Published:Updated:

மரணமடைந்த உலகின் வயதான சிலந்தி... பாழடைந்த குகையில் கிடந்த உடல்!

மரணமடைந்த உலகின் வயதான சிலந்தி... பாழடைந்த குகையில் கிடந்த உடல்!
மரணமடைந்த உலகின் வயதான சிலந்தி... பாழடைந்த குகையில் கிடந்த உடல்!

நம்பர் 16 என்றே அனைவராலும் அறியப்பட்ட அவள் தான் உலகின் மூத்த மிகவும் வயதான சிலந்தி. டிராப்டோர் (Trapdoor) என்ற வகையைச் சேர்ந்த நம்பர் 16 தனக்கெனத் தனிப்பட்ட குகை அமைத்து

அவள் நம்பரோ 16... வயதோ 43...

நம்பர் 16 என்றே அனைவராலும் அறியப்பட்ட அவள்தான் உலகின் மூத்த மிகவும் வயதான சிலந்தி. டிராப்டோர் (Trapdoor) என்ற வகையைச் சேர்ந்த நம்பர் 16 தனக்கெனத் தனிப்பட்ட குகை அமைத்து அதில் கடந்த நாற்பது ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது. அவள் மட்டுமல்ல அந்த வகைச் சிலந்திகள் அனைத்துமே அவற்றுக்கெனத் தனி குகை அமைத்து அதில் அவற்றின் பட்டுப்போன்ற வலைகளால் அதன் சுரங்கப் பாதைகளை வடிவமைத்துக்கொண்டு மேற்புற வாசலில் மெல்லிய மூடி போன்ற அமைப்பில் கதவு வைத்து வாழக்கூடியது. அவற்றின் சுரங்கம் குறைந்தபட்சம் 30 சென்டிமீட்டர் ஆழம் கொண்டவை. இந்த டிராப்டோர்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒரே குகையில்தான் வாழும். தன் குகை சேதமடைந்தால் கூட அதைத் தானே சீரமைத்துக் கொள்ளுமேயொழிய வேறொரு சிலந்தியின் கூட்டை ஆக்கிரமிக்க முயலாது. அவ்வளவு  தூரம் தனிமையை விரும்பக்கூடியவை.

நம்பர் 16 சிலந்தி

Photo Coutesy: Leanda Mason

ஆண் சிலந்திகள் ஐந்து வயதில் பருவமெய்திய பிறகு இணைசேரப் பெண் துணை தேடி வெளியேறும். பெண் சிலந்தியோடு இணைசேர்ந்த பின் மீண்டும் அவை தம் கூடுகளுக்குத் திரும்பிவிடும். பிறந்த சிலந்திகள் ஓரளவு வளர்ந்தவுடன் தனக்கெனத் தனிக்கூடு அமைத்து வாழத்தொடங்கும்.  நான்கு சென்டிமீட்டர் வரை வளரக்கூடியவை  இந்த டிராப்டோர்கள். வருடங்கள் போகப்போகச் சிலந்திகளின் வளர்ச்சிக்குத் தகுந்தவாறு அவற்றின் சுரங்கத்தை மாற்றியமைத்துக் கொள்ளுமே தவிர வேறு இடத்திற்கு மாறாது.

Photo Courtesy: Leanda Mason


இயற்கையாகவே இரையைத் தேடி சிலந்திகள் செல்வதில்லை. அவற்றைத் தேடி இரைகளை வரவழைக்கும். டிராப்டோர்களும் அப்படித் தான். ஆனால், மற்ற சிலந்தி இனங்களில் இருந்து இவை சிறிது மாறுபட்டது. தன் சுரங்கத்தின் வாசலில் மெல்லிய மூடி போல் இருக்கும் கதவுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும். அந்த வழியாக வரும் பூச்சிகளுக்கு அங்கு அப்படி ஒரு வாசல் இருப்பதுவோ அங்கு ஒரு வேட்டையாடியின் வாழிடம்  இருப்பதுவோ துளியும் தெரியாத வகையில் அவை அமைத்திருக்கும். அவற்றின் குகைகள் சாதாரணமாகப் பார்த்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாதவாறு இருக்கும். மிகவும் சிறியதாகச் சுற்றிலும் செடிகளால் மறைக்கப்பட்டிருப்பதால் அவை தன் இரைகளை வேட்டையாட அந்தச் சூழல் ஏதுவாக இருக்கும். அதனாலேயே அவை செடிகள் படர்ந்து நிரம்பிய நிலப்பகுதிகளில் தான் தத்தம் குகைகளை அமைக்கின்றன. ஆகவே தான் இருப்பதை அறியாமல் தன் வழியே செல்லும் பூச்சிகள் மற்றும் தன் வாசல் கதவின் மேல் வந்தமரும் பூச்சிகளை எளிதில் வேட்டையாடி உண்ணும். பூச்சிகள் மட்டுமின்றி தன்வழியே செல்லும் குட்டிப் பாம்புகள், பறவைக் குஞ்சுகளைக் கூட வேட்டையாடி விடக்கூடிய திறன் வாய்ந்தவை இந்த டிராப்டோர்கள்.

பர்பாரா யோர்க் மெய்ன் ( Barbara York Main) என்ற சிலந்திகள் ஆராய்ச்சியாளர் 1974-ம் வருடம் தனக்கான சுரங்க வாழிடத்தைக் கட்டிக்கொண்டு இருந்தபோது இந்த நம்பர் 16 சிலந்தியைக் கண்டார். ஒரு வயதே நிரம்பியிருந்த அவளைக் கண்ட அவருக்கு அதன் கூடுகட்டும் முயற்சி விநோதமாக இருந்தது. அதைப் படிக்கத் தொடங்கினார். கடந்த 40 ஆண்டுகளாக அதன் நடவடிக்கைகள், வாழ்க்கை முறை போன்றவற்றை அவரது குழு ஆய்வுசெய்தது. அதன்மூலம் டிராப்டோர் வகைச் சிலந்தி இனங்களைப் பற்றிய பெரும்பாலான விவரங்களைப் புரிந்துகொண்டுள்ளார்கள். 40 வருடங்களாக அவளை ஆய்வுசெய்துகொண்டு இருந்த பர்பாரா மெய்ன் தற்போது ஓய்வுபெற்று விட்டார்.

Photo Courtesy: Trapdoor Spider Colony

20 ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடிய இந்த வகைச் சிலந்திகளில் நம்பர் 16 சிலந்தி மட்டும் 43 வருடங்கள் வாழ்ந்துள்ளது. அவள் தனது ஆயுளில் மிக அதிகமான நாள்களைத் தன் குகைக்குள்ளேயே கழித்திருந்தாள். ஆஸ்திரேலியாவின் வடக்கு பங்கூளா காட்டில் வாழ்ந்து வந்த அவளை ஆராய்ச்சியாளர்கள் 42 ஆண்டுகளாக அவளின் இயல்பான வாழ்க்கைக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாமல் ஆய்வு செய்துள்ளனர். 

கடந்த 2016-ம் ஆண்டு ஆய்வாளர்கள் அவளின் குகையை ஆய்வுசெய்யச் சென்றுள்ளார்கள். குகையின் மேற்புறம் சேதமடைந்து இருந்துள்ளது. சிறிதளவு சேதம் ஏற்பட்டாலும் உடனடியாக டிராப்டோர்கள் அதைச் சரிசெய்துவிடும். ஏனென்றால் அவற்றின் பலமே அதுதான். அவற்றால் ஓரளவு வளர்ந்தபிறகு மீண்டுமொரு புதிய குகையைக் கட்டமைக்க முடியாது. அதற்கான கால அவகாசம் அதிகம். அதைச் செய்து முடிப்பதற்குள் வேறு ஏதாவது வேட்டையாடிகளால் வேட்டையாடப்பட்டு விடலாம். நிலைமை இப்படியிருக்கச்  சேதமடைந்த தன் குகையைச் சரிசெய்ய எந்த முயற்சியும் நம்பர் 16 எடுக்காத காரணத்தால் முன்னேறி ஆராய்ந்தார்கள். அப்போதுதான் குகைக்குள் அவள் கோரமாக உடல் கிழிந்து இறந்துகிடந்தது தெரிந்தது.

ஒட்டுண்ணிகளில் பலவும் வேறு உயிரினங்களின் உடலுக்குள் தனது முட்டைகளை இட்டுவிட்டுச் சென்றுவிடும். முட்டைப்  பொரிந்து வெளியேறும் குட்டிகள் அந்த உயிரினத்தையே சிறிது சிறிதாகத் தனக்கு உணவாக்கி வளர்ந்து உடலைக் கிழித்துக்கொண்டு வெளியேறும். அப்படிப்பட்ட வாஸ்ப் (Wasp) என்ற ஒட்டுண்ணியால் அவள் இறந்திருப்பது தெரியவந்தது. இத்தனை  வருடங்களாகத் தன்னைப் பற்றிய பதிவுகளைத் தந்து, மனிதர்கள் அவளின் இனச் சிலந்திகளைப் புரிந்து அவற்றைப் பாதுகாக்க  வேண்டிய அவசியத்தை உணர்த்தித் தன் இனத்துக்குப் பேருதவி புரிந்துள்ள நம்பர் 16 தற்போது உலகின் மிகவும் வயதான சிலந்தி என்ற சாதனையும் புரிந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு