Published:Updated:

“ஆண்டாள் பற்றி நாவல் எழுதுகிறேன்!”

பூமணி
பிரீமியம் ஸ்டோரி
News
பூமணி

எங்கேயாவது நறுக்குன்னு யாராவது நாலு வரி பேசினாக்கூட எடுத்துக்குவேன். கண்ணீரும் கம்பலையுமா ஒரு நிகழ்வு நடந்து பாதிச்சிருந்தா போதும்

எழுத்தாளர் பூமணிக்கு ‘பெருந்தமிழர் விருது’ வழங்கியிருக்கிறது விகடன். எந்த வகைப்படுத்தலுக்குள்ளும் சிக்கிவிடாத இலக்கியப் பேராளுமை பூமணி. தனிநபர்களை எழுதாமல் வரலாற்றின் சிதிலங்களையும், பண்பாட்டின் மேன்மைகளையும் தொடர்ந்து படைப்புகளில் ஆவணப்படுத்தியவர். அழகிரிப்பகடையின் செருப்பு தைக்கும் வாழ்வை எழுதிய கையோடு, நைவேத்தியம் செய்யும் பிராமண குருக்களின் அகத்தையும் மொழிக்குள் கொண்டு வந்தவர். நவீன செவ்வியல் படைப்பாக்கத்திற்கும் இவர் புதுமைப்பித்தன் வழிவந்த வலிமையான வாரிசு. ‘வாழ்க்கை இனிமையானது, மனிதர்களே சிடுக்கானவர்கள்’ என்ற புரிதலே இவரது கலையின் அடிநாதம். கோவில்பட்டியிலிருந்து சென்னைக்கு வந்து மகன் ரவியின் வீட்டில் தங்கி இருந்த அவருக்கு உடல்நலம் சற்று சரியில்லைதான். இங்கே தங்கியிருந்து சிகிச்சைகள் பெற வேண்டியிருக்கிறது. அந்தச் சூழலிலும் பேசுவதற்கு சம்மதித்தார். அரிதாகவே அவரது நேர்காணல்கள் வந்திருக்கின்றன. ‘‘சும்மா வாங்க பேசலாம்... பேட்டியாக அமைஞ்சால் வச்சுக்கலாம்’’ என்றார். அப்படியே அமைந்தது உரையாடல்.

‘‘எப்படி எழுத வந்தீங்க...’’

‘‘எழுத்தாளனா ஆகணும்னு நினைச்சதே இல்லை. ஊருக்குள்ளே சுதந்திரா கட்சியைச் சேர்ந்த வாத்தியார் ஒருத்தர் இருந்தார். அவர் விகடன், கல்கியெல்லாம் வச்சிருப்பார், படிப்பேன். கவிதை மாதிரி எழுதுவேன். அது கவிதையா இல்லை. காலேஜ் சேர்ந்ததும் படிக்க ஆரம்பிச்சிட்டேன். எங்க அண்ணன் மு.வ, கு.ராஜவேலுன்னு சில எழுத்தாளர்களைக் காண்பிச்சாரு. அந்தச் சமயம் திராவிட இயக்கத்தோட தாக்கம் வந்து சேர்ந்தது. கலைஞரோட கரகரத்த குரல், நாவலரின் நையாண்டி, நாஞ்சில் மனோகரனின் சின்ன பெண்மைத்தன்மை கொண்ட பேச்சு எல்லாம் கேட்கிறேன். எஸ்.எஸ்.தென்னரசு, டி.கே.சீனிவாசன், சி.பி.சிற்றரசு… இவங்க அந்த இயக்கத்திற்குள்ளே வேற மாதிரி இருந்தாங்க. சிவகங்கை சேதுராஜன், கோமதி அம்மா சேர்ந்து பாட்டு, பேச்சுன்னு இருக்கும். எம்.ஜி.ஆர் பாதிப்பு வந்துச்சு. பிறகுதான் விகடனில் ஜெயகாந்தன் கதைகள் தொடர்ந்து வருது. வித்தியாச அணுகுமுறை, லாஜிக்கான உரையாடல் பிடிக்குது. மொழியை வாய்க்கும் கைக்கும் இடைவெளி இல்லாமல் பார்த்துக்கிட்டு இருக்கார். நடுவில் கவிதை எழுதி நா.பார்த்தசாரதியோட தீபத்திற்கு அனுப்பினேன். அவர் நல்லாருக்குன்னு சொல்லிட்டு பிரசுரம் வேற பண்ணி விடுகிறார். அது ஒரு சாதாரணமான காதல் கவிதை.

“ஆண்டாள் பற்றி நாவல் எழுதுகிறேன்!”

அப்புறம்தான் கி.ராஜநாராயணன் என் ஊருக்குக் கிட்டவே இருக்காருன்னு தெரிஞ்சது. அப்ப நான் வேலையில் சேர்ந்திருந்தேன். ‘உங்க கதைகள் எளிமையா நம்பும்படியாக இருக்கு. உங்களை வந்து பார்க்கட்டுமா’ன்னு ஒரு கடிதம் போட்டேன். என் ஆபீசுக்கே வந்திட்டார். வெயில் தாங்க முடியாமல் சட்டையைக் கழட்டிட்டு அக்கடான்னு உட்கார்ந்திருக்கார். ‘என்னடா, எவ்வளவு பெரிய ஆளு கண்ணுக்கு முன்னாடி இவ்வளவு பச்சைப்புள்ளையா உட்கார்ந்திருக்காரு’ன்னு ஆச்சரியம் தாங்க முடியலை. தாமரை, கண்ணதாசன்னு எழுத ஆரம்பிச்சுட்டேன். சிறு சிறு பத்திரிகைகள் எங்கே இருக்கோ, அங்கே போய் தோள் கொடுக்க ஆரம்பிச்சிட்டேன்.’’

‘‘ஒரு படைப்பு உங்களுக்கு எந்தப் புள்ளியிலிருந்து தொடங்குகிறது?’’

‘‘எங்கேயாவது நறுக்குன்னு யாராவது நாலு வரி பேசினாக்கூட எடுத்துக்குவேன். கண்ணீரும் கம்பலையுமா ஒரு நிகழ்வு நடந்து பாதிச்சிருந்தா போதும். இரண்டு சின்னப்பசங்க ஒண்ணுக்கு இருந்துக்கிட்டே, கோலி விளையாடியபடி பேசிட்டு இருந்தாக்கூட அதில கதை இருக்கு. மனசில் ஆழமாகப் பதிஞ்சால் எதுவும் கதைதான். ஒரு நாளில் எழுதலாம். சிலது ஒரு மாதம் பிடிக்கும். அது மன அவகாசத்தைப் பொறுத்தது. ரொம்ப வேண்டப்பட்டவனோட சவ அடக்கம் நடந்தது. அதிலேகூட ஆரம்பிச்சு ஒரு கதை வந்துடுச்சு. இத்தனை வருஷம் வாழ்ந்து 53 சிறுகதைகள்தான் எழுதியிருக்கேன். ரொம்ப நாளாக சிறுகதைகள் எழுதலை. அது பெரும்பாடா இருக்கு. சர்க்கஸ் யானையை முக்காலியில உட்கார்த்தி வைக்கிற மாதிரி இருக்கு சிறுகதை. சின்னப் பரப்புக்குள்ளே எல்லாத்தையும் சொல்லியாகணும். போகப்போக எனக்கு கஷ்டமா இருந்தது. பன்முகப்பட்ட அனுபவங்களைக் காட்டித்தர எனக்கு நாவல் வடிவம்தான் தோதாக இருக்கு. சிறுகதை எழுதுறது டம்ளரில் கோதிக் குளிக்கிற மாதிரி இருக்கு. எனக்கு இப்ப கடலில் குளிக்கிற மாதிரிதான் எழுதணும்னு தோணிருச்சு.’’

‘‘உங்களுக்கு ‘வெக்கை’ நாவல் எழுதுவதற்கான தாக்கம் எங்கேயிருந்து கிடைத்தது?’’

‘‘நான் எழுதின எல்லாக் கதைகளுமே கண்டு, கேட்டு உள்வாங்கின அனுபவங்கள்தான். கி.ரா ‘பிஞ்சுகள்’ நாவலில் ஒரு குட்டிப் பையனோட மென்மையான பகுதியை மட்டும் சொல்றார். மென்மை ஒரு பக்கம்னா ஒரு வெக்கையான பகுதியும் இருக்கும்தானே. அதை நோக்கிப் போனதுதான் ‘வெக்கை’க்கான அஸ்திவாரம். சின்னப் பசங்களோட உலகத்தை நாம் சொல்ல மறந்திருக்கோம். இங்கே பெரியவங்க பார்க்கிறதைத்தான் பசங்களும் பார்க்கிறாங்க. அவங்களுக்குன்னு ஒரு சோகம், அவலம், இயலாமை இருக்கு. அதைச்சொல்ல களம் வேணும். ‘வெக்கை’ நிஜமா நடந்த சம்பவங்களின் தாக்கம்தான். அதுல என்னென்ன நடக்கப் போகுதுன்னு எனக்கு முன்கூட்டியே தெரியும்.

இந்த மாதிரி கொலை ஒண்ணு பண்ணப்போறோம்னு சிதம்பரத்தோட அப்பா என்கிட்டே பேசியிருக்கார். சின்னவனும் அருவா தூக்குறான்னு கவலைப்பட்டிருக்கார். அவங்க ஓடித்திரிஞ்ச இடங்கள் எனக்குத் தெரிந்ததுதான். எனக்குப் பரிச்சயம் ஆனதை மட்டுமே என்னால் எழுத முடிஞ்சது. சில பேர் ‘பிறகு’ மாதிரி ‘வெக்கை’ இறுக்கமா இல்லைன்னு சொன்னாங்க. என்ன இருந்தாலும் ‘வெக்கை’ ஒரு சின்னப் பையன் அனுபவம்தானே. ‘பிறகு’ நாயகன் அழகிரிப்பகடை கிழவன். வைரம் பாய்ஞ்ச அனுபவம், ஊறிப் போன பார்வை அவன்கிட்டே இருந்தது. நொடிந்துபோன இடிபாடுகளிலிருந்து அவன் வாழ்க்கையைப் பார்க்கிறான். அது விசாலமும் நிதானமுமாகவே இருக்கும். அதைச் சின்னப் பையனிடம் எப்படி எதிர்பார்க்க? கிடைக்க வேண்டிய வாழ்க்கையை இழந்து நிற்கிறவன் அவன். அவன் பக்கம் இருந்து யோசிக்கணும். அழகிரிப்பகடைகிட்டேயும் நான் பேசியிருக்கேன். ‘வெக்கை’யில் கொலை செய்தது சிதம்பரமாக இருக்கலாம். காடுகளில் அலைஞ்சு திரிந்தது பூமணிதான்.’’

‘‘உங்களின் ‘பிறகு’ நாவலில் மார்க்சியத் தாக்கம் இருந்தது. ஆரம்பக்காலச் சிறுகதைகளில்கூட அதை உணர முடிந்தது. பின்னாடி அது இல்லையே?’’

‘‘மார்க்சியம் ஓங்கிக் கத்திக்கிட்டு இருக்கிற கரகோஷமான விஷயம் இல்லை. ஆனால் அது எனக்கு நெறைய கத்துக்கொடுத்திருக்கு. வாழ்க்கையைப் புரிஞ்சுக்க மார்க்சியத் தத்துவம் ஒரு பெரிய துணை. ஆனால் எழுதும்போது மார்க்சியத்தை நான் மடியில் வச்சிக்கிட்டே எழுதுவது இல்லை. போகப் போக மனிதத்தை மட்டும் முன்னிறுத்தி எழுத ஆரம்பிச்சிட்டேன். என் படைப்புகளைக் கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் மனிதம்தான் சுடர் மாதிரி அணையாமல் எரிச்சுக்கிட்டே இருக்கும். என்னோட அரசியலே மனிதம்தான்.’’

‘‘திடீரென்று சினிமாவுக்கு வந்து ‘கருவேலம் பூக்கள்’ எடுத்தீங்க... சினிமா ஆர்வமும் இருந்ததா?’’

‘‘எனக்கு சினிமாவில் சிவாஜி அழறது பிடிக்கும். அழும்போதுகூட அழகா இருக்கிற ஆம்பளை அவர்தான்னு தோணும். எம்.ஜி.ஆர் அழறது கிண்டல் மாதிரி இருக்கும். வேடிக்கையாக நினைத்துக்கொண்டு ஒரு ஸ்கிரிப்ட்டை ஒன்லைனா NFDC-யில் கொடுத்தேன். படிச்சிட்டு, ‘ஸ்கிரிப்ட் பண்ணிட்டு வாங்க. பணம் கொடுக்கிறோம், படம் எடுங்க’ன்னு சொல்லிட்டாங்க. என் மகள் காதில் கிடந்த கம்மலை அடகு வச்சிட்டு கோவில்பட்டியில் ரூம் போட்டு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டேன். அதையும் பார்த்துட்டு சரின்னு சொல்லிட்டாங்க. 96-ம் வருஷம் 35 லட்ச ரூபாய் கொடுத்தாங்க. அப்ப அது பெரிய காசு. 32 லட்சம் போக மீதியை பைசா சுத்தமா திருப்பிக் கொடுத்துட்டேன். NFDC-யில் இருக்கிறவங்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியல. சினிமாவில் இருக்கிறவங்களோடு தொடர்ந்து செயல்பட முடியலை. ஒதுங்கிட்டேன்.’’

“ஆண்டாள் பற்றி நாவல் எழுதுகிறேன்!”

‘‘அரசுப் பணியில் துணைப் பதிவாளராக உங்களின் நேர்மை மிகவும் புகழ்பெற்றது. அவ்வளவு தூரம் பணியில் தூய்மையைக் கடைப்பிடிக்க முடிந்ததா?’’

‘‘அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது பெரும்பாரம் இறங்கின மாதிரி இருந்தது. அரசுப்பணி என்பது அதன் நீக்குப் போக்கோடு சட்டம், விதி எனப் பேசிக்கொண்டிருக்காமல் அனுசரித்துப் போகிறவங்களுக்கு சரியா இருக்கும். எனக்கு இயல்பானதா இல்லை. எனக்கு நேர்மை பிடிச்சது. ரேஷன் அரிசி சாப்பிட்டு வளந்தவன். நேர்மையைப் பற்றி எழுதணும்னா நமக்கும் அது வேணுமில்லையான்னு தோணுது. அம்மா வளர்த்த விதமும் அப்படி. இத்தனைக்கும் 300 ரேஷன் கடைக்கும் மேலே என் பொறுப்பில் இருந்தது. ஆபீஸ் பணத்தில் தேநீர்கூட குடிச்சதில்லை. தண்ணியைக்கூட வீட்டிலிருந்துதான் கொண்டு போவேன். சென்னையில் வீடு வாங்க முடியலை. பிள்ளைகளைப் படிக்க வைத்து ஆளாக்க மட்டும்தான் முடிந்தது. வாழ்க்கைக்கான உத்தரவாதம் இருக்கிறது என்பதற்காக சம்பளத்துக்கு உழைச்சிருக்கேன். அதனால் எழுத்தில் நிறைய விஷயங்களைத் தவற விட்டுட்டோம்னு இப்ப தோணுது.’’

‘‘கோவில்பட்டி காலங்களை நினைவில் கொண்டுவர முடியுதா?’’

‘‘அதெல்லாம் மறக்கிற விஷயமா? கௌரிசங்கர், எஸ்.ரா, கோணங்கி, துரை, மைக்கேல், அப்பாஸ்னு கூடிக்கூடி பேசுவோம். இன்னும் ஞாபகத்திற்குள்ளே வராமல் நிறைய பேர் இருக்காங்க. கோவில்பட்டி காந்தி மைதானத்தில் உட்கார்ந்து பேசுவோம். கதிரேசன் மலைக்குப் போய் விவாதிப்போம். ராத்திரி முழுக்க தவளைகள் சாட்சியாக பேச நினைத்ததை எல்லாம் பேசித் தீர்த்திருக்கோம். தேவதச்சன் நுணுக்கி நுணுக்கி பேசுவார். கோணங்கி திடீரென்று வந்து மணிக்கணக்கா பேசுவார். கி.ராவைத் தேடிப் போவோம். அந்த அம்மா ருசியான தோசை சுட்டுக் கொடுப்பாங்க. சில நேரங்களில் கி.ராவே வந்து எங்க முன்னாடி நிற்பார். எப்பேர்ப்பட்ட காலம் தெரியுமா? இதில் சில பேர் முற்போக்கு அப்படி இப்படின்னு போயிட்டாங்க. இலக்கியத்தை நிறுவனப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. எப்படி இருந்தாலும் கோவில்பட்டி நாள்கள் முக்கியமானவை.’’

‘‘இப்ப இருக்கிற இலக்கியச் சூழல் எப்படியிருக்கு?’’

‘‘இளைஞர்கள்கிட்டே சுய அனுபவங்கள் குறைவாக இருக்கு. கம்ப்யூட்டரில் தேடிக்கிட்ட அனுபவம் மட்டும் இருக்கு. கம்ப்யூட்டரைப் பிடுங்கி வச்சுக்கிட்டால் ஒன்றும் நடக்காது போல. வாசித்த வரைக்கும் முழு நிறைவில்லை. போன்ல கேட்டுட்டு விரல்ல பேசிட்டு இருக்காங்க. ஆழமா வாசிக்கிறது இங்கே சுத்தமாக இல்லை. இப்ப எழுத்து இல்லை. ஆனால் எழுத்தைப் பத்திப் பேச்சு அதிகமாயிருக்கு. திருச்செந்தாழை பிரமிப்பா எழுதுறார். ஒரு புது மொழி கிடைச்ச மாதிரி தோணுச்சு. சுனில் கிருஷ்ணன்கிட்டே நல்ல அனுபவம் நிற்குது. நல்ல மொழி கைவசப்படுது. இவங்ககிட்டே பெரிசா எதிர்பார்க்கலாம். என் முதுமை அனுமதிச்சால் இன்னும் படிக்கலாம்.’’

‘‘ ‘தலித் இலக்கியம் எனப் பிரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை’ன்னு எப்பவும் சொல்லி வந்திருக்கீங்க. இப்பவும் அதே கருத்துதானா?’’

‘‘தலித் என்ற வார்த்தை இறக்குமதி செய்யப்படுவதற்கு முன்பே நான் அந்த மக்களை, அவர்கள் வாழ்க்கையை எழுதிக் கொண்டிருக்கிறேன். இலக்கியத்தில் என்ன சாதி, அரசியல் வேண்டியிருக்கு? இன்னமும் சாதிதான் தலையை விரிச்சுப்போட்டு ஆடுது? அரசாங்க ஆணைப்படியே பட்டியல் சாதியினரிடையே 30க்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் கலாசாரம், மொழி, வாழ்வு முறை இருக்கிறது. இவர்களுக்குள் ஒன்றுக்கொன்று இசைவுகூட இல்லை. அழகிரிப்பகடையும், கந்தையா நாயக்கரும், தலையாரித்தேவரும், கருப்பக் கோனாரும், சங்கரலிங்கம் பிள்ளையும், சங்கரய்யரும் எனக்குச் சொந்தக்காரங்கதான். இலக்கியம் உலகளாவியது. அது ஒரு அகவெளிப் பிரயாணம்.’’

‘‘இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?’’

‘‘நான் நாத்திகன்தான். ஆனால் ஆண்டாள் எனக்குப் பிடிக்கும். அந்த அம்மாவின் உச்சிக்கு இன்றைக்கு வரைக்கும் யாரும் வரவில்லை. அவரைப் பற்றி ஆழ்ந்து ஒரு நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.’’