சினிமா
கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

விகடன் பொக்கிஷம்: கதாவிலாசம் - அகச்சித்திரம்

மகாகவி பாரதியார்
பிரீமியம் ஸ்டோரி
News
மகாகவி பாரதியார்

25.12.2005 ஆனந்த விகடன் இதழில்

காசியில் உள்ள மகாகவி பாரதியாரின் வீட்டைக் காண்பதற்காக அனுமான் ஹாட் பகுதியில் சுற்றிக்கொண்டே இருந்தேன். அது எங்கே இருக்கிறது என்று என்னை அழைத்துப் போனவருக்கும் அடையாளம் தெரியவில்லை. யார் பாரதியார் என்று ஆங்காங்கே யாராவது கேட்பதும், அவரைப் பற்றி நாங்கள் சொல்வதுமாக காலையிலிருந்தே சுற்றித் திரிந்தோம்.

காசியில் கடை வைத்திருக்கும் ஒன்றிரண்டு தமிழர்களுக்குக்கூட பாரதியார் அங்கே சில காலம் வசித்தார் என்பதோ, அவரது வீடு அங்கே இருக்கிறது என்பதோ தெரியவில்லை. சுற்றி அலைந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு கண்டு பிடித்துவிட்டேன். சிறிய சந்து போன்ற பகுதியில் அமைந்த குடியிருப்பு. காலமாற்றத்தில் அவர் வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டு வேறு ஏதோ வீடுகள் உருவாகிவிட்டன. பாரதியாரின் காலத்தில் காசி இன்னும் பழைமையேறி இருக்கக்கூடும். தன் வாலிபத்தில் இந்த நகரில்தான் பாரதியார் அலைந்து திரிந்திருக்கிறார். இந்தப் படித்துறை களில்தான் அவரும் குளித்திருப்பார். கங்கையின் பிரவாகத்தை அவரும் தன்னை மறந்து பார்த்திருப்பார்.

பாரதியார் வசித்த இடங்களையும் அவரது கையெழுத்துப் பிரதிகளையும் பார்த்துத் திரிந்த நாட்களில் இருந்த ஒரே ஆசை, ‘பாரதியாரை நேரில் பார்த்த எவராவது ஒருவரைச் சந்தித்துவிட வேண்டும்’ என்பதே. கடையத்தில் உள்ள கல்யாணசுந்தரம் என்பவர் சிறுவயதில் பாரதியாரை நேரில் பார்த்திருக்கிறார் என்று என் நண்பர் ஒருவர் தெரிவித்தார். அவரிடமிருந்து முகவரியை வாங்கிக்கொண்டு கல்யாணசுந்தரத்தைப் பார்ப்பதற்காகச் சென்றேன். அவருக்கு எழுபது வயதைக் கடந்திருக்கும். தானும் ஒரு காலத்தில் சிறுகதைகள் எழுதியிருப்பதாகத் தெரிவித்தார். “நீங்கள் மகாகவி பாரதியாரை நேரில் பார்த்திருக்கிறீர்களா?’’ என்று கேட்டதும் அவர் முகத்தில் ஆழ்ந்த யோசனை படர்ந்தது. மெலிதான குரலில் அவர் தனது பத்து வயதில் கடையத்தில் பாரதியாரைப் பார்த்திருப்பதாகவும் அப்போது பாரதியார் தன் மனைவியின் வீடு இருந்த அக்ரஹாரத்தில் தங்கியிருந்ததாகவும் சொன்னார்.

`பாரதியார் உங்களோடு எப்படிப் பழகினார்?’ என்று கேட்டதும், “நாங்க சின்னப் பையன்கள். அதனால் எங்களைக் கூப்பிட்டு தபால் அட்டைகளை போஸ்ட் பாக்ஸில் போட்டு வரச் சொல்வார். சில நாட்கள் எங்களை மலையடிவாரத்திற்குக் கூட்டிப்போய் ‘ஓம் சக்தி’ன்னு கத்துவார். அது மலையில் எதிரொலிக்கும். அப்போ, யாரோ அங்கே ஒளிஞ்சிகிட்டு நாம சொல்ல அதை திரும்பச் சொல்றாங்க பாத்தீங்களா’ன்னு சொல்லிச் சிரிப்பார். நான் அவரிடம் இருந்தே கைப்பட அவரது கவிதைப் புஸ்தகத்தை வாங்கியிருக்கிறேன்.

விகடன் பொக்கிஷம்: கதாவிலாசம் - அகச்சித்திரம்

அவரை கொஞ்சநாள் அக்ரஹாரத்தை விட்டு விலக்கி வெச்சிருந்தாங்க. அப்போ நாங்கதான் மாமி தர்ற சாப்பாட்டைக் கொண்டுபோய் கொடுப்போம். அவர் அதுக்குள்ளே சலவைத் தொழிலாளி வீட்டுக்குப் போய் கிடைக்கிறதைச் சாப்பிட்டுடுவாரு. மாமி ரொம்ப கோவிச்சுக்கிடுவாங்க. ஆனா அவருக்கு எல்லாமே சிரிப்புதான்!

ஒருநாள் தண்டோரா போடுற ஒருத்தனை வரச்சொல்லி, ‘சாகாமல் இருப்பது எப்படி’ன்னு தான் பேசப்போறதா தெருத்தெருவா தமுக்கு அடிக்கச் சொன்னாரு. சாயங்காலம் தெருவே கூடி வழியுது. பாரதியார் ஒரு வீட்டுத் திண்ணையில் ஏறி நின்னுகிட்டு, ‘சாகாம இருப்பதற்கு வழி தெரியுமா? அதுக்கு முதல்ல நீங்க உயிரோட இருக்கணும். அடுத்தவங்களுக்கு எந்த உதவியும் செய்யாமலும், எப்ப பார்த்தாலும் வீண் வம்பு பேசிட்டும் இருக்குற நீங்க எல்லாம் ஏறகெனவே பிரேதம்தான்’ என்று சொல்லிச் சிரிச்சாரு. எல்லோருக்கும் கோபம் பொத்துக்கிட்டு வந்திருச்சு. அவரை பைத்தியம் பைத்தியம்னு சொல்லிட்டே போனாங்க. என் காதால கேட்டேன்.

அப்போ பாரதியாரோட அருமை யாருக்கும் தெரியல. ஏதோ தெய்வ கடாட்சம், அவரை நேரில் பாக்குறதுக்கு பேசுவதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது. ஆனால் கடையத்தில் அவர் ரொம்ப நாள் இருக்கலே. கிளம்பிப் போயிட்டாரு. பின்னாடி அவர் கடையத்துக்கு வரவும் இல்லை. பாரதியார் கிட்ட இருந்து வாங்கிய புஸ்தகத்தை பத்திரமா ரொம்ப வருஷம் வெச்சிருந்தேன். ஆனால் எப்படியோ காணாமப்போயிருச்சு.

அந்தக் காலத்தில் அவரைப் பத்தி சில விஷயங்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். அது எவ்வளவு தூரம் நிஜம்னு தெரியாது. அவருக்கு யானைன்னா‌ ரொம்ப பிடிக்கும்னு தெரியுமில்லையா, அவர் யானைப்பாகன் கிட்டே போய் ஒரு ரூபா, ரெண்டு ரூபா காசு கொடுத்துட்டு யானையோட துதிக்கையைத் தடவித் தடவிப் பாத்துக்கிட்டே இருப்பாராம். சில நேரம் அவர் அதை பல்லால் கடிச்சுக்கூட பாப்பாராம்

பாகன் சத்தம் போட்டதும் சிரிச்சுக்கிட்டே போய்டுவாராம். பாரதியாரை யானை தூக்கிப்போட்ட அன்னிக்குக்கூட இப்படித்தான் நடந்திருக்கணும்னு நெல்லையில் உள்ள எங்க மாமா சொன்னார். ஆனா, நிஜமான்னு தெரியல” என்றார்.

பாரதியாரின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் குறித்து இதுபோன்று எத்தனையோ கதைகள் இருக்கின்றன. இன்றைக்கும் அவரது வாழ்வு முடிவற்ற ஒரு புனைவைப் போலத்தான் இருக்கிறது.

- எஸ். ராமகிருஷ்ணன்

விகடன் பொக்கிஷம் தொகுப்பு: ரவி பிரகாஷ்

விகடன் பொக்கிஷம்: கதாவிலாசம் - அகச்சித்திரம்

தாவிலாசம் வழியே தமிழின் முக்கிய சிறுகதை ஆசிரியர்கள் குறித்தும், என் வாழ்வனுபவங்கள் குறித்தும் உங்களோடு பகிர்ந்துகொள்ள கிடைத்த சந்தர்ப்பம் மிகுந்த சந்தோஷம் தருவதாக இருந்தது. தமிழ்ச் சிறுகதை உலகை வளப்படுத்தியவர்களாக நான் மதிக்க கூடியவர்களில் 50 சிறுகதை ஆசிரியர்கள் இதில் இடம் பெற்றிருந்தார்கள். இவர்களுக்கு வெளியிலும் நல்ல சிறுகதை ஆசிரியர்கள் பலர் உண்டு. இந்த தேர்வு என் வாசிப்பும், விருப்பமும் சார்ந்தது. ஒவ்வொரு வாரமும் வாசகர்கள் தொலைபேசியிலும் நேரிலும் கடிதத்திலும் இதற்கு அளித்த வரவேற்பு உற்சாகமும் என்றும் மறக்கமுடியாதவை. எழுதுவதற்கான முழு சுதந்திரமும், உற்சாகமும் தரும் வரும் விகடனுக்கு மனம் நிறைந்த நன்றி!

- எஸ் ராமகிருஷ்ணன்