
9.07.2006 ஆனந்த விகடன் இதழில்
கவிஞர் சுரதா பிறந்த நாள் நவம்பர் 23. அவர் மறைந்தது 2006 ஜூன் 19. விகடனோடு சுரதா நெருங்கிய தொடர்பு கொண்டவர். தொடர்ந்து விகடனில் கவிதைகள் எழுதி வந்துள்ளார் சுரதா. 9.07.2006 ஆனந்த விகடன் இதழில் உவமைக் கவிஞர் சுரதா பற்றி ஈரோடு தமிழன்பன் பகிர்ந்துகொள்கிறார்.
‘‘17-ம் நூற்றாண்டில், ஆங்கிலத்தில் ஒரு தனித்துவமான கவிதை இயக்கம் தோன்றியது. அதனை ‘மெட்டபிஸிகல் பொயட்ரி’ என்று சொல்வார்கள். அந்த இயக்கத்தில் ஜான் டன், கிரஸாவ், ஜார்ஜ் ஹெரிபெட் எனப் பல முக்கியக் கவிஞர்கள் தோன்றி, ஆங்கிலக் கவிதையில் ஓர் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தினார்கள். அறிவுமையத்தில் கால்கொண்ட அக்கவிதையில், எங்கோ தொலைதூரத்தில் இருந்து கொய்யப் பெற்ற உவமையும் தேடிச் சேகரித்த அரிய தகவலும் இருக்கும். ஆங்கிலப் பயிற்சி இல்லாத கவிஞர் சுரதாவிடம், தமிழில் அப்படிப்பட்ட கவிதைகளைக் காண முடிந்தது ஓர் ஆச்சர்யமே!

சுரதாவிடம் உரையாடிக்கொண்டு இருந்தால், விதவிதமான கவிதைத் தெறிப்புகள், வண்ணமயமான உவமைகள் எல்லாம் அப்பேச்சினிடையே பூத்துக் குலுங்கும்.
என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம்... தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத் தொடக்க விழா. சுரதா தலைமையில் கவியரங்கம். தமிழ்நாட்டின் முன்னோடிக் கவிஞர்கள் பலரும் அதில் பங்குகொண்டனர்.
‘அண்ணாவின் நடை’ என்கிற தலைப்பில், நான் கவிதை வழங்கினேன். கவிதை படித்து முடித்து, என் இருக்கைக்குத் திரும்பும் முன், ‘அங்கேயே நில்லுங்கள்’ என்றார் சுரதா. என்னவோ, ஏதோவென்று ஒரு நிமிடம் பதறிப் போனேன். சுரதா தன் இருக்கையிலிருந்து விறுவிறுவென்று எழுந்து வந்து, என்னைக் கட்டிப்பிடித்து, நெற்றியில் முத்தம் இட்டார். பின்னர் ஒலிபெருக்கியில் அனைவருக்கும் கேட்கும்படியாக, ‘என்ன அருமையான கவிதை! பொறாமைப்படலாமே தவிர, இதுபோல என்னால் எழுத முடியாது’ என்றார். அவருடைய பரந்த உள்ளமும், தன்னிலும் இளைய கவிஞர்களின் திறமையை உச்சிமுகர்ந்து பாராட்டும் பண்பும் என்னைச் சிலிர்க்கவைத்தன.
கவியரங்கம் முடிந்து இருப்பிடத்துக்குத் திரும்பிய பிறகு, ‘என்ன நீங்கள், இப்படிச் செய்துவிட்டீர்கள்? நீங்கள் எங்கே, நான் எங்கே’ என்று மனம் மிக நெகிழ்ந்தவனாய், அவர் கைகளைப் பற்றினேன். அதற்கு சுரதா சொன்னார்... ‘அது மட்டும் மேடையாக இல்லாமல் அறையாக இருந்திருக்குமேயானால், நான் உன் காலிலேயே விழுந்திருப்பேன். அந்த இரண்டு, மூன்று நிமிடங்களேனும் நான் யோக்கியனாக இருக்க வேண்டாமா?’
என்னவொரு பெரிய மனசு பாருங்கள்! நான் பெற்ற பரிசுகளிலேயே மிகச் சிறந்த பரிசு, சுரதா என் நெற்றியில் இட்ட முத்தம்தான்!’’
- எஸ்.கலீல்ராஜா
‘அமுதும் தேனும் எதற்கு... நீ அருகில் இருக்கையிலே எனக்கு...’, ‘கண்ணில் வந்து மின்னல்போல் காணுதே, இன்பக் காவியக் கனவே ஓவியமே...’, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா...’ போன்ற காலத்தால் அழியாத பல திரைப்படப் பாடல்களை எழுதியவர் கவிஞர் சுரதா!
புதுவைக்குச் சென்று பாரதிதாசனைச் சந்தித்து, அவரிடம் உதவியாளராகச் சேர விரும்பிய சுரதாவிடம் பயணச் செலவுக்குப் பணமில்லை. நண்பர்களிடம் உதவி கேட்டார். சிலர் கையையும், சிலர் பொய்யையும் விரித்தனர்.
அப்போது, நாகப்பட்டினம் அருகில் உள்ள கீவளூர் கோயிலில் வெள்ளையடிக்கும் வேலை நடந்துகொண்டு இருந்தது. அங்கு சென்று, ஆறு நாட்கள் சுண்ணாம்பு அடித்தார் சுரதா. அதற்குக் கிடைத்த கூலித் தொகையான ஒன்றரை ரூபாயுடன் புதுவைக்குச் சென்று, தான் விரும்பியபடியே பாரதிதாசனைச் சந்தித்து, அவரிடம் உதவியாளராக இணைந்தார். பின்பு, அவர்மீது கொண்ட பற்று காரணமாக சுப்பு ரத்தின தாசன் (பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்) எனப் புனைபெயர் சூட்டிக்கொண்டார்.
கவியரங்கங்களைச் சம்பிரதாயமான ‘மேடை’யை விட்டுக் கீழிறக்கி, வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழு நிலாக் கவியரங்கம், கடற்கரைக் கவியரங்கம், நதிக்கரைக் கவியரங்கம், தெப்பக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம், ரயில் கவியரங்கம், பேருந்துக் கவியரங்கம் என்று விதவிதமாகக் கவியரங்கங்கள் நடத்தி, மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
சுரதாவுக்குப் பிடித்த பழந்தமிழ் நூல்களுள் ஒன்று ‘கல்லாடம்.’ அதன் காரணமாகவே, தன் ஒரே மகனுக்குக் ‘கல்லாடன்’ எனப் பெயர் சூட்டினார்.
1987-ல், மலேஷியாவில் நடைபெற்ற ஆறாவது உலகத் தமிழ் மாநாட்டில், ‘உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை’ என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. தன் இறுதிக்காலம் வரை அதன் தலைவராக இருந்து, பல தமிழ்ப் பணிகளை ஆற்றியுள்ளார் சுரதா.
தொகுப்பு: எஸ்.ராஜகுமாரன்
29.12.1940 ஆனந்த விகடன் இதழில்
விநாயகத்தின் விடுதலை - கல்கி

தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரின் ‘தேசபக்தன்’ பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்த எழுத்தாளர் கல்கி, விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசனால் ஈர்க்கப்பட்டு, 1931-ம் ஆண்டு, ஆனந்த விகடன் பத்திரிகையில் பொறுப்பாசிரியராகப் பணியில் சேர்ந்தார். தமிழின் முதல் பேசும் திரைப்படமான ‘காளிதாஸ்’ படத்துக்கு விகடனில் விமர்சனம் எழுதியவர் கல்கிதான். இயற்பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. இவர் ‘கர்நாடகம்’ என்னும் புனைபெயரில் இசை, நடன நிகழ்ச்சிகளை விமர்சனம் செய்துள்ளார். தவிர, ‘எமன்’, ‘குஹன்’, ‘அகஸ்தியர்’, ‘விவசாயி’, ‘தமிழ்மகன்’ ‘லாங்குலன்’ (இந்த சம்ஸ்கிருத வார்த்தைக்கு ‘வால்’ என்று அர்த்தம்) என இன்னும் பல புனை பெயர்களிலும் அவர் எழுதியுள்ளார். அவர் விகடனில் முதலில் எழுதிய கட்டுரை ‘ஏட்டிக்குப் போட்டி.’ 29.12.1940 தேதியிட்ட இதழில் வெளியான ‘விநாயகத்தின் விடுதலை’ என்னும் சிறுகதைதான், ஆனந்த விகடனில் அவரின் கடைசிப் படைப்பு. அமரர் ‘கல்கி’யின் நினைவாக அந்தக் கதையை இங்கே தருவதில் மகிழ்கிறோம்.
“ஜெயிலர் அதிகாரமும் மரியாதையும் கலந்த குரலில் ‘’மிஸ்டர் விநாயகம், சொல்வதற்கு ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் என்ன செய்யலாம்? இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி உங்களைப் பாதுகாப்பில் வைப்பதற்கு உத்தரவு வந்திருக்கிறது. இந்த பிளாக்கில் இருந்து பாதுகாப்பு கைதிகள் இருக்கும் பிளாக்கிற்கு நீங்கள் போக வேண்டியது. விடுதலை இன்று இல்லை’’ என்றார்.
முழுக்கதையையும் வாசிக்க...