Published:Updated:

காசநோய் முதல் கருணைக்கொலை வரை... யானை ராஜேஸ்வரிக்கு நடந்தது என்ன?

காசநோய் முதல் கருணைக்கொலை வரை... யானை ராஜேஸ்வரிக்கு நடந்தது என்ன?
காசநோய் முதல் கருணைக்கொலை வரை... யானை ராஜேஸ்வரிக்கு நடந்தது என்ன?

பிரசித்தி பெற்ற கோயில்களில் யானைகள் இருப்பதை நாம் பார்த்திருக்கலாம். கோயிலுக்கு ஒரு கம்பீரத்தைத் தருவதுடன், திருவிழாக் காலங்களில் இறைவனைச் சுமந்துசெல்லும் வாகனமாகவும் அவை இருந்தன. காலப்போக்கில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் காட்சிப் பொருளாக மாறிவிட்டன. அதைவிடக் கொடுமை... கோயில் யானைகளை வீதிக்கு அழைத்து வந்து பிச்சையெடுக்கவைக்கும் அவலமும் நடந்தது. பின்னர் அப்படிச் செய்வது தடை செய்யப்பட்டுவிட்டது. அவற்றின் நலனுக்காக ஆண்டுதோறும் புத்துணர்ச்சி முகாம்களும் தமிழக அரசால் நடத்தப்பட்டுவருகிறது. ஆலயங்களிலிருக்கும் யானைகளைப் பராமரிக்க அரசின் சிறப்பு கால்நடைத்துறை மருத்துவர்கள் குழு இருந்தாலும், பல ஆலயங்களில் அவற்றின் நிலைமை கவலைக்கிடமாகவே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் சேலம் சுகவனேஸ்வரர் கோயிலிலிருக்கும் `ராஜேஸ்வரி’ யானை. 

சுகபிரம்ம ரிஷியால் வழிபடப்பட்ட சுகவனேஸ்வர பெருமான் ஆலயம் சேலம் நகரின் முக்கியப் பகுதியில் அமைந்திருக்கிறது. 13-ம் நூற்றாண்டில் சுந்தரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இந்த ஆலயம் தமிழகத்தின் சிறப்பான கோயில்களில் ஒன்று. இந்த ஆலயத்தின் பெண் யானை ராஜேஸ்வரி. 40 வயதுடைய ராஜேஸ்வரி, காசநோயால் பாதிக்கப்பட்டது. அதற்குரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம், நரம்பு பாதிப்பால் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகிவிட்டது.  எழுந்து நிற்கக்கூட இயலாதநிலையில் யானையின் உடல்நிலை மோசமானது. படுத்தபடியே இருந்ததால் உடலெங்கும் புண்கள் வேறு. அதற்கும் சிகிச்சையளிக்கப்பட்டது. 

இந்தநிலையில், ஒரு மாதத்துக்கும் மேலாக அவஸ்தைப்பட்டுவரும் ராஜேஸ்வரி யானையை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கும்படி இயற்கை நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்ட உயர் நீதிமன்றம், `48 மணி நேரத்துக்குள் அந்த யானையைப் பரிசோதித்து, முழுமையான உடல்நிலை விவரங்கள் கொண்ட அறிக்கையை அரசுக்குத் தாக்கல் செய்ய வேண்டும்' என்று  உத்தரவிட்டது. `அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சட்ட விதிகளுக்கு உட்பட்டு கருணைக்கொலை செய்யும் நடைமுறைகளைப் பின்பற்றலாம்’ என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.

சுகவனேஸ்வரர் கோயில் பக்தர்கள், யானையைக் கருணைக்கொலை செய்யும் முடிவை அதிர்ச்சியோடு எதிர்கொண்டார்கள். முறையாக கவனிக்கப்படாத காரணத்தால்தான் இந்த நிலைமை வந்தது என்றும், பொக்லைன் யந்திரத்தின் மூலம் எழுப்ப முயன்றதால்தான்  அதற்கு அதிகக் காயங்கள் உருவானதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், கோயில் பணியை மேற்கொண்ட ராஜேஸ்வரி யானையை இயற்கையாகவே சாகவிட வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அதற்காகச் சிறப்பு வழிபாடுகளையும் மேற்கொண்டார்கள். ஆனால், வேறொரு தரப்பு மக்களோ, இந்த கருணைக்கொலையை வரவேற்றிருக்கிறார்கள். `பக்கவாதம், உடலெங்கும் புண்கள்... என அவஸ்தைப்படும் ராஜேஸ்வரி யானை நிம்மதியாக போய்ச் சேர வேண்டும். இனியும் அது அவஸ்தைப்படுவதைக் காணச் சகிக்கவில்லை’ என்றும், `இதனால் இந்த முடிவைக் கண்ணீரோடு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்’ என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அரசுத் தரப்பில், `இதுவரை அளிக்கப்பட்ட எந்தச் சிகிச்சையும் பலனளிக்கவில்லை’ என்று கைவிரித்துவிட்டார்கள். கோரிமேட்டில் உள்ள மையத்தில் பராமரிக்கப்பட்டுவரும் ராஜேஸ்வரி யானைக்கு தற்போது குளூக்கோஸ் மட்டுமே அளிக்கப்படுகிறது. 

இந்தக் கருணைக்கொலை குறித்து மேலும் தகவலறிய, விலங்குகள் நல ஆர்வலரும், `பியூப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா’ (People for Cattle in India (PFCI) ) அமைப்பின் தலைவருமான அருண் பிரசன்னாவிடம் பேசினோம். ``பெரிய மிருகங்களைப் பாதுகாக்கும் விழிப்புஉணர்வே தமிழ்நாட்டில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிறிய விலங்குகளுக்கு அடிபட்டு நோயுற்றால், மிக எளிதாகச் சிகிச்சை செய்து காப்பாற்றிவிடலாம். ஆனால், யானை போன்ற பெரிய விலங்குகளுக்குச் சிகிச்சை செய்யும் முறை நம் நாட்டில் இன்னும் நவீனப்படுத்தப்படவில்லை. சிகிச்சைக்கான செலவும் அதிகம் என்பதால் தயங்குகிறோம். பெரிய விலங்குகளுக்கு அடிபட்டால், அவற்றால் எழுந்திருக்கக்கூட முடியாது. படுத்தபடியே இருப்பதுடன், சாப்பிடவும் மறுத்துவிடும்.

போதிய விழிப்புஉணர்வு இல்லாத கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்படும்போது, எவ்வளவு மருந்து கொடுக்க வேண்டும் என்பது தெரியாமல், ஓவர் டோஸேஜ் அல்லது குறைவான அளவுக்கு மருந்து கொடுத்துவிடுகிறார்கள். இதனால் விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. இப்படித்தான் `மதகிரி மகாராஜா’ என்ற யானைக்கு  அதிக மருந்து செலுத்தப்பட்டதால், தலையை முட்டிக்கொண்டு இறந்து போனது. 

நவீன சிகிச்சை முறை எதுவும் இல்லாத இந்த நிலையில், யானையின் கருணைக்கொலையை ஒப்புக்கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. எல்லா நிலைமைகளையும் ஆராய்ந்துதான் சென்னை நீதிமன்றத்தின் நீதியரசரும் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். வரும் காலத்தில் பெரிய விலங்குகளுக்கான சரியான சிகிச்சை முறைகளை, கால்நடை மருத்துவத்தில் நன்றாகத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் குழுவைக் கொண்டு உண்டாக்க வேண்டும். அதற்கான நிதியை அரசு ஒதுக்க வேண்டும்'' என்றார்.

கணபதியின் அம்சமாகப் போற்றப்படவேண்டிய யானைகள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். கோயிலோ அல்லது காடோ யானைகளை அழித்துவிட்டால், வருங்காலக் குழந்தைகளுக்கு யானை என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விடும்!