Published:Updated:

``தப்பிப் பிழைத்த நாய்க்குட்டியும் ஒரு பன்றிக்குட்டியும்..!” - நெகிழ வைக்கும் இரு சம்பவங்கள்

``தப்பிப் பிழைத்த நாய்க்குட்டியும் ஒரு பன்றிக்குட்டியும்..!” - நெகிழ வைக்கும் இரு சம்பவங்கள்
``தப்பிப் பிழைத்த நாய்க்குட்டியும் ஒரு பன்றிக்குட்டியும்..!” - நெகிழ வைக்கும் இரு சம்பவங்கள்

தன்னையே கதியென்று வாழும் பிராணிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை. அத்தகைய மனிதர்கள் அவர்களின் பிராணிகளை உற்ற நண்பனாகப் பாவிக்காமல் தனது அடிமைகளாகவே பாவிக்கிறார்கள்.

விலங்குகளின் மீதான அன்பும், அவற்றை நமக்குச் சமமாகப் பாவிக்கும் மனப்போக்கும் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. சகமனிதனின் உணர்வுகளுக்குத் தரப்படும் மதிப்புகள் தன்னையே கதியென்று வாழும் பிராணிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை. அத்தகைய மனிதர்கள் அவர்களின் பிராணிகளை உற்ற நண்பனாகப் பாவிக்காமல் தனது அடிமைகளாகவே பாவிக்கிறார்கள்.

சம்பவம்- 1:
நெடுஞ்சாலை. பலநூறு குடும்பங்களின் ஒப்பாரிகளையும் பல நூறு மரணங்களின் இறுதி ஓலங்களையும் தன்வசம் கொண்டுள்ளதொரு தார்க்காடு. வாகனங்கள் காற்றைக் கிழித்துப் பறந்துகொண்டிருக்கின்றன அந்தத் தேசிய நெடுஞ்சாலையில். குறுக்கே யார் வருகிறார், எந்த வாகனம் நம்மைக் கடந்து செல்கிறது, பின்னால் வருவது யார் எதையும் கவனிக்க யாருக்கும் நேரமில்லை. ஓய்வில்லா அந்த இரவுநேரப் பயணத்தின் குறுக்கே வருவது மனிதர்களாகவே இருந்தாலும் உயிருக்கு உத்தரவாதமில்லை. அவற்றுக்கு மத்தியில் விரைந்துகொண்டிருக்கும் ஒரு ட்ரக்கிலிருந்து குதிப்பது நிச்சயமாகத் தற்கொலை முயற்சிதான்.


அன்று அதுவே அந்தப் பன்றிக்குட்டியின் வாழ்வுக்கு விடியலாக அமையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வெட்டுப்பாறைக்கு இழுத்துச்செல்லப்படுகிறோம், உயிர்போகும் தருவாயில் உயிரைக் கொடுத்தேனும் தப்பிக்க வேண்டுமென்று நினைத்த அது சிறிதும் தாமதிக்காமல் குதித்துவிட்டது. உடலில் சில காயங்களோடு சாலையில் கிடந்த பன்றிக்குட்டியின் மேல் பின்னால் வந்த லாரி ஏறித் தன் சக்கரங்களை அதன் ரத்தத்தால் கழுவித்தான் இருக்கும், அவர் விளக்கொளியில் தூரத்தில் செல்லும் வாகனங்களைக் கவனிக்காமல் தன் லாரிக்கு முன்னால் நீண்டுகொண்டே சென்ற சாலையைப் பல சிந்தனைகளோடு கவனிக்காமல் இருந்திருந்தால்!
தானே வீடின்றி வாகனமே கதியென்று கிடக்கும் நிலையில், காப்பாற்றிய கையோடு அதை வைத்துப் பராமரிக்க முடியாததால் வடக்கு கரோலினாவில் இருக்கும் பிளைன்ட் ஸ்பாட் விலங்குகள் அமைப்பில் (Blind Spot Animal Society) கொண்டு சேர்த்தார். ட்ரக்கிலிருந்து குதித்ததால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது உடல்நிலை தேறியுள்ளது குட்டி. தன்னைத் தத்தெடுத்து வளர்க்க ஒரு குடும்பம் ஒப்புக்கொண்டதால் விர்ஜீனியாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் அதற்குத் தற்போது புரிந்திருக்கும். மனிதர்களில் அழிப்பவர்கள் மட்டுமில்லை. காப்பவர்களும் உண்டு என்று. அந்த நம்பிக்கையோடு தன்னை வரவேற்கத் துடிக்கும் குடும்பத்தை எதிர்நோக்கி ஆவலோடு பயணித்துக்கொண்டிருக்கிறது.

சம்பவம்- 2:


அன்றைய தினம் மற்ற நாள்களைப் போல் சாதாரணமாகதான் இருக்குமென்று ஃபிராங்கி நினைத்திருந்தது; அகக் கண்கள் ஆசைகளென்னும் பொறை விழுந்துகிடக்கத் தன்னையும் தன் அருகில் இருந்தவளையும் தவிர மற்றதைச் சிந்திக்காமல் காரில் வந்தவன் சாலையைத் தாண்டி ஓடிய ஃபிராங்கியை மோதாத வரையிலும். மோதிய பின்னும் நின்று தன்னைக் காப்பாற்றாமல் போன அவனது காரையே பார்த்துக்கொண்டு வேதனையில் துடித்த ஃபிராங்கிக்குச் சட்டென்று உடலில் வந்த வலியனைத்தும் மறந்துபோனது. அந்த இடத்தைக் கேள்விகள் நிரப்பியது. ``நமது எசமான் பின்னால்தானே வந்துகொண்டிருந்தார். ஏன் நம்மை அழைத்து நிறுத்தவில்லை? அவர் தடுத்திருந்தால் நின்றிருப்பேனே! நான் அடிபட்டுக் கிடக்க அவர் ஏன் வந்து இன்னும் என்னைப் பதறித் தூக்கவில்லை?" கேள்விகள் நிரப்பிய இடத்தைத் தற்போது அதனால் விளைந்த வேதனை நிரப்பியது. அந்த நிமிடம் ஃபிராங்கி காயங்களால் கதறியதைவிடத் தான் நிராதரவாகக் கிடத்தப்பட்டதில் ஏற்பட்ட வேதனையில் தான் அதிகம் கதறியது.

 ஃபிராங்கி மற்ற பிட் புல்களைப் போல் அவ்வளவு சூட்டிப்பாக இருக்கவில்லை. பாவம் வயதாகிவிட்டது. அதன் எசமானனுக்கோ புதியதாக ஒரு நாய்க்குட்டி வாங்க ஆசை வந்துவிட்டது. ஃபிராங்கியைத் தெருவில் விட்டால் விலங்குநல ஆர்வலர்கள் வீடுதேடி வந்துவிடுவார்கள் என்ற பயம் வேறு. தக்க சமயமாக ஃபிராங்கியை நோக்கி விரைந்தது, கண்ணில் ஆசைப் பொறை விழுந்தவன் ஓட்டிவந்த கார். தடுக்காமல் வேடிக்கை பார்த்தார். மோதி எகிறிய வேகத்திலும் ஃபிராங்கி சாகவில்லை. கால் எலும்புகள், முகத் தாடைகள் உடைந்த நிலையிலும் துடித்துக்கொண்டிருந்தது. ஆரவாரமின்றிப் பொறுமையாக வந்தவர் ஃபிராங்கியை அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லத் தூக்குகிறார் என்றுதான் நினைத்தது. மனதில் சிறிது நிம்மதியும் எசமான் தன்னைக் கைவிடவில்லை என்ற நம்பிக்கையும் துளிர்விட்டது. ஆனால், நீண்டநேரம் நீடிக்கவில்லை. அவர் அழைத்துச்சென்றதோ கில் ஷெல்டருக்கு ( Kill Shelter). ஆதரவற்ற தெரு நாய்களையும், நோய்க்கிருமிகள் தாக்கிய நாய்களையும், அடிபட்ட நாய்களையும் என்று நாளொன்றுக்கு 9,000 நாய்கள் கருணைக்கொலை செய்யப்படும் கில் ஷெல்டரைப் பார்த்தவுடனே ஃபிராங்கிக்குப் புரிந்துவிட்டது. ஏதோ சரியில்லை என்பது. அங்கே விட்டுச்செல்லும் எசமானையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த ஃபிராங்கியின் மனதில் இருந்த நம்பிக்கை அனைத்தும் பல சுக்குநூறுகளாக உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்தன. அங்கே பணிபுரியும் ஒருவர், கைவிடப்பட்டதால் ஏற்பட்ட வேதனை அதன் கண்ணில் தெரிவதைக் கண்டுவிட்டார்.


தினமும் ஆயிரம் நாய்களைக் கொல்லும் அவருக்கு ஃபிராங்கி மீது மட்டும் எப்படி அன்று திடீர் கரிசனம் வந்தது என்பது விடையற்ற வினா. இல்லினாயில் இருக்கும் ஹென்ரி கௌன்டி கருணை இல்லத்துக்கு ( Henry County Humane Society) அழைத்து விவரத்தைச் சொன்னார். அவர்கள் உடனடியாக ஆள் அனுப்பி ஃபிராங்கியை மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால், உடைந்திருந்த காலை எடுத்தே ஆக வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்ல வேறுவழியின்றி எடுக்கப்பட்டது. அடிபட்ட உடனே சிகிச்சை அளித்திருந்தால் அதற்கான தேவை இருந்திருக்காது. தற்போது மூன்று கால்களோடு ஆரோக்கியமாக இருக்கும் ஃபிராங்கி தன்னைப் பராமரிக்கும் ட்ரேசி என்ற பெண்ணோடு நிம்மதியாக வாழ்கிறது.

``அவனுக்கு என் மடியில் படுக்க வேண்டும். என் கைகளுக்கு இடையில் கழுத்தைத் தேய்க்க வேண்டும். அன்புக்கு ஏங்கிக்கிடக்கிறான். பல நேரங்களில் என் மடியில் படுக்கத் துடித்துக் கார் கியரை நியூட்ரலுக்கு இழுத்துவிடுகிறான். இன்னும் சில நாள்கள் தான். அவனும் மற்ற நாய்களைப் போல் தனது வாலை ஆட்டிக் குதூகலத்தோடு தனக்கு நெருக்கமானவர்களோடு வாழ்வை ஆர்வமாக வாழப்பழகுவான். மூன்று கால்களோடு..."

அடுத்த கட்டுரைக்கு