மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 22

வேட்டை நாய்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள்

அண்ணாச்சியின் கைக்குள் துறைமுகம் அகப்பட்டுவிட்டால், நிச்சயமாக லட்ச லட்சமாக எல்லோரும் சம்பாதிக்கலாம். ‘இறக்குன காசுக்கு நிச்சயம் ஏத்தம் இருக்கும்.

புது வருடப் பிறப்பு முடிந்து, மக்கள் பொங்கலை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். சினிமா ரசிகர்கள் அப்போது வெளியாகவிருக்கும் திரைப்படங்களுக்காகக் காத்திருந்தார்கள். இரண்டு பர்லாந்துகளும், காசி அண்ணாச்சியும், சிலோன் தெருவிலிருக்கும் கப்பலுக்கு சரக்கு புக்கிங் செய்யும் ஆபீஸ்காரர்களும், கடல் வணிகர்கள் சிலரும் துறைமுக லோடுமேன் சங்கத் தேர்தலையும், கப்பல் சரக்கு புக்கிங் சங்கத்துத் தேர்தலையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். தூத்துக்குடிக் கடலில் வணிகம் செய்பவர்களுக்கும், பெரிய சரக்குத் தோணிகள் வைத்திருப்பவர்களுக்கும் இது எவ்வளவு முக்கியமான தேர்தல் என்பது தெரியும். அதுவும் இந்த வருடம் அது இன்னும் இன்னும் முக்கியமாகிப்போனது.

இரண்டு வருடங்களுக்கு முந்தைய தேர்தல் மோதலில்தான் முருகன் கொல்லப்பட்டு, அதற்கு பதிலாக வருஷம் திரும்பும் நாளில் அவன் தம்பி காளி... ராயப்பனையும் திம்மராசுவையும் குறிவைத்து முடித்திருந்தான். அதன் தொடர்ச்சியாகத்தான் கடா பாண்டியை, கொடிமரம் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து வன்மமாக வெட்டிப்போட்டான். கடா பாண்டியின் சாவும் அதன் ரகசியமும் இன்னும் சமுத்திரத்தின் ஆட்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. உண்மை, இருண்ட மண்ணுக்கடியில் புதைந்துகிடந்தது.

கடந்த ஒரு வாரமாக இரண்டு பர்லாந்துகளின் வீடுகளிலும் ஆட்களின் வரத்து அதிகமாக இருந்தது. நடுவே ஒரு கோட்டை மதில் மட்டும்தான் என்பதால், இரண்டு வீடுகளுக்கும் வந்து செல்பவர்கள் யார் யாரென வெளிப்படையாகவே தெரிந்தது. காபிக்குப் பாலும், அரிசிக்கு உலையும் இரண்டு வீடுகளின் அடுப்படியில் எந்நேரமும் கொதித்துக்கொண்டேயிருந்தன. இரண்டு வீட்டுப் பெண்களும் பின்கட்டு வழியே மெல்லத் தங்களுக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கியிருந்தார்கள். அடுப்படிச் சாமான்கள் இங்குமங்கும் கைமாறின. வெகுசில நாள்களிலேயே கோட்டைச்சுவர் தாண்டி, குழம்பு ருசி பார்க்கச் சொல்லி கரண்டிகளும் நீண்டன. அமலி தன் சித்திக்கு ஜாக்கெட்கூட தைத்துக் கொடுத்தாள். இப்படியாக பர்லாந்துகள் வீடுகளின் முன்கட்டில் பகையும், பின்கட்டில் உறவும் வளரத் தொடங்கின.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 22

காசி அண்ணாச்சி இந்த முறை எப்படியாவது பர்லாந்துகளிடமிருந்து துறைமுகத்தைக் கைப்பற்றிவிட வேண்டுமெனத் துடியாய்த் துடித்தார். ஏற்கெனவே பெரிய பர்லாந்து வீட்டின் விருந்தில் பட்ட அவமானமும் இப்போது அவரை கூடக் கொஞ்சம் உசுப்பியிருந்தது. அது மட்டுமல்ல… இந்த முறையும் துறைமுகம் கைவிட்டுப்போனால் இனி வியாபாரத்தில் மேடேறவே முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். பர்லாந்துகளால் ஏற்கெனவே தன் தொழில் எவ்வளவு அதல பாதாளத்தில் கிடக்கிறது என்பதை நினைக்கும்போதெல்லாம் தொண்டைக்குழிக்குள் மாட்டிய மீன் முள்போலத்தான் அவருக்கு வலித்தது. என்ன ஆனாலும் பரவாயில்லை, என்ன செலவானாலும் பரவாயில்லை... இந்த ஆண்டு எப்படியாவது தான் கைப்பற்றிவிட வேண்டுமெனக் குறுக்குசால் போட்டு நடந்துகொண்டிருந்தார்.

தேர்தல் செலவுக்கு, தனக்கு நெருங்கிய, தன் சமூகத்து ஆட்களிடமெல்லாம் தயங்காமல் பண உதவி கேட்டார். குறிப்பாக, விருதுநகர் வணிகர்களிடம். பாமாயில் இறக்குமதியில் குதித்தவர்களுக்கு அப்போது கொள்ளை லாபம் கிடைத்துக்கொண்டிருந்தது. அதனாலேயே போட்டியும் கடுமையாக இருந்தது. பெரும்பாலும் வடக்கத்தி யாவாரிகள் நிறைய பேர் பாமாயில் தொழிலுக்குள் நீந்திக்கிடந்தார்கள். அதேபோல நவதானியம், மிளகு, பருத்தி ஏற்றுமதியிலும் கொள்ளை கொள்ளையாகப் பணம் நடமாடியது.

அண்ணாச்சியின் கைக்குள் துறைமுகம் அகப்பட்டுவிட்டால், நிச்சயமாக லட்ச லட்சமாக எல்லோரும் சம்பாதிக்கலாம். ‘இறக்குன காசுக்கு நிச்சயம் ஏத்தம் இருக்கும். துணிஞ்சு செலவு செஞ்சுறவேண்டியதுதான்’ என இந்த முறை காசி அண்ணாச்சிக்கு இறங்கிச் செலவு செய்ய விருதுநகர் வணிகர்கள் பலர் முடிவெடுத்திருந்தார்கள். ஆனால், துறைமுகத்தைப் பிடிக்க, பணம் மட்டும் போதாது. அதற்கு ஆள் பலம் வேண்டும். அது காசி அண்ணாச்சிக்கு நன்றாகவே தெரியும். விருதுநகரிலிருந்து அந்த உபகாரமும் கிடைத்தது. விருதுநகர் வஸ்தாவியான லிங்கத்திடம் உதவி கேட்டார்கள் வணிகர்கள். லிங்கம் பேர்பட்ட ஆள். பெரிய மீசையோடு மையத்தில் நின்றுகொண்டு சுருள்வாள் வீசினானென்றால் காற்றுக்கூட கிட்டே போக முடியாது. குஸ்தியும், வர்மமும், சிலம்பமும், அடிமுறையும் தெரிந்தவன். ஏறக்குறைய எல்லா ஆயுதங்களையும் சரளமாகக் கையாளத் தெரிந்தவன்.

அந்தச் சுற்றுவட்டாரத்தில் இயங்கிவந்த பருப்பு மில்களுக்கான காவல்கூலியில் லிங்கத்துக்கும் பங்கு உண்டு. முதலாளிமார்களின் பிரயாணங்களுக்கு, பண வசூலுக்கு என எங்கே போகவேண்டியிருந்தாலும் லிங்கத்தின் அணுக்கம் அவர்களுக்குத் தேவைப்பட்டது. இதனால், எப்போதுமே லிங்கத்தைச் சுற்றி முப்பது நாற்பது அடியாள்களுக்குக் குறைவில்லாமல் இருந்தனர். அதுபோக, மதுரையிலிருந்து பயில்வான் ஒயின்ஸ் குரூப் ஆட்களுடனும் அவனுக்குப் பழக்க வழக்கம் இருந்தது. முதலாளிமார்களிடமிருந்து ‘தூத்துக்குடி உபகாரம்’ கேட்டுக் கோரிக்கை வந்ததும், லிங்கம் அதைத் தட்டாமல் செய்துதரத் தன் ஆட்கள் மற்றும் எப்போதும் உடனிருக்கும் ஏழு கன்னி நாய்களுடன் கிளம்ப ஆயத்தமானார்.

காசி அண்ணாச்சி, அவர்கள் தங்குவதற்காகத் தன் பெரிய உப்பளக் கிட்டங்கியை காலியாக்கி வசதி பண்ணிக் கொடுத்திருந்தார். நேரம் கிடைத்தபோது, அவர்களை நேரே சென்று சந்தித்துப் பேசினார். தேர்தல் நிலவரங்கள் குறித்து விவரித்தார். லிங்கத்தின் ஆட்கள் அவற்றை கவனமாகக் கேட்டுக்கொண்டார்கள். இப்படியாக மூன்று குரூப்புகளும் துறைமுகத் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருந்தன. ஒவ்வொருவரும் தங்கள் ஆயுதங்களைக் கூராக்கிப் பத்திரப்படுத்திக்கொண்டிருந்தனர்.

காசி அண்ணாச்சி தூத்துக்குடிக்குள் ஆள் இறக்கியிருக்கும் விஷயம், இரண்டு பர்லாந்துகளின் காதுகளையும் எட்டியது. கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் காக்கிகளின் டேபிளுக்கும் விஷயம் போனது. காவலர்கள், உப்பளக் கிட்டங்கி பக்கம் ரோந்து போட்டுப் பார்த்தார்கள். புதிய முகங்களையெல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டுவந்து தங்கள் உயரதிகாரிகளுக்குச் சொன்னார்கள். அந்தக் குறிப்புகளெல்லாம் அப்படியே பர்லாந்துகளிடமும் வந்து சேர்ந்தன.

சமுத்திரம் எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தான். இந்த முறை அவனின் கவனமும் கூடியிருந்தது. சமீபமாக, ரோசம்மா வீட்டில் தான் மறைத்துவைத்த துப்பாக்கி வெளிப்பட்டு, அது பெரிய பர்லாந்தின் நெஞ்சுக்கே குறிவைக்கப்பட்டது அவனைக் கொஞ்சம் அசைத்திருந்தது. அந்தத் தவறுக்காக ஜான் நான்கைந்து முறை தோணிக்கே வந்து மன்னிப்புக் கேட்டபோதும் சமுத்திரம் அசைந்து கொடுக்கவில்லை. அவனிடம் முகம் கொடுத்துக்கூடப் பேசவில்லை. ரோசம்மாவும் எவ்வளவோ முயன்று பார்த்தாள். சமுத்திரத்திடம் ஒரு மாற்றமுமில்லை.

நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டும், சமுத்திரம் தன்னை ஏறிட்டுப் பார்க்காததால் ஜானுக்குத் தன் நண்பன் ராம் மீது ஆத்திரமாக வந்தது. அந்தக் கோபத்தில், புத்தாண்டுக்கு சர்ச்சுக்கு வந்த அமலியைப் பார்ப்பதைக்கூட அவன் தவிர்த்துவிட்டிருந்தான்.

ஒரு பொடியன், பெரிய பர்லாந்து முன்னால் துப்பாக்கியை நீட்டிக்கொண்டு நின்றதும், அதுவும் தன்னுடைய துப்பாக்கி அது என்பதும் சமுத்திரத்தின் விசுவாசத்தையும் தன்மானத்தையும் சீண்டியிருந்தது. அந்தக் கோபத்தில் அவன் தன் ஆயுதமான அங்குசத்தின் முனையைக் கூர்பிடித்து வைத்தான்.

கொடிமரமும் தன் ஆயுதத்தைத் தயார்படுத்திக்கொண்டான். வழக்கம்போலத் தன் கூட்டாளி முருகனின் வீட்டில்வைத்தே திட்டங்களைப் பேசினார்கள். கரிமருந்துக் குப்பிகளும், நாட்டு வெடிகுண்டுகளும் முருகனின் வீட்டிலேயே பத்திரப்படுத்தப்பட்டன. வல்லநாட்டிலிருந்து அடித்துவந்த அரிவாள்கள், சந்தையைப் பார்க்காமல் அங்கேயே கூர்செய்யப்பட்டன.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 22

தேர்தலுக்கான நாள் நெருங்கியது. துறைமுக போலீஸ்காரர்களும் கஸ்டம்ஸ் ஆபீஸர்களும், மூன்று குழுவினரையும் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். அதுவரை ஒண்ணுமண்ணாய் வேலை பார்த்த ஹார்பர் லோடுமேன்கள் தங்களுக்குள் அணி பிரிக்கத் தொடங்கினார்கள். பர்லாந்துகளுக்குச் சம பலமும் ஆதரவும் இருந்தன. காசி அண்ணாச்சி தன் சமூகத்தினரின் ஆதரவை வைத்துக் காய்நகர்த்தினார். எனினும், பர்லாந்துகளின் ஆதரவாளர்களில் நிறைய பேர் காசி அண்ணாச்சியின் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குத்தான் இப்போது யார் பக்கம் நிற்பது என்று பெரிய மன நெருக்கடி.

லோடுமேன் சங்கத் தேர்தலுக்கு, பெரிய பர்லாந்து சார்பாக சுடலைமாடனும், சின்னபர்லாந்து சார்பாக தோமாசும், காசி அண்ணாச்சி சார்பாக செல்வராஜும் விருப்பமனு தாக்கல் செய்தார்கள்.

பெரும்பாலும் லோடுமேன் சங்கத் தேர்தலில் ஜெயிக்கும் அணிதான் புக்கிங் ஆபீஸ் தேர்தலிலும் வெற்றிபெறும். இந்த முறை யார் ஜெயித்தாலும் எதிர்த்தரப்பில் கடும் உயிர்ச்சேதமிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுமட்டுமல்ல, இந்த முறை தேர்தல் மூன்று மனிதர்களிடையே அல்ல, மூன்று கொடூரமான வனவிலங்கு களிடையே நடக்கவிருக்கும் மோதல்போலிருந்தது.

லோடுமேன் சங்கத் தேர்தலுக்கு அவரவர் சார்பாக ஆட்களை நிறுத்தத் தொடங்கினார்கள். புக்கிங் ஆபீஸ் சங்கத் தேர்தல் களத்தில் பெரிய பர்லாந்தும், சின்ன பர்லாந்தும், காசி அண்ணாச்சியும் காத்திருந்தார்கள். வெளியே போர்க்களத் தளபதிகளாக சமுத்திரமும் கொடிமரமும், லிங்கம் வஸ்தாவியும் அவரவர் ஆயுதங்களோடு நின்றுகொண்டிருந்தார்கள்.

(பகை வளரும்...)