மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 26

வேட்டை நாய்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள்

“வரலாற்று துரோகங்களும், துரோகங்களின் வரலாறும் மிக நீண்டவை”- மூர்க்கர்கள்

சாராயக்கடைக்குள் புலிவரிசை வைத்து தன் நண்பர்களின் முன்னால் ஆடிக்கொண்டிருந்த சமுத்திரம், வஸ்தாவியைப் பார்த்ததும் அப்படியே உறைந்துபோய் நின்றுவிட்டான். வஸ்தாவியின் கண்கள் கோபத்தில் செங்கனலாகக் கொப்பளித்துக்கொண்டிருந்தன. சமுத்திரத்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

வஸ்தாவியிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தான். பளாரென கன்னத்தில் ஓங்கி ஒரே அறை. கன்னத்தைப் பிடித்தபடி பொறிகலங்கி நின்றான் சமுத்திரம். மீண்டும் அவன் ஏதோ சொல்ல வந்தான். இந்த முறையும் அவனை அடிக்கக் கை ஓங்கினார் வஸ்தாவி. “வத்தல் கிட்டங்கிக்காரரு மகன்தான் ஒரே ஒரு வரிசை வெச்சுக் காட்டுன்னு சொன்னான். நான் முடியாதுன்னு எவ்வளவோ சொன்னேன். அவன் ரொம்பப் பிடிவாதம் பிடிச்சான். வெளியூருக்கு வேலைக்குப் போயிட்டேன். மானாம்பூ திருவிழாக்கும் இங்கன இருக்க மாட்டேன். ஒரு வரிசை மட்டும் வெச்சுக் காட்டுன்னு சொன்னான். சும்மா ரெண்டு வீச்சுதான்… அதுக்குள்ளாற நீங்க வந்துடீங்க…” கன்னத்தைப் பிடித்தபடி தயங்கித் தயங்கிச் சொல்லிக்கொண்டிருந்தான்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 26

“தெருவுல போற குடிகாரப் பய, `உம்ம சிஷ்யன் நல்லா வரிச வெக்காம்’னு தாக்கல் சொல்லிட்டுப் போறான். நீ ரெண்டு வீச்சுதான் ஆடி வந்தேன்னு கத சொல்ற... சாராயக் கடைல குடிச்சுட்டு ஆடுறதுக்கால வித்தை கத்துக் குடுத்தேன். வித்தையை என்னன்னு நினைச்ச… சாமிடே அது… அதெல்லாம் உனக்கெப்பிடித் தெரியும்… தரங்கெட்ட நாயே… என் மூஞ்சிலேயே முழிக்காத, சொல்லிட்டேன். இனிமே பயிற்சிக்கூடம் பக்கமே வரக் கூடாது பாத்துக்க. மீறி காலை வெச்ச… தறிச்சிடுவேன்.”

“...”

“ச்செய் சனியன்... சாராயக்கட வாசல மிதிக்க வச்சுட்டான். குடிகாரப் பய…”

“நான் ஒண்ணும் குடிக்கல பாத்துக்கங்க…”

“யே… பின்ன இங்க என்ன மயித்துக்கு வந்தியாம்... தேனும் பாலும் ஓடுதுன்னு நக்கிட்டுப் போவ வந்தியோ… நாயக் குளிப்பாட்டி நடு வீட்டுல வெச்சாலும் அது வாலச் சுருட்டிக்கிட்டு நடுத்தெருவுக்குத்தான் போவேங்குது… ச்சீய் எம் மூஞ்சிலேயே முழிக்காத இனி...’’ கோபமாக அந்த இடத்தைவிட்டு விறுவிறுவென கிளம்பிச் சென்றார் வஸ்தாவி.

சமுத்திரத்துக்குச் சுருக்கென்றது. “நாயி, நடுத்தெருவுன்னு என்னடா பேச்சு இது... கீழத் தெருக்காரன்னா வாய்க்கு வந்ததெல்லாம் பேசிறலாமா…” உடனிருந்த நண்பன் சொல்லச் சொல்ல சமுத்திரத்துக்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது.

“நான் பயிற்சிக்கூடத்துக்குப் போயிட்டு வாறேன் நீ போ...’’

ஓட்டமும் நடையுமாகப் பயிற்சிக்கூடத்துக்குப் போனான் சமுத்திரம். கூடத்துக்குள் விறுவிறுவென உள்ளே போனவனை பூச்சாண்டி முருகன் வெளியே பிடித்துத் தள்ளினான். இதை கவனித்துக்கொண்டிருந்த வஸ்தாவி, ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார். சமுத்திரம் வஸ்தாவியின் முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க, அவர் ஒன்றும் பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

அடுத்த நாளிலிருந்து வஸ்தாவி பயிற்சி எடுக்க கருப்பர் கோயில் பக்கம் போகும்போது பூச்சாண்டி முருகன் உடன் போனான். இப்போதாவது பெரியப்பா தன்னை ஏற்றுக்கொண்டாரே என்று அவனுக்கு மனசுக்குள் பூரிப்பாயிருந்தது. எப்படியும் இந்தப் பாதைக்குத்தான் வருவாரென்று கருப்பர் கோயில் அருகிலேயே சமுத்திரம் காத்திருந்தான். வஸ்தாவி சமுத்திரத்தைப் பார்த்ததும், தன் பாதையை மாற்றிக்கொண்டு ஒதுங்கிப்போனார். சமுத்திரம் நெடுஞ்சாண் கிடையாய் தரையில் விழுந்து அவரின் காலைப் பிடித்தான்.

“தப்புதான்... மன்னிச்சிக்கோங்க.’’

பூச்சாண்டி முருகனுக்குப் பதைபதைப்பாயிருந்தது. பெரியப்பா திரும்பவும் அவனை ஏற்றுக்கொண்டுவிடுவாரோ, தன் இடம் பறிபோய்விடுமோ என்கிற பதற்றத்தில் இருந்தான்.

அடுத்த நொடி சமுத்திரத்தின் தொடுதலிலிருந்து தன் கால்களை விடுவித்துக்கொண்டு வஸ்தாவி முன்னோக்கி நடந்தார். பூச்சாண்டி முருகனுக்கு “அப்பாடா...’’ என்று இருந்தது. சமுத்திரம் விடாமல் பின்னாலேயே கெஞ்சியபடி வந்தான்.

“நல்ல மாட்டுக்கு ஒரு சூடு… நல்ல மனுஷனுக்கு ஒரு சொல்லு… இனிமே என் மூஞ்சில முழிக்காத...’’ சமுத்திரம் அப்படியே தேங்கி நின்றுவிட்டான். அவன் கால்கள் முன்னோக்கிச் செல்லவில்லை. வஸ்தாவி போவதையே பார்த்தபடி நின்றான். பிறகு பின்னோக்கித் திரும்பி கடுங்கோபத்துடன் பாதையில் நடக்காமல் கருவேல முள்ளுக்குள் நடந்தான். காலிலும் உடம்பிலும் முட்கள் ஏறின. தொடைகளை முட்கள் கிழித்தன. எதையும் பொருட்படுத்தாமல் நடந்தான். அந்த வலியைப் பொருட்படுத்த முடியாத அளவுக்கு அவனுக்குள் அவமானமும் வேதனையுமிருந்தன.

மானம்பூ பண்டிகைக்கு ஊரே எதிர்பார்த்துக் காத்திருந்தது. நாளும் பொழுதுமாய் முதல்நாள் இரவே மேளக்காரர்கள் வந்து வஸ்தாவி வீட்டுத் திண்ணையில் படுத்துக்கிடந்தார்கள். விடிவெள்ளி முளைத்ததுமே மேளக்காரர்களும், பயிற்சிக்கூடத்து ஆட்களும் எழுந்து காலைக்கடனுக்கும், குளிக்கவும் ஆயத்தமானார்கள். கொல்லைக்குப் போகும் வழியிலும், குளிக்கப் போகும் வழியிலும் எல்லோருடைய பேச்சும் ‘இந்த வருஷம் புலிக்கு எத்தன வாலு’ என்பதிலேயே இருந்தது. அந்தக் கேள்விக்கு ஒரு காரணமிருக்கிறது.

புலி, ஒரு வால் கட்டி ஆடி வந்தால், `எனக்குத் தெரிந்த வித்தையை மட்டும் காட்டுகிறேன்’ என்று அர்த்தம். அதுவே ரெட்டைவால் கட்டி ஆடினால், `என்னோட எதிர்த்து நின்னு ஆட யாராவது இருக்கிறீர்களா?’ என்று கேட்பதாக அர்த்தம். அதுவே மூணு வால் கட்டினால், `புலி இன்றைக்கு வேட்டையாடப்போகிறது’ என்று அர்த்தம்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 26

வஸ்தாவி நினைவு தெரிந்த நாளிலிருந்து ரெட்டைவால்தான் கட்டி ஆடுகிறார். இந்த ஆண்டும் அப்படித்தான். ஊரே திருவிழாவுக்குத் தயாரானது. வஸ்தாவி சாமி கும்பிட்டுவிட்டு உடம்பில் புலி வரி எழுத மஞ்சள் வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக்கொண்டு அமர்ந்திருந்தார். உடம்பில் ஓர் இடம் விடாமல் மஞ்சள் வண்ணம் பூசி, கருஞ்சாந்தில் வரிக்கோடுகள் போட்டார்கள்.

ஊர்ப் பெரிய மனிதர்களும், முதலாளிமார்களும் ஒவ்வொருவராக வந்து பார்த்து முகஸ்துதி செய்துவிட்டுப் போனார்கள். மாலை நான்கு மணிக்குள் புலிவேஷம் தயாராகிவிட்டது. வஸ்தாவியின் தாய்மாமா தொண்டுக்கிழமாய் நடுங்கும் கரங்களால் பூ மாலையெடுத்துப் போட்டுவிட்டார். மேளக்காரர்கள் ஓங்கி ஓங்கி அடித்தார்கள்.

புலி முதல் வரிசை வைத்து தெருவில் இறங்கியது. அங்கு சமுத்திரத்துக்கு ஏதோ செய்தது. வீட்டுக்குள் முடங்கிக்கிடந்தவனுக்கு அந்த மேளச் சத்தம் ‘வெளிய வாடா… வெளிய வாடா’ என்று அழைப்பதுபோலிருந்தது.

‘புலியாட்டம் பார்க்கப் போகலாமா… வேண்டாமா?’ என மனசு ஒத்தையா ரெட்டையா போட்டுக்கொண்டிருந்தது. அப்போதுதான் அவன் நண்பர்கள் வந்தார்கள். “டேய் புலி கருமாதிமடம் முக்கு தாண்டி வருது. வா… ஒரு எட்டு பாத்துட்டு வந்துரலாம். எப்படியும் சங்கிலி கருப்பசாமி கோயில் வளைவுலதான் பெரிய ஆட்டமா ஆடும்…” அவன் நண்பர்கள் சொன்னதுதான் தாமசம்... ஒரு முடிவோடு விறுவிறுவெனக் கிளம்பிவிட்டான் சமுத்திரம்.

நண்பர்கள் பின்னால் ஓடிவர ஓட்டமும் நடையுமாக வேக வேகமாக நடந்தான் சமுத்திரம். மேளச்சத்தம் அருகில் கேட்டது. எப்படியும் இன்னும் ஐந்து நிமிடங்களில் சங்கிலிக் கருப்பன் கோயில் வாசலுக்கு வந்து ஆடத் தொடங்கிவிடும். விறுவிறுவெனத் தன் சட்டைப் பொத்தான்களை விடுவித்து, சட்டையைக் கழற்றி ஒரு திண்ணையில் வைத்தான், வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு, அருகிலிருக்கும் அடிகுழாயில் நண்பன் ஒருவனைத் தண்ணீர் அடிக்கவைத்து உடம்பெல்லாம் ஈரமாக்கினான்.

அருகிலிருந்த காளியம்மன் கோயிலில் மஞ்சளை அள்ளி உடம்பெல்லாம் அந்த ஈரத்தோடு தேய்த்துவிட்டான். வண்டிச் சக்கரத்திலிருந்து கறுப்பு மையை எடுத்து உடம்பிலும் முகத்திலும் வரிக்கோடாக இழுவி விட்டுக்கொண்டான்.

அவன் நண்பர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. மேளச்சத்தம் நெருங்கி வந்தது. அவசர அவசரமாகத் தெருவில் கிடந்த கொச்சைக்கயிற்றில் மஞ்சள் தடவி, அதன் முனையில் ஓட்டை போட்டு எலுமிச்சையைத் திணித்தான். அதை இடுப்பில் வாலாகக் கட்டிக்கொண்டான். “டேய் என்னடா இது. சொன்னாக் கேளு. என்னத்தையாவது செஞ்சு அவமானப்பட்டு நிக்காத” என்று அவன் நண்பர்கள் எச்சரித்தார்கள். சமுத்திரம் எதையும் காதுகொடுத்துக் கேட்காமல் விறுவிறுவென மேளச்சத்தம் வந்த திசை நோக்கி நடந்தான். உருமி அடிக்கும் ஒலி அவன் காதுக்குள் அதிர்ந்தது. சங்கிலிக் கருப்பர் கோயில் நோக்கி ஒரே ஓட்டமாக ஓடினான்.

வஸ்தாவி புலியாட்டம் ஆடியபடி வளைவு திருப்பி வந்து நிற்கவும். சமுத்திரம் அவரின் எதிரில் வந்து நிற்கவும் சரியாயிருந்தது. வஸ்தாவி உட்பட ஊர்மக்கள் எல்லோரும் ஸ்தம்பித்துப்போய் நின்றிருந்தார்கள். வஸ்தாவி புலியாட்டம் ஆடத் தொடங்கிய காலத்திலிருந்து முதல் தடவையாக இப்போதுதான் அவரை இன்னொரு புலியாட்டக்காரன் மறித்து நிற்கிறான்.

(பகை வளரும்...)