Published:Updated:

மக்களை வீழ்த்தி தங்கள் நிலத்தை மீட்ட பென்குயின்கள்... இது ஆஸ்திரேலியாவின் ஃபிலிப் தீவின் கதை!

மக்களை வீழ்த்தி தங்கள் நிலத்தை மீட்ட பென்குயின்கள்... இது ஆஸ்திரேலியாவின் ஃபிலிப் தீவின் கதை!
மக்களை வீழ்த்தி தங்கள் நிலத்தை மீட்ட பென்குயின்கள்... இது ஆஸ்திரேலியாவின் ஃபிலிப் தீவின் கதை!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வன விலங்கு பாதுகாப்பு குறித்துக் கடந்த 1980-ம் ஆண்டு லிட்டில் பென்குயின் இனத்திற்காக ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று வரை, இயற்கைப் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

ன விலங்குகளைப் பாதுகாக்க உலக அளவில் அரசுகள் அவ்வப்போது ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும். அது ஒரு சில மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் அமைந்தாலும், அது அந்தப் பகுதியில் மட்டுமே காணப்படும் அரிய வகை உயிரினங்களைக் காக்கும் முயற்சி மட்டுமே. அப்படிச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வன விலங்கு பாதுகாப்பு குறித்துக் கடந்த 1980-ம் ஆண்டு லிட்டில் பென்குயின் இனத்திற்காக ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று வரை, இயற்கைப் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

Photo Courtesy: Chensiyuan

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இருக்கிறது ஃபிலிப் தீவு. இது அந்த மாகாணத்தின் தலைநகரமும் புகழ்பெற்ற நகரமுமான மெல்பர்ன் நகருக்குத் தென் கிழக்கில் 225 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மோட்டார் வாகன ஆர்வலர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் இந்தத் தீவில் நடக்கும் மற்றொரு பிரசித்தி பெற்ற நிகழ்வு லிட்டில் பென்குயின்களின் அணிவகுப்பு. இந்தத் தீவின் தென் முனையில், சம்மர்லேண்ட் கடற்கரையில் நடக்கும் அந்த அரிய நிகழ்வு பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் அங்கே சுற்றுலாப் பயணிகள் காத்திருக்க உலகின் மிகப்பெரிய லிட்டில் பென்குயின்களின் கூட்டமாகக் கருதப்படும் அந்தக் கூட்டம் ஆடி அசைந்து நகர்ந்து செல்லும். பின்பு அவை அங்கிருக்கும் சம்மர்லேண்ட் தீபகற்ப நிலத்துக்குச் சென்று முட்டைகள் இடுவது, வங்கு பறிப்பது, குட்டிகளுக்கு உணவு கொடுப்பது, சிறகுதிர்ப்பது போன்ற பணிகளைச் செய்யும். ஒரு காலத்தில் இந்தத் தீபகற்ப நிலத்தை பென்குயின்கள் மக்களோடு பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வந்தன. ஆனால், இப்போது இல்லை. இப்போது அது பென்குயின்களுக்கு மட்டுமே சொந்தமான இடம்.

Photo Courtesy: Internet Archive Book Images

1920-களில் அந்த நிலத்தை 900 கூறுகளாகப் பிரித்து சம்மர்லேண்ட் எஸ்டேட் என்று பெயர் வைத்தனர். 1940-களில் மெல்பர்ன் நகரைச் சேர்ந்த சில குடும்பங்கள் அந்தக் கூறுகளில் சிலவற்றை வாங்கி விடுமுறையைக் கழிக்க ஏதுவாக வீடுகளைக் கட்டி கொண்டனர். இரவுப் பொழுதை அங்கே கழிப்பது அலாதியான பொழுதுபோக்காக இருந்தது என்கின்றனர் சிறுவர்களாக இருக்கும் போது அங்குச் சென்று தங்கி வந்தவர்கள். சில்லென்ற காற்றுக்கு நடுவே, பென்குயின்களின் சத்தம் கழுதை எழுப்பும் ஒலியைப் போல இருக்கும் என்றும் எந்த மனக்கவலை இருந்தாலும் அதை இந்த இடம் சரி செய்து விடும் என்றும் சிலாகிக்கின்றனர். பென்குயின்கள் சுதந்திரமாக எஸ்டேட் முழுவதும் வலம் வந்ததாகவும், சில சமயங்களில் கட்டப்பட்ட மர வீட்டின் அடியிலும் முட்டைகள் இட்டதாகவும் கூறப்படுகிறது. பிறகுதான் பிரச்னையே ஆரம்பமானது.

1980-களில் சம்மர்லேண்ட் எஸ்டேட்டில் 177 வீடுகள் இருந்தன. மக்கள் தொகை அந்த நிலத்தில் பெருகப் பெருக பென்குயின்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதை பென்குயின்கள் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த குழு கண்டறிந்தது. தற்போது ஃபிலிப் தீவின் இயற்கைப் பூங்காவின் இயக்குநராக இருக்கும் முனைவர். பீட்டர் டேன் என்பவர்தான் அப்போது அந்தக் குழுவின் தலைவர். பென்குயின்கள் அவ்வப்போது நரிகள் மற்றும் நாய்களால் கொல்லப்படுவது நடக்கும் என்றாலும், பல பென்குயின்கள் சாலை விபத்துகளாலும், சம்மர்லேண்ட் எஸ்டேட்டின் மக்கள் தொகை பெருக்கத்தாலும் வாழ்விடம் இழந்து இறக்கின்றன என்று கண்டறிந்தார். இது அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. பென்குயின்களின் நிலம் சுற்றுலாத் தளமாகிப் போனதும், எஸ்டேட் ஆக்கப்பட்டு விற்கப்பட்டதும் முதன்மையான காரணங்களாகப் பார்க்கப்பட்டன.

Photo Courtesy: Phillipislandtourism

அதன் பிறகு 1985-ம் ஆண்டு ஜூலை மாதம் அந்த மாநில அரசு, அங்கிருக்கும் சுற்றுலாத் துறை, உள்ளூர் வாசிகள் அனைவரின் எதிர்ப்பையும் மீறி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு முடிவை எடுத்தது. எஸ்டேட்டுக்காகவும், சுற்றுலாத் துறைக்காகவும் கொடுக்கப்பட்ட நிலத்தை அரசே திரும்ப எடுத்துக் கொள்வதாகவும், பென்குயின்களுக்காக இது வனவிலங்கு சரணாலயமாக மாற்றப்படுவதாகவும் அறிவித்தது. இது மக்கள் மனதில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது நடந்தால், ஃபிலிப் தீவில் நிரந்தரமாக மனித இனம் இருக்க முடியாத நிலை ஏற்படும். அப்போதைய அரசு அங்கிருந்த மக்களுக்கு இடத்தை காலி செய்து ஒப்படைக்க 15 வருடங்கள் காலக்கெடு நிர்ணயித்தது. அதற்குரிய பணமும் கொடுப்பதாக அறிவித்தது. இருந்தும் மக்களை அங்கிருந்து முழுவதுமாக அகற்ற கூடுதலாக 10 ஆண்டுகள் ஆகின. அதாவது 2010-யின் போதுதான் அனைவரும் வெளியேறினர், காரணம், அப்போது அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி.

Photo Courtesy: Phillipislandtourism

இந்தச் சரித்திர நிகழ்வு குறித்து முனைவர் பீட்டர் டேன்,

``எனக்குத் தெரிந்து வனவிலங்கு பாதுகாப்பிற்காக ஓர் அரசு, இவ்வளவு பெரிய இடத்தை விலை கொடுத்து வாங்கியது இதுவே முதன்முறை. இதில் பென்குயின்கள் வென்றிருக்கின்றன. ஆனால், இதில் விக்டோரியா மக்களும் வென்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அதை அவர்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்" என்றார்.

ஆம், அப்போதைய நிலையில் அது ஒரு கடினமான முடிவாகத் தோன்றினாலும் இப்போது அழியாமல் காக்கப்பட்டிருக்கும் லிட்டில் பென்குயின்களைக் கண்டு அவர்கள் நிச்சயம் மகிழ்ச்சிதான் கொள்கிறார்கள். அது மட்டுமன்றி, இந்தப் பென்குயின் நிலம் மிகப்பெரிய சுற்றுலாத் தளமாகிப் போனதால் ஃபிலிப் தீவில் பார்வையாளர்கள் குவிகிறார்கள். இதனால் ஆண்டுக்கு 498 மில்லியன் டாலர்கள் அரசுக்கு வருமானமாக வருகிறது. இந்தியாவில் இப்போது இப்படி ஏதேனும் செய்வார்களா?

அடுத்த கட்டுரைக்கு