Published:Updated:

3,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வியல் முறை எப்படியிருந்தது? வியூப்பூட்டும் திருப்பத்தூர்த் தடயங்கள்!

பேராசிரியர் ஆ.பிரபு
News
பேராசிரியர் ஆ.பிரபு

திருப்பத்தூர் அருகே மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் வாழ்வியல் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

3,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வியல் முறை எப்படியிருந்தது? வியூப்பூட்டும் திருப்பத்தூர்த் தடயங்கள்!

திருப்பத்தூர் அருகே மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் வாழ்வியல் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Published:Updated:
பேராசிரியர் ஆ.பிரபு
News
பேராசிரியர் ஆ.பிரபு
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு மற்றும் தொல்லியல் ஆய்வாளரும் வரலாற்றுத்துறைப் பேராசிரியருமான முனைவர் சேகர், உதவிப் பேராசிரியர் சுனில், ஆய்வு மாணவர் தரணிதரன், சமூகச் செயற்பாட்டாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகிலிருக்கும் ‘சுடுகாட்டூர்’ என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத் தடயங்களை அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இதுபற்றி, பேராசிரியர் ஆ.பிரபு கூறுகையில், ‘‘தமிழகத்தின் தொன்மையை விளக்கும் சான்றுகளாகத் திகழ்பவைதான் தொல்லியல் சின்னங்கள். இந்தத் தொல்லியல் சின்னங்கள், வடதமிழகத்தில் அதிக அளவில் கிடைக்கின்றன. சுடுகாட்டூர் மாரியம்மன் கோயில் எதிரேயுள்ள மங்கைப் பெருமாள் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் ஆய்வு மேற்கொண்டபோதுதான், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் வாழ்வியல் தடயங்களைக் கண்டறிந்தோம்.

பெருங்கற்காலத் தடயங்கள்
பெருங்கற்காலத் தடயங்கள்

இந்த நிலத்தில், உழவுப் பணி மேற்கொண்டபோது பல மண் ஓடுகளும், மண்ணால் செய்யப்பட்ட பொருள்களும் உடைந்த நிலையில் வெளிப்பட்டிருக்கின்றன. அவற்றை நாங்கள் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியதில், அது கறுப்பு, சிவப்பு மண்பாண்ட ஓடுகள் எனத் தெரியவந்தது. இங்கேயே பெருங்கற்காலத்துடன் தொடர்புடைய ஈமப்பேழையின் ‘ஊன்று கால்’ ஒன்றும் கிடைத்தது. ஈமப்பேழை என்பது பெருங்கற்காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்டதாகும்.

இவை, சுடுமண்ணால் செய்யப்படுபவை. பெருங்கற்காலச் சின்னங்களான கல்வட்டம் மற்றும் கற்பதுக்கை ஆகியவற்றினுள் ஈமப்பேழைகள் வைக்கப்பட்டிருக்கும். இவை செவ்வக வடிவில் குளியல்தொட்டி போன்றும் காணப்படும். இறந்த உடலை உள்ளே வைத்து மூடி போன்ற அமைப்பைக் கொண்டு மேற்புறம் மூடப்படும். அடிப்பகுதியில், 2 அல்லது 3 வரிசைகளில் ஊன்று கால்கள் அமைக்கப்படும். சில ஈமப் பேழைகள் விலங்கு வடிவிலும் இருந்திருக்கின்றன. ஆந்திர மாநிலம், சங்கவரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைத்த ஈமப்பேழை ‘ஆடு’ போன்ற வடிவத்தில் இருந்தது.

ஈமப்பேழையின் ‘ஊன்று கால்’
ஈமப்பேழையின் ‘ஊன்று கால்’

கேரளாவில் ‘பசுமாட்டின்’ வடிவில் ஈமப்பேழை கிடைத்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் சானூரில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பல கற்பதுக்கைக்குள்ளும் ஈமப்பேழைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவைத் தாழிகள் போலவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், தோற்றத்தில் ஈமத்தாழிகள் என்பவை வேறு, ஈமப்பேழைகள் என்பவை வேறாகும். இறந்தவர்களின் எலும்புகள், புழங்கு பொருள்கள் இவற்றின் உள்ளே வைக்கப்படும்.

முதுமக்கள் தாழிகளைப்போல அதிக அளவில் இவை காணப்படுவதில்லை. சில இடங்களில் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அன்றைய சமூகத்தில் இனக்குழுத் தலைவர்கள் போன்ற தலைமைத்துவத்தில் இருந்தவர்களுக்காக தனித்துவமாக ஈமப்பேழைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கறுப்பு, சிவப்பு நிறத்தில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், ஈமப்பேழையில் வைக்கப்பட்ட மண்ணால் செய்து சுட்டெடுக்கப்பட்ட புழங்கு பொருள்களாகும். இறந்த உடலுடன் அவ்வுடலுக்குரியவர் பயன்படுத்திய பொருள்களையும் வைத்து அடக்கம் செய்யும் வழக்கம் அன்றைக்கு இருந்திருக்கிறது.

பேராசிரியர் ஆ.பிரபு
பேராசிரியர் ஆ.பிரபு

இங்குக் கண்டறியப்பட்ட ஓடுகள் 4 மி.மீட்டர் தடிமன் கொண்டவையாகும். ஈமப்பேழையின் கால் 14 செ.மீட்டர் நீளமும், அதன் வட்ட வடிவமான அடிப்பகுதி 5.5 செ.மீட்டர் சுற்றளவும் கொண்டதாக உள்ளது. பேழையின் பக்கவாட்டுப் பகுதியில் கிடைத்த ஒரு துண்டானது 4 செ.மீட்டர் தடிமண் கொண்டதாக உள்ளன. பேழையானது களிமண்ணால் செய்யப்பட்டு சுட்டெடுக்கப்பட்டிருக்கிறது. அதன் உட்புறம் அடர்கருமை நிறமும், வெளிப்புறம் செங்காவி நிறமும் பூசப்பட்டுக் காணப்படுகிறது. இவ்வூர் ‘சுடுகாட்டூர்’ என்று அழைக்கப்படுவதும் கவனத்திற்குரியதாகும். ஏனென்றால் இதுபோன்ற ஈமச்சின்னங்கள் மக்கள் வாழ்விடங்களுக்கு அருகில்தான் பெரும்பாலும் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தின் பல இடங்களில் இவை போன்ற பழங்கால மக்களின் வாழ்வியல் தடயங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருவது மாவட்டத்தின் வரலாற்றுப் பின்புலத்தினைப் பறைசாற்றுவதாக உள்ளது’’ என்றார் பெருமையோடு!