
அப்பா பெரிய தலைவர்களோடு பழகினாலும் சொந்தவீடுகூட இல்லாமதான் வாழ்ந்திருக்கார். அவர் சேர்த்தது எல்லாம் அண்ணா, காமராஜர், கலைஞர் பத்தி எழுதிய நூல்கள்தான்.
‘டெலிவிஷன் ஐ… டேப் ரெக்கார்டர் மைண்ட்’ என்று அண்ணாவால் பாராட்டப்பட்டவர் பத்திரிகையாளர், எழுத்தாளர் மு.நமச்சிவாயம். அண்ணா, காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல தலைவர்களோடு நெருக்கமாகப் பழகியதோடு, அவர்களைப் பற்றி ஏராளமான நூல்களையும் எழுதிய நமச்சிவாயத்தின் குடும்பம் இன்று வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது.
சென்னை, தியாகராய நகர், தெற்கு தண்டபாணி தெருவில் உள்ளது மு.நமச்சிவாயத்தின் மகள் முத்துலட்சுமி குடியிருக்கும் வாடகை வீடு. வறுமையையும் வெறுமையையும் சூழ்ந்திருக்கிறது வீட்டில். முத்துலட்சுமி, தி.நகரில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்கிறார். தந்தையைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் முத்துலட்சுமி.
“அப்பா மத்திய அரசுல டைப்பிஸ்ட்டா இருந்தார். அண்ணாவோட பேச்சுன்னா அவருக்கு உயிர். கூட்டங்களுக்குப் போய் அண்ணா பேசுறதைக் குறிப்பெடுப்பார். ஒரு கட்டத்துல அண்ணாவுக்கு நெருக்கமானார். அரசுப்பணியை விட்டுட்டு அண்ணா பேசுற கூட்டங்களுக்குப் போய் அவருடைய பேச்சுகளைத் தொகுக்க ஆரம்பிச்சார். ‘நல்ல தீர்ப்பு’ங்கிற பேர்ல அண்ணாவோட உரைகளைப் புத்தகமாக்கினார் அப்பா. அது, அப்பவே லட்சக்கணக்கில் விற்றதா சொல்வாங்க. அந்த நூலைப் படிச்ச அண்ணா, ‘நல்ல தீர்ப்பு நமச்சிவாயம்’னு அப்பாவைப் பாராட்டியிருக்கார். 1946-ல காஞ்சிபுரத்தில அண்ணா தலைமையிலதான் அப்பா-அம்மாவுக்குத் திருமணம் நடந்துச்சு. நாங்க மொத்தம் மூணு பிள்ளைங்க. அண்ணா பேரு தம்பிதுரை, அக்கா மனோன்மணி, கடைசி நான்.
அப்பா பெரிய தலைவர்களோடு பழகினாலும் சொந்தவீடுகூட இல்லாமதான் வாழ்ந்திருக்கார். அவர் சேர்த்தது எல்லாம் அண்ணா, காமராஜர், கலைஞர் பத்தி எழுதிய நூல்கள்தான். பெரியாரைப் பற்றி ‘மதித் தலைவர் பெரியார்’, ‘பெரியார் மணிமொழிகள்', அண்ணாவோட உரைகளைத் தொகுத்து, ‘நாடும் ஏடும்', ‘திராவிடர் நிலை', ‘தமிழகம்'னு 72 புத்தகங்கள் எழுதியிருக்கார். கலைஞர்கூட இன்னும் நெருக்கமா இருந்தார் அப்பா. கலைஞர் நூலை வெளியிடுறதுக்குன்னே ‘புத்தகப் பண்ணை', ‘முன்னேற்றப் பண்ணை'ன்னு ரெண்டு பதிப்பகங்களை நடத்தினார். ‘கலைஞரின் அறப்போர்’, ‘தலைமையுரை’, ‘பெருமூச்சு’, ‘திராவிட சம்பத்து', ‘கருணாநிதியின் கருத்துரைகள்', ‘களத்தில் கருணாநிதி', ‘பள்ளி வாழ்க்கை', ‘புகழ் பூத்த கலைஞர்’னு கலைஞரைப் பத்தி நிறைய நூல்களை எழுதியுள்ளார். கலைஞர் திருவாரூர்ல இருந்து வர்றதா இருந்தா அப்பாவுக்கு லெட்டர் போட்டுருவார். எழும்பூர் போய் கலைஞரை அழைச்சுக்கிட்டுப் பதிப்பகத்துக்குப் போயிடுவார் அப்பா. அந்த அளவுக்கு நெருக்கமான நண்பர்கள். என் அண்ணன் தம்பிதுரையோட திருமணத்துக்கு கலைஞர்தான் தலைமை தாங்கினார்.
1989-ல அப்பா உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துட்டாரு. படத்திறப்பு விழாவுக்கு ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏவா இருந்த ஸ்டாலின் அய்யா வந்து மரியாதை செலுத்திட்டு, ‘என்ன உதவின்னாலும் கேளுங்க'ன்னு சொல்லிட்டுப் போனார். அப்பா இறந்தபிறகு 1993-லதான் என் திருமணம் நடந்தது. கலைஞர் வாழ்த்துச் செய்தி அனுப்பினார். அப்பாவின் இறப்புக்குப் பிறகு, தலைவர்களுடனான தொடர்பு இல்லாமப் போயிடுச்சு.
அப்பா இருக்கிறவரை எங்களுக்குக் குடும்பக் கஷ்டம் தெரியல. என் வீட்டுக்காரர் கருணாகரன் ஒரு தனியார் கம்பெனியில வேலை செஞ்சார். அவருக்கும் சொந்த வீடுன்னு சொல்லிக்க ஏதுமில்லை. 2003 வரைக்கும் பீட்டர்ஸ் காலனி பத்திரிகையாளர் குடியிருப்புலதான் இருந்தோம். அம்மா இறந்தநேரத்துல ஆட்சியும் மாறிட்டதால எங்களை வீட்டை காலி பண்ணச் சொல்லிட்டாங்க. வாடகை வீட்டுக்குக் குடிபோனோம். எப்படியோ கஷ்டப்பட்டு என் மகன் கணேசனைப் பட்டதாரி ஆக்கிட்டோம். பி.இ முடிச்சவனுக்கு சரியான வேலை கிடைக்கல.
கொரோனாவால வீட்டுக்காரருக்கு வேலை போயிடுச்சு. அவருக்கு இப்போ வயசு 68 ஆகுது. உழைக்கவும் தெம்பில்ல. எனக்கு வயசு 58. துணிக்கடையில நின்னு நின்னு கால்ல நரம்பு சுருட்டிக்கிச்சு. என் வருமானத்துலதான் குடும்பம் ஓடுது. எங்கண்ணன் பத்து வருஷத்துக்கு முன்னால இறந்துட்டாரு. அக்காவும் சிரமத்துலதான் இருக்கு. திராவிட இயக்கத்துக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிச்ச எங்க அப்பாவுக்காக முதல்வர் ஸ்டாலின் அய்யாவோட கருணைப்பார்வை எங்க மேல விழணும்...’’ என்று கைகூப்பும் முத்துலட்சுமி இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனுவும் அளித்துள்ளார்.
‘நவ இந்தியா', ‘எழுச்சி' எனப் பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்த மு.நமச்சிவாயம், 45 ஆண்டுகள் எழுத்துத் துறையில் இருந்துள்ளார். காமராஜரின் வாழ்க்கை வரலாற்றையும் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றையும் இதழ்களில் தொடராக எழுதியுள்ளார். அவரது நூல்கள் தரமணியிலுள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. திராவிட இயக்கத்தின் வரலாற்றைக் களப்பணியாற்றி ஆவணப்படுத்தியிருக்கும் நமச்சிவாயத்துக்கு நன்றிக்கடன் செலுத்தும்விதமாக அவரது சந்ததிகளின் துயரம் போக்கவேண்டும் முதல்வர்!