Published:Updated:

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 12 அடி நீள விலாங்கு மீன்!

`ஆங்குயில் பார்ம்ஸ்'' என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட கடலிலும் நன்னீரிலும் வாழக்கூடிய விலாங்கு மீன்கள் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பார்ப்பதற்கு பாம்பைப் போலவே தோற்றமளிக்கின்றன.

விலாங்கு மீன்
விலாங்கு மீன்

பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களின் வலையில் 12 அடி நீளமுள்ள விலாங்கு மீன் இன்று பிடிபட்ட நிலையில் கரைக்குக் கொண்டு வரப்பட்டது. மலைப்பாம்பு போன்று நீளமாக இருந்த அந்த மீனை கண்ட பொதுமக்கள் வியந்துபோயினர்.

விலாங்கு மீன்
விலாங்கு மீன்

இந்தியாவின் மிக நீண்ட கடற்கரை மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டம் மீன் பிடிப்பதற்கும் கடல்சார் தொழிலுக்கும் பெயர் பெற்றது. மேலும், தமிழக அளவில் மீன் உற்பத்தியில் முதலிடத்திலும் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பாம்பனில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் பிடிக்கப்படும் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன்கள் பதப்படுத்தப்பட்டு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக தனுஷ்கோடி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், ராமேஸ்வரத்தில் இருந்து மாலை நேரங்களில் சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து செல்கின்றன. மேலும், காற்றின் வேகம் காரணமாகக் கடந்த 4 நாள்களாக ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டுப்படகு மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த திங்கள்கிழமை இரவு மீன்பிடிக்கச் சென்றனர். தாங்கள் வழக்கமாக மீன்பிடிக்கச் செல்லும் பகுதிக்கு சென்ற மீனவர்கள் மீனுக்காக வலையைக் கடலில் பாய்ச்சினர். பாய்ச்சிய வலைகளில் சிக்கிய மீன்களுடன் மீனவர்கள் இன்று பகலில் கரை திரும்பினர். கரை வந்த மீனவர்கள் வலைகளில் இருந்த மீன்களைப் பிரித்தபோது அந்த வலையினுள் மலைப்பாம்பை போன்ற நீளமான் மீன் ஒன்று இருப்பதைக் கண்டனர்.

'ஆங்குயில் பார்ம்ஸ்' என்ற விலங்கியல் பெயரைக்கொண்ட கடலிலும் நன்னீரிலும் வாழக்கூடிய விலாங்கு மீன்கள் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
மீன் ஆராய்ச்சியாளர்கள்

எச்சரிகையுடன் அந்த மீனை எடுத்து பார்த்தபோது அது விலாங்கு மீன் எனத் தெரிய வந்தது. சுமார் 12 அடி நீளம் இருந்த அந்த விலாங்கு மீனை பாம்பன் மீன் சந்தைக்கு விற்பனைக்காக மீனவர்கள் கொண்டு வந்தனர். மலைப் பாம்பு போன்று நீளமான விலாங்கு மீனைக் கண்ட பொதுமக்கள் பயத்தில் பின்வாங்கினர்.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், ``'ஆங்குயில் பார்ம்ஸ்' என்ற விலங்கியல் பெயரைக்கொண்ட கடலிலும் நன்னீரிலும் வாழக்கூடிய விலாங்கு மீன்கள் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பார்ப்பதற்கு பாம்பைப்போலவே தோற்றமளிக்கின்றன இந்த வகை கடல் விலாங்கு மீன்கள். நன்னீர் குளங்களில் வாழும் விலாங்கு மீன்கள், மற்ற மீன்களைப் போலவே தோற்றமளிக்கின்றன. ஆனால், கடலில் வாழும் விலாங்கு மீன்கள் சுமார் 5 செ.மீ. முதல் 4 மீட்டர் வரை நீளம் உடையதாக உள்ளன. இதில் அதிகபட்சமாக 'முரே' ரக விலாங்கு மீன் 150 கிலோ எடை கொண்டதாகவும் இருக்கும்.

விலாங்கு மீன்
விலாங்கு மீன்

விலாங்கு மீனின் முன் பகுதியிலும், வால் பகுதியிலும் துடுப்புகள் இருந்தாலும் அவையும் பக்கவாட்டில் ரிப்பன்போல வளைந்து உடலோடு உடலாக ஒட்டியிருக்கும். இந்தத் துடுப்புகள்தான் விலாங்கு மீன்கள் நீந்த உதவியாக உள்ளன.விலாங்கு மீன்களுக்கு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நல்ல வரவேற்பு உண்டு'' என்றனர்.