Published:Updated:

சுறாவிடமிருந்து நீச்சல் வீரரைக் காப்பாற்ற அரண் அமைத்த டால்ஃபின்கள்..!

அவன் கை, கால்களை அசைக்கவில்லை. தந்தைக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அருகில் வந்தபிறகுதான் தன் மகனை ஒரு டால்ஃபின் காப்பாற்றி கப்பலை நோக்கிக் கொண்டுவந்தது புரிந்தது.

சுறாவிடமிருந்து நீச்சல் வீரரைக் காப்பாற்ற அரண் அமைத்த டால்ஃபின்கள்..!
சுறாவிடமிருந்து நீச்சல் வீரரைக் காப்பாற்ற அரண் அமைத்த டால்ஃபின்கள்..!

சிறுவனைக் காப்பாற்றிய ஃபிலிப்போ:

டேவிட் செசி என்ற பதினான்கு வயது சிறுவன் தன் தந்தையோடு அட்ரியாடிக் கடல் பிராந்தியத்தின் மான்ஃப்ரிடோனா என்ற பகுதியில் தன் தந்தையோடு படகில் சென்றுகொண்டிருந்தான். நடுக்கடலில் தன் மகன் படகிலிருந்து தவறி விழுந்ததை மீன்பிடித்துக் கொண்டிருந்த மும்முரத்தில் இம்மானுவேல் செசி கவனிக்கவில்லை. சிறுவன் டேவிட் தன் கைகளை உதறித் துடித்து மேலே வர முயன்று கொண்டிருக்க, நீச்சல் தெரியாததால் அவன் மேலும் மேலும் கீழே இழுக்கப்பட்டான்.

துடித்துக் கொண்டிருந்த கை கால்களின் வேகம் குறையத்தொடங்கியது. படகில் தன் மகன் இல்லாததைக் கவனித்த இம்மானுவேல் மகனைத் தேடி இரைந்து கொண்டிருந்தார். மறுகணம் சிந்திக்காமல் கடலில் குதித்தார். மகன் விழுந்த இடத்தில் இருந்து சில தொலைவுக்குப் படகு நகர்ந்து சென்றிருந்ததால் படகைச் சுற்றி எவ்வளவு தேடியும் மகன் அவர் கண்களுக்குத் தெரியவில்லை. மகன் எங்கே விழுந்திருப்பான், எப்போது விழுந்திருப்பான். அவன் விழுந்ததைக் கவனிக்காமல் வெகுதூரம் வந்துவிட்டோமோ?

அவருக்கு இதயம் கனத்துப் பதறியது. தன் மகனைக் கவனிக்காமல் மீன் பிடிப்பதில் மும்முரமாக இருந்ததற்குத் தன்னையே நொந்து கொண்டிருந்தார். அழுவதைத் தவிர அவரால் அந்தச் சூழலில் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. "டேவிட்" என்று இரைந்தவாறு படகில் இருந்து சுற்றிலும் நோட்டம் விட்டார். வந்த வழியாகவே படகைத் திருப்பி ஓட்டுவோம் என்று அவர் சிந்தித்துத் திருப்ப எத்தனிக்கையில் சிறிது தூரத்தில் மகனின் தலை தெரிந்தது. தாமதப்படுத்தாமல் மகனை நோக்கிப் படகை செலுத்தினார். அதே சமயம் மகனும் படகை நோக்கி வந்துகொண்டிருந்தான். ஆனால் அவன் கை, கால்களை அசைக்கவில்லை. தந்தைக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அருகில் வந்தபிறகுதான் தன் மகனை ஒரு டால்ஃபின் காப்பாற்றி கப்பலை நோக்கிக் கொண்டுவந்தது புரிந்தது. அந்த டால்ஃபினின் பெயர் ஃபிலிப்போ. அந்தப் பகுதிக்கு ஒருமுறை வந்த டால்ஃபின் கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்ட ஃபிலிப்போ அங்கேயே ஆதரவின்றிச் சுற்றித்திரிகிறது. ஃபிலிப்போவின் மனிதர்களிடம் ஐயமின்றிப் பழகும் கபடமற்ற அன்பிற்காகவே அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரத்தொடங்கினர். சில நாள்களாக உள்ளூர் மக்களின் அன்புக்குப் பாத்திரமானவனாக இருந்த ஃபிலிப்போ தற்போது அந்தப் பகுதியின் ஹீரோ.

டாட் என்ட்ரிஸ் ஒரு சர்ஃபிங் வீரர். இது நடந்தது அவரது 24-வது வயதில். கலிஃபோர்னியக் கடல் அலைகளுக்குள் சர்ஃப் செய்து கொண்டிருந்தார். அப்போது கடலுக்கடியில் இருந்து மேலெழும்பிய 15 அடி வளர்ந்த சுறா அவரது சர்ஃப் போர்டுக்குக் கீழே இருந்து கடித்தது. போர்டைத் தாண்டி அதனால் கடிக்க முடியாததால் அவருக்குக் காயம் ஏற்படவில்லை. இடறி போர்டின் மேல் விழுந்தவர் சுதாரித்து எழுவதற்குள் விலகிச் சென்ற சுறா தனது இரண்டாவது தாக்குதலுக்காக விரைந்தது. இந்தமுறை அவரை போர்டில் இருந்து கீழே தள்ளிவிட்டுக் கடிக்க முனையும்போது சர்ஃப் போர்டை எடுத்து அதன் வாய்க்கும் தனக்கும் நடுவே வைத்துவிட்டார். சர்ஃப் போர்டு சிறிது சேதமடைந்தது.

``சுறா திரும்பிச் சென்றுவிட்டது. நிச்சயமாக இம்முறை அது மிகுந்த சீற்றத்தோடு வரும். நிச்சயமாக நம்மால் அதைச் சமாளிக்க முடியாது" என்று சிந்தித்துக்கொண்டிருந்தார் என்ட்ரிஸ். அவர் உடலளவில் மிகவும் சோர்வடைந்தும் இருந்ததால் நீந்தவும் முடியவில்லை. இந்தமுறை ஆக்ரோஷமாக வந்த சுறா அவரது வயிற்றுப் பகுதியைக் கவ்வியது. வலியால் அலறிக்கொண்டிருந்தார் என்ட்ரிஸ். தன் வாழ்க்கை முடியப்போகிறது என்பதை உணர்ந்தவர் சுறாவின் வாயிலா தனது முடிவு இருக்க வேண்டும் என்றும் அந்தச் சூழ்நிலையில் அவருக்குத் தோன்றியது. அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு டால்ஃபின் கூட்டம் அவரைச் சுறாவிடம் இருந்து போராடி மீட்டதோடு மீண்டும் சுறா நெருங்காதவாறு அவரைச் சுற்றி வளையம் போட்டு சுற்றத் தொடங்கின. அவர் கரையை நெருங்கும் வரை பாதுகாப்பு வளையமாக அவரைச் சுற்றிக்கொண்டே வந்தன அந்த டால்ஃபின்கள்.

சுறாவை நெருங்கவிடாமல் மனிதர்களைக் காப்பாற்ற டால்ஃபின்கள் உருவாக்கிய இந்த வளைய அமைப்பை அவை காலம் காலமாகச் செய்கின்றன. கிரேக்க வரலாற்றில் இருந்தே அதற்கான பதிவுகள் இருக்கின்றன. அதேபோல் நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் இருக்கும் வாங்கரே தீவின் கடல் பகுதிக்குத் தன் மகள் நிக்கி மற்றும் அவரது இரண்டு நண்பர்களை அழைத்துச்சென்றார் ராப் ஹௌவ்ஸ் என்பவர். மீட்புப் பணியில் இருந்தவரான அவர் அதுவரை பார்க்காத ஒரு விசித்திரத்தை அனுபவித்தார்.
சில டால்ஃபின்கள் அவரையும் அவரது மகளோடு சேர்த்து நான்கு பேரையும் ஒரே இடத்தில் சேரவைத்து அவர்களைச் சுற்றி வட்டமிடத் தொடங்கியது. தொடக்கத்தில் அவை இவர்களோடு விளையாடவே விரும்புவதாக நினைத்த அவர்கள் ரசித்துக்கொண்டே இருந்தனர். ஆனால், அது நேரம் செல்லச்செல்ல நீண்டுகொண்டே போனதால் அந்த வளையத்தில் இருந்து வெளியே வர ராப் முயன்றபோது இரண்டு பெரிய டால்ஃபின்கள் அவரைப் பிடித்து வளையத்தின் நடுவே தள்ளியது. அவற்றால்தான் ஆபத்து என்று நினைத்தவர் உதவிக்கு ஆள் யாரேனும் வருகிறார்களா என்ற எண்ணத்தோடு அந்தப் பகுதியை நோட்டமிட்டார். அப்போதுதான் அதைக் கவனித்தார்.

அவர்கள் இருந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் ஒரு பெரிய சுறா காத்துக்கொண்டிருந்தது. அந்த டால்ஃபின்கள் சுற்றிக்கொண்டே இருந்ததால் வெகுநேரம் காத்திருந்து இரை கிடைக்காது என்று தெரிந்துகொண்டு சுறா சென்றுவிட்டது. அதன்பிறகும் அதேபோல் பாதுகாப்பாக அவர்களைக் கரைக்கு அருகே வரை அழைத்துவந்து விட்டுச்சென்றுள்ளன.

``எங்களுக்கு இரண்டு மீட்டர் தூரத்தில் சுறா இருப்பதைக் கண்டு நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். டால்ஃபின்களுக்கு எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று எப்படித் தோன்றியதோ தெரியவில்லை. ஆனால், அவற்றுக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். டால்ஃபின்கள் உண்மையில் மிகவும் அற்புதமான பாலூட்டிகள்." என்கிறார்  டாட்