Published:Updated:

சரணாலயங்களும் பூங்காக்களும் நிஜமாகவே அழியும் விலங்குகளைக் காப்பாற்றுகின்றனவா?

சரணாலயங்களும் பூங்காக்களும் நிஜமாகவே அழியும் விலங்குகளைக் காப்பாற்றுகின்றனவா?
சரணாலயங்களும் பூங்காக்களும் நிஜமாகவே அழியும் விலங்குகளைக் காப்பாற்றுகின்றனவா?

மீப காலமாக காடழிப்பு, வாழ்விடக் குறைபாடு, அதீத வேட்டை போன்ற காரணங்களால் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இது இயற்கையின் மீது மனிதர்களால் நடத்தப்படும் வன்கொடுமையின் விளைவே தவிர வேறொன்றுமில்லை. இத்தகைய சூழலில் அழியும் நிலையிலிருக்கும் உயிர்களைப் பராமரிப்பில் வைத்து, அவற்றுக்கான இயற்கையான சூழலை உருவாக்கி இனப்பெருக்கம் செய்ய வைப்பதில் பெருமளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள் இயற்கை ஆர்வலர்களும் ஆராய்ச்சியாளர்களும். அதற்கென்று உலகளவில் நிதியுதவிகளும் குவிந்துகொண்டுதான் இருக்கின்றன. நிலைமை இப்படியிருக்க இது வேலைக்கு ஆகாது என்கிறார்கள் மற்ற சிலர். Captivity என்ற சொல்லுக்குச் சிறைப்படுத்துதல் என்றுதான் அர்த்தம். சிறைப்படுத்தி வைத்து அந்த விலங்கை இனப்பெருக்கம் செய்யச் சொன்னால் அதனால் எப்படி முடியும். குயிலைப் பிடித்து கூண்டில் அடைத்து பாடச் சொல்லும் கதையாகத்தான் இது இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

முதலில் மிருகக்காட்சி சாலைகளிலும், சரணாலயங்களிலும் விலங்குகளைப் பராமரிப்பது பற்றி நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். விலங்குகள் காட்டில் வாழ்வதற்கும், காப்பிடத்தில் வளர்வதற்கும் பெருமளவில் வித்தியாசம் இருக்கவே செய்கின்றன. காடுகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தவற்றை, பராமரிப்பிற்குள் கொண்டுவரும் போது அது வனத்தில் வாழ்ந்த வாழ்க்கைக்குச் சிறிதும் குறைவில்லாத வகையில் அதற்கான வாழ்விடம் அமைக்கப்பட வேண்டும். அது தனிமைப்பட்டு விட்டதாக உணராத வகையில் அதன் இனத்தோடு வாழ வழிவகை செய்ய வேண்டும். உணவுத் தட்டுப்பாடு இல்லாமலும், உலாவுவதற்கு ஏற்ற இட வசதியோடும் ஒரு விலங்கைப் பராமரிப்பது சாதாரண காரியமல்ல. இவை அனைத்தையும் செய்தாலும் சில விலங்குகள் மரபணு பன்மைக் குறைபாடு ( Lack of Genetic Diversity) காரணமாகவும், மற்ற சில அடிப்படை அறிவியல் காரணங்களாலும் இனப்பெருக்கம் செய்யமுடியாமல் போகிறது. உதாரணமாக ஈக்வடாரின் பிண்டா தீவைச் சேர்ந்த ஓர் ஆமை இனம் 1972-ல் அழிந்துவருவதாகக் கூறி பராமரிப்பில் எடுக்கப்பட்டது. அவை இனப்பெருக்கம் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் சாண்டா க்ரூஸ் தீவில் இருந்த காப்பகத்தில் செய்தார்கள். ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியடையவே, அந்த இனத்தின் கடைசி ஆண் ஆமையான ஜியார்ஜ் ( George) 2012-ம் ஆண்டு உயிரிழந்தது. இதேபோல் சமீபத்தில் நிகழ்ந்த ஆப்பிரிக்காவின் கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டாமிருகமான சூடானின் இறப்பு நாம் அனைவரும் அறிந்ததே. 

காப்பிடப் பராமரிப்பு மற்றும் இனப்பெருக்கத்தை எதிர்ப்பவர்கள் இவற்றை மேற்கோள் காட்டுகிறார்கள். ஆங்காங்கே இதுபோன்ற முயற்சிகளில் சில தோல்வியைத் தழுவினாலும், காப்பிடப் பராமரிப்பில் பெருமளவில் வெற்றிக் கதைகளும் உண்டு. 1982-ல் கலிஃபோர்னியாவின் காண்டோர் ( Condor) என்ற பாறு ( Vulture) இனத்தைச் சேர்ந்த பறவை, எண்ணிக்கையில் வெறும் 25 மட்டுமே இருந்தது. அதை 1987-ல் பராமரிப்பில் எடுத்த அமெரிக்க அரசு, இரண்டு காப்பகத்திற்கு பிரித்து அனுப்பிப் பராமரித்ததோடு எண்ணிக்கையை உயர்த்துவதற்கான இனப்பெருக்க முயற்சிகளை மேற்கொண்டன. அடுத்த 6 ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை உயர்வு கலிஃபோர்னியா மற்றும் அரிசோனா காடுகளில் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் அளவிற்கு அதிகரித்தது. 1982-ல் வெறும் 25 ஆக இருந்தவை 2015-ல் 400 ஆக உயர்ந்தது. கருங்கால் மரநாய் ( Black-Footed Ferret) கூட இதேபோல் காப்பிடத்தில் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது.

காப்பிடங்களில் விலங்குகளுக்குச் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றுக்குப் போதுமான சுதந்திரம் தரப்படுவதில்லை. மனிதர்களின் பார்வைக்கு அவை உள்ளாக்கப்படுகின்றன. முக்கியமாக சுற்றுலாத் தளமாக நடத்தப்படுவது கொடுமை. அங்கு வரும் மக்கள் அதை அசுத்தம் செய்வதும், அங்கு வாழும் விலங்குகளுக்குத் தன் உணவுப்பண்டங்களைக் கொடுத்து அவற்றைக் கையேந்தப் பழக்குவதும் மனிதனின் அடிமைத்தன குணத்தின் உச்சகட்டம். விலங்குகளும் நம்மைப் போல் சம உயிரி என்பதும், அவற்றையும் சுயமரியாதை அளித்து பண்போடு நடத்தவேண்டியது நமது கடமை என்பதையும் மக்களுக்குப் போதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை. நமது வீட்டிற்குள் யாராவது விசிட் அடித்து வேடிக்கை பார்த்தால் பொறுத்துக்கொள்வோமா? ஆனால் அந்த வேதனைகளைச் சகிக்கவேண்டிய கட்டாயத்திற்கு அவை தள்ளப்படுகின்றன. இதனால் அவை மனோரீதியாக மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. காட்டில் வாழும் அளவிற்கு அவற்றால் சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியோடும் வாழமுடிவதில்லை. சில காப்பிடங்கள் விலங்குகளைப் பராமரிப்பதற்குத் தரும் முக்கியத்துவத்தைவிட அவற்றை வைத்துக் காசு பார்ப்பதில் கவனமாக இருக்கின்றன.

வெப்ப இயங்கியலின் இரண்டாவது விதிப்படி 100 சதவிகித உள்ளீட்டினை நாம் கொடுத்தாலும், விளைவில் அதே அளவு வெளியீடு கிடைக்காது. உபரியாகச் சில முயற்சிகள் வீணாகத்தான் செய்யும். இயங்கியலின் அடிப்படையே இயற்கைதான். ஆகவே, இது விலங்குகளுக்காக மனிதர்கள் முன்னெடுக்கும் பராமரிப்பு முயற்சிகளுக்கும் பொருந்தும். அது மட்டுமன்றி, விலங்குகளைப் பற்றிய புரிதல் மனிதர்களுக்குக் கிடைப்பதற்கும், முன்புபோல் இல்லாமல் விலங்குநல மருத்துவர்களைக் கொண்டு அவை சரியான முறையில் கவனிக்கப்படுவதற்கும், வேட்டையாடப்படும் வன உயிர்களின் பாதுகாப்பிற்கும், மிக முக்கியமாக அழிந்துவரும் உயிரினங்களைக் காப்பாற்றுவதற்கும் காப்பிடங்கள் மற்றும் சரணாலயங்களின் தேவை அதி அவசியமானது.

நிவர்த்தி செய்ய இயலும் பிரச்னைகளைச் சரிசெய்து அவற்றை மேம்படுத்துவது மேலும் நன்மை பயக்கும். மக்களுக்கு அனைவருக்கும் பொதுவான சுற்றுலாத் தளமாக வெளிப்படுத்துவது லாப நோக்கில் நல்ல திட்டமாக இருக்கலாம். ஆனால், அவை வன உயிர்களுக்கு மோசமான விளைவுகளையே தரும். அடையார் பூங்கா ஓர் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. மக்களுக்கான சுற்றுலாத் தளமாக அறிவிக்காமல், வாரம் ஒருமுறை மாணவர்களுக்காக ஒதுக்கிவிட்டு மற்ற சமயங்களில் அவ்விடத்தின் பல்லுயிரிச் சூழலுக்கு எந்த பங்கமும் இன்றி பாதுகாத்து வருகிறார்கள் அதன் பராமரிப்பாளர்கள். இதனால் அங்கு வாழும் நூற்றுக்கணக்கான பறவை இனங்களின் வாழ்வாதாரம் காக்கப்படுகிறது. மருத்துவம், ஆராய்ச்சி தவிர்த்து வணிக நோக்கில் விலங்குகளின் வாழ்விடங்களைப் பார்க்கக் கூடாது. அது அவற்றை மனரீதியாக பாதித்து இனப்பெருக்கத்தைப் பாதிக்கும். அவை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஏற்ப காட்டின் சூழலைக் காப்பிடத்திலும் ஏற்படுத்தித் தரவேண்டும். பெரும்பாலான காப்பிடங்கள் அந்த விஷயத்தில் அக்கறை செலுத்தினாலும், இன்னும் பலவற்றில் அத்தகைய மேம்பாட்டுத் திட்டம் அமலுக்கு வரவேண்டிய தேவை இருக்கத்தான் செய்கிறது.

2002-ல் ஐக்கிய நாடுகள் சபை 1350 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை உயிரினங்களின் அழிவு விகிதம் தொடர்பான ஆராய்ச்சிக்கு முடுக்கிவிட்டது. அதன்படி ஒரு நாளைக்கு 24 வகை உயிர்கள் அழிந்து வருவதாகவும் வருடத்திற்கு 8,700 உயிரினங்கள் அழிவதாகவும் தெரியவந்துள்ளது. அது 2007க்குப் பிறகு நாளொன்றுக்கு 150 உயிரினங்களாக உயர்ந்துவிட்டது. உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனுக்கும் அதன் வாழ்க்கையை வாழ்வதற்கு உரிமை உண்டு. அதன்படி, மனிதன் தன் சக உயிரிகளைப் பாதுகாக்க முயற்சிகளை எடுப்பது நல்லதொரு தொடக்கமே. அழிவின் விகிதம் அதிகமாக இருக்கும் இந்த நிலையில் எதுவும் செய்யாதிருப்பதைவிட பாதுகாக்க நம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்வது, பின்வரும் காலங்களில் விலங்குகளின் பாதுகாப்பை ஓரளவிற்காவது உறுதிசெய்யும்.

முன்பொரு நாள் ஒருவர் சொன்ன விஷயம் நினைவுக்கு வருகிறது. ``மனிதன் தன் உடலளவில் பரிணாம வளர்ச்சியை நிறுத்திக் கொண்டிருந்தாலும், அறிவில் அவன் தனது பரிணாம வளர்ச்சியை நிறுத்துவதாகத் தெரியவில்லை. அந்த வளர்ச்சியோடு சுயநலமும் சேர்ந்தே வளர்ந்துள்ளது. அதனால்தான் சக விலங்குகளுக்கும் உரித்தான இந்த பூமியை தனக்கானதாக மட்டுமே மாற்ற நினைக்கிறான். ஆனால், தானும் ஒரு விலங்குதான் என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறான்".

உண்மைதானே?