
ஷக்தி, வளர்ந்துவரும் இளம் கவிஞர். புற்றுநோயாளிகளின் வலிகளை மையப்படுத்தி, `அபோர்ஷனில் நழுவிய காரிகை’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ் இலக்கிய வாசகர்களிடம் கவனம் பெற்றிருக்கும் கவிஞரிடம் பேசினேன்.
``திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள பல்லவன் கோவில் என்கிற ஊரில் பிறந்தேன். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தேன். பாம்பே, புனே மற்றும் ஹைதராபாத்திலும் சிலகாலம் பணிபுரிந்துள்ளேன். 2011ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்பினேன். அங்கே `பிலிப்’ எனும், புற்றுநோய் பாதித்தவர்களுக்கான அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி நடத்திவருகிறேன்.

மருந்து, அறுவை சிகிச்சை, கதிரியக்கம் என, புற்றுநோய்க்கு மூன்றுவிதமான சிகிச்சைகள் உண்டு. இதில் நான் கதிரியக்க சிகிச்சை நிபுணராக இருக்கிறேன்.
புற்றுநோய்க்குச் சிகிச்சையளிக்கும் அரசு மருத்துவமனைகள் ஒன்றோ இரண்டோதான் இருக்கின்றன. எனவே, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நிபுணராக இருக்கவேண்டியதிருந்தது. சில பிரச்னைகளால் அங்கிருந்து விலகினேன். நண்பர்களோடு சேர்ந்து அறக்கட்டளை ஆரம்பித்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடிச் சென்றேன். இப்போது சிறுதானிய வியாபாரம் செய்துதான் எனக்கான மொத்த வருமானத்தையும் ஈட்டிக்கொள்கிறேன்.”
“பிலிப் அறக்கட்டளை நடத்துவதற்கான தூண்டுதல் மற்றும் நிதிப்பின்புலம் பற்றிச் சொல்லுங்கள்...”
“கடற்கரை கிராமத்தில் வசிக்கும் இருபது வயதுப் பெண் ஒருவர் கருவுற்றிருந்தார். ஐந்தாம் மாத ஸ்கேனில் வயிற்றில் கட்டி இருப்பதாகச் சொன்னார்கள். அந்தப் பெண்ணுக்கு உதவிகள் செய்யத் தொடங்கினேன். இந்தக் காலகட்டத்தில் அவர் வலியால் துடிப்பதைத் தாங்க முடியவில்லை. குறைந்தபட்சம் வலியில்லாத மரணமாவது அவளுக்கு வாய்க்க வேண்டும் என்று விரும்பினேன். அந்தப் பெண்ணின் மரணம்தான் என் வாழ்வை மாற்றியது. அவர்தான் ‘அபோர்ஷனில் நழுவிய காரிகை’யின் காரணியும். பிலிப் அறக்கட்டளையைத் தொடங்கக் காரணமும் அதுதான்.

என்.ஜி.ஓ மாதிரியோ, பதிவுபண்ணியோ என்னுடைய அறக்கட்டளையை நடத்தவில்லை. என்னோடு படித்த ஐந்து நண்பர்கள் வெவ்வேறு நாடுகளில் இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து நிதியுதவி பெற்று இந்த அறக்கட்டளையை நடத்துகிறேன். புற்றுநோய் ஆரம்ப நிலையில் உள்ள நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்துவிடுவோம். அவர்கள் செலவை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். இனி பார்க்க முடியாது என்று மருத்துவமனை திருப்பி அனுப்புகிற நோயாளிகளுக்கு மட்டும் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்துதருகிறோம்.”
“புற்றுநோய் என்பது அரிய நோயாக இருந்தது மாறி, இன்று பலருக்கும் புற்றுநோய் வருவதற்கு என்ன காரணம்?”
“தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், அளவுக்கு அதிகமான மக்கள் தொகைக்கு ஈடுசெய்யும் விதமாகத் தயாரிக்கப்படும் மாற்று உணவுப் பொருள்கள், காற்று மாசுபாடு, நாம் இழந்த நீர்வளம் இவை எல்லாம்தான் காரணம். நாற்பது வயதிலேயே பல நோய்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. முன்பெல்லாம் புற்றுநோய்க்கு மது, புகைதான் முக்கியமான காரணிகளாக இருந்தன. இப்போது இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாத அளவுக்கு, காரணிகள் பெருகிவிட்டன.”
“உங்கள் பணியின்மூலம் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு..?”
“என் உடலிலும் கதிரியக்க பாதிப்பு இருக்கிறது. அது இல்லாமல் இந்தப் பணியைச் செய்ய முடியாது.

TLD என்ற பேஜ் கொடுப்பார்கள். அந்த பேஜ் நம் உடலில் ஒரு மாதத்தில் எவ்வளவு கதிரியக்கம் இருக்கு என்பதைத் தெரியப்படுத்தும். அதன் அளவு குறைவாக இருக்கும்போது ஓய்வு தரமாட்டார்கள். அதிகமாகும்போது நமக்கு ஓய்வு கொடுப்பார்கள். கிட்டத்தட்ட ஒருமாத காலம் ஓய்வு கிடைக்கும்.”
“துறைசார்ந்த கவிதைகளை எழுதுவதில் உள்ள சவால்கள் என்னென்ன?”
“மருத்துவச் சொற்களைத் தமிழ்ப்படுத்தியே என் கவிதை நூலை எழுதினேன். ஓராண்டுக் காலம் ஆனது. அதுதான் பெரிய சவால். இதன் இரண்டாம் பாகம் கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது. அவ்வாறு வரும்போது நூலின் இறுதியில் மருத்துவக் கலைச்சொற்களை இணைக்கும் திட்டம் உள்ளது.”
“நம் நாட்டு மருத்துவத்துறையில் உள்ள பிரச்னைகள் என்னவென்று நினைக்கிறீர்கள்?”
“மேலை நாடுகளில் இலவச மருத்துவம் கிடைக்கும்; அது சுகாதாரமாகவும் இருக்கும். சிகிச்சைக்குப் பிறகு அது அன்றாட வாழ்க்கையை பாதிக்காது. ஆனால், நம்மூரில் யார் நோயில் பாதிக்கப்படுகிறாரோ, அவர் அந்நோயைக் குணமாக்க தன் சொத்து முழுவதையும் இழக்க வேண்டிய நிலை உள்ளது. சிகிச்சைக்குப் பிறகு சாதாரணமாக இயங்க முடியாது; இழந்ததை சம்பாதிக்கவும் முடியாது. கடன் வாங்கியவர்கள் கடனிலேயே இறந்துபோய்விடுகிறார்கள்.

மருந்துப்பொருள்களுக்கும் நம் நாட்டில் ஜி.எஸ்.டி வரி உண்டு.
அரசு மருத்துவமனையில் எலி கடித்து இறந்துபோன குழந்தைகள், மின்சாரம் இல்லாமல் கிட்னி பாதிக்கப்பட்டவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்படாமல் இறந்துபோகிறவர்கள், ஜெனரேட்டர் வாங்க முடியாத அவலங்கள், இறந்தவரை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாத கொடுமை என... எத்தனை எத்தனை செய்திகளை அன்றாடம் கடக்கிறோம். இவற்றைவிட நம் மருத்துவத்துறை அவலங்களை விளக்க வேறு என்ன வேண்டும்?”
“மருத்துவத் துறையில் என்னமாதிரியான மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?”
“முறையான கட்டமைப்பு வேண்டும். ரத்தம் தேவைப்பட்டால், ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு மாற்ற, கணினி மயமாக்கப்பட்ட ரத்த வங்கிகள் வேண்டும். சில மருத்துவமனையில், தேவைக்கு அதிகமான ரத்தங்களைச் சேகரித்து, அதைச் சேமிக்க வழியின்றிக் கழிவறையில் கொட்டுகிறார்கள். எலும்பு முறிவுக்கு ஸ்கேன் எடுக்க வந்தால் ஒருவாரம் அலையவிட்டு அடுத்தவாரம் ஸ்கேன் அப்பாய்ன்மென்ட் கொடுக்கிறார்கள். காப்பீட்டுத் திட்டங்களுக்குச் செலவு செய்யும் பணத்தில், புதிய மருத்துவமனைகள் கட்டலாம். நவீன முறைப்படுத்தப்பட்ட ஆய்வுக்கூடங்களை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவிலேயே, கர்ப்பகால மரண எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் குறைவாக உள்ளது. இதேபோல் எல்லாவற்றிலும் வளர்ச்சி ஏற்பட வேண்டும். சமீப காலங்களில் 108 சரியாக இயங்குவது கிடையாது என்கிற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் உள்ளது. இதுபோன்றவை மாற வேண்டும்.”