சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

அகிலன் 100 - காலத்தின் கோலத்தை காட்சிப்படுத்தியவர்!

அகிலன்
பிரீமியம் ஸ்டோரி
News
அகிலன்

பிழைப்புக்காக பல்வேறு பணிகளைச் செய்த அகிலன், எந்தச் சூழலிலும் தன் எழுத்து பாதிக்காதவாறு பார்த்துக்கொண்டார். பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல் எடுக்கும் பணி செய்தார்.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

`காலம் மாறும்... நான் இந்தக் காலத்தின் கோலத்தை எவ்விதமாகக் கண்டேனோ அவ்விதமாகச் சித்திரித்து வைப்பது என் கடமையென்று தோன்றியது. அதைச் செய்திருக்கிறேன்..!'

இதுதான் தன் எழுத்து குறித்து அகிலனின் சுய விமர்சனம். தமிழ்ச்சூழலில் அபூர்வமாக, வாழும் காலத்திலேயே சாகித்ய அகாடமியும், ஞானபீடமும், இன்னபிற உயரிய அங்கீகாரங்களும் பெற்ற ஆளுமை அகிலன். ஆனாலும், இன்று தமிழ் வாசகர்களை வழிநடத்தும் பல குருபீட எழுத்தாளர்களுக்கு அவர் ஒவ்வாமை தரும் படைப்பாளியாகவே இருக்கிறார்.

பள்ளிக்காலத்திலேயே எழுதத் தொடங்கி, சிறு பத்திரிகைகள் வழி வெகுஜன இதழ்களுக்கு வந்தவர் அகிலன். அக்காலத்திய சமூகநிலையின் உட்புகுந்து தனிமனித உணர்வுகளை முன்னிறுத்திய அகிலனின் எழுத்துகள், வெகுஜன இதழ்களால் வெகுவாக வரவேற்கப்பட்டன. மிகப்பெரிய வாசகப்பரப்புக்குள் அவர் நுழைந்து, நிலைத்தார். அவரின் கதைகள் தாங்கிய இதழ்களுக்காக மக்கள் கடைவாசல்களில் காத்துக்கிடந்தார்கள். சமூக ஊடகங்கள் முளைக்காத அக்காலத்தில் ஆனந்த விகடன், கலைமகள், கல்கி போன்ற இதழ்கள் அகிலனுக்கு தேசம் கடந்த வாசகப்பரப்பை உருவாக்கின.

ரஷ்யாவில் அகிலன்... - சாகித்ய அகாடமி விருது பெற்றபோது...
ரஷ்யாவில் அகிலன்... - சாகித்ய அகாடமி விருது பெற்றபோது...

அகிலனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், `வாழ்க்கை அனுபவங்களும், கற்பனை அனுபவங்களுமே படைப்பிலக்கியமாகின்றன. வாழ்க்கை எழுத்தாளனை பாதிக்கிறது. அதுவே எழுத்தாளனை கலைஞனாக மாற்றுகிறது. வாழ்க்கையே அவனுக்கு மூலப்பொருளைத் தருகிறது. அந்த மூலப்பொருளைக்கொண்டு புதிதாக ஒன்றைப் படைத்து, அதை அவன் அந்த வாழ்க்கைக்கே திருப்பித் தருகிறான்.'

20 நாவல்கள், 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், உரைநடை, நாடகம், சினிமா என தான் படைத்த எல்லாவற்றையும் அகிலன் தன் வாழ்க்கையிலிருந்தே எடுத்தார். `பாவை விளக்கு' சிற்சில புனைவுகளுடன்கூடிய அவரது சுயசரிதை. கௌரியும் உமாவும் அவரது வாழ்க்கையில் நிலைத்தவர்கள்.

அகிலன் வாழ்ந்தது, இரு வேறு பகுதிகளைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க காலம். நாடு சுதந்திரமடைவதற்கு முன்புள்ள 25 ஆண்டுகள்... சுதந்திரத்துக்குப் பிறகான 40 ஆண்டுகள். கொழுந்துவிட்டெரிந்த தேசவிடுதலைத் தீ, காந்தியின் பெயரில் ஒருமித்து நின்ற தேசம், பெருங்குழப்பத்தோடு நிகழ்ந்த பிரிவினை, சுதந்திரத்துக்குப் பிறகான சமூக, பொருளாதார மாறுதல்கள் என அனைத்தையும் உள்வாங்கியவர் அகிலன். அவரது படைப்புகள், இந்த இரண்டு காலகட்டங்களின் அரசியல், கலாசாரப் போக்குகளின் தாக்கத்தில் விளைந்தவை.

அகிலனின் இயற்பெயர் அகிலாண்டம். 1922, ஜூன் 27-ம் தேதி பிறந்தவர். புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையிலுள்ள பெருங்களூர்தான் பூர்வீகம். அப்பா வைத்திலிங்கம் வனத்துறை அதிகாரி. அம்மா அமிர்தம்மாள். அப்பா சமஸ்தானத்தின்கீழ் வேலை செய்ததால் ராஜவிசுவாசியாக இருந்தார். அம்மா கரூரில் பிறந்தவர். அந்தச் சின்ன வயதிலேயே காந்தியைப் பார்க்கவும், அவருடைய உரைகளைக் கேட்கவும் வாய்ப்பு பெற்றார் அகிலன். அகிலனின் உயர்நிலைப் பள்ளி நாள்களிலேயே அப்பா இறந்துபோனார். வளமான குடும்பம் வறுமையில் வீழ்ந்தது. அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த அகிலனுக்கு சுதந்திரப் போராட்டத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. பள்ளி மாணவராக இருந்த காலத்திலேயே, வெள்ளையர்களுடன் நட்பு பாராட்டிய புதுக்கோட்டை சமஸ்தானத்தை எதிர்த்து மாணவர்களைத் திரட்டிப் பேசினார்.

அகிலன் 100 - காலத்தின் கோலத்தை காட்சிப்படுத்தியவர்!

பள்ளிக் காலத்திலேயே சிறுகதையும் எழுதத் தொடங்கிவிட்டார் அகிலன். அப்போது 10-ம் வகுப்பு படித்துவந்தார்.

பள்ளியில் காலாண்டுக்கு ஒரு முறை ஒரு சஞ்சிகை வெளிவந்துகொண்டிருந்தது. அதற்காக, தான் எழுதிய கதையைத் தந்திருந்தார் அகிலன். சில நாள்கள் கழித்து அவரை அழைத்த தமிழாசிரியர், ``அந்தக் கதையை எஙகே திருடினே?’' என்று கேட்க, ``நீங்கள் அந்தக் கதையை உங்கள் சஞ்சிகையில் போடவே வேண்டாம்... திருப்பிக் கொடுத்துவிடுங்கள்’' என்று கோபமும் ஆவேசமுமாகப் பேசியிருக்கிறார் அகிலன். அவரைப் புரிந்துகொண்ட தமிழாசிரியர், ``நீயே சொந்தமா அதை எழுதினேன்னு நம்ப முடியலேடா... ரொம்ப நல்லாயிருக்கு’' என்று பாராட்டி முதுகில் தட்டிக்கொடுத்திருக்கிறார்.

`நான் ஏழை' என்ற தலைப்பில் எழுதி, `மிடியால் மடிதல்' என்ற தலைப்பில் பள்ளி சஞ்சிகையில் வெளிவந்த அந்தக் கதையும்கூட அகிலனின் வாழ்க்கைக்குள் இருந்த ஒரு சம்பவம்தான்.

பிழைப்புக்காக பல்வேறு பணிகளைச் செய்த அகிலன், எந்தச் சூழலிலும் தன் எழுத்து பாதிக்காதவாறு பார்த்துக்கொண்டார். பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல் எடுக்கும் பணி செய்தார். அங்கு புழங்கிய லஞ்சம் அவர் மனசாட்சியை அசைக்க, அந்த வேலையை உதறினார். கரூருக்கும் புதுக்கோட்டைக்குமாக அலைந்த அகிலனுக்கு, திருமணத்துக்குப் பிறகு ரயில்வே மெயில் சர்வீஸில் வேலை கிடைத்தது. திருநெல்வேலி - திருவனந்தபுரம் ரயிலில் அமர்ந்து கடிதங்களைப் பிரிக்கும் பணி. இந்தக் கடுமையான பணிக்கு மத்தியிலும் எழுதினார் அகிலன்.

1945 வரை அகிலன் வெறும் சிறுகதைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில், கலைமகள் இதழ் நாவல் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. அதற்கென `பெண்' என்ற நாவலை எழுதினார். சுதந்திரப் போராட்டச் சூழலை வைத்து எழுதப்பட்ட உணர்ச்சிகரமான நாவல். பெரிய படைப்பாளிகள் பலரும் பங்கேற்ற அந்தப் போட்டியில், அகிலன் எழுதிய நாவல் முதல் பரிசுக்குரியதாகத் தேர்வுசெய்யப்பட்டது. கலைமகளில் தொடராகவும் வெளிவந்தது. அது பரந்த வெளிக்கு அகிலனை எடுத்துச் சென்றது. இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. அதன் பிறகு பரபரப்பான எழுத்தாளராக மாறினார் அகிலன்.

அகிலன் 100 - காலத்தின் கோலத்தை காட்சிப்படுத்தியவர்!

கல்கியில் அவர் எழுதிய முதல் நாவலான `பாவை விளக்கு' அவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத்தந்தது. கே.சோமு இயக்கத்தில் சிவாஜி கணேசன், எம்.என்.ராஜம் நடிக்க இந்த நாவல் படமானது. `பொன்னியின் செல்வனு’க்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, ராஜேந்திர சோழனை முன்வைத்து `வேங்கையின் மைந்தன்' நாவலை எழுதினார். இந்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இந்த நாவலை சிவாஜி கணேசன் நாடகமாக மாற்றி தமிழகமெங்கும் அரங்கேற்றினார். சுதந்திரத்துக்குப் பிறகு நகரமயமாதலால் கிராமங்கள் எதிர்கொண்ட சிக்கலை முன்வைத்து அகிலன் எழுதிய `புதுவெள்ளம்' என்ற நாவல் பெரிதும் கவனிக்கப்பட்டது. விஜய நகர மன்னர் விஸ்வநாத நாயக்கரின் பின்னணியில் `வெற்றித்திருநகர்' என்ற வரலாற்று நாவலையும் கல்கியில் எழுதினார்.

கலைமகள் ஆசிரியராக இருந்த கி.வா.ஜகந்நாதன் அகிலனைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தினார். காலத்தைக் கட்டுடைத்து அகிலன் எழுதிய நாவல்களை துணிச்சலாக வெளியிட்டார். நேதாஜி, ஐ.என்.ஏ-வை உள்ளடக்கி கலைமகளில் தொடர்கதையாக வெளிவந்த `நெஞ்சின் அலைகள்' இந்தியாவெங்கும் வானொலி நாடகமாக ஒலிபரப்பப்பட்டது. `வாழ்வு எங்கே?' என்ற நாவல், `குலமகள் ராதை' என்ற பெயரில் படமானது. `பொன்மலர்', `எங்கே போகிறோம்?' போன்ற அரசியல் நாவல்களையும் எழுதினார் அகிலன். மலேசியா சென்றிருந்த தருணத்தில் அங்குள்ள தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளைக் களமாக வைத்து, `பால் மரக்காட்டினிலே' தொடர்கதையை கலைமகளில் எழுதினார். அது மிகப்பெரும் கவனம் பெற்றது. ஆனந்த விகடனில் அகிலன் எழுதிய `சித்திரப்பாவை' அவருக்கு ஞானபீட விருதைப் பெற்றுத்தந்தது. `கயல்விழி' என்ற நாவலை எம்ஜிஆர், `மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' என்ற பெயரில் படமாக்கினார்.

சினிமாவில் தொடர்ந்து இயங்க நினைத்து ரயில்வே மெயில் சர்வீஸ் வேலையைத் துறந்தார் அகிலன். அந்த நேரத்தில், தன் படைப்புகளை அங்கீகாரமில்லாமல் திரையுலகம் பயன்படுத்துவது கண்டு பொருமி, வழக்கு தொடுத்தார். வழக்கு காரணமாக அவர் எழுத்து, வேலை எதையும் கவனிக்க முடியவில்லை. மிகப்பெரிய பொருள் இழப்பும் ஏற்பட்டது. வாழ்க்கையை வறுமை சூழ்ந்தது.

நண்பர்களின் உதவியோடு, அகில இந்திய வானொலியில் சொற்பொழிவுப் பிரிவுக்கு பொறுப்பாளராகப் பணியில் இணைந்தார். 1982-ல் அப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற அகிலன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். அந்தச் சூழலிலும் கலைமகள் இதழில் `வானமா பூமியா?' என்ற தொடர்கதையை எழுதினார். கடும் நோய்த் தாக்குதலுக்குள்ளாகி 21 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற அகிலன், 1988, ஜனவரி 31-ம் தேதி காலமானார். `வானமா பூமியா?' தொடரை அவர் மகன் அகிலன் கண்ணன் எழுதி நிறைவு செய்தார்.

அகிலனுக்கு எட்டு பிள்ளைகள். மகன் அகிலன் கண்ணன் பதிப்பாளராக இருக்கிறார். அப்பா பற்றி மிகவும் பெருமிதமாகப் பேசுகிறார். ``அப்பா பிறர் உணர்வை மதிக்கத் தெரிந்தவர். எல்லோரின் மீதும் மிகுந்த அன்பு காட்டுபவர். வெளியில் எப்படியோ அப்படித்தான் குடும்பத்தில். எழுத்தை உயிர்மூச்சாக நேசித்தார். செல்வச் செழிப்பையும் வறுமையையும் அடுத்தடுத்து எதிர்கொண்டவர் அவர். எழுத்தும் வாழ்க்கையும் வேறு வேறென்று இல்லாமல் வாழ்ந்தவர். அவரது எழுத்து சத்தியங்களை அடிப்படையாகக்கொண்டது. தமிழ் உள்ளவரை அது நிலைத்து நிற்கும்’’ என்கிறார் அகிலன் கண்ணன்.

அகிலனின் எழுத்து குறித்து அவர் காலத்திலேயே விமர்சனங்கள் உண்டு. அவருக்கு ஞானபீட விருது அளிக்கப்பட்டபோது கடுமையான விவாதம் எழுந்தது. அவருடைய எழுத்தில் இலக்கியத் தகுதியே இல்லை என்று நவீன எழுத்தாளர்கள் குற்றம்சாட்டினார்கள். `அகிலனின் எழுத்து புகைமூட்டமான காதல் கதைக்கு போலியான ஓர் இலட்சியவாத பாவனையை அளிப்பது' என்று சுந்தர ராமசாமி எழுதினார். ஜெயமோகன் போன்றோர் இப்போதும் அகிலன் எழுத்து இலக்கியமேயில்லை என்ற விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். எல்லாவற்றையும் கடந்து, நாற்பதாண்டு காலம் தமிழ் வாசகர்களை தன்வயப்படுத்தியவர் அகிலன். அகிலனுக்கு இது நூற்றாண்டு. எழுத்தாளர்களுக்கு வீடு தந்து, அரசு மரியாதை தந்து மதிப்பளிக்கும் தமிழக அரசு, அகிலனைக் கண்டுகொள்ளாததற்கு காரணங்கள் இருக்கலாம். ஆனால் எழுத்தாளர்கள்கூட அவரை நினைவுகூரத் தயங்குகிறார்கள் என்பதுதான் சோகம்!