மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 4

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 4

வருடத்துக்கு நான்கைந்து முறை இப்படி ஆஸ்பத்திரிக்கும், பிணக்கிடங்குக்கும், சாவு ஊர்வலத்துக்கும், இறந்தவன் வீட்டுக்கு ரெத்தக்காசு கொடுக்கவும் போகவேண்டிய தேவையிருந்திருக்காது.

“வேட்டையாடு அல்லது வேட்டையாடப்படும் விலங்காக இரு. ஒருபோதும் வேட்டையாடி, எஜமானனிடம் கையளிக்கும் அடிமை நாயாக இருக்காதே!” - மூர்க்கர்கள்

தன் தம்பி சின்ன பர்லாந்தைக் கொல்ல, சமுத்திரம் உத்தரவு கேட்டும், பெரிய பர்லாந்திடம் எந்தத் திடுக்கிடலுமில்லை. நெடுநாள்களாக அவர் மனதுக்குள்ளும் ஓடிக்கொண்டேயிருக்கும் விஷயம்தான் அது. அவன் ஒருவனை மட்டும் கொன்றுபோட்டிருந்தால் இந்த யுத்தம் என்றோ நின்றுபோயிருக்கும். மாற்றி மாற்றி இத்தனை சாவுகளைக் கண்கொண்டு பார்த்திருக்கத் தேவையில்லை. இந்த மொத்தச் சாவுகளுக்கும் அவன் ஒருவன்தான் காரணம்.

வருடத்துக்கு நான்கைந்து முறை இப்படி ஆஸ்பத்திரிக்கும், பிணக்கிடங்குக்கும், சாவு ஊர்வலத்துக்கும், இறந்தவன் வீட்டுக்கு ரெத்தக்காசு கொடுக்கவும் போகவேண்டிய தேவையிருந்திருக்காது. சமுத்திரம் இதுபோல எத்தனை முறை இப்படி அதிகாலையில் இந்த வீட்டு வாசலில் நின்றுகொண்டு அவனைக் கொல்வதற்காகச் சம்மதம் கேட்டு நின்றிருக்கிறான்... இத்தனைக்கும் சின்ன பர்லாந்து அடுத்த வீட்டில்தான் இருக்கிறான். நொடிப்பொழுது ஆகாது, அவன் பிணத்தைப் பார்க்க. ஆனாலும், அவருக்கு உள்ளூர ஏதோ தடுத்துக்கொண்டிருந்தது. அது வேறொன்றுமில்லை, பனிமயமாதா சுரூபத்தின் முன்னால்வைத்து தன் அம்மா தன்னிடம் இறைஞ்சிக் கேட்ட வார்த்தைகளும், தனது அம்மாவுக்கு பெரிய பர்லாந்து செய்துகொடுத்த சத்தியமும்தான்.

“என்னால் அவனுக்கோ, அவன் குடும்பத்துக்கோ எந்த உயிரிழப்பும் நிகழாது” அந்த வார்த்தைகள்தான் சின்ன பர்லாந்தைத் தப்பவைத்துக்கொண்டேயிருக்கின்றன. ஆனால், சின்ன பர்லாந்திடம் அவன் அம்மா, அப்படி எந்தச் சத்தியத்தையும் வாங்கவில்லை. அதனாலேயே இதுவரை பெரிய பர்லாந்தைக் கொல்ல ஆறேழு முறைக்கும் மேல் தாக்குதல் நடந்துவிட்டது.

பக்கத்து வீட்டு ஜன்னலில் நின்றுகொண்டிருக்கும் சின்ன பர்லாந்தை கோபமாகப் பார்த்தபடி, விறுவிறுவென மழைக்குள் இறங்கி பிளசருக்குள் ஏறி வண்டியைக் கிளப்பினார் பெரிய பர்லாந்து. சமுத்திரம் அவரைப் பின்தொடர்ந்து தன் புல்லட்டில் நனைந்தபடி அவரைத் தொடர்ந்தான். ஈரத்தால் அவன் சட்டையும் கைலியும் முழுக்க நனைந்து உடலோடு ஒட்டிக்கொண்டன. முதுகுப் பக்கம் அவன் செருகிவைத்திருக்கும் சூரிக்கத்தியின் தடிப்பு அதில் நன்றாகத் தெரிந்தது.

இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையைத் தாண்டினால், இந்த யுத்தம் தொடங்கிச் சரியாக மூன்று வருடங்கள் நிறைந்திருக்கும். இப்போது இறந்தவர்களையும் சேர்த்து இதுவரை பெரிய பர்லாந்து பக்கம் ஏழு பேர் பலியாகியிருக்கிறார்கள். சின்ன பர்லாந்தின் தரப்பில் ஐந்து பேர். பெரிய பர்லாந்துக்கு சமுத்திரம் எப்படியோ, அப்படி சின்ன பர்லாந்தின் தளபதியாக கொடிமரம் இருக்கிறான்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 4

கொடிமரம் எந்த ஈவும், இறக்கமுமற்றவன். சின்ன பர்லாந்தின் நிழல். மூன்று வருடங்களுக்கு முன்புவரை எல்லோரும் ஒன்றாகத் தின்று, குடித்து, ஒண்ணு மண்ணாகத் திரிந்தார்கள்தான். அவ்வளவு ஏன்... சமுத்திரமும் கொடிமரமும் மச்சான் மாப்பிள்ளை என்று கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்தவர்கள்தான். இன்று எல்லாமும் மாறிவிட்டன. அத்தனைக்கும் ஒரே காரணம்தான். அது தூத்துக்குடி துறைமுகத்தின் அதிகாரத்தை யார் கையில் வைத்திருப்பது என்கிற போட்டி. அதற்காகத்தான் இவ்வளவு ரத்தம். அதற்காகத்தான் இத்தனை உயிர்ப்பலிகள்.

பாண்டிய மன்னர்கள் காலத்திலிருந்தே தூத்துக்குடி பேர்பெற்ற துறைமுகம்தான். காலங்காலமாக முத்துக்குளிப்பும் செழித்திருந்தது. பர்லாந்து குடும்பம் முந்நூறு வருடங்களுக்கு மேலாகக் கடற்கரையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இதே ஊரில், இதே கடற்கரையில்தான் பெரிய பர்லாந்தின் மூத்தோர்களும் வாழ்ந்து மடிந்தார்கள். இங்கிருக்கும் பெரிய கோயில் என்று சொல்லப்படும் பனிமயமாதா கோயில் கட்டப்படும் காலத்தில் இவரின் மூதாதைகள் செங்கல்லும் சுண்ணமும் சுமந்து கொடுத்தவர்கள். பர்லாந்து குடும்பம் பல தலைமுறைகளாகத் தோணிகளில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே வணிகம் செய்துகொண்டிருந்தது. தூத்துக்குடி திசையிலிருந்து கடலில் மிதக்கும் தோணிகளில் பத்துக்கு ஆறு தோணிகள் பர்லாந்து குடும்பத்தைச் சேர்ந்தவையாகத்தான் இருந்தன. பர்லாந்து என்பது அவர்களின் குடும்பப் பெயர். இப்போதிருக்கும் பெரிய பர்லாந்தின் பெயர். ஜோசப் பர்லாந்து, சின்ன பர்லாந்தின் பெயர் டேவிட் பர்லாந்து.

1970-க்குப் பிறகுதான் கடல் தொழிலில் இவ்வளவு போட்டிகள். அதற்கு முன்பாகத் துறைமுகம் இவ்வளவு பிரமாண்டமான கப்பல்கள் வந்து நிற்குமிடமாக இல்லை. இவ்வளவு கெடுபிடிகள் இந்தப் பத்து ஆண்டுகளுக்குள்தான். 70-க்கு மேல்தான் பெரிய பெரிய வணிகக் கப்பல்கள் வந்து நிற்குமிடமாக இது மாறத் தொடங்கியது. அதற்கு முன்பு வரை சரக்குகள் கொண்டுபோவதற்கும், கொண்டுவந்து இறக்குவதற்கும் எந்தக் கச்சாத்தும் யாரும் கேட்கவில்லை. அப்படியே யாராவது கேட்டாலும், பர்லாந்து குடும்பத்தின் தோணிகளை மறித்து யாரும் கேட்பதில்லை. அவர்கள், இந்தக் கடல் சாம்ராஜ்யத்தின் முடிசூடா அரசர்கள். இந்தக் கடலை ஆள்பவர்கள்.

1974-க்குப் பிறகு, துறைமுகம் கஸ்டம்ஸ் ஆபீஸின், ஆபீஸர்களின் கைக்கு வரத் தொடங்கிவிட்டது. இங்கிருந்து செல்லும் கால்படி கடுகுக்குக்கூட சர்க்காருக்குக் கணக்கு காட்டவேண்டி வந்தது. கச்சாத்து, ரசீது, என்ன சரக்கு, யாருக்கு என்றெல்லாம் துளைத்தெடுத்தார்கள். இத்தனை நூறாண்டுகளில் பர்லாந்து குடும்பத்துத் தோணிகளை யாரும் அப்படி நிறுத்திக் கேட்டதில்லை. பர்லாந்து குடும்பத்தின் தோணிகள் கஸ்டம்ஸில் அடிக்கடி மாட்டின. பர்லாந்துகளுக்கு இது பெரிய சள்ளையாக இருந்தது. வேறு வழியில்லை. காலம் மாறும்போது தாமும் மாறிக்கொள்ள வேண்டும். இனி கடற்தொழிலைவிட்டு வேறு தொழிலுக்குப் போக முடியாது. அவர்களுக்குக் கடலிலேயே ஊறி வளர்ந்த உடம்பு. உப்புக் காத்துக்குப் பழகின நாசி.

இனி இந்த துறைமுகம்தான் அந்த ஊரின் மிகவும் செல்வாக்கான சாம்ராஜ்யம். துறைமுகத்தின் அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அவன்தான் மொத்த ஊருக்கும் முடிசூடா மன்னன். இந்த சாம்ராஜ்யத்தைக் கையில் வைத்திருப்பவன்தான் கடலின் அரசன். ஆனால், கண்மூடி, கண் திறப்பதற்குள் வெவ்வேறு ஊர்களிலிருந்து யார் யாரோ கடலுக்குள் இறங்கினார்கள். புதிது புதிதாகத் துறைமுகச் சாலையில் கப்பல் நிறுவனங்கள் முளைத்தன. ஒன்றிரண்டு வடக்கத்தியர்கள்கூட இங்கு வந்து கடைவிரித்தார்கள். துறைமுகத்தைக் கைப்பற்றுவதற்குக் கடும் போட்டி தொடங்கியது. மெல்ல மெல்ல தூத்துக்குடி துறைமுகம் பர்லாந்து குடும்பத்திடமிருந்து நழுவி, வேறு யார் கைக்கெல்லாமோ போகத் துடித்தது. கிட்டத்தட்ட விலாங்கு மீனைத் துரத்தும் சாம்பல் தடவின கரங்கள்தான் அவை.

பெரிய பர்லாந்து அவர்களோடு போட்டி போடத் தயாராகயில்லை. அதேநேரம், வேறு கைகளுக்குத் துறைமுகம் போவதை அனுமதிக்கவும் அவருக்கு மனசில்லை. இப்படியான துறைமுக சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆள, கடுமையான போட்டியும் எதிர்ப்புமிருந்தன. பணத்தை வாரி இறைக்கவேண்டியிருந்தது. எத்தனையோ உயிர்களை பலி கேட்டது.

கஸ்டம்ஸ் ஆபீஸர்களில் சிலர், பர்லாந்துக்கு உதவத் தயாராயிருந்தார்கள். அத்தனை செல்வத்தையும் இறைத்து, அத்தனை உயிர்களைக் காவு கொடுத்து, கடலை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள் பர்லாந்து சகோதரர்கள். ஜோசப் பர்லாந்தும், டேவிட் பர்லாந்தும் ஒரு தாய் மக்கள் கிடையாது. இவர்களின் அப்பா ஜெபமாலை பர்லாந்துக்கு இரண்டு மனைவிகள். சில காலம் முன்புவரை அவரின் இரண்டு மனைவிகளின் வழியாகக் குடும்பங்களுக்குள் எந்த நெருடலுமில்லை. அதனாலேயே பர்லாந்து சகோதரர்களுக்குள்ளும் எந்தப் பிணக்கும் ஏற்படவில்லை. ஆனால், குடும்ப விழா ஒன்றில் சின்ன பர்லாந்தின் மனைவி வீட்டு ஆள் ஒருவன், குடித்துவிட்டுப் பேசிய பேச்சிலிருந்து பகை, தன் வாளை உயர்த்தத் தொடங்கியது.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 4

சின்ன பர்லாந்தின் கையில் எந்த அதிகாரமுமில்லை. அண்ணனின் அதிகாரத்துக்கு முன்னால் கைகட்டி நின்று, அவர் ஏவிய வேலையைச் செய்து முடிக்கும் கூலிக்காரன்போலச் சின்ன பர்லாந்தை, பெரிய பர்லாந்து தன்னுடன் வைத்திருக்கிறார் என்று சபையில் ஒருவன் கூப்பாடு போட்டான். அவனை எல்லோரும் சேர்ந்து வசைமாரி பொழிந்தார்கள். வீட்டுப் பெண்களுக்கு அப்போதே ஏதோ கெட்ட சகனம்போலத் தோன்றியது.

தன் அண்ணனைப்போலத் தனக்கும் அதிகாரமும் செல்வாக்கும் வேண்டுமென சின்ன பர்லாந்து கனவு காணத் தொடங்கினான். சிங்கத்தின் கீழாக அண்டி வாழும் கழுதைப் புலியின் வாழ்க்கையைத் தன் அண்ணனுக்குக் கீழ், தான் ஒண்டி வாழும் இந்த வாழ்க்கையோடு சேர்த்து அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொண்டான். புகையைப்போல குடும்பத்துக்குள் பகை பரவத் தொடங்கியது.

வீட்டையும், நிலபுலன்களையும், பணத்தையும், உப்பளப் பாத்திகளையும், தோணி உட்பட அத்தனை கடல் சொத்துகளையும் பங்கு பிரிக்கக் கேட்டு சின்ன பர்லாந்து துடியாக நின்றான். வீட்டுப் பெண்கள் எல்லோரும் அது மட்டும் வேண்டாமென்று அழுது மன்றாடினார்கள். சின்ன பர்லாந்துவுக்கு, தான் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பது நன்றாகத் தெரிந்திருந்தது.

அந்த வீட்டில் எல்லோரையும்விட, ஏன்... பெரிய பர்லாந்துவைவிட செல்வாக்குமிக்க ஒரு ஆள் உண்டென்றால் அது ரோசரியம்மாள்தான். ரோசரியம்மாள் பெரிய பர்லாந்துவைப் பெற்ற தாய். ரோசரியம்மாளுக்கு, தான் பெற்ற மகனைக் காட்டிலும் சின்ன பர்லாந்துவிடம் ஒரு படி பாசம் அதிகம். அவள்தான் அவனைத் தூக்கி வளர்த்தவள். அதனாலேயே அவனும் தன்னைப் பெற்ற தாயைவிட ரோசரியம்மாளிடம் உரிமையும் பாசமும் அதிகம் எடுத்துக்கொள்வான்.

எல்லாவற்றையும் பிரிக்கச் சொல்லி ரோசரியம்மாளிடம் போய் கேட்ட நாளில், அவர் அதிகாலை கிளம்பிப்போய் இரவு வரை பனிமயமாதா கோயிலில் அமர்ந்து கண்ணீர் வடிய வடிய ஜெபம் பண்ணிவிட்டுத் திரும்பி வந்தார். அடுத்த நாள் காலையில் பெரிய பர்லாந்தை அழைத்து எல்லாவற்றையும் சரி பாதியாகப் பிரித்து அவனிடம் கொடுக்கச் சொல்லிவிட்டார்.

அன்று பர்லாந்து குடும்பத்தைப் பாதியாக வகுந்தார்கள்.

(பகை வளரும்)