Published:Updated:

எந்தெந்த நாவலையெல்லாம் வெப்சீரிஸ் ஆக்கலாம்? பரிந்துரைக்கும் படைப்பாளிகள்! #WebSeries

Web Series
Web Series

வெப் சீரிஸ் களம் தமிழுக்குப் புதிது. அதில் களமிறங்க காத்திருப்பவர்களுக்கு, இங்கு பேசப்படாத களங்களையும், கதைகளையும் பேசுவதற்கு வாய்ப்புள்ளது. திரைத்துறையைவிட சுதந்திரமுள்ளதாகக் கருதப்படும்.

90'களின் இறுதியில் மேற்கத்திய நாடுகளில் வேர்விடத் தொடங்கியது `வெப்- சீரிஸ்'. தற்போது, அது இந்திய ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. `டெலிவிஷன் சீரிஸ்' பாணியிலேயே அமைந்த வெப் சீரிஸ், உலகெங்கும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. தமிழகத்திலும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் போன்ற தளங்கள் சகஜமாகப் புழங்கத் தொடங்கிவிட்டன. `கேம் ஆஃப் த்ரோன்ஸ்', `மணி ஹெய்ஸ்ட்' போன்ற டிவி/வெப் சீரிஸ்களுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. ராவான கதைக்களம், சென்சார்களற்ற காட்சிகள், பரபரப்பான திரைக்கதை என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும் புதுவிதமான அனுபவத்தைத் தருகிறது இந்த `வெப்-சீரிஸ்' களம்.

வெண்ணிற இரவுகள் புத்தகம்
வெண்ணிற இரவுகள் புத்தகம்

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் `டேவிட் ஃபின்சர்' போலவே தற்போது தமிழகத்தின் பிரபல இயக்குநர்கள் பலரும் வெப் சீரிஸ் எடுக்கவிருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கெனவே தமிழில் `ஆட்டோ சங்கர்', `குயின்' போன்ற வெப் சீரிஸ்கள் கவனம் பெற்றுள்ளன. `வித்தியாசமாக கதைகளை எழுத முடிபவர்களுக்கான களமாக வெப் சீரிஸ் இருக்கும்' என்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

தமிழில் என்ன மாதிரியான கதைகள் வெப் சீரிஸ்களுக்கு உகந்தவை, மேற்கத்திய நாடுகளைப் போல பிரபலமான நாவல்களைப் படமாக்குதல் சாத்தியப்படுமா என, வெப் சீரிஸ்களில் எழுதத் தொடங்கியிருக்கும் எழுத்தாளர்களிடம், இயக்குநர்களிடம் பேசினோம்.

தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும், திரைத்துறையில் தொடர்ச்சியாக இயங்கி வருபவருமான ஜே.பி.சாணக்யாவிடம் பேசினோம்.
J.P.Chanakya
J.P.Chanakya
PC: Shruthi TV

"தமிழ் நாவல்கள் பெரும்பாலும் நினைவுத் தொகுப்பாக உள்ளன. இந்த நினைவுகள் குடும்பங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட கதைகள். தமிழில் நாவல்களுக்கு பஞ்சமில்லை. ஏராளமான எழுத்தாளர்கள் உள்ளனர். ஆனால், திரைக்கதை எழுதுபவர்கள் மிகக்குறைவு. தமிழ் வெப் சீரிஸ்களுக்கு எழுத்தாளர்கள் மட்டும் போதாது‌.

ஆகாயத் தாமரை புத்தகம்
ஆகாயத் தாமரை புத்தகம்

திரை மொழி அறிந்த, தேர்ந்த திரைக்கதை எழுதுபவர்கள் அவசியம் தேவை. டேவிட் பின்சர் இயக்கிய `செவன்' (Seven) திரைப்படம் போல தமிழ் எழுத்தாளர்கள் கதை எழுத முடியுமா என்பது சந்தேகமே. பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் குடும்பப் பின்னணியை வைத்து கதை எழுதுபவர்கள்தான். ஓர் எழுத்தாளர் எழுதக்கூடிய கதையைத் திரைப்படமாகவோ, வெப்சீரிஸ் ஆகவோ தேர்ந்த திரைக்கதை எழுதுபவர்களால் எடுக்க முடியும். வெப் சீரிஸ் என்பது ஒரு சீரியல்தான். ஆனால், ஒவ்வொரு சீரியல் முடிவின் போதும், `அடுத்து என்ன நடக்கப் போகிறது' என்ற விறுவிறுப்புடன் முடிக்க வேண்டும். இதைத் திரைக்கதை எழுதுபவர்களால் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுதுபவர்களுக்கு என்று தனி அங்கீகாரம் கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுதுவோர் என்று தனி அமைப்பு உருவாக வேண்டும். இப்படி உருவாகும் பட்சத்தில் நல்ல திரைப்படங்களையும் வெப் சீரிஸ்களையும் தமிழில் அதிகம் காணலாம். கச்சிதமான இயக்குநர், எழுத்தாளரின் கதை, விறுவிறுப்பாக திரைக்கதை எழுதுபவர் என்று ஒரு கூட்டணி உருவாகினால் தமிழ் நாவல்களை வெப் சீரிஸாக, திரைப்படங்களாக எடுக்கலாம். என்னுடைய பார்வையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றை விவரமாக அல்லது வெப் சீரிஸாகவோ எடுக்கலாம்.

மூன்று காதல் கதைகள்
மூன்று காதல் கதைகள்
காதலுக்கு ஏது இலக்கணம்?

தி. ஜானகிராமனின் `மோகமுள்' நாவலை ஒரு மணி நேரத்துக்கு ஒரு எபிசோட் ஆக வைத்து சிறப்பான வெப் சீரிஸாக எடுக்கலாம். சுந்தர ராமசாமி எழுதிய `ஒரு புளியமரத்தின் கதை', ஜெயமோகனின் `காடு' நாவலுக்குச் சிறப்பான திரைக்கதை எழுதினால் அதை வெப் சீரிஸாக எடுக்க முடியும். ஜி. நாகராஜனின் `நாளை மற்றும் ஒரு நாளே' வெப் சீரிஸாக எடுக்க உகந்த களம். பல நபர்களின் பயோகிராஃபிகளையும் வெப் சீரிஸாக எடுக்கலாம். உதாரணமாக `நளினி ஜமீலா'வின் வாழ்வை சிறப்பான வெப் சீரிஸாக எடுக்க முடியும். இப்படி தமிழ் இலக்கியத்திலிருந்து தமிழ் சினிமாவுக்குத் தேவையான கதைகளை எடுத்துக்கொள்ளலாம்‌. என்னுடைய கருத்து இதுதான், நாவலில் கதை வடிவில் இருப்பவற்றை திரைக்கதை வடிவத்துக்கு மாற்றுவதற்கு சிறப்பான திரைக்கதை எழுத்தாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

இயக்குநர் விஜய் மில்டன் பேசியபோது,

"நம்மைச் சுற்றி நடக்கக்கூடிய நிகழ்வுகளிலிருந்து சினிமா, வெப் சீரிஸ் கதைகளைத் தேர்ந்தெடுக்கலாம். கதைகளைப் பொறுத்தவரை திரைப்படம், வெப் சீரிஸ் என என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. கதையின் போக்கைக்கொண்டு அதைத் தீர்மானிக்கலாம். ஆனால், நம் ஒவ்வொருவரின் பார்வையிலும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. சிறுவயதிலிருந்து நான் வாசித்த புத்தகங்களில் எந்தப் புத்தகங்களைப் படமாகவோ, வெப் சீரிஸாகவோ எடுக்கலாம் என்று நான் குறித்து வைத்துள்ளேன்.

 விஜய் மில்டன் !
விஜய் மில்டன் !
சுஜாதாவின் `24 ரூபாய் தீவு', `பாதி ராஜ்ஜியம்', `நில்லுங்கள் ராஜாவே' எனக்கு மிகவும் பிடித்த இந்தக் கதைகளை, கருவாக வைத்து திரைப்படம் எடுக்க ஆசை உண்டு. ஒரே தீம் சார்ந்து எழுதப்பட்ட இரண்டு எழுத்தாளர்களின் புத்தகங்களை இணைத்தும் திரைக்கதை அமைக்கலாம். `கடுகு' திரைப்படம், சுஜாதாவின் 'ரோஜா' என்ற குறுநாவலும், அசோகமித்ரனின் 'புலிக் கலைஞன்' என்ற சிறுகதையும் இணைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். அசோகமித்திரன் `ஆகாயத் தாமரை' இந்திரா சௌந்தரராஜனின் கதைகள் இவற்றை படமாக எடுக்கலாம். நாஞ்சில் நாடனின் எல்லை தெய்வங்களைப் பற்றிய சிறுகதைகளை இணைத்து சீரிஸ் எடுக்கலாம்.
விஜய் மில்டன்
கடல்புரத்தில் புத்தகம்
கடல்புரத்தில் புத்தகம்

வண்ணநிலவனின் `கடல்புரத்தில்' நாவலையும், தாஸ்தேவ்ஸ்கியின் `வெண்ணிற இரவுகள்' இரண்டையும் இணைத்து ஒரு படமாக்கலாம். `வெண்ணிற இரவுகள்'' பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழில் `இயற்கை' படம் வெண்ணிற இரவுகளை வைத்து எடுக்கப்பட்டது. ஆனாலும் வெண்ணிற இரவுகள் வைத்து இன்னும் நிறைய எடுக்க முடியும். நாஸ்தென்காவை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. சிறுவயதில் நிறைய ரஷ்ய இலக்கியங்கள் படித்துள்ளேன். அதில் 'வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு' சிறுகதையை வைத்து விறுவிறுப்பான படம் என்னால் இயக்க‌ முடியும். `மூன்று காதல் கதைகள்', தகழி சிவசங்கர பிள்ளையின் `ஏணிப்படிகள்', ஜெயகாந்தனின் `ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன', பாலகுமாரனின் `இரும்புக் குதிரைகள்', ஷேக்ஸ்பியரின் ' ட்வெல்த் நைட்' (Twelfth Night)... இப்படி பல்வேறு புத்தகங்களைப் படமாக்க முடியும். திரைப்படங்களுக்கான கதைகள் சிதறிக்கிடக்கின்றன. அவற்றை நாம் எவ்வாறு பார்க்கிறோம், எந்தக் கோணத்தில் ஒரு விஷயத்தை அணுகுகிறோம் என்பதில்தான் திரைக்கதையை நம்மால் எழுத முடியும்.

எழுத்தாளரும் கவிஞருமான சாம்ராஜ் திரைத்துறையில் பணிபுரிபவர். மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற `திருடன் மணியன் பிள்ளை' நாவலின் திரைப்படமாக்கும் உரிமம் பெற்றுள்ளார். அதைத் திரைப்படமாக்கும் முயற்சியில் உள்ளார். அவரிடம் இதுகுறித்துப் பேசினோம்.
 கவிஞர் சாம்ராஜ்
கவிஞர் சாம்ராஜ்

"லாக் டௌனால் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் இந்தக் காலத்தில் திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் முக்கியமான பொழுதுபோக்காக மாறியுள்ளது. OTT தளத்தில் வெளியாகும் வெப் சீரிஸ் அமோக வரவேற்பைப் பெருகின்றன.‌ இந்த நிலையில், தமிழ் வெப் சீரிஸ்களின் வருகையும் தொடங்கியுள்ளது. வெப் சீரிஸ்களுக்கான ஏற்ற காலமும் இதுதான். ஏனெனில், கொரோனாவுக்குப் பிந்தைய நாள்களும் கட்டுப்பாடுகள் நிறைந்ததாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.‌ முன்பிருந்ததைவிட மனிதர்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதற்கு நிபந்தனைகள், விதிமுறைகள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழக்கவழக்கங்கள் மாறும். இதனால், இணையத்தில் வெளியாகும் வெப் சீரியல்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கும். தமிழ் வெப் சீரிஸ்களுக்கான கதைகள் ஏராளம். தமிழ் இலக்கியம், வாய்மொழிக் கதைகள், நாட்டுப்புறக் கதைகளை வெப் சீரிஸ் வடிவத்துக்கு மாற்றியமைக்கலாம். ஆனால், இலக்கியங்களும் நாட்டுப்புறக் கதைகளும் மட்டும் போதாது.

இதுவரை இருந்த கதைகளைத் தாண்டி புதுப்புது கதைகள் வெப் சீரிஸ்களுக்குத் தேவைப்படும். காதல், நடுத்தர குடும்பம் இப்படியான கதைகள் குவிந்து கிடக்கின்றன. இதைத் தவிர்த்து லாரி ஓட்டுநர், சிறைக்கைதி, போஸ்ட்மார்ட்டம் செய்யும் மருத்துவர், கூலித் தொழிலாளி எனப் பல்வேறு தளங்களில் இயங்கக் கூடியவர்களின் கதைகளை வெப் சீரிஸ்களில் பதிவு செய்யலாம். ஒரு நிஜத் திருடரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது தமிழில் கச்சிதமாக பதிவு செய்யப்படவில்லை. ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சியின் பின்னணி பற்றி நமக்குப் பெரிதாகத் தெரியாது. இதுபோன்ற மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யலாம். மலையாளத்தில் இதுபோன்ற பல்வேறு அடுக்குகளில் வாழக்கூடியவர்களின் கதை தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தமிழிலும் இதுபோன்ற படைப்புகள் வர வேண்டும். தமிழ் வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு அதிகரிக்கும் நிலையில் புதுப்புதுக் கதை எதிர்பார்க்கப்படும். புதுப்புது கதைகளுக்கான கச்சாப் பொருள்களாக இலக்கியமும், வெவ்வேறு படிநிலைகளில் வாழும் மனிதர்களின் வாழ்வியலும் இருக்கும்" என்றார்.

24 ரூபாய் தீவு
24 ரூபாய் தீவு
`ஜுராசிக் பார்க்' பார்க்க காசில்லாதவர், `ஜுராசிக் வேர்ல்டு'-ல் நடித்த சாதனை! இர்ஃபான் கானுக்கு அஞ்சலி #RIP
வெப் சீரிஸ் களம் தமிழுக்குப் புதிது. அதில் களமிறங்க காத்திருப்பவர்களுக்கு தமிழில் பேசப்படாத களங்களையும், கதைகளையும் பேசுவதற்கு வாய்ப்புள்ளது. திரைத்துறையைவிட சுதந்திரமுள்ளதாகக் கருதப்படும் வெப் சீரிஸில் யாரெல்லாம் தங்கள் முத்திரையை அழுத்தமாகப் பதிக்க உள்ளனர் என்பதைப் பார்ப்போம்.
அடுத்த கட்டுரைக்கு