Published:Updated:

50 நாடுகள், 7 கண்டங்கள்...பிரமிப்பூட்டும் முதல் நெட்ஃபிளிக்ஸ் வைல்டுலைஃப் சீரிஸின் டிரெய்லர்!

50 நாடுகள், 7 கண்டங்கள்...பிரமிப்பூட்டும் முதல் நெட்ஃபிளிக்ஸ் வைல்டுலைஃப் சீரிஸின் டிரெய்லர்!
50 நாடுகள், 7 கண்டங்கள்...பிரமிப்பூட்டும் முதல் நெட்ஃபிளிக்ஸ் வைல்டுலைஃப் சீரிஸின் டிரெய்லர்!

வீடியோ ஸ்ட்ரீமிங்கில் கொடிகட்டிப் பறக்கும் நெட்ஃபிளிக்ஸ், இப்போது சுமார் 200 நாடுகளில் தங்கள் சேவைகளை கொடுக்கத் தொடங்கிவிட்டது. இப்படியாக இருக்கும் பலதரப்பட்ட பார்வையாளர்களின் விருப்பத்திற்கும் ஏற்ப ஏதேனும் நிகழ்ச்சிகளைத் தயாரித்து தங்கள் தளத்தில் வெளியிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது நெட்ஃபிளிக்ஸ். பல ஜானர்களில் கன்டென்ட் தயாரித்துள்ள நெட்ஃப்ளிக்ஸ் தனது முதல் வைல்ட்லைஃப் டாக்குமென்டரி சீரிஸான `அவர் பிளானட்'-டை(Our Planet) ஏப்ரல் மாதம் வெளியிடவுள்ளது. அந்தத் தொடரின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

4 வருடங்களாக 50 நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது இந்தத் தொடர். இதற்காக 600-க்கும் மேலான குழுவினர் வேலைபார்த்திருக்கின்றனர். முதல் எபிசோடு பிரேசிலில் தொடங்கி நார்வேயில் இருக்கும் அர்ச்சிபெலகோவில் முடியும். எப்படி இந்த வாழ்விடங்கள் தொடர்புடையதாக இருக்கின்றன, ஏன் இந்த நிலப்பரப்புகள் உயிர்களுக்கு முக்கியம் எனப் பேசும். அடுத்தடுத்த எபிசோடுகள் உலகமெங்கும் இருக்கும் காடுகள், மலைகள், பாலைவனங்கள் எனக் காட்சிகள் விரிவடையும். இதை உலகின் சிறந்த வைல்டு லைஃப் ஒளிப்பதிவாளர்கள் முன்னணி 4K கேமரா தொழில்நுட்பத்தில் படம்பிடித்துள்ளனர். இதுவரை கேமராவில் பதிவாகாத பல இயற்கை நிகழ்வுகள் இந்தத் தொடருக்காகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது நெட்ஃபிளிக்ஸ். 

தனக்கென தனி ரசிகர்களைக் கொண்டிருக்கும் உலகப் புகழ்பெற்ற இயற்கையியலாளர் சர் டேவிட் அட்டன்ப்ரோவ் இந்தத் தொடருக்கு ஆங்கில வர்ணனை கொடுத்துள்ளார். பிபிசியின் பல பிரபல வைல்டுலைஃப் டாக்குமென்டரிகளில் கேட்கும் குரல் இவருடையதே. மேலும் 10 மொழிகளிலும் இது வெளியாகும். அவற்றிலும் முக்கிய பிரபலங்களே குரல் கொடுத்திருக்கின்றனர். இந்தத் துறையில் ராஜாவாக இருக்கும் பிபிசியை நெட்ஃபிளிக்ஸ் விஞ்சுமா என்பது வரும் ஏப்ரல் 5-ம் தேதிக்குப் பின் தெரியும்.