
“நண்பன், பகையாளியாகும்போது அவன் ஆயுதங்களை எதிர்கொள்ளலாம். அவன் கண்களை எதிர்கொள்ள முடியாது!” - மூர்க்கர்கள்
காசி அண்ணாச்சி வஸ்தாவியை அழைத்துக்கொண்டு ஹார்பரில் சரக்கு ஏற்றுமிடத்துக்கு வந்திருந்தார். வந்த இடத்தில் தூரமாக நின்றுகொண்டிருந்த யாரையோ வஸ்தாவி சத்தமிட்டு அழைக்கவும், காசி அண்ணாச்சி திகைத்துப்போய் நின்றார். அங்கே சமுத்திரம் நின்றுகொண்டிருந்தான்.
வஸ்தாவி கோபமாக அழைத்தது சமுத்திரத்தைத்தான்... “இவனைத் தெரியுமா... இல்ல வேற யாரோன்னு நினைச்சு இவனக் கூப்பிடுதீரா?” என்று அண்ணாச்சிக் கேட்டதும், வஸ்தாவி கோபமானார்.

“இந்த துரோகி மூஞ்ச எனக்குச் சாகும் மட்டும் மறக்காது. அவன் சமுத்திரம்தான... இந்த நாயத்தான் பல வருஷமா தேடிக்கிட்டு கெடக்கேன். அவன்கிட்ட நான் தீர்க்கவேண்டிய பழைய கணக்கு ஒண்ணு இருக்கு” என்று சொல்லிவிட்டு மீண்டும் சமுத்திரத்தைக் கோபமாகக் கத்தி அழைத்தார்.
“லேய்...”
அருகிலிருக்கும் கப்பலில் பழுது பார்க்கும் வேலை நடந்துகொண்டிருந்ததால், வஸ்தாவியின் குரல் சமுத்திரத்துக்கு எட்டவேயில்லை. அவன் திரும்பிப் பார்க்காமல் நடந்துபோய் தனது புல்லட்டை எடுத்துக்கொண்டு கிளம்பினான். வஸ்தாவியின் முகத்தில் ஏமாற்றம் படிந்தது.
“விடும்... அவன் தூத்துவுடியவிட்டு எங்கயும் போக மாட்டான். அவன் இங்க கரைதட்டுன தோணி மாதிரிதான். எப்ப வேணா ஒடைக்கலாம்” என்று காசி அண்ணாச்சி சொன்னதும், வஸ்தாவி கோபம் குறைந்து கொஞ்சம் அமைதியானார். ஆனால், அவர் கண்களிலிருந்த வெறி மட்டும் தீரவில்லை.
“பெரிய பர்லாந்துக்கு எல்லாமே அவன்தாம். சொல்லப்போனா எனக்குப் பெரிய குடச்சல் குடுக்குறது இவனும், கொஞ்சம் முன்னாடி பார்த்தீரே அந்தக் கொடிமரமும்தான். இவனுங்க ரெண்டு பேரையும் எவனாவது வெட்டிச் சாடுனா போதும். அத்தோட அந்த பர்லாந்து குடும்பமே கடல் தொழில விட்டுட்டு கண்காணாம ஓடிரும். ஆயுசுக்கும் இங்க வேற எவனும் லோடுமேன் யூனியனு, புக்கிங்கு, கடல் தொழிலுனு ஹார்பர் பக்கமே கால்வெக்க மாட்டான்.” கர்வமும் பேராசையும் பொங்க வஸ்தாவியிடம் அண்ணாச்சி கொந்தளித்துக்கொண்டிருந்தார்.
“நீரூம், உம்ம ஆட்களும் சேர்ந்து இவனுங்களை முடிச்சுவிட்டீரானா... மூணு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடுற மாரி உம்மயும், உம்ம ஆட்களையும் செட்டில் பண்ணிவிடுதேன். என்ன சொல்லுதீரு?”
வஸ்தாவிக்குச் சுள்ளென்று கோபம் தெறித்தது. “என்னய என்ன ரௌடிப்பயன்னு நினைச்சீராவே... இல்ல, ஏவுன வேல செய்ய வந்தேன்னு நினைச்சீரா... முதலாளிமாருக சொன்னதால உம்ம காவலுக்கு வந்திருக்கேன். எங்க காவலத் தாண்டி ஒரு தூசி தும்பு உம்ம சட்டையில வந்து ஒக்கார முடியாது. அத மறந்துட்டு, கைகாட்டுற ஆளுகளக் கொல்லுறதுக்கு எங்கள லாயக்கு பாக்கக் கூடாது. அந்தச் சாதியிலயும் நான் பொறக்கல.”
காசி அண்ணாச்சி அப்படியே உறைந்து அமைதியானார்.
“செரி... செரி... மனசுல வெச்சுக்காதீரும். ஏதோ ஆத்திரத்துல கேட்டுட்டேன்... விட்டுத்தள்ளும்.” காசி அண்ணாச்சி வஸ்தாவியிடம் தயங்கித் தயங்கி அந்தப் பேச்சை முறித்தார். இருவரும் நடந்துகொண்டே ஹார்பருக்கு வெளியே பிளசர் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்தார்கள். அவர்கள் ஏறியதும் பிளசர் உப்பள ரோட்டுப் பக்கமாகப் போனது. பிளசரில் வைத்து இருவருக்குமிடையே எந்த சம்பாஷணையும் நிகழவில்லை.
போகும் வழியில் காசி அண்ணாச்சி வஸ்தாவியிடம் அவசர அவசரமாக விரலால் சுரண்டி, “அங்க பாருங்க” என்று காண்பித்தார். பிளசருக்கு முன்னால் பீடி குடித்தபடி சமுத்திரம் தனது புல்லட்டில் போய்க்கொண்டிருந்தான்.
பிளசரின் கண்ணாடியை இறக்கிவிட்டபடியே வஸ்தாவி சமுத்திரத்தைத் தொட்டுவிடும் தூரத்தில் பார்த்தார். பிளசரும் புல்லட்டும் ஒரு சில நொடிகள் அருகருகே ஒட்டி உரசியபடி போயின. சமுத்திரம் எந்தப் பக்கமும் திரும்பாமல் நேராக ரோட்டைப் பார்த்தபடியே புல்லட்டை ஓட்டிக்கொண்டிருந்தான். வஸ்தாவி பல வருடங்கள் கழித்து சமுத்திரத்தை இவ்வளவு அருகில் வைத்துப் பார்க்கிறார்.
ஏறக்குறைய எப்படியும் இருபது வருடங்கள் ஆகியிருக்கும். மெலிந்து, துடிப்பான வாலிபனாகப் பார்த்தது. அப்போதுதான் கவனித்தார். புல்லட்டின் சைடில் மறைவாக ஆயுதத்தைச் சொருகி வைத்திருக்குமிடத்தில் யானைக்காரர்கள் வைத்திருக்கும் அங்குசத்தைச் சொருகி வைத்திருந்தான். அதைப் பார்த்த மாத்திரத்தில் வஸ்தாவிக்கு முகம் ஏதோபோலானது.
பிளசர் சமுத்திரத்தைத் தாண்டி நகர்ந்தது. வஸ்தாவி பிளசரின் பின்புறக் கண்ணாடி வழியே சமுத்திரத்தைப் பார்த்தபடியே வந்தார். பிளசர் மெல்லத் திரும்பி உப்பளக் கிட்டங்கிக்குள் நுழைந்தது.
வஸ்தாவி ஏதோ நினைவுக்குள் மூழ்கி அப்படியே சிறிது நேரம் பிளசரில் உட்கார்ந்திருந்தார். அவரின் காதுக்குள் கோயில் திருவிழாவில் சுற்றிச் சுற்றி நாற்பது பறை கட்டி அடிக்கும் சப்தம். கோயில் பெண்களின் குலவைச் சப்தம். கொத்துக் கொத்தாக மக்கள் கெக்கெலி போட்டுச் சிரிக்கும் கேலிச் சிரிப்பொலி... வஸ்தாவியின் காதுக்குள் பலமாகக் கேட்டுக்கொண்டிருந்தது.
காசி அண்ணாச்சிதான் பேச்சுக்கொடுத்தார். “இறங்குதீரா..?’’ குரல் அவர் மனதை அசைக்கவில்லை. அவரின் தோளில் லேசாகத் தட்டியதும்தான் நினைவுக்கு வந்தார். ‘`ம்ம்...’’ என்றபடி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு பிளசரிலிருந்து இறங்கினார்.
உப்பளத் தரையில் கால் பதித்து நிற்கவும், தரை அதிர்வதுபோல் உணரத் தொடங்கினார். திரும்பவும் திருவிழாச் சப்தங்கள் அவருக்குள் கேட்கத் தொடங்கின. வஸ்தாவியின் முகம் உக்கிரமாக மாறியது. திரும்பி அண்ணாச்சியை ஆழ்ந்து பார்த்துவிட்டுச் சொன்னார்.
“சமுத்திரத்த முடிச்சுவிடுறேன். அது உம்ம கணக்குல இல்ல... என் கணக்குல.’’ சொல்லிவிட்டு விறுவிறுவென கிட்டங்கிக்குள் போனார். அவரின் வளர்ப்பு நாய்கள் ஓடி வந்து எக்கு போட்டபடியே அவரின் முன் நின்றன. அவர் தோளில் கிடந்த துண்டை உதறி, அதுகளை விரட்டினார். “ச்சேடு...” ஏமாற்றமான முகத்தோடு அவரைப் பார்த்தபடியே அந்த ஏழு கன்னி நாய்களும் தள்ளி நகர்ந்து போயின.
என்ன செய்தபோதும் அவரின் காதுக்குள் பறையொலியும், குலவையும், கெக்கலிப்புச் சத்தமும் கேட்டுக்கொண்டேயிருந்தன. கடா மார்க் சாராயத்தைக் கைகள் தேடின. வைத்த இடத்தில் பாட்டிலைக் காணாததால் ஆக்ரோஷமாகக் கத்தினார். சப்தம் கேட்டு அவரின் ஆட்கள் நாலைந்து பேர் உள்ளே ஓடி வந்தார்கள்.
“இங்குன வெச்ச சாராயத்த எங்கலே... எவம் எடுத்தான்?”
அவர்களில் ஒருவன் பதிலேதும் பேசாமல் ஒரு மூலையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சாராய பாட்டிலையும், ஒரு கண்ணாடி கிளாஸையும் ஓடிப்போய் எடுத்து வந்தான்.
அவசர அவசரமாக முழு பாட்டிலைக் கவிழ்த்து, மடக்கெனக் குடித்தார். ஒரே மூச்சில் பாட்டில் காலியானது. அவருக்குள் எழுந்த அந்தச் சப்தங்கள் இப்போது கொஞ்சம் தூரமாகச் செல்வதுபோலத் தோன்றவும் பாட்டிலைக் கீழே உருட்டி வீசினார். அவரின் ஆட்கள் அங்கிருந்து மெல்ல நகர்ந்து அவரைத் தனியேவிட்டுச் சென்றார்கள்.
வஸ்தாவிக்குள் என்னென்னமோ ஞாபகங்கள் எழுந்தன. பல வருடங்களுக்கு முன்பு, விருதுநகரில் இருபத்திச் சொச்சம் வயதுள்ள திடகாத்திரமான இளைஞனாக இதே சமுத்திரம், அவரின் முன்னால், தனக்கும் தரைப்பாடமும், சிலம்பமும், வர்மமும் சொல்லித்தரக் கேட்டு ஓர் ஆசானுக்குக் காட்டும் பணிவுடன், எந்தக் கெஞ்சல் மொழியுமில்லாத ஆண்மையான குரலில் நின்றுகொண்டிருந்தது அவரின் நினைவில் நிழலாடியது. அவனின் தோற்றத்தைவைத்தே தன்னுடைய சிஷ்யப்பிள்ளையாக வேண்டியவன் இவன்தான் என்ற முடிவுக்கு வந்திருந்தார் வஸ்தாவி.

“சரி... சேந்துக்க. எந்தத் தெருடா நீ?”
“கீழத்தெரு ஆசானே!’’
அவன் முகத்தைப் பார்த்தபடியே ஒரு நிமிடம் யோசித்துவிட்டுச் சட்டென சொன்னார்.
“நெதம் அதிகாலைக்கி வந்துரணும். ஒரு நாளுகூட முறை தவறக் கூடாது சரியா?”
இளைஞனான சமுத்திரம் மகிழ்ச்சியாகத் தலையாட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
“கீழத்தெருப் பயல ஏங்க சேக்குறீங்க?” வஸ்தாவியைச் சுற்றியிருந்த சிலர் அவரிடம் கோபித்துக்கொண்டார்கள். வஸ்தாவிக்கு நெருக்கமான நண்பர் ஒருவர்தான் சொன்னார். “ஹே... அந்தப் பய யாருன்னு தெரியலையா... அவன் யானக்காரன் மகன்.”
“ஓ... யானக்காரன் மகனா... செரிதான். சரியான பயதான். சபாஷ்... நான் எல்லாத்தையும் கத்துக் குடுத்து அவன என் பக்கத்துலேயே வெச்சுக்கிடப்போறேன்.” சந்தோஷமாகச் சொன்னார் வஸ்தாவி. அவர் அப்படிச் சொன்னது அவருக்கு மட்டும்தான் சந்தோஷமளிப்பதாக இருந்தது. ஆனால், சுற்றியிருந்த எல்லோருக்குமே அது எரிச்சலை உண்டாக்கியது.
அடுத்த நாள் காலையில், ஆளுக்கு முந்தி அதிகாலையிலேயே முதல் ஆளாக வந்துநின்றான் சமுத்திரம்.
அன்று ஆரம்பித்தது அந்த வினை.
(பகை வளரும்...)