Published:Updated:

"சிங்கத்துக்கு எதுக்கும் ஒரு சி.டி ஸ்கேன் எடுத்துருவோம்..!" மருத்துவர்களின் அக்கறை

"சிங்கத்துக்கு எதுக்கும் ஒரு சி.டி ஸ்கேன் எடுத்துருவோம்..!" மருத்துவர்களின் அக்கறை
"சிங்கத்துக்கு எதுக்கும் ஒரு சி.டி ஸ்கேன் எடுத்துருவோம்..!" மருத்துவர்களின் அக்கறை

ந்த ஆண் சிங்கத்தின் பெயர் டோமோ (Tomo) அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் கொலம்பஸ் மிருகக்காட்சி சாலையில் வாழ்கிறது. அதற்குக் கடந்த சில நாள்களாகக் கடுமையான பல் வலி இருந்துவந்த காரணத்தால், அதன் கடைவாய்ப் பல் ஒன்றைப் பிடுங்கிவிட்டார்கள் மருத்துவர்கள். ஆனால், அதன் பின்னும் பல்லீறுகளில் ஏற்பட்ட ஏதோ ஒரு தொற்றினால் அவதிப்பட்டது டோமோ.

14 வயது சிங்கத்தின் வேதனையைப் பார்த்த அந்த மிருகக்காட்சி சாலையைச் சேர்ந்த மருத்துவர்கள் மிகவும் வருந்தினார்கள். அதற்கான சிகிச்சைகளை முறையாகச் செய்ய வேண்டும் என்றால், அதன் ஈறுகளில் ஏற்பட்டுள்ளது என்ன வகையான தொற்று என்பது தெளிவாகத் தெரிய வேண்டும். அதை வெறும் கண்களால் ஆராய்ந்து கண்டுபிடிப்பது நிச்சயமாக முடியாது. அப்போது மருத்துவர்கள் ஒன்றுகூடி ஆலோசித்தார்கள். "சரி, இதைச் செய்துவிடுவோம்" என்று அனைவரிடமும் கூறினார் விலங்கியல் மருத்துவரும் கொலம்பஸ் பூங்காவின் துணைத் தலைவருமான ராண்டி ஜங். ஒரு சிங்கத்துக்கு ஸ்கேன் செய்யலாம் என்று முடிவெடுத்தபோது அவர்களுக்கு முன் சில சிக்கல்கள் இருந்தன.

மிருகங்களுக்கு என்று ஸ்கேன் செய்யும் இயந்திரங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. இந்நிலையில் 200 கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட, சுமார் 7 அடி நீளமான உடலமைப்பு கொண்ட சிங்கத்தின் உடலை எவ்வாறு ஆய்வுசெய்வது? இதுவே மனிதனாக இருந்தால், இங்கே படுத்துக் கொள்ளுங்கள், தலையை அசைக்காதீர்கள் என்று கூறலாம். சிங்கத்தைப் பிடித்து சாந்தப்படுத்தி ஒரு இடத்தில் படுக்கவைக்க முடியுமா? அதற்கு மயக்க மருந்து கொடுத்து அதையும் செய்துவிடலாம் என்றாலும் ஸ்கேன் செய்வதற்கான வசதிகள் ஏது?

இறுதியில் மனிதர்களை ஸ்கேன் செய்யக்கூடிய இயந்திரத்திலேயே இதையும் செய்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள். அந்த இயந்திரம் 230 கிலோ வரை தாங்கக் கூடியதாக இருந்தாலும், இதுவரை அத்தனை பெரிய எடையை அதில் சோதித்துப் பார்த்ததில்லை. முயற்சி செய்து விடுவோம் என்று முடிவு கட்டினார்கள் மருத்துவர்கள். முதலில் சிங்கத்தை மயக்க மருந்து கொடுத்து தூங்க வைத்து, ஆறு பேர் சேர்ந்து அதைத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் வைத்தார்கள். 204 கிலோ என்றால் சும்மாவா! ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட சிங்கம் ஸ்கேன் அறைக்குள் நுழைகிறது. உள்ளே மருத்துவர்கள் மட்டுமின்றி அங்கே ஒரு புகைப்படக்காரரும், வீடியோகிராபரும் இருந்தார்கள். செய்யப்போவது சாதாரண காரியமா என்ன, பதிவு செய்வது முக்கியமல்லவா? அவர்களோடு பூங்காவின் பணியாளர்களும் இருந்தார்கள். சிங்கத்திற்கே ஸ்கேன் செய்கிறார்கள், வேடிக்கை பார்க்க யாருக்குத்தான் ஆசை வராது.

உள்ளே கொண்டுவந்த டோமோவைத் தூக்கி ஸ்கேன் இயந்திரத்தில் வைக்கிறார்கள். இயந்திரம் முக்குகிறது, முனகுகிறது. முதல்முறையாக இவ்வளவு எடையைச் சுமக்கிறதல்லவா, பாவம் கொஞ்சம் திணறியது. பின் ஒருவழியாகத் தாங்கிக்கொண்டது. ஸ்கேன் செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. குழந்தையைப் போல் தூக்கி ஸ்கேன் கருவியில் படுக்க வைத்தபின், தலையை சரியாகப் பொருத்தி கால்களை மடக்கி உடலோடு இணைத்து படுக்க வைத்து டோமோவை டோமோகிராபி ஸ்கேன் செய்வதற்காக இயந்திரத்துக்குள் அனுப்புகிறார்கள். கருவி தன் வேலையைச் செய்கிறது. அதன் மண்டையோடு முழுவதும் ஸ்கேன் செய்யப்படுகிறது. மருத்துவர்கள் ஆராய்கிறார்கள். பிடுங்கப்பட்ட பல்லின் ஈறுக்கு ஏற்பட்ட தொற்று மற்ற பகுதிகளுக்குப் பரவவில்லை என்பதையும் அது என்ன வகையானது, என்ன சிகிச்சை செய்ய வேண்டும் என்பதையும் அறிந்துகொள்கிறார்கள். டோமோ வெளியே வருகிறது. அனைவரின் முகத்திலும் நினைத்ததை சாதித்துவிட்ட மகிழ்ச்சி.

"டோமோவின் ஈறுகளில் ஏற்பட்டுள்ள தொற்றுக்கு ஒரு வாரம் சிகிச்சை செய்தால் போதும், அது குணமடைந்து விடும். எப்படியோ டோமோவுக்கு டோமோகிராபி செஞ்சு முடிச்சுட்டோம்" என்று நக்கலாகச் சொல்கிறார் மருத்துவர். இதுக்கு பில் எவ்ளோன்னு தெரியலையே!

Photo Credits: Grahm S. Jones/Columbus Zoo and Aquarium

அடுத்த கட்டுரைக்கு