மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 21

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 21
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 21

“ஒரு பக்கம் பெரும்பகை, மறுபக்கம் பேரன்பு. நடுவில் எழுப்பப்பட்ட மதில் சுவர்தான் மனிதன்!” - மூர்க்கர்கள்

விருந்து முடிந்து இரவு எல்லோரும் போய்விட்டார்கள். பெரிய பர்லாந்துக்குத் தூக்கம் வரவேயில்லை. காலியான முற்றத்தைப் பார்த்துக்கொண்டு சிறிய குண்டு பல்பின் வெளிச்சத்தில் சிகரெட் புகைத்தபடி தனியே அமர்ந்திருந்தார். இன்று முதல்நாள் விருந்து இப்படி களேபரமாக முடிந்ததில் பெரிய பர்லாந்துக்குச் சிறிய மனவருத்தமிருந்தது. எல்லாவற்றையும்விட கஸ்டம்ஸ் ஆபீஸரின் மகன் தன் முன் துப்பாக்கியை உயர்த்திப் பிடித்தது அவருக்கு என்னவோபோலிருந்தது. தொடர்ச்சியாக நாலு சிகரெட்டுகளைப் பற்றவைத்துவிட்டார்.

இரும்பு கேட்டைத் தாண்டி, வீதியே அமைதியாக எந்தச் சத்தமுமில்லாமல் இருந்தது. தூரத்தில் எங்கோ ஒரு மோட்டார் பைக் வரும் சப்தம் அவருக்குத் தெளிவாகக் கேட்டது. சத்தம் அருகில் நெருங்கி வர வர வேகம் குறைந்து, பின் நின்றது. ஜாக்கிரதையாக வண்டியை நிறுத்தும் சத்தம் கேட்டது. பெரிய பர்லாந்துக்கு ஏதோ தோன்றியது. தன் நாயின் சங்கிலியை அவிழ்த்தார். அதன் வாயைப் பிடித்துக்கொண்டு குரைக்கக் கூடாது என்று சைகை செய்துவிட்டு, அருகிலிருந்த மீன் அறுக்கும் பெரிய வாளை எடுத்து வைத்துக்கொண்டு, குண்டு பல்பை அணைத்துவிட்டு இருட்டுக்குள் அமைதியாக அப்படியே அமர்ந்திருந்தார்.

யாரோ இரண்டு பேர், பெரிய பர்லாந்தின் வீட்டு கேட் அருகே வந்து நின்றார்கள். பெரிய பர்லாந்து வாளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு கேட்டையே கவனமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். வந்த இருவரில் ஒருவன் ஏதோ சொல்ல, இருவரும் மெல்ல நகர்ந்து சின்ன பர்லாந்தின் வீட்டு கேட்டுக்கு அருகே போய் நின்றார்கள்.

பெரிய பர்லாந்து எழுந்து போய், தனது கோட்டைச்சுவர் ஓரமாக நின்றுகொண்டு அருகிலிருக்கும் சின்ன பர்லாந்தின் வீட்டை எக்கிப் பார்த்துக்கொண்டிருந்தார். வந்தவர்களில் ஒருவன், ஆட்கள் யாரும் வருகிறார்களாவெனச் சுற்றிலும் பார்த்தபடியே வீட்டுக்குள் ஏறிக் குதித்தான். அவனைத் தொடர்ந்து அடுத்தொருவனும் உள்ளே குதித்தான்.

இருவரும் மெல்ல நடந்து சின்ன பர்லாந்தின் வீட்டுத் தலைக் கதவை நெருங்கினார்கள். நிச்சயம் திருடர்களாகத்தான் இருக்கும் என்று நினைத்தபடியே கோட்டைச்சுவர் ஓரமாக நின்று அவர்கள் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். உள்ளூர் முகமாகப் படவில்லை. வந்த இருவரும் மெலிந்து இறுக்கமான உடலோடு இருந்தார்கள். ஒருவன் கையில் மட்டும் ஆயுதமிருந்தது.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 21

இருவரும் விறுவிறுவென ஜன்னலில் கால்வைத்து சிமென்ட் கிராதியைப் பிடித்துக்கொண்டு விறுவிறுவென மேலே ஏறினார்கள். மாடியிலிருக்கும் அறையில்தான் சின்ன பர்லாந்தின் மனைவியும் பிள்ளைகளும் தங்கியிருந்தார்கள். இதற்கு மேல் பொறுக்கக் கூடாது என்று நினைத்த பெரிய பர்லாந்து, தனது வீட்டின் வராந்தையில் விருந்துக்காகப் போட்டிருந்த மொத்த லைட்டுகளையும் ஆன் செய்தார். சுவரில் ஏறிக்கொண்டிருந்தவர்களுக்கு இவ்வளவு வெளிச்சத்தைப் பார்த்தவுடன் அதிர்ச்சி.

தன் நாயையும் ஏவிவிட்டார். சிப்பிப் பாறை வகை நாயான அது வாசல் கோட்டை ஒரே தாவலில் தாண்டி சின்ன பர்லாந்தின் வீட்டுப் பக்கம் போனது. சுவரில் பதுங்கியபடியே அதிர்ச்சியோடு இருவரும் பெரிய பர்லாந்தைப் பார்த்தார்கள். பெரிய பர்லாந்து தன் கையிலிருக்கும் பெரிய அருவாளை உயர்த்திக் காட்டினார். “நகண்ட... கணுக்காலைத் தறிச்சிருவேன்” என்று சைகை செய்தார். நாய் அவர்களின் கீழே வந்து நின்றுகொண்டு எக்குப் போட்டுக்கொண்டிருந்தது.

அவருக்குச் சின்ன பர்லாந்து வீட்டு ஆட்களை எப்படி அழைத்து எச்சரிப்பது என்று தெரியவில்லை. தன் மனைவியை, தங்கையைச் சத்தம் போட்டு அழைத்தார். அந்த இருவரும் அருகிலிருந்த வீட்டுக்குள் தாவிக் குதித்துத் தப்பிக்க வசம் பார்த்தார்கள். தன் வீட்டிலிருந்து யாரும் வரவில்லையென்பதால் இன்னும் சத்தம் போட்டு அழைத்தார். அதற்குள் சின்ன பர்லாந்தின் மனைவி தன் வீட்டுக்குள் லைட்டைப் போட்டுவிட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். அங்கு பெரிய பர்லாந்து தன் வீட்டின் கோட்டைச்சுவரை ஒட்டி, கையில் வாளோடு நிற்பதைப் பார்த்த பிறகும் அவளிடம் எந்த அதிர்ச்சியும் இல்லை.

‘இவங்க அண்ணன் தம்பிக்குள்ள இதுவே பொழப்பாப் போச்சு. நைட்டு முழுக்க விருந்து நடந்ததுல குடிச்சுட்டு ஏதோ கத்திக்கிட்டு நிக்கிறார்’ என்று நினைத்துக்கொண்டு சின்ன பர்லாந்தின் மனைவி மீண்டும் லைட்டை அணைத்துவிட்டு தூங்கப்போனார். பெரிய பர்லாந்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன் தம்பி மனைவியிடம் எப்படிச் சொல்வதென்றும் தெரியவில்லை. தன் வீட்டுக்குள் பார்த்துக் கத்தத் தொடங்கினார். சுவரேறியவர்கள் இருவரும் பயந்துபோனார்கள். தப்பிக்க எதாவது வழியுண்டா என்று திரும்பிப் திரும்பிப் பார்த்தபடியிருந்தார்கள். சிப்பிப்பாறை இப்போது இன்னும் பலமாக குரைக்கத் தொடங்கியது.

குரல் கேட்டு எழுந்து வந்த பெரிய பர்லாந்து வீட்டுப் பெண்கள் மூவரும், பெரிய பர்லாந்து பார்க்கும் திசையைப் பார்த்தார்கள். அங்கே மாடியில் சிமென்ட் கிராதி மேல் இருவர் நிற்பதைப் பார்த்து மூவருக்கும் அதிர்ச்சியானது.

கன்னியாஸ்திரீதான் குரல் கொடுத்தார். “ஹே... ரூபி... ரூபி...”

மீண்டும் வீட்டுக்குள் லைட் எரிந்தது. சின்ன பர்லாந்தின் மனைவி ரூபி, ‘என்ன?’ என்று குழப்பமாக வந்து நின்றார்.

“சித்தி ரெண்டு திருடனுங்க வந்திருக்கானுங்க...” அமலிதான் சொன்னாள்.

“ஐயய்யோ எங்க..?’’

“உங்க மாடிலதான் நிக்கானுங்க…”

“ஐயய்யோ…” மீண்டும் பதறினார் ரூபி.

“தம்பிய எங்க…” என்று ஸ்டெல்லா கேட்டதும், குடித்துவிட்டுத் தூங்குவதுபோல் சைகை காட்டினாள்.

ரூபி தன் வீட்டு ஆட்களை எழுப்பும் சத்தம் கேட்டது.

“உங்க அப்பாவை எழுப்பிவிடு.”

இதற்கு மேல் என்ன ஆனாலும் பரவாயில்லை. இன்றைக்கு மாட்டினால் உயிரோடு போக முடியாது என்று நினைத்த இருவரும் அருகிலிருந்த வீட்டுக்குள் தாவிக் குதித்தார்கள். பெரிய பர்லாந்து வேகமாகத் தன் வீட்டின் கேட்டைத் திறந்து, அந்த இருவரையும் பிடிக்க ஓடினார். சிப்பிப்பாறை அவரை முந்திக்கொண்டு ஒரே தாவில் தெருவுக்கு வந்தது.

அதேநேரத்தில், சின்ன பர்லாந்து எழுந்து தன் வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார். அவர் கையில் சிறிய ரக துப்பாக்கி இருந்தது. “எவம்லே அது..?” என்றபடி அவரும் கேட்டைத் திறந்து தெருவுக்குள் ஓடினார். பின்னாலேயே அவர் மகனும் ஓடினான். இரண்டு வீட்டுப் பெண்களும் தத்தம் வீடுகளின் வாசலுக்கு வந்து ஒன்றாகக் குழுமி நின்றுகொண்டு அவர்களின் கணவர்கள் திருடர்களை விரட்டிக்கொண்டுபோன திசையைப் பார்த்து நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

“ரெண்டு பேராக்கா?”

“ஆமாண்டி... இப்படியா தூங்குவ...”

``நான் அப்பவே எந்திருச்சு வந்து பாத்தேன்... உங்க வீட்டுக்காரரு கையில வாளோட நின்னு கத்திக்கிட்டு இருக்கவும், ஏதோ இவங்க சண்டைக்கிதான் இப்படி ஏறிக்கிட்டு வாறாரோன்னு நினைச்சுக்கிட்டு திரும்பவும் போயி படுத்துக்கிட்டேன்.’’

“ஏண்டி ரூபி... இந்த பவுனு மால எப்போடீ வாங்குன...”

“இப்போம்தான்... கிறிஸ்துமஸுக்குப் போடலாம்னு வெச்சிருந்தேன். கழுத்துக்கு உறுத்தலா இருக்கான்னு நைட்டு போட்டுப் பாத்துட்டு அப்படியே தூங்கிட்டேன்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 21

“ம்... நல்லாருக்கு…”

“அமலிக்கு ஒண்ணு செஞ்சு போடுங்கக்கா...”

“ஐயோ சித்தி எனக்குல்லாம் ஒண்ணும் வேண்டாம்... நகைலாம் இஷ்டமில்ல…”

“ஏண்டி அமலி நான் வாங்கித் தாறேன்டி...”

நெடுநாள்களுக்குப் பிறகு இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஸ்டெல்லாதான் தெருவைத் தெருவைப் பார்த்தபடியிருந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு விரட்டிக்கொண்டு போனவர்கள் சிறிது சிறிது இடைவெளிவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். பெரிய பர்லாந்தும் சின்ன பர்லாந்தும் ஒருசேர தெருவில் நடந்துவருவதை இரண்டு வீட்டுப் பெண்களும் ஆச்சர்யமாகப் பார்த்தபடியிருந்தார்கள்.

அண்ணன், தம்பி இருவரும் இறுகிய வெறும் உடம்போடு, கழுத்தில் மீன் டாலர் போட்டு, தொப்புள் குழி வரை தொங்கும் பொன் சங்கிலியும், கையில் கொலை ஆயுதங்களோடும், பின்னால் ஒரு பெரிய நாயுடனும் நடந்து வந்தார்கள். அமலிதான் சொன்னாள். “அப்பாவும் சித்தப்பாவும் இப்படியே இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்ல சித்தி...” ரூபி எதுவும் பதில் பேசவில்லை. சற்றுத் தள்ளிப்போய் தன் வீட்டின் கேட் அருகில் நின்றுகொண்டாள்.

நெடுநாள்களுக்குப் பிறகு அவர்கள் இப்படி ஒருசேர நடந்துவருவது எல்லோரின் மனதிலும் லேசான மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

“என்னடா ஓடிட்டானுங்களா..?” ஸ்டெல்லா, தன் தம்பி சின்ன பர்லாந்திடம் கேட்டார்.

“ம்...”

“செரி... நீ போயி படுத்துக்கோ... அம்மையக் கூட்டிக்கிட்டு போலெ...” தன் மகனிடம் சின்ன பர்லாந்து எளிய கட்டளைபோல் சொன்னான்.

சின்ன பர்லாந்து நெடுநாள்களுக்குப் பிறகு தன் அண்ணியை, அமலியை இவ்வளவு அருகில் பார்க்கிறார். அமலி, தன் சித்தப்பாவைப் பார்த்துப் புன்னகை செய்தாள். பதிலுக்குச் சின்ன பர்லாந்தும் மிக குட்டியாக ஒரு புன்னகை செய்தார். பெரிய பர்லாந்தும் தன் தம்பி மகனைப் பார்த்தார். அவனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை.

(பகை வளரும்...)