Published:Updated:

”அது என்ன தெரிஞ்சா காயப்படுத்துது... தெரியாமதானே!” - முதலைகள் பராமரிப்பாளரின் த்ரில் அனுபவங்கள்

நடுப்பகுதியில் சுத்தம் செய்வதற்காக அனைத்து முதலைகளையும் தனது நீண்ட தடியால் ஓரங்களுக்கு நகர்த்திவிட்டுத் தன் வேலையைச் செய்துகொண்டு இருந்தபோது குளத்திற்கு மேலே இருந்த மரத்தில் வந்தமர்ந்த ஒரு பறவையால் கிளை ஒடிந்து குளத்திற்குள் அவரருகே விழுந்துள்ளது. உணவு போடுவதாக நினைத்து அனைத்து முதலைகளும் சத்தம் வந்த திசையில் அவரை நோக்கி வரத்தொடங்கி விட்டன

”அது என்ன தெரிஞ்சா காயப்படுத்துது... தெரியாமதானே!” - முதலைகள் பராமரிப்பாளரின் த்ரில் அனுபவங்கள்
”அது என்ன தெரிஞ்சா காயப்படுத்துது... தெரியாமதானே!” - முதலைகள் பராமரிப்பாளரின் த்ரில் அனுபவங்கள்

நிலத்தில் அகல வாயைத்  திறந்துகொண்டு படுத்திருக்கின்றன அந்த முதலைகள். பார்ப்பதற்கு ஒரு ரத்தவெறி பிடித்த மாமிச அரக்கனாகவே தோன்றுகிறது. உண்மையில் அவை தனது வாழ்விடத்தின் மற்ற உயிர்களோடு ஒன்றி வாழ விரும்புகின்றன. பல்வேறு வகை முதலைகளுக்கெனப் பிரத்யேகமாக இருக்கும் குளங்களில் வாழும் ஆமைகளும், அந்தக் குளங்களுக்கு அருகே இருக்கும் புதர்களுக்குள் ஆண்டுதோறும் வந்து இனப்பெருக்கம் செய்யும் கானாங்கோழிகளும் அவற்றைப் பறை சாற்றுகின்றன.

"முதலைகள் மிகவும் ஆபத்தானது தான். ஆனால் பசி மற்றும் தனக்குத் தொல்லை தரப்படும் சமயங்களைத் தவிர மற்ற நேரங்களில் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு எந்தத் தீங்கையும் அவை தருவதில்லை" என்கிறார் முப்பது ஆண்டுகளாக சென்னை முதலைகள் பண்ணையில் ஊர்வன விலங்குகள் பராமரிப்பாளராக இருக்கும் திரு. கங்காதுரை. கரியால் முதலைகளுக்கான குளத்தைத் தூர்வாரிச் சுத்தம் செய்துகொண்டு இருந்தவர் அவரது வேலைப்பளுவுக்கு மத்தியிலும் கூடத் தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ள முகம் சுளிக்காமல் ஒப்புக்கொண்டார்.

"எனக்கு இருபத்தோரு வயது இருக்கும். இங்க விலங்குகளப் பராமரிக்க ஆள் வேணும்னு கேள்விப்பட்டு வேலை கேட்டு வந்தேன். அப்போ இருந்த துணை இயக்குனர் முதலைகள எல்லாம் புடிக்கணும் உன்னால முடியுமான்னு கேட்டாரு. அதென்னங்க பிரமாதம். முடியாமப் போக என்ன இருக்கு இதுல. பிடிச்சுருலாம்ன்னு சொன்னேன். என் தைரியத்தைப் பார்த்து வேலைக்குச் சேர்த்துட்டார். கொஞ்ச நாள் சின்ன சின்ன வேலை செஞ்சிட்டு இருந்தேன். ஒரு நாள் ராமுலஸ் விடேகர் சார் வந்தாரு. முதலையப் புடிக்கிறியான்னு கேட்டாரு. கயித்துல சுருக்குப் போட்டு குறிபார்த்து முதலை வாயில மாட்டி வாய அமுத்தி உட்கார்ந்து புடிச்சி காட்டுனாரு. ஒரு தடவ தான் செஞ்சு காட்டினார். அப்புறம் பழகிட்டேன். இப்போ இந்தப் பூங்காவுக்கு வந்து போன, வாழுற முதலைகள் ஒன்னுல கூட என் கைரேகை இல்லாம இருக்காது" என்கிறார் பெருமிதத்துடன்.

21 வயதில் அங்கு வேலைக்குச் சேர்ந்தவர் கடந்த முப்பது வருடங்களாக அங்கேயே முதலைகள் மற்றும் மற்ற ஊர்வனப் பிராணிகளின் பராமரிப்பாளராக இருந்து வருகிறார். தற்போது அந்தப் பகுதியின் தலைமைப் பராமரிப்பாளராக பணிபுரியும், இல்லை வாழ்ந்து வரும் அவர் பெரும்பாலான சமயங்களில் அங்கேயே தங்கியும் விடுகிறார். அருகிலேயே குடிவந்துவிட்டதால் உணவு நேராகப் பண்ணைக்கே வந்துவிடுகிறது.

அவருக்கு உணவு கொண்டு வந்த அவரது மகன் கௌரி சங்கரும் காலப்போக்கில் முதலைகள் மீதும் அங்கு வாழும் மற்ற விலங்குகள் மீதும் பற்றுகொண்டு தந்தையோடு சேர்ந்து அவற்ரைப் பராமரிக்கக் கற்றுக்கொண்டார். தற்போது அவரும் அங்கு துணை விலங்குகள் பராமரிப்பாளராகப் பணியில் இருக்கிறார். தந்தை மகன் இருவருமே அங்கு வாழும் முதலைகள் மீது கொண்டுள்ள பற்று சில சமயங்களில் அவற்றை இடம் மாற்றும்போது வைத்தியம் செய்யும், உணவு கொடுக்கும் சமயங்களில் அவற்றால் ஏற்படும் சில காயங்களைக் கூட விரும்பியே ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். "அது என்னங்க பெரிய காயம். அது என்ன தெரிஞ்சா காயப்படுத்திப் பாக்குது. தெரியாம தானே" என்கிறார் சிரித்துக்கொண்டே. அவற்றின் மீது அவர் கொண்டுள்ள அன்பிற்கு முன் அந்தக் காயங்கள் ஒன்றுமில்லை என்பதைச் சொல்லாமல் உணர்த்துகிறது அவருடைய அந்தப் புன்சிரிப்பு.

இப்படித் தான் ஒருமுறை கெய்மன் முதலைகள் வாழும் குளத்தில் இருந்த அழுக்குகளைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். நடுப்பகுதியில் சுத்தம் செய்வதற்காக அனைத்து முதலைகளையும் தனது நீண்ட தடியால் ஓரங்களுக்கு நகர்த்திவிட்டுத் தன் வேலையைச் செய்துகொண்டு இருந்தபோது குளத்திற்கு மேலே இருந்த மரத்தில் வந்தமர்ந்த ஒரு பறவையால் கிளை ஒடிந்து குளத்திற்குள் அவரருகே விழுந்துள்ளது. உணவு போடுவதாக நினைத்து அனைத்து முதலைகளும் சத்தம் வந்த திசையில் அவரை நோக்கி வரத்தொடங்கி விட்டன. தனது தடியை வைத்து ஒற்றை ஆளாகச் சமாளித்து ஒன்றிரண்டு சிறு காயங்களோடு வெளியேறி இருக்கிறார். "கையில் தடி இல்லாமல் குளத்துல எப்பவும் இறங்கவே கூடாது. அதே நேரம் தடி இருக்குனு இஷ்டத்துக்கு அதுங்கள அடிக்கவும் கூடாது. சும்மா மேலோட்டமா தடியால அவங்கள லேசாத் தட்டி ஒதுக்கி விட்டாலே போதும். எந்த பக்கம் போகுமுன்னு எங்க அனுபவத்துல ஒரு ஊகம் இருக்கும். அப்படித் தட்டிக்கொடுத்து அதுக்கு எதிர்ப்பக்கமா நின்னுக்குவோம்" என்றவர் முகத்தில் தனது பணியைப் பற்றிய விவரங்களைப் பேசுவதில் கூட ஒரு குதூகலம் தெரிந்தது.

இன்று ஐம்பது வயதைத் தாண்டியிருந்தாலும் மனதில் சிறிதும் அச்சமின்றி உடலில் சிறிதும் சோம்பலின்றி முதலைகளைப் பராமரிப்பதற்குத் தானே இறங்கி வேலை செய்யும் அவரது துடிப்பு அதிசயமாக இருக்கிறது. வேறு எந்தப் பணியிலும் இல்லாத வகையில் விலங்குகளோடும் இயற்கையோடும் இயைந்து பணிபுரியும் யாருக்குமே வயது ஒரு பொருட்டாக இருந்ததில்லை. எந்த வயதிலும் அத்தகையவர்கள் அதே குதூகலத்தோடும் உத்வேகத்தோடும் பணியாற்றுவதை நாம் பல சமயங்களில் சந்திக்க முடிகிறது. சென்ற வருடம் தனது சேவைகளுக்காகப் பத்மஶ்ரீ விருதுபெற்ற திரு.ராமுலஸ் விடேகர் ஆகச் சிறந்த உதாரணம். அவரால் பயிற்றுவிக்கப்பட்டு இன்று சென்னை முதலைகள் பண்ணையின் தலைமை ஊர்வன பராமரிப்பாளராக இருக்கும் திரு. கங்காதுரை அவர்களும் அதில் சளைத்தவரில்லை.