Published:Updated:

மனிதன் உருவாகக் காரணமும் இதுதான்... டைனோசர் அழிவுக்கு காரணமும் இதுதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மனிதன் உருவாகக் காரணமும் இதுதான்... டைனோசர் அழிவுக்கு காரணமும் இதுதான்!
மனிதன் உருவாகக் காரணமும் இதுதான்... டைனோசர் அழிவுக்கு காரணமும் இதுதான்!

மனிதன் உருவாகக் காரணமும் இதுதான்... டைனோசர் அழிவுக்கு காரணமும் இதுதான்!

'ஜுராசிக்'... இந்த வார்த்தையைக் கேட்கும் யாரும் ஒரு நொடியாவது கேட்ட பொழுதில் திரும்பிப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த அந்த வார்த்தைக்குச் சொந்தக்காரர்களான டைனோசர்கள்தான் அவர்கள் திரும்பிப் பார்ப்பதற்கான காரணம். 120 அடி உயரத்துக்கு கோரப்பற்களைக் காட்டியபடி வாயைத் திறந்துகொண்டு நிலம் அதிர நடந்து வரும் அவற்றின் பிரம்மாண்டமான தோற்றத்தை என்றென்றும் மறக்காதவாறு மனதில் பதியவைத்தவர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க். பிரமாண்டமான வேட்டையாடிகள், தாவர உண்ணிகள், பறவைகள் என்று 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்களைக் கண்முன் கொண்டு வந்தார். அவர் மூலமாக டைனோசர் இனத்தைப் பற்றியும், அவற்றின் வாழ்க்கை முறை பற்றியும் ஓரளவுக்கு அடிப்படை அறிவை அனைவரும் எய்தியிருப்போம். ஆனால் அவை வாழ்ந்த காலத்தில் இருந்த பூமியின் தட்பவெப்பநிலை பற்றியும், புவியியல் அமைப்பு பற்றியும் நமக்கு தெரியுமா?

ஜுராசிக் காலத்தில் இருந்த புவியியல் அமைப்பு அப்போதைய தாவரங்கள் அனைத்திற்கும் மிகப் பிரமாதமான விருந்தோம்பல் செய்தது. அனைத்துமே செழிப்பாகவும் பசுமையாகவும் வளர்ந்தன. புவியின் முக்கால்வாசிப் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகளாகவே இருந்தது.

ஜுராசிக் காலத்தில் நிகழ்ந்த கண்டத்தட்டு நகர்வு அக்காலத்தின் காலநிலைகளில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. மீப்பெரும் கண்டமான பேஞ்சியா (Pangea) கண்டத்தட்டு நகர்வியல் கோட்பாடு (Tectonic Plate movement) படி பல துண்டுகளாகப் பிரிந்தது. கண்டத்தட்டுகள் பிரிந்ததில் கடலுக்கடியில் எரிமலையாக்க நிகழ்வுகள் பல நடந்து, பெருங்கடல் பரப்பளவினை விரிவாக்கியது. அது மட்டுமின்றி கடலின் தரைப்பகுதியிலிருந்து பெரிய பெரிய மலைகளை உருவாக்கியது. இதனால் கடல் மட்டம் உயர்ந்து கரையோரப் பகுதிகள் பலவும் கடலுக்குள் மூழ்கியதோடு, நிலப்பகுதிக்குள் விரைந்த கடல்நீர் உள்நிலக் கடல்களையும் (Inland seas) உருவாக்கியது. நிலப்பகுதியில் பெருமளவில் உருவான இந்தப் புதிய நீர்நிலைகள் வறண்ட நிலமாக இருந்த பூமியின் பழைய நிலப்பகுதிகளை ஈரப்பதம் நிறைந்ததாக மாற்றியது. காற்றில் ஈரப்பதத்தை அதிகப்படுத்திய இந்தச் செயற்பாடுகள் அதிகமான மழைக்கு வழிவகுத்தது. தாவரங்களுக்கு உகந்த தட்பவெப்பநிலை ஏற்பட்டதால் அவற்றின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது.

மழைக்காடுகளில் தாவரங்களுக்கு உகந்த சூழல் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்தச் சூழல் எதற்கு வழிவகுக்கும்? ஆம், பல்லுயிர்த் தன்மைக்கு. அதாவது பல வகையான உயிரினங்கள் செழிப்பாக வாழ்வதற்கு ஏற்ற வாழ்வாதாரம் அங்கே கிடைக்கும். ஆச்சர்யம் என்னவென்றால் ஜுராசிக் காலத்தில் துருவங்களில் இன்றிருக்கும் பனிப்பாறைகளோ, பனிமலைகளோ எதுவும் இல்லை. புவியின் பெருவாரியான பகுதிகளில் மழைக்காடுகளே நிறைந்திருந்தன.

இந்தக் காலத்தில் தாவரங்களால் சேகரிக்கப்பட்ட கரிமங்கள் தான் இன்று நாம் நிலக்கரியாகப் பயன்படுத்துகிறோம். கடல் மட்டம் உயர்ந்தது, கரையோரப் பகுதிகளை மூழ்கடித்து ஆழமில்லா கரைக்கடல் பகுதிகளை உருவாக்கியது. இத்தகைய ஆழமற்ற கடல் பகுதிகள் பவளப் பாறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சல்லவா! அதே கதைதான் இங்கேயும். வெள்ளப்பெருக்கால் உருவான அதிகமான நீர்நிலைகள் ஈரப்பதத்தைத் தந்து தாவரங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டது என்று பார்த்தோமல்லவா? தாவர வளர்ச்சி பசுமையாக இருக்கும் இடங்களில் காற்று எப்படி இருக்கும்? ஈரப்பதமாக இருக்கும். காற்றில் தாவரங்களும் ஈரப்பதத்தை மேலும் சேர்த்தது. அது மட்டுமின்றி ஒளிச்சேர்க்கை செயல்முறையில் தாவரங்கள் வெளியேற்றும் கரிம வாயுக்களும் அதிகமாகக் கலந்தன. அவற்றைச் சமன் செய்வதற்குப் பனிப்பாறைகளோ, வறண்டப் பாலைவனங்களோ எதுவும் இல்லாததால் அனைத்துமே காற்றில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டே இருந்தது. இன்று நாம் பேசும் பசுமை இல்ல வாயுக்களின் விளைவுகள் பெரிய அளவில் புவி முழுவதும் அன்று நிகழ்ந்தது.

டைனோசர்களின் ஒட்டுமொத்த அழிவுக்குப் பல காரணங்கள் இருக்கிறது. அவற்றின் வாழ்வாதாரமாக எது அமைந்ததோ அதுவே அக்காரணங்களில் ஒன்றாகவும் அமைந்தது. எது அவர்களின் பல்லுயிர்த் தன்மைக்கு வழிவகுத்ததோ, எது அந்த பூதாகரப் பல்லிகளின் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கும், பிரம்மாண்டமான பறவைகளின் உணவுத்தேவைக்கும், பிரம்மாண்டமான நீர்வாழ் டைனோசர்களுக்கு அடைக்கலம் தந்ததோ அதே தட்பவெப்பநிலை அவற்றின் அழிவுக்கும் ஒரு காரணமாக, எமனாக வந்து நின்றது. இதுதான் இயற்கையின் நியதி. அதீதம் என்றும் ஆபத்தே. இன்று வளர்ச்சி என்ற பெயரில் செய்துகொண்டிருக்கும் செயல்களுக்கும் இது நன்றாகவே பொருந்தும். அது இயற்கை; இது செயற்கை அவ்வளவே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு