Published:Updated:

"எப்படி இருந்த நாங்க இப்படி ஆகிட்டோம்!" - உலகைக் கலக்கிய சில குண்டு நாய்களின் கதை

"மச்சீ... என்னாடா இப்படி ஆகிட்ட?"  செம கூலாக அவன் கேட்கும் கேள்விக்கு,

"ஏன் மச்சீ..என்னடா?" என்று பதறாமல்தான் பதில் சொல்வோம்.

"என்னடா... அவ்ளோ ஃபிட்டா இருப்ப. இப்ப இப்படி ஆளே ஊதிட்ட. என்ன மச்சீ ஸ்ட்ரெஸ்ஸா? ஐடி கம்பெனியில வேலையா? உடம்ப பார்த்துக்க மச்சீ... சரிடா பை..." என்று அவன் டாட்டா காட்டிவிட்டுப் போன நொடி மனசு பதற ஆரம்பிக்கும்.

உடனடியாக மனம் கண்ணாடியைத் தேடி அலையும். 

"அவ்வளவு பெருசாவா இருக்குறோம்ம்ம்..." என்று இழுவையோடு மனம் யோசிக்கத் தொடங்கிடும். 

குண்டு, ஓவர் வெயிட், தொப்பை... மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் கதறிக் கதறிப் பதறும் கவலை வார்த்தைகள் இவை. 
ஜிம்மில் சேரும் 10 ஆயிரம் பேரில் ஒருத்தர் மட்டுமே சரியாக ஜிம்மிற்குச் சென்று, உடல் எடையைக் குறைத்து, அதைப் பராமரிக்கிறார்கள் என்று சொல்கிறது எடுக்கவே படாத, எடுக்கவே அவசியப்படாத சர்வே ஒன்று. 

"யான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெறட்டும்" என்ற நல்ல குணம் மனிதனுக்கு ரொம்பவே அதிகம். அப்படித்தான் இந்த விஷயத்திலேயும்..."நான் ரொம்ப குண்டாயிட்டேன் டாமி...நீயும்  கொஞ்சம் குண்டாயிடு. ரெண்டு பேரும் சேர்ந்து டயட் இருந்து உடம்ப குறைக்கலாம்" என்ற நல்லெண்ணத்தில் கூட இருந்த ஒரே பாவத்துக்காக டாமிக்களையும், ஜூலிக்களையும் குண்டர்களாக்கி கொடுமை செய்த கதைகள் உலகில் ஏராளமாக இருக்கின்றன. அப்படி உடல் ஊதிப் போன நாய்கள், வெயிட் குறைத்த சில வரலாற்றுச் சம்பவங்கள் இதோ:

1. சிப்ஸா தின்னு உடம்ப வளர்த்த சிப்ஸ்!

பேரு 'கேல் சிப்ஸ்'ன்னு வெச்சதாலோ என்னவோ, தலைவன் எந்நேரம் பார்த்தாலும் பெருந்தீனி தின்னு எடை 40 கிலோவைத் தாண்டிடுச்சு. தன்னோட எடையைக் குறைக்கவே பெரும்பாடுபட்டிட்டிருந்த ஓனருக்கு சிப்ஸை என்ன பண்றதுன்னு தெரியில. சரின்னு...ஒரு நாய்கள் காப்பகத்துக்கு கூப்பிட்டு விஷயத்த சொல்ல, அவங்க சிப்ஸைக் கூட்டிட்டுப் போக வந்தாங்க. வந்தவங்க 'அப்டியே ஷாக்காயிட்டாங்க!'. காரணம், சிப்ஸால நடக்கவே முடியாத அளவுக்கு வெயிட் போட்டிருந்தது. அப்புறம் ஒரு தள்ளுவண்டியைக் கொண்டு வந்து, அதுல வெச்சுதான் கூட்டிப் போனாங்க. 

அதுவரைக்கும் நல்லா சாப்பிட்டு வளர்ந்த சிப்ஸுக்கு ஸ்டிரிக்ட் டயட் தொடங்குச்சு. வெறும் பச்சைக் காய்கறி சாலட்கள். ஜனவரி, 2015-ல தொடங்கின டயட்னால 2015, மே மாதம் 10 கிலோ வரை எடை குறைந்தது. இப்படியாக ஹெவி வொர்க்கவுட், ஸ்ட்ரிக்ட் டயட்டின் காரணமாக 20 கிலோவாக எடை குறைந்தது சிப்ஸ். நடக்கவே முடியாம கிடந்த சிப்ஸ், இப்போ ஓடியாடி, துள்ளிக் குதித்து விளையாடுகிறான். கூடவே புது கேர்ள் ஃப்ரெண்டும் கிடைச்சதுல சிப்ஸ் இப்போ செம்ம ஹேப்பி அண்ணாச்சி!

2. தெறிக்கவிடும் டென்னிஸ்!

3 வருடங்களுக்கு முன்னாடி ப்ரூக் பர்டன் தன் சொந்தக்காரர் வீட்டுக்கு டின்னர் சாப்பிடப் போனார். அங்கிருந்த டென்னிஸைப் பார்த்து அதிர்ந்துவிட்டார். டென்னிஸ் டேஷ்ஹண்ட் வகையைச் சேர்ந்தவன். மிக குள்ளமாக, நீளமாக வளரக் கூடிய இனம். டென்னிஸ் தரையோடு தரையாக ஊர்ந்துகொண்டான். கால்களில் நடப்பதற்குப் பதிலாக தொப்பையில் ஊர்ந்துகொண்டிருந்தான். சாப்பிட வந்த ப்ரூக்குக்கு ஒரே கோபம். 'தயவுசெய்து டென்னிஸ என்கிட்ட கொடுத்துடுங்க, நான் அவனைப் பார்த்துகுறேன்' என்று சொல்லி எடுத்துப் போனார் ப்ரூக். 

25 கிலோவாக இருந்த டென்னிஸை இன்று 4 கிலோவாக எடை குறைத்துள்ளார் ப்ரூக். எடை குறைத்ததில் ஒரு சிக்கல் வந்தது. ஏகப்பட்ட ஊளைச் சதை தொங்க, நான்கு ஆபரேஷன்கள் செய்யப்பட்டு இப்போ டென்னிஸ் தெறிக்கவிடுகிறான்.

3. விசுவாச வின்னியின் வித்தியாச கதை!

வின்சென்ட்டும் டென்னிஸ் மாதிரிதான். வின்னியின் ஓனர் இறந்துவிட டிப்ரஷனில் மூழ்கிவிட்டது வின்சென்ட். கவலையில் வெறித்தனமாக சாப்பிட்டது. பெரும் எடை கூடியது. பின்னர், அவனை ஒரு நாய்கள் பாதுகாப்பு அமைப்பு தத்தெடுத்து எடை குறைக்க, இப்போது நலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் வின்சென்ட். 

4. அன்னிக்கு 35, இன்னிக்கு 10!

2012-ல் ஒபி 35 கிலோ இருந்தது. அப்படி, இப்படிப் போராடி இன்று 10 கிலோவாக எடை குறைந்து சிறப்பாக இருக்கிறது. ஒபியின் எடை குறைப்பு நிகழ்வை ஒரு ஃபேஸ்புக் பக்கம் தொடங்கி, படிப்படியாக போட்டோக்களை அதில் பதிவேற்றியிருக்கிறார் ஒபியின் ஓனர். 

5. குண்டு கோபக்காரன் ஹூச்! 

உலகின் மிகக் கோபமான, கொடூரமான, மூர்க்கமான நாயாக அறியப்படும் ராட்வீலர் வகையைச் சேர்ந்தது ஹூச். 70 கிலோவாக இருந்த ஹூச், இப்போது படிப்படியாக எடை குறைத்துக்கொண்டிருக்கிறது. 


லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... "நீங்க வெயிட்ட குறைங்க; குறைக்காம போங்க... டயட்ல இருங்க; இருக்காம போங்க... எங்களுக்கு நாய்கள் பத்திரமா இருந்தே ஆகணும்...ஆங்...ஆங்..." . இதையும் மீறி நாய்களைக் கொடுமைப்படுத்தினா, பீட்டாவோட பின்விளைவுகள நீங்கதான் சந்திக்கணும். 

அடுத்த கட்டுரைக்கு