மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 25

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 25
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 25

“எதிரியைவிட துரோகி விரைந்து கொல்லப்பட வேண்டியவன்...”- மூர்க்கர்கள்

வஸ்தாவிக்கு இளம் வயது சமுத்திரத்தைப் பற்றிய நினைவலைகள் வந்து வந்து போய்க்கொண்டிருந்தன. தேகப்பயிற்சியும், சிலம்பமும், வர்மமும் கற்றுக்கொடுக்க வஸ்தாவி ஒப்புக்கொண்டது சமுத்திரத்துக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. நண்பர்களிடமெல்லாம் சொல்லி அவ்வளவு சந்தோஷப்பட்டான். “அவர் சேத்துக்குறேன்னு சொல்றதெல்லாம் லேசுப்பட்ட காரியமில்லடே... அடிச்சுது அதிர்ஷ்டம்...’’ என்று உதட்டில் சொல்லிவிட்டு சில நண்பர்கள் உள்ளுக்குள் வயிறெரிந்தார்கள். விருதுநகரில் இதுபோல ஏழெட்டு தேகப்பயிற்சி எடுக்கும் இடங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் யாராவது குஸ்தி வாத்தியார் அல்லது சிலம்ப வாத்தியார் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களும் லேசுப்பட்டவர்களில்லை.

ஆனால் அங்கு சேர்வதற்கு முன்பு, எல்லோரும் ஒரு முறை நந்தவனப்பட்டி கட்டையன் பயிற்சிக்கூடத்தில் வந்துசேரக் கேட்டு, மறுக்கப்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள். அதற்குக் காரணமிருக்கிறது. வஸ்தாவி அவ்வளவு எளிதாக யாரையும் பயிற்சிக்குச் சேர்த்துக்கொள்ள மாட்டார். என்ன காரணத்துக்காக இவன் தன்னிடம் வந்திருக்கிறான் என்று பார்த்த மாத்திரத்தில் கணித்துவிடுவார். அது பெரும்பாலும் புலியாட்டம் கற்றுக்கொள்ளத்தானிருக்கும். வஸ்தாவி அவ்வளவு பிரமாதமான புலியாடி. அந்த ஊரில் வருடத்துக்கு ஒரு முறை நடக்கும் மகர நோன்புத் திருவிழாவில், சாமி ஊர்வலத்தின் முன்னால் புலியாடி செல்லும். அநேகமாக எல்லா ஆண்டும் வஸ்தாவிதான் புலிவேஷம் கட்டுவார். கிட்டத்தட்ட மூன்று மைலுக்கு, ஊரின் ஒரு மூலையிலிருந்து எதிர் மூலைக்குத் தனது வித்தைகளையெல்லாம் பெரிய பெரிய வரிசை வைத்தபடி வஸ்தாவி அசல் புலியாக முறுக்கிக்கொண்டு, துடிப்பும் கர்ஜனையுமாகத் தாட்டியம் காட்டியபடி செல்வார். பார்க்கும் எல்லோருக்கும் சிலிர்த்துவிடும்.

அதைப் பார்க்கும் இளந்தாரிகள் எல்லோருக்கும் உள்ளுக்குள் நரம்புகள் முறுக்கேறும். ரெத்தம் சூடேறும். எப்படியாவது அவரிடம் சேர்ந்து வித்தை கற்றுக்கொண்டுவிட வேண்டுமென்ற பிரயாசையில் பயிற்சிக் கூடத்து வாசலில் பழியாகக் கிடப்பார்கள். ஆனால் வஸ்தாவி அவ்வளவு எளிதாக யாரையும் சேர்த்துக்கொள்ள மாட்டார். எந்தப் பெரிய மனிதரிடமிருந்து சிபாரிசு வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார். கூழைக்கும்பிடு, காலில் விழுதல், தட்டில் பெரிய பணம், மாலை மரியாதை எதுவும் அவரிடம் செல்லாது.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 25

உண்மையில் சமுத்திரத்தைப் பார்த்த மாத்திரத்தில் ‘நாளையிலருந்து பயிற்சிக்கு வந்துடு...’ என்று சொன்னது சுற்றியுள்ளவர்கள் எல்லோருக்கும் எரிச்சலைத்தான் உண்டு பண்ணியது. குறிப்பாக வஸ்தாவியின் தம்பி மகன், `பூச்சாண்டி முருகன்’ என்று அழைக்கப்படும் முருகனுக்கு, தன் பெரியப்பா ‘கீழத்தெரு’ பையனுக்கு வித்தைக் கற்றுக்கொடுக்க ஒப்புக்கொண்டது துளியும் பிடிக்கவில்லை.

சமுத்திரத்தின் அம்மாவுக்கும் வஸ்தாவியிடம் இப்படிப் பாடம் படிக்கப்போனது பிடிக்கவில்லை. ‘அப்பன் இல்லாத வீட்ல இப்படிப் பொறுப்பில்லாம நடந்துக்கிற’ என்று வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்தாள். அவள் அம்மா அப்படி குதிப்பதற்கும் காரணமிருக்கிறது. ஒருகாலத்தில் சமுத்திரத்தின் அப்பா, யானை வைத்து பெரும்பணமாய்ப் பிழைத்தவர். `யானைக் காளி’ என்றால் சுத்துப்பட்டு ஊரில் தெரியாதவர் இருக்க முடியாது. சமுத்திரத்தின் வீட்டுக்கு யார், எந்த மூலையிலிருந்து தபால் போட்டாலும், தேடி வந்தாலும் சரி, `யானைக்காரர் வீடு’ என்று மட்டும் சொன்னால் போதும். வேறு எந்த முகவரியும் எழுதவேண்டிய அவசியமிருக்காது. சமுத்திரத்தின் அம்மா அழுது புலம்பினாள். ‘`அவரும் இப்படித்தான் இந்த வஸ்தாவியோட தோஸ்து போட்டுக்கிட்டு அத கத்துக்குறேன்... இத கத்துக்குறேன்னு... வீணாப்போயி, வம்பா செத்துப்போனாரு. உனக்கும் இப்போ அதே கிறுக்குதான் பிடிச்சு ஆட்டுது!’’ என்று. சமுத்திரத்தின் தங்கச்சி காளியம்மாள்தான் தன் அம்மாவைச் சமாதானப்படுத்தினாள்.

சமுத்திரம் நாள் தவறாமல் பயிற்சிக்குப் போனான். கண்ணால் பார்த்ததை அவன் கையும் காலும் அப்படியே செய்தன. வேகமாகவே கலை கைவந்துவிட்டது. வஸ்தாவிக்கும் சமுத்திரத்தை மிகவும் பிடித்துப்போனது. தன் அருகிலேயே வைத்திருந்தார். பூச்சாண்டி முருகனுக்குத் தன் பெரியப்பா மேல் கோபம் கோபமாக வந்தது. யானை கட்டிக்கிடந்த முற்றத்தையும், வெறும் சங்கிலியையும் பார்க்கும்போதெல்லாம் சமுத்திரத்தின் அம்மா நாள் தவறாமல் அழுதாள். “கடன்காரன் என் கழுத்துல கால வெக்கிறதுக்குள்ள, பஜாருல ஏதாவது கட கண்ணிக்கு வேலைக்குப் போயி குடும்பத்தக் காப்பாத்துடா...” தினமும் நாள் தவறாது அழுது முறைவாசல் வைத்தாள். யார் சிபாரிசிலோ ரயில்வே குட்ஷெட்டுக்கு மூட்டை தூக்கும் வேலைக்குப் போனான். பெரும்பாலும் பருத்தி, மிளகாய் வற்றல் மூட்டைகளை ஏற்றவும் இறக்கவும்தான் அதிகாலையும் மாலையிலும் நிறைய ரயில்கள் வந்தன. நிறைய நாள்கள் பயிற்சிக்குப் போக முடியாமல் ஆனது. அவனுக்கு வேலையையும் விட முடியவில்லை, பயிற்சியையும் விட முடியவில்லை. சமுத்திரம் இரண்டு பக்கமும் கிடந்து அல்லாடினான்.

அடுத்த மானாம்பூ திருவிழாவுக்கு இன்னும் இரண்டு மாதங்கள்தானிருந்தன. வஸ்தாவி, கூடமாட ஒத்தாசைக்கு இத்தனை நாள்கள் சமுத்திரத்தையே நம்பி இருந்துவிட்டார். நாள் தவறாது அவரும் புலியாட பயிற்சி எடுக்க வேண்டும். ஊருக்குக் கிழக்கே ஆள் அரவமில்லாத கறுப்பர் கோயிலுக்குப் பின்பக்கம்தான் தனியாக, ரகசியமாகப் பயிற்சி எடுப்பார். அந்த நேரங்களில் ஒத்தாசைக்கு யாராவது ஒருத்தரை மட்டும் உடன் அழைத்துச் செல்வார். அது தனக்குப் பிடித்த முக்கியமான சிஷ்யனாக இருக்க வேண்டும்; பச்சைமுட்டை உடைத்துக் கொடுக்கவும், சுடச்சுட அறுத்து சேவல் ரெத்தம் கொடுக்கவும் ஒரு துணையாள் வேண்டுமென அவர் நினைப்பதுண்டு. அப்படி அவரோடு உடன்போக நான், நீயென அவரின் சிஷ்யர்கள் போட்டி போடுவதுண்டு. அதைவிட முக்கியமான காரணம், வஸ்தாவி பயிற்சி எடுப்பதைக் காணவும், யாருக்கும் சொல்லித் தராத அவரின் சில ரகசிய வரிசை வைப்புகளை இதன் மூலம் கற்றுக்கொள்ளவும் நிறைய பேருக்கு ஆசையாயிருந்தது.

வஸ்தாவிக்கு, சமுத்திரத்தை உடன் அழைத்துச் செல்லலாமா, வேண்டாமா என்று யோசனையாயிருந்தது. போன வாரத்தில் ஒருநாள் அவன் அம்மா பஜாரில் பார்த்து, ‘என் மகன ஏன் இப்படி கெடுத்துக் குட்டிச்சுவராக்குறீங்க?” என்று கேட்டுவிட்டுப்போன வார்த்தை வேறு அவர் மனதை நெருடிக்கொண்டிருந்தது. சரியென்று தன் தம்பி மகன் பூச்சாண்டி முருகனையே உடன் வைத்துக்கொள்ளலாம் எனத் தீர்மானித்து முருகனிடமும் சொல்லிவிட்டார். பெரியப்பா தன்னை இப்போதுதான் ஓர் ஆளாகப் பொருட்படுத்துகிறார் என்று நினைத்து முருகனுக்கு சந்தோஷம் தாளவில்லை. இதைக் கேள்விப்பட்டதும் சமுத்திரத்துக்கு மனசே சரியில்லாமல்போனது. வேலை செய்யவே பிடிக்கவில்லை.

வஸ்தாவி வானத்தில் விடிவெள்ளி பார்த்ததும், வீட்டில் தனக்குக் கற்றுக்கொடுத்த ஆசானை நினைத்து கிழக்குப் பக்கமாக பூஜை போட்டுவிட்டு மையிருட்டில் பூச்சிமுருகனோடு முதல் நாள் பயிற்சிக்குக் கிளம்பிவிட்டார். சமுத்திரம் துடித்துப்போனான். அடுத்த ஓரிரண்டு நாள்களில் வேலையை உதறிவிட்டு, நள்ளிரவு வஸ்தாவியின் வீட்டுக்கு வந்துவிட்டான். விடிவெள்ளிக்கு வஸ்தாவி எழுந்து, மூத்திரம் போய்விட்டு பல்துலக்கிக் கிளம்ப வாசற்கதவைத் திறக்கும்போது, சமுத்திரம் வீட்டுத் தலைவாசலில் குறுக்காகப் படுத்துக்கிடந்தான். பெரியவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. “டேய்... நீ எப்போம்டா வந்து படுத்த...’’ உசுப்பிவிட்டார். அன்றைக்குத் தன் தம்பி மகன் பூச்சிமுருகனை எழுப்பிவிடாமலேயே சமுத்திரத்தை அழைத்துக்கொண்டு போய்விட்டார். சமுத்திரம் அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தான். தன் ஆசானின் பயிற்சிகளைப் பார்த்து மிரண்டுபோனான் சமுத்திரம்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 25

தன்னை விட்டுவிட்டு தன் பெரியப்பா, சமுத்திரத்தை அழைத்துக்கொண்டுபோனதைக் கேள்விப்பட்ட பூச்சிமுருகனுக்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது. சாயங்காலம் விளக்குவைக்கும் நேரம், இரண்டு ஆட்களைக் கூப்பிட்டுக்கொண்டு சமுத்திரத்தின் வீட்டுக்குச் சென்றான் பூச்சிமுருகன். அங்கு அவன் இல்லை. ரயிலடிக்குப் போயிருந்தான். ஆத்திரம் குறையாமல் இரவு வரை தெருமுனையில் காத்திருந்தான் பூச்சிமுருகன். வேலை முடிந்து வந்தவனிடம் குறுக்கே போய் நின்றான். இருவருக்கும் வாய்த் தகராறு முற்றி அடிதடியாகிப்போனது. சமுத்திரம் பூச்சிமுருகனை நன்றாக அடித்துச் சாத்திவிட்டான். அடுத்த நாள் பெரியவருக்கு இதைக் கேட்டுச் சிரிப்புத்தான் வந்தது. தன் தம்பி மகன்தான் அடிபட்டுக் கிடக்கிறானென்றாலும், இரண்டு ஆட்களோடு போயும் சமுத்திரத்திடம் அடிபட்டு வந்திருப்பதைப் பார்த்து அவருக்குச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சமுத்திரத்தின் தோளில் தட்டி, “சபாஷ்!” என்று சொன்னார். அதன் பிறகு தொடர்ந்து எல்லா நாள்களும் சமுத்திரம் உடன் போனான்.

இவன் விதியா... பெரியவர் விதியா... தெரியவில்லை. அன்றுதான் அந்தச் சம்பவம் நடந்தது. எங்கேயோ ஒரு நிலப் பஞ்சாயத்துக்குப் போய்விட்டு, ஏழாம் நம்பர் சாராயக் கடையைக் கடக்கும்போது யதேச்சையாகத்தான் பார்த்தார். சாராயக் கடையில் ஒரே கேளிக்கையும் கூட்டமுமாயிருந்தது. வெளியே குடிபோதையில் வந்த ஒருவன்தான் சொன்னான். “உம்ம சிஷ்யன் ஃபர்ஸ்ட் கிளாஸ் வித்தக்காரன்... என்னமா வருச வெக்கிறான்...உள்ள போயிப் பாரும்!”

சாராயக் கடைக்குள் என்றுமே போயிராத வஸ்தாவி, குழப்பத்தோடு உள்ளே அடியெடுத்து வைத்தார். அப்போது அவர் கண்ட காட்சியை அவரால் நம்பவே முடியவில்லை. நண்பர்கள் நான்கைந்து பேர் உற்சாகப்படுத்த, சமுத்திரம் அங்கு வேஷம் போடாமல் வெறும் கைலியோடு புலி வரிசை வைத்துக்கொண்டிருந்தான். வஸ்தாவியைப் பார்த்ததுமே அவன் நண்பர்கள் அங்கிருந்து தெறித்து ஓடினார்கள். குழப்பத்தோடு தன் முதுகுப் பக்கம் திரும்பிப் பார்த்த சமுத்திரம் அப்படியே உறைந்துபோய் நின்றான்.

(பகை வளரும்...)