் அங்கிருந்த சிலரின் ஏக்கத்தைப் பந்தாடின.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 20

காசி அண்ணாச்சி, பத்மாவின் பின்னாலேயே சென்று “வா இங்கிருந்து கிளம்பலாம்...” என்று கெஞ்சிக்கொண்டிருந்தார். பத்மா அவரின் கைகளை உதறிக்கொண்டு திமிறினாள். “என்னை அசிங்கப்படுத்தாதடி...” என்று கெஞ்சும் குரலில் கேட்டார் காசி அண்ணாச்சி. பத்மா அதை விரும்புவதுபோல ஒரு வெறிச் சிரிப்பு சிரித்து அவரிடமிருந்து விலகினாள். விருந்தினர் கூட்டத்திலேயே இளம் வயதாக இருந்த கஸ்டம்ஸ் ஆபீஸர் ஒருவனின் கையைப் பிடித்து இழுத்து, அவன் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடத் தொடங்கினாள் பத்மா. காசி அண்ணாச்சி விதிர்விதிர்த்துப் போய் நின்றார்.

கஸ்டம்ஸ் ஆபீஸர் ஞானவேல், பெரிய பர்லாந்து நின்றுகொண்டிருந்த இடத்துக்கு அருகில் வந்தார். மலர்ந்த முகத்துடன் அவரை எதிர்கொண்ட பெரிய பர்லாந்திடம், “உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றார் ஞானவேல். பர்லாந்து அவரைத் தன் வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார். மாடி அறைக்குள் சென்று அமர்ந்ததும், தன் கையிலிருந்த சிகரெட் பாக்கெட்டை ஞானவேலிடம் நீட்டினார். ஞானவேல் அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டார். இருவரும் சிறிது நேரம் அமைதியாகப் புகைத்துக் கொண்டிருந்தார்கள். பர்லாந்துதான் முதலில் பேச ஆரம்பித்தார்.

“பாம்பேலருந்து கூப்ட்டாங்களா..?”

ஞானவேல் பதில் பேசாமல் அமைதியாக இருந்தார்.

“தப்பா எடுத்துக்காதீங்க... இன்னிக்கி நீங்க வரலன்னு சொன்னா நாளைக்கி வரக்கூடிய ஆபீஸருங்களும் அப்படித்தான் பண்ணுவாங்க. அதுவும் உங்களைப் பாக்க வந்தப்போ எல்லார் முன்னாடியும் ‘வர மாட்டேன்... யாரும் போகக் கூடாது’ன்னு சொல்லிட்டீங்க. உங்களை மட்டுமில்ல... மத்த எல்லாரையும் என் வீட்டு விருந்துக்கு என்னால வரவைக்க முடியும்னு நான் காட்டணும்ல... அதான்...”

“ம்...” ஞானவேல் வேறெதுவும் பேசவில்லை. அதேநேரத்தில், யாரோ மாடி அறைக்கு வரும் சப்தம் கேட்டு இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தார்கள்.

கூட்டத்துக்கு மத்தியில் காசி அண்ணாச்சி அவமானத்தால் உறைந்துபோய் நிற்பதைப் பார்த்த பத்மா வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்தாள். அந்த இளம் அதிகாரி நிலைமையைப் புரிந்துகொண்டவராக அங்கிருந்து விலகிச் சென்றார். பத்மா இப்போது தள்ளாடியபடியே மேசையில் அடுக்கிவைத்திருந்த உணவுப் பதார்த்தத்தின் மீது விழப்போனாள். அவளைப் பெரிய பர்லாந்தின் மனைவியும், ஸ்டெல்லா சிஸ்டரும் ஒருசேர வந்து பிடித்துக்கொண்டார்கள். இறுக்கம் தளர்ந்து அவிழ்ந்து விழப்போன பத்மாவின் ஆடையை அமலி வந்து சரிசெய்தாள்.

“அக்கா நீங்க வாங்க... கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க...” என்றபடி அமலி பத்மாவைத் தன் தோள்மீது கைபோட்டுக்கொள்ளச் சொல்லித் தாங்கிக்கொண்டாள். பத்மா, அமலியைக் கூர்ந்து பார்த்தாள். குபுக்கென அவள் கண்களில் கண்ணீர் முட்டியது. அமலியின் தோளில் சாய்ந்து விம்மி அழத் தொடங்கினாள் பத்மா. சட்டென கண்களைத் துடைத்துவிட்டு, ஓங்கிக் கத்தினாள்.

“நான் என்ன பாவம் பண்ணுனேன் அமலி... இவனோட பொண்ணுக்கும் எனக்கும் ஒரே வயசு. ஒண்ணா ஸ்கூல் போயிட்டு இருந்தோம். சின்னப் பொண்ணுன்னுகூடப் பாக்காம என்னை இவன்.... அசிங்கமா இருக்கு அமலி. என் வாழ்க்கையே நாசமாகிடுச்சு. தினம் தினம் அவமானத்தால...” சட்டென்று வார்த்தைகளை நிறுத்திவிட்டு, இன்னொரு கோப்பை ஒயினை எடுத்துக் குடித்தாள். அமலி அவளைத் தடுக்கப் பார்த்தபோதும் முடியவில்லை.

எல்லோரின் கவனமும் பத்மா மீதே இருந்தன. காசி அண்ணாச்சி அவளை நெருங்கும் தொலைவில் கொதிப்புடன் நின்றுகொண்டிருந்தார். பத்மா மீண்டும் பேசத் தொடங்கினாள்.

“பணமும் வசதியும் இருந்தா போதுமா அமலி... என்ன வேணா பண்ணலாமா... எதை வேணா சரிக்கட்டலாமா... இதுல நான் இந்தாள மயக்கிட்டேன்னு இவன் பொண்ணு என்கூட பேச மாட்டாளாம். நாங்க எவ்ளோ நல்ல ஃபிரண்ட்ஸ் தெரியுமா அமலி... இவன் ஆள் செஞ்ச காரியத்துக்கு இவன்கூடத்தானே அவ பேசாம போயிருக்கணும். இவன் எனக்கு செஞ்ச கொடுமைக்கு...” அருகிலிருந்த பெரிய ஒயின் பாட்டிலைக் கையிலெடுத்து காசி அண்ணாச்சியை நோக்கி அடிக்கப் பாய்ந்தாள் பத்மா.

சுதாரித்துக்கொண்ட காசி அண்ணாச்சி, வேகமாக பத்மாவின் கையைப் பற்றித் தரதரவென இழுத்துக்கொண்டு தன் காரை நோக்கிப் போனார். கிட்டத்தட்ட பத்மாவின் உடல் மொத்தமும் தரையில் இழுபடும் நிலையில்தான் காசி அண்ணாச்சி அவளை இழுத்துச் சென்றார். அப்போது, சற்று முன்னர் பத்மா முத்தமிட்ட அந்த இளம் அதிகாரியின் மனைவி ஓடிவந்து பத்மாவைத் தாங்கிப் பிடித்தார். அதைப் பார்த்த மற்ற பெண்களும் இப்போது பத்மாவை அவரிடமிருந்து விடுவிக்க முன்வந்தார்கள். ஆண்கள் சிலரும் சூழ்ந்துகொள்ள, காசி அண்ணாச்சி பத்மாவை அங்கேயே விட்டுவிட்டு தன் காரில் ஏறிப் போனார்.

ஸ்டெல்லா சிஸ்டர், பத்மாவைத் தூக்கிப்பிடித்து அமலியின் அறைக்குள் அழைத்துச் சென்றார். இளம் அதிகாரியின் மனைவியும் அவருடன் சென்றார். பத்மா அவளை இறுக அணைத்து, மானசிகமாக தன்னை மன்னித்துக்கொள்ளச் சொல்லிக் கேட்டாள். “மன்னிச்சுடுங்க... யாரையோ பழிவாங்குறதா நினைச்சு...” பத்மாவின் வாய் குழறியது. “அதெல்லாம் ஒண்ணுமில்ல...” என்று அவள் அந்தப் பேச்சை நிறுத்த முயன்றாள். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பத்மா, ஸ்டெல்லா சிஸ்டர் மீது ஓங்கரித்தபடி வாந்தி எடுத்தாள்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 20

விருந்து தொடங்கிய சிறிது நேரத்திலேயே இப்படி நடந்தது சூழ்நிலையை ஒருவித சங்கடத்தில் ஆழ்த்தியிருந்தது. மற்றவர்களை மீண்டும் சகஜ நிலைக்குக் கொண்டுவர நினைத்து, பிஸினஸ்மேன்களில் ஒருவர் “சியர்ஸ்...” என்று உரக்கக் குரல் கொடுத்தார். “எல்லோரும் அவங்கவங்க ட்ரிங்க்ஸை ஃபில் பண்ணுங்க...” என்றபடி விருந்தினர்களை உற்சாகப்படுத்தத் தொடங்கினார். விருந்துக்கூடம் பழைய நிலைக்குத் திரும்ப முயன்றது.

அறைக்கு வெளியே என்ன சத்தம் என்று ஞானவேலும், பெரிய பர்லாந்தும் எட்டிப்பார்த்தபோது, ராம் அங்கு நின்றுகொண்டிருந்தான். ஞானவேல் சிறு பதற்றத்துடன், “நீ ஏன் இங்க வந்தே. உன்னை கீழேதானே இருக்கச் சொன்னேன்” என்று ராமின் கைகளைப் பிடித்து அவனைக் கீழே அனுப்ப முயன்றார். ராம், தன் அப்பாவின் கைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு பெரிய பர்லாந்தை நோக்கி முன்னேறினான்.

“நீங்க யாரு... எவ்ளோ பெரிய ஆளு... எல்லாம் எனக்குத் தெரியும். ஆனா, எங்கப்பாவை ஆள்வெச்சு மிரட்டுறதையோ... அவருக்கு குடைச்சல் கொடுக்குறதையோ பார்த்துட்டு சும்மா விட மாட்டேன் நான்” என்றபடி அந்த அறையின் கதவை ஓங்கி அறைந்தான். பெரிய பர்லாந்து எதுவும் பேசாமல் ராமை அமைதியாகப் பார்த்தபடி தன் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.


சத்தம் கேட்டு கீழேயிருந்து ஆட்கள் சிலர் மாடி அறைக்கு வந்து எட்டிப் பார்த்தனர். பர்லாந்து அவர்களிடம் “ஒண்ணுமில்லை... நீங்க விருந்தை கவனிங்க...” என்றபடி சைகை செய்து அனுப்பினார். அவர்கள் ஏதோ விவகாரமாக இருக்கலாம் என்றபடி, விஷயத்தை வீட்டுக்குப் பின்னால் தன் ஆட்களுடன் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்த சமுத்திரத்திடம் சொல்ல ஓடினார்கள்.

ஞானவேல் தன் மகனை அடக்குவதற்காக அவன் அருகில் நெருங்கினார். அதற்குள் ராம் தன் முதுகுப் பக்கமிருந்த ஒரு சிறிய துப்பாக்கியை எடுத்து, பெரிய பர்லாந்தின் முன் நீட்டினான். ஞானவேல் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.

“டேய்... ராம் என்ன இதெல்லாம்...”

சமுத்திரம் மாடி அறைக்குத் துள்ளித்தாவி வந்து சேர்ந்தான். அங்கு கையில் துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருந்த ராமைப் பார்த்ததும் சமுத்திரம் பெரிய பர்லாந்தின் முகத்தை கவனித்தான். அவரிடம் எந்த பதற்றமுமில்லை. அதன் பிறகே ராமின் கையிலிருந்த அந்தத் துப்பாக்கியைச் சமுத்திரம் கூர்ந்து கவனித்தான். அது ரோசம்மாவின் வீட்டில் சமுத்திரம் மறைத்துவைத்திருந்த துப்பாக்கி என்பது சட்டென்று அவனுக்குப் புரிந்தது.

‘இது எப்படி இவன் கையில...’ என்று சமுத்திரம் யோசிக்கத் தொடங்கிய நொடிப்பொழுதில் ஜான் அவன் நினைவுக்கு வந்தான். ராமின் பைக்கில் ஜான் தன்னைப் பார்க்க தோணிக்கு வந்ததும், அவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதும் அவன் மனதில் நிழலாடியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் ராமைக் கீழே தள்ளி, அவன் கையிலிருந்த துப்பாக்கியைப் பறித்து, தன் முதுகுப் பக்கத்தில் சொருகிக்கொண்டான் சமுத்திரம். ஒரு நொடியில் ராம் நிராயுதபாணியாக மாறினான். ஞானவேல், சமுத்திரத்திடமும் பெரிய பர்லாந்திடமும் தன் மகனை விட்டுவிடச் சொல்லி கெஞ்சத் தொடங்கினார்.

அதே நேரத்தில், சின்ன பர்லாந்தின் வீட்டு மொட்டை மாடி இருட்டில், கொடிமரமும் சின்ன பர்லாந்தும் மது குடித்துக்கொண்டே தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர்.

(பகை வளரும்...)