Published:Updated:

“ஒரு படைப்பாளியாக நான் எப்போதும் தனிமையில் இல்லை!”

சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
சி.மோகன்

அறியப்படாத, நம் சமகாலத்திய, ஒரு சீனப் படைப்பாளியின் ஒரே நாவலான ‘ஓநாய் குலச்சின்னம்’ தமிழ்ச் சூழலில் கொண்டாடப்பட்ட விதம் பிரமிப்பூட்டுவது.

சி.மோகன் தமிழின் தனித்த ஆளுமை. நவீன இலக்கியம் குறித்த விமர்சனங்களில் சமரசமற்ற அவதானிப்புகளைத் தொடர்ந்து முன்வைப்பவர். புனைவு இலக்கியங்களை நுண்ணிய பார்வையோடும், ஆழத்தோடும் அணுகுவதில் முதன்மையான கலைஞன். ‘விகடன் தடம்’ இதழில் இவர் எழுதிய ‘நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள்’ தொடர், தமிழ் வாசகர்களுக்கு ஓவியங்களின் வரலாற்றைத் திறந்து காட்டியது. இவரின் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளியான ‘ஓநாய் குலச்சின்னம்’ எனும் சீனநாவலை அறியாத தமிழ் வாசகர் இருக்கமுடியாது. கலைக்கும் வாழ்வுக்குமிடையிலான இடைவெளியை தனது தீட்சண்யத்தால் தாண்டியவர் சி.மோகன். ‘எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை’ எனப் புன்னகைக்கும் சி.மோகனின் எழுபதாவது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லி, அவரின் வளசரவாக்கம் இல்லத்தில் சந்தித்தேன்.

``ஒரு விமர்சகராகவும், கலை ஆளுமையாகவும் இருக்கிற உங்களுடைய நேரடியான நாவல்கள் தமிழ்ச் சூழலில் தாக்கங்களை ஏற்படுத்தியதாகக் கருதுகிறீர்களா?’’

‘‘என் முதல் நாவலான ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ ஓர் உயர்ந்த தளத்தில் இயங்கிய, தனித்துவமான நாவல். பரந்து விரிந்த தளமோ, கதைத் தன்மையோ இல்லாதது என்பதால், மரபான வாசிப்பு மனம், பெரும் வீச்சுகொண்டதாக அதை உணர முடியாமல்போகலாம். இந்தத் தன்மையில் அது, தமிழ் நாவல்களில் நான் பெரிதும் போற்றுகிற எஸ்.சம்பத்தின் ‘இடைவெளி’ போன்றது. அதேசமயம், நண்பர் யூமா வாசுகி, இந்நாவல் மலையாளத்தில் வந்திருந்தால், அங்கு இதைப் பெரிதாகக் கொண்டாடியிருப்பார்கள் என்றார். செழியன், நாசர், அருண் கார்த்திக் (‘நசீர்’ பட இயக்குநர்) ஆகியோர் இந்நாவலைப் படமாக்க விருப்பம் தெரிவித்தனர்.’’

“ஒரு படைப்பாளியாக நான் எப்போதும் தனிமையில் இல்லை!”

``மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் ‘ஓநாய் குலச்சின்னம்’ அடைந்த இடம் ஆச்சரியமானது. இன்றைக்குத் தமிழ்ச் சூழலில் வெளியாகும் மொழிபெயர்ப்புகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘அறியப்படாத, நம் சமகாலத்திய, ஒரு சீனப் படைப்பாளியின் ஒரே நாவலான ‘ஓநாய் குலச்சின்னம்’ தமிழ்ச் சூழலில் கொண்டாடப்பட்ட விதம் பிரமிப்பூட்டுவது. புதிய, வலுவான, நம் காலத்துக்கு இன்றியமையாத கதைப்புலமும் மொழிபெயர்ப்பில் கூடிவந்த சரளமும் இதற்கு முக்கியமான காரணம். மூளையாலோ மனதாலோ வாசிக்கப் படக்கூடியதாக இல்லாமல் முதுகுத்தண்டால் வாசிக்கக்கூடியதாக அமைந்திருப்பதுதான் இதன் தனிச் சிறப்பு. இம்மொழிபெயர்ப்பு என் கலை இலக்கிய வாழ்வில் பெறுமதியான ஒரு பணி. இப்பணியை எனக்களித்து, அதை நூலாக வெளியிடவும் செய்த இயக்குநர் வெற்றிமாறனின் பங்கும் போற்றுதற்குரியது.

இன்று தமிழில் மொழிபெயர்ப்புகள் அதிகம் வெளிவருகின்றன. அவை வரவேற்பும் பெறுவதாக அறிகிறேன். ஒரு மொழியின் சமகாலத் தன்மைக்கும் வளத்துக்கும் மொழிபெயர்ப்புகள் மிகவும் அத்தியாவசியம். நம் மொழியில் இதுவரை வசப்படாத பிராந்தியங் களில் மட்டுமல்லாது, மூல மொழியில் வெளிப்படும் தொனி, இழையாடல் ஆகிய அம்சங்களிலும் மொழி பெயர்ப்பாளர்கள் கவனம்கொள்வது அவசியம்.’’

`` ‘மிதிலா பிரஸ்’ யுகமென்று சொல்லக் கேட்டிருக்கிறேன். மிதிலா வெளியிட்ட நூல்கள் குறித்த உங்களது நினைவுகளைப் பகிரமுடியுமா..?’’

‘‘மிதிலா அச்சகம் 1986-91 வரை ஐந்து ஆண்டுகள்தான் செயல்பட்டது. உத்வேகமும் உரையாடல்களும் கொண்டாட்டங்களும் எனப் பலரும் திளைத்திருந்த காலம் அது. பல முனைகளிலிருந்தும் எழுத்தாளர்களும் ஓவியர்களும் ஆர்வலர்களும் சகஜமாக வந்து கூடிய இடம். க.நா.சு., சி.சு.செல்லப்பா, சுந்தர ராமசாமி, தருமு சிவராம், கி.ஆ.சச்சிதானந்தம் போன்ற மூத்த படைப்பாளிகள் வந்துபோனார்கள். விக்ரமாதித்யன், கோணங்கி, திலீப்குமார், கோபி கிருஷ்ணன், சுகுமாரன், விமலாதித்த மாமல்லன் என அன்றைய இளம் படைப்பாளிகள்; சாரு நிவேதிதா, பிரேம்-ரமேஷ், நாகார்ஜுனன் போன்ற பின்நவீனத்துவ எழுத்தாளர்கள், சந்ரு, நடேஷ், அதிவீர பாண்டியன், போஸ் மருது போன்ற ஓவியர்கள்; பத்மநாப ஐயர், நித்யானந்தம் போன்ற ஈழத்து ஆளுமைகள்; காலம் செல்வம், ஹம்சத்வனி போன்ற ஈழ எழுத்தாளர்கள் எனப் பலரும் தங்கள் தங்கள் நிலைப்பாடுகளோடும் நம்பிக்கைகளோடும் சகஜமாகப் புழங்கிய இடம்.

டி.கண்ணன், வாசுதேவன் இணைந்து நடத்திய ‘சிதைவு’, ரமேஷ் பிரேதன் எழுத்துகளைப் பிரசுரிப்பதெற்கென்றே சாரு நிவேதிதா நடத்திய ‘கிரணம்’, மொழிபெயர்ப்புக் கதைகளுக்கென்று ஜோசப் தயாளன் நடத்திய ‘சதுரம்’ ஆகியன இங்குதான் உருவாகின. ஈழ எழுத்துகளை நூல்களாக்கும் உத்தேசத்தோடு பத்மநாப ஐயர் நண்பர்களோடு இணைந்து தொடங்கிய தமிழியல் வெளியீடுகளும் இங்கு உருவாக்கப்பட்டன. இன்றுவரை கனடாவில் வெளிவந்து கொண்டிருக்கும் ‘காலம்’ ஆரம்ப இதழ்கள் என் பொறுப்பில் மிதிலா அச்சகத்தில்தான் உருவாக்கப்பட்டன. அக்காலகட்டத்தில் எழுதத் தொடங்கிய டி.கண்ணனும், ஜெகந்நாதனும் சமீபத்தில் வெளிவந்த தங்களின் புத்தகங்களை மிதிலா அச்சகத்துக்கு சமர்ப்பணம் செய்திருக் கிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் மல்லாங்கிணறிலிருந்து சென்னைக்குக் குடியேற வந்திறங்கிய நாளில், சாத்தூர் சீனி மிட்டாயும் காரசேவும் கொண்ட இரண்டு ஓலைக் கொட்டான்களோடு மிதிலா வந்தார். இப்படியெல்லாம் இலக்கிய உலகில் பிரசித்தி பெற்றிருந்தது மிதிலா அச்சகம்.’’

“ஒரு படைப்பாளியாக நான் எப்போதும் தனிமையில் இல்லை!”

``இன்றைய சிற்றிதழ் சூழலில் நவீன ஓவியர்களின் பங்கை 90களோடு ஒப்பிட முடியுமா?’’

``1970களிலிருந்து 90கள் வரை இலக்கிய இயக்கமும் கலை இயக்கமும் ஒரு லட்சியபூர்வமான பிணைப்போடும் உத்வேகத்தோடும் இயங்கின. கே.எம்.ஆதிமூலம், ஆர்.பி.பாஸ்கரன், சி.தட்சிணாமூர்த்தி, பி.கிருஷ்ணமூர்த்தி போன்ற ஓவியர்கள் சிறுபத்திரிகைச் செயல்பாடுகளில் ஆர்வத்தோடு தங்களை வெளிப்படுத்தினர். கசடதபற, நடை, பிரக்ஞை போன்ற இதழ்கள் நவீனக் கலை வெளிப்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தன. இந்த அழகிய பிணைப்பு காலகதியில் பிரிந்துபோனது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த உறவு மீண்டும் புதுப்பிக்கப்படுவது நம் சூழலுக்கு மிகுந்த வளம் சேர்க்கும். இன்றும் நவீனக் கலை அறியப்படாத புதிர்ப் பிரதேசமாகவே நம்மிடையே இருந்து கொண்டிருக்கிறது. ஒரு மகத்தான கலை அனுபவத்தின் பேறுகளை நாம் இழந்துகொண்டிருக்கிறோம்.’’

``உங்களின் தனிப்பட்ட கலெக்‌ஷன்களாக இருக்கும் ஓவியங்களைப் பற்றி...”

‘‘என் வீட்டின் முன்னறையை ஒரு கேலரி போலவே வைத்திருக்கிறேன். என்னிடமிருக்கும் கலைப் படைப்புகள் பலவும் ஓவிய நண்பர்களாலும் சிற்பிகளாலும் எனக்கு அன்பாக அளிக்கப்பட்டவை. இவை என் வாழ்வின் மிகப் பெரிய பொக்கிஷங்கள். நான் முதுமையில் (அப்படி நான் உணரவில்லை என்றாலும்) தனித்திருப்பது குறித்து நண்பர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தும்போது, எந்த நெருக்கடியிலும் இந்தப் படைப்புகள் துணையாக இருக்கும் என்பதே என் பதிலாக இருந்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு, ஒரு நெருக்கடியான தருணத்தில், ஆதிமூலத்தின் இரண்டு ஓவியங்களையும், தட்சிணாமூர்த்தியின் இரண்டு சிற்பங்களையும் விற்றுத்தான் சமாளித்தேன். இப்போதும்கூட, என் மகளும், என் தங்கையும் தங்களுடன் வந்திருக்கும்படி என்னைக் கேட்டபோதும், அதை ஏற்க முடியாததற்கு இவற்றோடு நான் கொண்டிருக்கும் உறவு ஒரு முக்கியக் காரணம். மேலும், ஒரு படைப்பாளியாக நான் எப்போதும் தனிமையில் இல்லை!

சி.டக்ளஸ், விஸ்வம், சந்ரு, நடேஷ், மைக்கேல், ஜே.கே., மணிவண்ணன், நரேந்திரன், திருநாவுக்கரசு, ரமேஷ் எனப் பலரின் ஓவியங்களும், தட்சிணாமூர்த்தியின் கல்சிற்பமும் ஷ்யாமின் செராமிக் சிற்பமும் இப்போது என் வசமிருப்பவை. ப்ரேம் போடப்படாமலும் பல இருக்கின்றன.’’

``தொடர்ந்து உங்கள் இலக்கியப் பணிகளைச் செய்துகொண்டிருக்கிறீர்கள்... இன்னும் என்னென்ன திட்டமிடல்கள் வைத்திருக்கிறீர்கள்...?’’

‘‘கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாகப் புத்தகம் சார்ந்த பணிகளையும் எழுத்தையுமே என் வாழ்வின் ஆதாரமாகக் கொண்டிருக்கிறேன். இப்பணி சார்ந்த ஒரு நிறைவும் இருக்கிறது. இப்போதுகூட கடந்த மூன்று மாதங்களின் பெரும் பகுதியை கி.ராவின் அனைத்து எழுத்துகளையும் 9 தொகுதிகளாகக் கொண்டுவரும் அன்னம் பதிப்பகத்தின் முயற்சியில் என்னை ஈடுபடுத்தி வந்திருக்கிறேன். அதேசமயம், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் எழுதத் தொடங்கிய ‘கரிசல் சந்நியாசி’ என்றொரு நாவலும், அதை இடையில் நிறுத்திவிட்டுத் தொடங்கிய ‘கிராமம் நகரம் மாநகரம்’ என்றொரு நாவலும் சில அத்தியாயங்களோடு நின்றுவிட்டன. காரியச் சிதறல்கள்தான் காரணம். அக்காரியங்களும் தேவையானவைதான்; தவிர்க்க முடியாதவைதான். இனியாவது, இந்த இரு நாவல்களையும் முடித்துவிட வேண்டும். இவை இரண்டுமே மிகப் பெரிய கேன்வாஸ்.’’