
எத்தனையோ பேர் எழுதியிருக்காங்க. எழுத்தால் மட்டுமே ஒரு மாற்றம் வரும்னு நினைக்கலை. மாற்றம் வரணும்னா நாம களத்தில் இறங்கி வேலை செய்யணும்.
2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக மூத்த எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சி.எஸ்.லஷ்மி என்ற இயற்பெயர் கொண்ட அம்பை, தனது 16 வயதில் குழந்தைகளுக்கான பத்திரிகையில் எழுத ஆரம்பித்து, தன் தனித்துவமான எழுத்துகளால் எழுத்துலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். கோவையில் பிறந்து சென்னையில் படித்த அம்பை தற்போது மும்பையில் வசிக்கிறார். எழுத்தோடு நின்றுவிடாமல் பெண்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் SPARROW (Sound & Picture Archives for Research on Women) என்ற அமைப்பைக் கடந்த 30 ஆண்டுகளாக நடத்திவருகிறார். சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரிடம் உரையாடினோம்...
``1955-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டுவரும் சாகித்ய அகாடமி விருதைப் பெறும் நான்காவது பெண் எழுத்தாளர் நீங்கள்... எப்படி உணர்கிறீர்கள்?”
``பெண் எழுத்தாளர் - ஆண் எழுத்தாளர்னு பிரிக்கிறதே எனக்குப் பிடிக்கலை. எழுத்தில் பாலின பேதம் எப்படிப் பார்க்க முடியும்? எல்லோரும் நம் வாழ்க்கை அனுபவத்தைதானே எழுதுறோம். அப்புறம் ஏன் பாலின பேதம்? என் 16 வயசுல `நந்தி மலைச் சாரல்’ நாவலுக்கு முதல் பரிசு கிடைச்சப்போ ரொம்ப உற்சாகமா இருந்துச்சு. அதே அளவு உற்சாகம் எம்.ஏ முதலாமாண்டு படிக்கிறப்போ எனக்கு `கலைமகள் நாராயணசாமி விருது’ கிடைச்சப்போ இல்லை. அதுக்காக சந்தோஷமே இல்லைன்னு சொல்ல முடியாது. நம் எழுத்துக்கு அங்கீகாரம் கிடைக்கிறப்போ சந்தோஷம் இருக்கும். ஆனா, காலப்போக்குல விருதை விருதா பார்க்கிற மனப்பக்குவம் வந்துரும். எனக்கு மட்டுமல்ல, விருதே வாங்காத எழுத்தாளருக்கு இப்படியொரு விருது கிடைச்சாகூட அவர் இதே மனப்பக்குவத்தோடதான் அணுகுவார்னு நான் நினைக்கிறேன். மற்றபடி நிறைய எழுத்தாளர் நண்பர்கள் `எங்களுக்கு விருது கிடைச்ச மாதிரியே இருக்கு’ன்னு சொல்லி மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கும்போது உற்சாகமா இருக்கு.”

“40 ஆண்டுகளுக்கும் மேலான எழுத்துலக வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது... நீங்கள் விரும்பிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றனவா?”
“எத்தனையோ பேர் எழுதியிருக்காங்க. எழுத்தால் மட்டுமே ஒரு மாற்றம் வரும்னு நினைக்கலை. மாற்றம் வரணும்னா நாம களத்தில் இறங்கி வேலை செய்யணும். ஆனா, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துல ஒரு பெண்ணோ, ஆணோ ஏதாவதொரு குறிப்பிட்ட கதையைப் படிக்கிறபோது அவர்களுக்குள் உணர்ச்சி மாற்றத்தை அது ஏற்படுத்தலாம். அதாவது, நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது நீங்கள் படிக்கும் ஒரு கதை, `எனக்கு மட்டும் இப்படி நடக்கல. நிறைய பேருக்கு இப்படி நடக்குது. நம்மால இதை எதிர்கொள்ள முடியும்’ங்கிற தைரியத்தைக் கொடுக்கலாம். ஆனா, சமூகத்தை எழுத்தால் மட்டுமே மாற்ற முடியாது. சமூக மாற்றத்துக்கு நியாயமான கோபம் தொடர்ந்து இருந்துகிட்டே இருக்கணும். அப்படி ஒருத்தர்கிட்ட நியாயமான கோபம் தொடர்ந்து இருக்க முடியாது. ஒரு கட்டத்துல அந்தக் கோபம் போயிடுது. அந்த நியாயமான கோபம் தொடர்ந்து இருந்துகிட்டே இருக்கிறதுக்கு வெறுமனே எழுதினால் மட்டும் போதாது... களத்துல வேலை பார்க்கணும்.”

“பெண்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் உங்களது ‘SPARROW’ அமைப்பின் வழியாக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?”
``பெண்கள் வாழ்க்கை, பெண்கள் சரித்திரம் இரண்டையும் ஆவணப்படுத்ததான் இந்த ஆவணக் காப்பகத்தை 30 வருஷங்களுக்கு மேலா நடத்திக் கிட்டிருக்கோம். அரசியல்ல இருக்கிறவங்க, கல்வித் துறையில இருக்கிறவங்களைத்தான் ஆவணப் படுத்தணும்னு இல்லை. ஒவ்வொரு பெண்ணோட வாழ்க்கையிலயும் ஆவணப்படுத்தறதுக்கு ஏதோ ஒண்ணு இருக்கு. அதைத் தெரிஞ்சுகிட்டு ஆவணப்படுத்தறது முக்கியம்னு நினைக்கிறோம். அப்போதான் சமூகச் சரித்திரம் சரியா தெரியும். எங்களால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு எல்லா பெண்களுடைய வாழ்க்கையையும் ஆவணப்படுத்தணும்னு நினைக்கிறோம்.’’