
“வீரத்தின் கதை நெஞ்சிலும் துரோகத்தின் கதை முதுகிலும் எழுதப்படுகிறது.” - மூர்க்கர்கள்
“எடுல மத்த ரெண்டு புலி வாலையும்...” வஸ்தாவி தீர்க்கமாகச் சொன்னார். காளீஸ்வரி மட்டும் என்ன செய்வதென்று தெரியாதவளாக அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தாள். அதேநேரம் வஸ்தாவி மூன்று வால் கட்டிப் புலிவேஷமாடப்போகிறார் என்ற செய்தி சமுத்திரத்தை வந்தடைந்திருந்தது.
சமுத்திரம் நம்ப மறுத்து, தனக்கு மிகவும் நம்பிக்கையான இரண்டு பேரை அனுப்பிப் பார்த்து வரச் சொன்னான்.
போன வேகத்தில் அவர்கள் இருவரும் பதற்றத்துடன் திரும்பி வந்தார்கள். “ஆமா உண்மைதான்... எங்க கண்ணாலயே பார்த்தோம். ஆளக்கண்டா அடிச்சி சாய்ச்சுடுறதுபோல நிக்குறாரு...” என்று அவர்கள் சொன்னது சமுத்திரத்துக்கு ஆச்சர்யமாகவும், அதேநேரம் அதிர்ச்சியாகவுமிருந்தது. முதல் நாள் காலையில் காளீஸ்வரி அவனைச் சந்தித்துப் பேசியதற்கு நேர்மாறாக ஒவ்வொன்றும் நிகழ்ந்துகொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.
“எங்க பெரியப்பாவை எதுத்து, புலிவேஷம் போடணும்னு முடிவு பண்ணிட்ட. என்ன இருந்தாலும் அவரு உனக்கு வித்தை கத்துக்குடுத்த குரு. அவரோட பகையை வளர்த்துக்கிட்டே போறதால உங்க ரெண்டு பேருக்கும் எந்த நன்மையுமில்ல. உங்களுக்குள்ள பத்தவெச்சுட்டு எவனோ குளிர்காயுறான். என் பேச்சைக் கேளு. நீ இந்த வாட்டியும் ஒத்த வாலு கட்டி எதிர்வரிசை வை. எங்க பெரியப்பாவையும் நான் சம்மதிக்க வெக்கிறேன். பகையில்லாம எல்லாமே சரியாகும். நம்பு. நம்ம காதலுக்காகவாச்சும் இதச் செய்” என்று காளீஸ்வரி சொல்லி முடித்தபோது அவள் கண்களில் கண்ணீர் பூத்திருந்தது.

நிலைமை கைமீறிப் போய்விட்டதை சமுத்திரம் உணர்ந்துகொண்டான். எரிந்துகொண்டிருக்கும் நெருப்பைப் பருத்திப் பஞ்சள்ளிப் போட்டு அணைப்பது முடியாத காரியம். “நானும் இந்த வாட்டி மூணு வால் கட்டி இறங்குறேன். விதி எதுவோ அதுதான் நடக்கும்.” கொந்தளிப்புடன் அவன் சொன்னபோது, சுற்றி நின்ற சனங்களில் பலருக்கு உற்சாகமும், ஒருசிலருக்கு கலக்கமும் ஒருசேர வந்தடைந்தன.
பொழுது உச்சியிலிருந்து கீழே விழுந்துகொண்டிருந்தது. இடி இடித்ததுபோல மேளச்சத்தம் ஊரின் இரண்டு தரப்பிலிருந்தும் உக்கிரமாக எழுந்துகொண்டிருந்தது. `ரெத்தம்... வெறி... கோபம்... பலி... சாவு...’ எனச் சொற்கள் மாற்றி மாற்றி மைதானத்தில் கூடியிருந்தவர்களின் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தன. இரண்டு புலிகளும் ஆத்திரமும் வெறியும்கொண்ட வேட்டைத் துடியோடு குகைக்குள்ளிருந்து வெளியேறுவதுபோல உக்கிரமாகத் தங்களின் இடங்களிலிருந்து கிளம்பின. கூடவே இரண்டு தரப்பைச் சேர்ந்த சிலர், தங்களின் ஆயுதங்களை உடைகளுக்குள் மறைத்து வைத்துக்கொண்டார்கள்.
புலிகள் இரண்டும் தெருமுனைகளைக் கடந்து, எதிரெதிராகப் பார்த்த நொடியிலேயே ஒன்றை ஒன்று கொலை வெறியோடு தாக்கிக்கொள்ளத் தயாராயிருந்தன. இரண்டு புலிகளும் மூன்று வால் கட்டி மோதப்போவது அக்கம் பக்கத்து ஊர்களுக்கும் பரவியிருந்ததால், சந்தைக்கு வந்த ஜனங்கள்கூட சங்கிலிக் கருப்பர் கோயில் மைதானத்தைச் சுற்றி நின்றிருந்தார்கள். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உள்ளூர் ஜனங்கள் ஒவ்வொருத்தரின் இதயத் துடிப்பும் அதிகரித்தபடியே இருந்தது.
இதே மைதானத்தில் வைத்துத்தான் தன்னைக் `கிழட்டுப்புலி’ என்று அவமரியாதை செய்ததும், அது ஒரு கொலை முயற்சியாக வளர்ந்து, சமுத்திரத்தின் சவாலாக மாறியிருப்பதும் வஸ்தாவியின் மனதுக்குள் வந்து வந்துபோனது. உடலைச் சிலிர்த்துக்கொண்டு பாய்ந்தோடினார் வஸ்தாவி. சமுத்திரமும் அதே வேகத்துக்குச் சீறினான். மேளக்காரர்கள் ஏட்டிக்குப் போட்டியாக வாத்தியங்களை நொறுக்கிக்கொண்டிருந்தார்கள். வஸ்தாவிக்கும் சமுத்திரத்துக்கும் இருபதடி தூரம்தான் இருந்தது. வைத்த கண் வாங்காமல் அவர்களின் மோதலையே எல்லோரின் கண்களும் உற்று நோக்கிக்கொண்டிருந்தபோதுதான் அது நிகழ்ந்தது.
உடம்பெல்லாம் நெருப்பு கொழுந்துவிட்டு எரிய, காளீஸ்வரி இரண்டு புலிகளுக்கும் குறுக்காக ஓடி வந்தாள். இரண்டு புலிகளும் அப்படியே ஸ்தம்பித்து நின்றன. மேளக்காரர்கள் அடியை நிறுத்திவிட்டுப் பதற்றமடைந்தார்கள். அது காளீஸ்வரிதான் என்று உடனேயே தெரிந்துகொண்ட சமுத்திரம் உடைந்து நொறுங்கியவனாக, “ஏலா காளி... என்ன காரியம் செஞ்சுட்ட...” என்று கத்தியபடியே அவளை அணைக்க ஓடி வந்தான். புலியாகவே மாறிப்போயிருந்த வஸ்தாவியை “காளி...” என்ற அந்தச் சொல் அதிரவைத்தது.
சமுத்திரம் வேக வேகமாக ஓடிவந்து திருவிழாக் கொட்டகைக்காகப் போடப்பட்டிருந்த பந்தல் துணியை உருவிக்கொண்டு அவளை நெருங்கினான். வஸ்தாவி தண்ணீர் குடத்தை எடுத்துக்கொண்டு அவளை நெருங்கினார். எரியும் நெருப்போடு சமுத்திரம் அவளைத் துணியில் சுற்றி அணைத்தான். வஸ்தாவி இருவரின் மீதும் நீரை ஊற்றினார். அவர்களின் எல்லா முயற்சிகளும் தோற்றுப்போயின.

காளீஸ்வரி வெந்து கரிக்கட்டையாகக் கிடந்தாள். சமுத்திரம் அவளின் மேடிட்ட வயிற்றைத் தொட்டுக்கொண்டே அழுதான். வஸ்தாவி திகைப்படங்காமல் ‘`எம்புள்ளைக்கு என்னாச்சு எம்புள்ளைக்கு என்னாச்சு?’’ என்று கலங்கிப்போயிருந்தார். இரண்டு புலிகளுக்கு மத்தியில், எரிந்த ஆடுபோல காளீஸ்வரி கிடந்தாள்.
மொத்த ஊரும் தலையிலடித்தபடி கலங்கி நின்றது. மானாம்பூ திருவிழாவில் இப்படி ஒரு துயரம் நிகழ்ந்துவிட்டதே என்று எல்லோரின் முகத்திலும் துக்கத்தின் சாயல் படிந்திருந்தது. வாழை இலைகளைக்கொண்டு அவள் உடலை மறைத்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிப்போனார்கள். திருவிழாவுக்குக் காவலுக்கு வந்திருந்த போலீஸ்காரர்கள் நடந்த சம்பவத்தைத் தங்களின் மேலதிகாரிகளுக்குச் சொல்ல ஆளனுப்பி வைத்தார்கள். சமுத்திரத்தின் மடியில் கிடந்த காளீஸ்வரியின் உடலை போலீஸ்காரர்கள் ஆஸ்பத்திரி வண்டியில் ஏற்றினார்கள். வஸ்தாவி அந்த வண்டியின் பின்னாலேயே புலி வேஷத்தோடு ஓடிச் சென்றார். அப்போது அவர் மனதுக்குள் ‘என் புள்ள சாவுக்குக் காரணமானவனைக் கொல்லாமவிட மாட்டேன்’ என்று கருவிக்கொண்டார்.
நடக்கக் கூடாததெல்லாம் நடந்துவிட்ட அச்சத்தில் கீழத்தெருவே அஞ்சிக்கிடந்தது. ஆள் இங்கே இருந்தால் பிரச்னைதான் என்று கீழத்தெரு பெரியவர் சமுத்திரத்தை உடனேயே எங்காவது பத்திரமாக கூட்டிப்போகச் சொல்லி அவன் நண்பர்களிடம் சொன்னார். அவர்கள் யார் பேச்சையும் கேட்காமல் சமுத்திரம், தன் வீட்டின் வாசலிலிருந்து அவன் போக்கில் எழுந்து நடந்துபோனான். அதன் பிறகு அவன் எங்கே இருக்கிறான்... என்ன செய்கிறான் என்பது யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு, இப்போதுதான் சமுத்திரத்தைத் தூத்துக்குடியில் வைத்துப் பார்க்கிறார் வஸ்தாவி. அவரின் மனதுக்குள் அத்தனை காலமும் மறைந்திருந்த கோபமும், வெறியும், காயங்களும் நினைவுகளாக மேலெழும்பி வந்திருந்தன. பொறுப்பெடுத்துக்கொண்ட துறைமுக லோடுமேன் சங்கத் தேர்தல் முடிந்ததும், அவனைத் தன் கையாலேயே கொல்ல வேண்டுமென்று தீர்மானித்தார். அவரின் அந்த முடிவு, காசி அண்ணாச்சிக்குத் தாங்க முடியாத சந்தோஷத்தை அளித்திருந்தது.
உப்பளக் கிட்டங்கியிலமர்ந்து வஸ்தாவி அதுவரை எவ்வளவு குடித்தாரென்று அவருக்கே தெரியவில்லை. காலி பாட்டில்களுக்கு மத்தியில் தள்ளாடியபடியே நடந்து, வெளியே வந்தவரை அவரின் ஆட்கள் தாங்கிப் பிடிக்க ஓடிவந்தார்கள். அவரின் வளர்ப்பு நாய்களும் சுற்றி நின்றுகொண்டு குரைத்தன. ஏதோ சரியில்லை என்பது மட்டும் எல்லோருக்கும் அவர் சொல்லாமலேயே புரிந்திருந்தது. வஸ்தாவி எல்லோரையும் பார்த்துச் சொன்னார். “எனக்கு இந்த ஊர்ல ஒருத்தனக் கொன்னு புதைக்கணும்...” என்றபடி அப்படியே வெளியிலிருந்த திண்ணையில் ஓய்ந்து படுத்தார்.
தங்களின் ஆசானுக்கு வேண்டப்படாத ஒருவரை அவர் கொல்லத் துடிக்கிறார் என்று தெரியவந்ததும், எல்லோரின் மனதிலும் குரூரமேறியது. விடிந்து அவர் கண்விழித்துப் பார்க்கும்போது, அவன் யாராக இருந்தாலும் அவனைக் கட்டித் தூக்கிவந்து, அவர் காலடியில் போட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அவன் யார், என்ன என்பது குறித்து காசி அண்ணாச்சியே அவர்களுக்குக் கைகாட்டிவிட்டார். அவருக்குத் தன் காரியம் சத்தமில்லாமல் முடிந்தால் போதுமென்பதே குறியாயிருந்தது.
கும்மிருட்டு நேரத்தில் வஸ்தாவியின் ஆட்கள் கடற்கரைக்கு அருகில் வந்திருந்தார்கள். அவர்களுக்கு சமுத்திரத்தை அடையாளம் காட்டுவதற்காக, காசி அண்ணாச்சி தன் ஆள் ஒருவனைக் கூடவே அனுப்பியிருந்தார். கடற்கரை மணலில் தோணி தரைதட்டி நின்றுகொண்டிருந்தது. அதன் அருகிலேயே சமுத்திரத்தின் புல்லட் நின்றுகொண்டிருந்தது. காசி அண்ணாச்சியின் ஆள் அவற்றைக் காட்டி, “உள்ளதான் கிடப்பான். உங்க ஆள்க ஒருத்தனை அனுப்பி எதுக்கும் தோது பார்த்துக்கிடுங்க. இதுக்குமேல நான் கூட இருக்க முடியாது. அப்புறம் அண்ணாச்சி மேல இந்தப் பழி விழுந்துடும். அதுக்கப்புறம் தூத்துக்குடியவே ரெண்டாக்கிருவாரு பெரிய பர்லாந்து” என்றபடி அங்கிருந்து விருட்டெனப் புறப்பட்டான்.
வஸ்தாவியின் ஆட்களில் ஒருவன், கையில் ஒரு குறுவாளை எடுத்துக்கொண்டு தோணியை நோக்கிப் போனான். தோணிக்கு மேலே ஏறவும் இறங்கவும் கனமான கயிற்று ஏணி ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அவன் அந்தக் கயிற்றைப் பிடித்தபடி மெல்ல மேலே ஏறத் தொடங்கினான். கயிற்றில் ஏறி தோணிக்குள் குதித்தவன், இருட்டுக்குள் தட்டுத் தடுமாறி, அறைக்கதவை மெல்லத் திறந்துபார்த்தான். உள்ளே காசி அண்ணாச்சியின் ஆள் சொன்ன அடையாளங்களுடன் ஒரு ஆள் உறங்குவதை உறுதிப்படுத்திக்கொண்டவன், மெல்ல ஏணியிலிருந்து கீழே இறங்கித் தன் குழுவிடம் வந்து சொன்னான். எல்லோரும் தங்கள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஒரே நேரத்தில் தோணியைச் சுற்றி வளைப்பதற்காக நெருங்கினார்கள்.
நாலெட்டுதான் எடுத்து வைத்திருப்பார்கள். அடுத்த நொடியே அடுத்தடுத்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் எங்கிருந்தோ சீறி வந்து அவர்கள் முன் விழுந்து வெடித்தன. அதிர்ச்சியும் திகிலுமாக அவர்கள் விழுந்தடித்துக் கிடக்க, தோணியின் முனையில் தன் வலது காலைத் தூக்கிவைத்தபடி, கரிய உருவமாக ரோசம்மா நின்றுகொண்டிருந்தாள்.
(பகை வளரும்...)