Published:Updated:

ஒரு கிளி, கொரில்லா, யானை... விலங்குகள் நிகழ்த்திய நம்ப முடியாத ஆச்சர்யங்கள்!

ஒரு கிளி, கொரில்லா, யானை... விலங்குகள் நிகழ்த்திய நம்ப முடியாத ஆச்சர்யங்கள்!
News
ஒரு கிளி, கொரில்லா, யானை... விலங்குகள் நிகழ்த்திய நம்ப முடியாத ஆச்சர்யங்கள்!

மேகன் ஒரு நொடி யோசித்தார். வில்லி ``மம்மா" என்று சொல்வதுண்டு. ஆனால், ``பேபி" என்று இப்போதுதான் முதன்முறையாகச் சொல்கிறது. அவசர அவசரமாக வெளியே வந்தார். ஒரு நொடி அதிர்ச்சியடைந்துவிட்டார்.

சம்பவம் 1:

அமெரிக்காவின் டென்வர் நகரம். அங்கிருந்த ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் மேகன் ஹோவர்டு (Maegan Howard), சமந்தா கூஸ்க் (Samantha Kuusk) ஆகியோர் குடியிருந்தனர். சமந்தா தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார். சமந்தாவுக்கு ஆறுதலாக அவருடைய தோழி மேகன் உடனிருந்தார். சமந்தாவின் பெண் குழந்தை ஹான்னாவுக்கு (Hannah) அப்போது இரண்டு வயது. 

சமந்தா காலை நேரத்தில் வேலைக்குக் கிளம்பிவிட, மேகன்தான் அவர் திரும்பும் வரை ஹான்னாவைப் பார்த்துக் கொள்வார். ஹான்னா கொஞ்சம் துடுக்கானவள். சேட்டை கொஞ்சம் அதிகம்தான். ஒரு சில நிமிடங்கள் அவளைக் கவனிக்காமல் விட்டாலும் கூட ஏதோ ஒரு பிரச்னையை ஏற்படுத்தி விடுவாள். பாட்டில் தண்ணீரைக் கீழே கொட்டிவிடுவது, கிளியைக் கூண்டிலிருந்து திறந்துவிட்டு விடுவது, டிவி ரிமோட்டை உடைத்துத் தள்ளுவது என அவள் சேட்டைகள் தொடர்ந்துகொண்டேயிருக்கும். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சமந்தாவிற்கு அவரின் அப்பா ஒரு கிளியைப் பரிசாக அளித்திருந்தார். அது குவாக்கர் (Quaker) எனும் இனத்தைச் சேர்ந்த கிளி. அது சில வார்த்தைகளை அவ்வளவு அழகாக உச்சரிக்கும். ஒரு பாடலையும் கூட மிமிக்ரி செய்யும். அந்தக் கிளிக்கு ``வில்லி" (Willie) எனப் பெயரிட்டிருந்தார் சமந்தா. 

ஒரு நாள் காலை சமந்தா வேலைக்குக் கிளம்பிவிடுகிறார். மேகன், ஹான்னாவுக்கான உணவைத் தயார் செய்து கொண்டிருந்தார். ஹான்னா ஹாலில் உட்கார்ந்து கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்தாள். வில்லி தன் கூண்டிலிருந்த பழத்தைக் கொறித்துக் கொண்டிருந்தது. 

மேகனுக்கு அவசரமாக பாத்ரூமை உபயோகிக்க வேண்டிய கட்டாயம். அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்ததை, சிம்மில் வைத்து விட்டு பாத்ரூமிற்குப் போனார் மேகன். சரியாக முப்பது நொடிகள்தாம் ஆகியிருக்கும். அதற்குள் வில்லி கத்த ஆரம்பித்துவிட்டது. 

``மம்மா பேபி..." ``மம்மா...பேபி..." என்று பெரும் குரலெடுத்துக் கத்தியது. 

மேகன் ஒரு நொடி யோசித்தார். வில்லி ``மம்மா" என்று சொல்வதுண்டு. ஆனால், ``பேபி" என்று இப்போதுதான் முதன்முறையாகச் சொல்கிறது. அவசர அவசரமாக வெளியே வந்தார். ஒரு நொடி அதிர்ச்சியடைந்துவிட்டார். ஹான்னா, அடுப்புக்கு அருகில் நெருங்கிவிட்டிருந்தாள். அவளின் கைகள் சூடாக இருக்கும் அந்தப் பாத்திரத்தை இன்னும் சில நொடிகளில் தொட்டுவிடும். அது தொடும் நொடி, அந்தச் சூடான பாத்திரம் அப்படியே அவள் மீது கவிழ்ந்து, அவளின் மிருதுவான மேனியைப் பொசுக்கிவிடும். 

``வில்லி" (Willie)

அதுவரை கத்திக்கொண்டிருந்த வில்லி...படபடவென சிறகுகளை அடித்து ஹான்னாவை நோக்கி பறந்தது. மேகனுவும் வேகமாக ஓடினார். வில்லி ஹான்னாவிடம் பறந்து அவளை இடைமறித்து ஒரு சில நொடிகள் தாமதிப்படுத்தியது. அதற்குள், மேகன் ஓடிவந்து ஹான்னாவைத் தூக்கிவிட்டார். 

மாலை வீடு திரும்பிய சமந்தா விஷயத்தைக் கேள்விப்பட்டு மேகனுக்கு நன்றி சொன்னார். மேகனோ வில்லியைக் கை காட்டினார். வில்லியைக் கையிலெடுத்து முத்தமிட்டு நன்றி சொன்னார் சமந்தா... பதிலுக்கு ``தேங்க் யூ" என்று சொன்னது வில்லி. 

சம்பவம் 2:

கோடைக்காலம். மதிய உணவு முடிந்திருந்த நேரம். சிகாகோவிலிருக்கும் ``ப்ரூக்ஃபீல்ட் ஜூ" (Brookfield Zoo). அந்தப் பொடியன் அப்படி ஒரு காரியத்தைச் செய்வான் என்று அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. கொரில்லாக்கள் நிறைந்திருந்த கூண்டு. பலரும் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பொடியன் திடீரென அந்தத் தடுப்பு வேலியின் மீது ஏறினான். ஒரு நொடியில் நிலை தடுமாறி கொரில்லா கூண்டிற்குள் விழுந்துவிட்டான். விழுந்தவன் அப்படியே மயங்கிவிட்டான். 

சுற்றியிருந்தவர்கள் அனைவரும் பதறிப் போய் கூச்சலிடத் தொடங்கிவிட்டார்கள். பூங்காவின் காவலர் க்ரெய்க் உடனடியாக அங்கு ஓடி வந்தார். அபாயத்திற்கான ``சிக்னல் 13" யைக் கொடுத்தார். பணியாளர்கள் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தார்கள். கூண்டுக்குள் இருந்த பிந்தி ஜூவா (Binti Jua) என்ற அந்தக் கொரில்லா மெதுவாக அந்தப் பொடியனை நெருங்கியது. அவன் மயக்க நிலையில் இருந்தான். எல்லோரும் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெளியிலிருந்தவர்கள் போட்ட கூச்சலில், கூண்டிலிருந்த மேலும் பல கொரில்லாக்களும் அந்தச் சிறுவனை நெருங்கின. க்ரெய்க் அவசர அவசரமாகத் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தார். முதலில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, நெருங்கி வரும் கொரில்லாக்களைத் தடுத்து நிறுத்த முடிவு செய்தார். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 

பிந்தி ஜூவா (Binti Jua)

ஆனால், அதற்கான அவசியம் ஏற்படவில்லை. பிந்தி, பின்னால் வந்த பிற கொரில்லாக்களைத் தடுத்தது. அவற்றோடு குரல் உயர்த்தி சண்டையிட்டது. அந்தச் சிறுவனை குழந்தையைப் போல் தூக்கிக் கொண்டு, தடுப்பு வேலியின் அருகே வந்தது. க்ரெய்க் உற்று நோக்கியது. ஏதோ சமிக்ஞை செய்தது. க்ரெய்க் அதனருகே சென்றார். அந்தச் சிறுவனை க்ரெய்கிடம் கொடுத்துவிட்டு மீண்டும் கூண்டிற்குள் சென்றது. அங்கிருந்த மற்ற கொரில்லாக்களையும் கூட்டிக் கொண்டு கூண்டுக்குள் திரும்பச் சென்றது. 
மயக்கமடைந்திருந்த சிறுவனுக்கு முதலுதவி செய்யப்பட்டது. அவன் காப்பாற்றப்பட்டான்.  

சம்பவம் 3:

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் ஒல்காரா கிராமம். மாலை நேரம். லலிதா தன் வீட்டை விட்டு சற்று தள்ளியிருக்கும் கடைக்குச் சென்றிருந்தார். வீட்டில் அவரின் பெண் குழந்தை பாசந்தி மட்டும் தனியே தூங்கிக் கொண்டிருந்தார். அது மலை கிராமம். சாப்பாடு யானை வந்துவிட்டது. அதுவும் கொம்பு வைத்த ஒற்றை யானை. 

உணவுக்காக லலிதாவின் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தது. ஒரு கட்டத்தில் அந்த ஓட்டு வீட்டை தன் தும்பிக்கையால் தகர்க்க ஆரம்பித்தது. ஓடுகளை உடைத்தது. சுவற்றையும் உடைக்கத் தொடங்கியிருந்தது. தூக்கத்திலிருந்த பாசந்தி அழத் தொடங்கினாள். அவளின் அழுகைச் சத்தம் யானைக்குக் கேட்டது. சுவற்றை இடிப்பதை நிறுத்தியது. குழந்தையைப் பார்த்ததும், அதைச் சுற்றி கிடந்த உடைந்த கற்களை அப்புறப்படுத்தியது. குழந்தை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தது. அதற்குள் ஊர்க்காரர்களும் கூடிவிட்டார்கள். யானையை எப்படி விரட்டுவது என்று அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த யானையோ குழந்தையைச் சுற்றியிருந்த கற்களை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் அமைதியாகக் காட்டுக்குள் சென்றுவிட்டது. 

``Unlikely Heroes"  என்ற புத்தகத்தில் உலகம் முழுக்க மிருகங்கள் மனிதர்களுக்குச் செய்த சில ஆச்சர்யமான சம்பவங்களைத் தொகுத்திருக்கிறார் ஜெனிஃபர் ஹோலந்து. அதில் கூறப்பட்டிருக்கும் 37 சம்பவங்களிலிருந்து தான் மேற்கூறிய மூன்று சம்பவங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 

``மிருகங்கள் பல சமயங்களில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன. இது போன்ற அபூர்வமான, ஆச்சர்யமான சம்பவங்களை நிகழ்த்திவிட்டு மிக இயல்பாகவே அவை இருக்கின்றன. நாம் ஓர் அளப்பரிய சாதனையைச் செய்துவிட்டோம். நமக்குப் பல விருதுகள் கிடைக்கும். அங்கீகாரம் கிடைக்கும் என்பது போன்ற எண்ணங்கள் எல்லாம் இல்லை அவற்றுக்கு...இந்தச் செயலைச் செய்வதற்கு முன்னர் எப்படியான இயல்போடு இருந்தனவோ, அப்படியேதான் இருக்கின்றன. மிருகங்கள் மனிதர்களை எப்போதுமே மதிக்கின்றன. மனிதன்தான் அவற்றை மதிப்பதில்லை." என்று சொல்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஜெனிஃபர்.