Published:Updated:

கால்பந்து மைதானத்தில் தொலைந்த பறவை... நாய்க்கு மரண தண்டனை... மிரண்ட ஆடு... 3 சம்பவங்கள்!

கால்பந்து மைதானத்தில் தொலைந்த பறவை... நாய்க்கு மரண தண்டனை... மிரண்ட ஆடு... 3 சம்பவங்கள்!
கால்பந்து மைதானத்தில் தொலைந்த பறவை... நாய்க்கு மரண தண்டனை... மிரண்ட ஆடு... 3 சம்பவங்கள்!

ஆயிரக்கணக்கான போட்டியாளர்களைப் போலவே ஒரு சிறிய பறவையும் பார்வையாளராக அரங்கத்திற்குள் அமர்ந்திருந்தது. ஆனால், பார்வையாளர் பகுதியில் அல்ல. ஆடுகளத்தின் நடுவே!

ஃபிஃபா போட்டியின் நடுவே பறவையைக் காப்பாற்றிய ஸ்பானிய வீரர்:

கடந்த 20-ம் தேதி இரானுக்கு எதிரான ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்பெயின் மும்முரமாக விளையாடிக்கொண்டிருந்தபோது ஸ்பானிய கால்பந்து வீரர்களான இஸ்கோ மற்றும் ஜெரார்டு பிகே இருவரும் திடீரென்று ஆட்டத்தை நிறுத்தினர். பார்வையாளர்கள் முதல் ஆட்ட நடுவர் உட்பட அனைவரும் ஏனென்று புரியாமல் அவர்களை கவனித்தனர்.
 

Photo Courtesy: Rosario Pompizzi/Twitter

ஆயிரக்கணக்கான போட்டியாளர்களைப் போலவே ஒரு சிறிய பறவையும் பார்வையாளராக அரங்கத்திற்குள் அமர்ந்திருந்தது. ஆனால், பார்வையாளர் பகுதியில் அல்ல. ஆடுகளத்தின் நடுவே. அதைக் கண்ட ஜெரார்டு பிகே தனது ஆட்டத்தை மறந்துவிட்டார். அந்தப் பறவையை யாரேனும் மிதித்துவிடக் கூடும் என்று புரிந்துகொண்டார். முதலில் அதுவாகப் பறந்துவிடுமென்று நினைத்தவர். இது ஆட்டக்களமென்று தெரியாத சின்னஞ்சிறு பறவை நிற்பது புல்வெளியின் மீது. புல்வெளியைக் கண்ட ஆர்வத்தில் அங்கேயே பறந்து இன்புற்றுக்கொண்டிருந்தது. அதுவாக வெளியேறாது என்று உணர்ந்த பிகே அதைப் பிடித்துப் பாதுகாப்பாக ஆடுகளத்திற்கு வெளியே கொண்டுவிட நினைத்தார். ஆனால், அழகோடு வேகமாகவும் பறந்துகொண்டிருந்த பறவை அவரது கையில் அகப்படவில்லை. பிடித்தாலும் நழுவிவிடுகிறது. அவர் கைகளிலிருந்து நழுவிய பறவை இஸ்கோவின் அருகே சென்றபோது லாகவமாகவும் மென்மையாகவும் அதைப் பிடித்த இஸ்கோ ஓடிச்சென்று ஆடுகளத்துக்கு வெளியே ஓர் ஓரமாக விட்டுவிட்டுப் பிறகு தங்கள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இதைக் கண்ட பார்வையாளர்கள் மிகவும் நெகிழ்ந்துபோயினர்.

வெறும் விளையாட்டு வீரர்களாக மட்டுமன்றித் தற்போது அவர்கள் கால்பந்து ரசிகர்களால் ஹீரோக்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இதைக் கண்ட விலங்குகள் ஆர்வலர்கள் அவர்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர். ``ஓர் உயிரினத்தின் உயிரைக் காப்பாற்றுவதைவிட எந்த விளையாட்டும் முக்கியமில்லை. இன்று அவர்கள் இதைப் புரியவைத்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றனர்." கட்டிவைத்த சிறுவன், மனதை உறுத்திய ஒளிப்படம்: குழந்தைகளே வருங்காலம். அவர்களுக்குச் சரியானவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. பெரும்பான்மைச் சிறுவர்களும், இளைய தலைமுறையினரும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்பு உணர்வு, விலங்குகள் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டங்கள் போன்ற மேலும் சில சமூகம் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை விதைக்கின்றனர். ஆனால், நாம் இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது.

Photo Courtesy: Unparalleld Suffering Photography

கால்நடைகளாக வளர்க்கப்படும் விலங்குகள் துன்புறுத்தப்படுவதும், போதுமான கவனிப்பு கிடைக்காமல் வாடுவதும் இன்னமும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அவற்றைச் செய்பவர்கள் வருங்காலத் தலைமுறையினருக்கும் தவறான முன்னுதாரணமாக நின்று அவர்களையும் தவறான பாதையில் இட்டுச்செல்கின்றனர். Unparalleled suffering photography என்ற முகப்புத்தகப் பக்கத்தில் கடந்த திங்கள் அன்று (25-06-2018) ஓர் ஒளிப்படம் பகிரப்பட்டது. அதில் ஒரு சிறுவன் ஓர் ஆட்டுக்குட்டியின் கால்களைக் கட்டிக்கொண்டிருக்கிறான். அந்தப் புகைப்படம் ஆட்டுக்குட்டியின் முகத்தையும் அது மிரண்டிருப்பதையும் தெளிவாகக் காட்டுகிறது. ஒளிப்படத்திலிருக்கும் சிறுவன்மீது யாரும் குற்றம் சுமத்தமுடியாது. அதைச் செய்யத் தூண்டிய பெரியவர்களே குற்றவாளிகள்.

இவ்வாறு செய்யத் தூண்டியதோடு, அவன் அவ்வாறு செய்வதை ஊக்குவித்துப் புகைப்படமும் எடுத்த அவர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத்தரும் பாடம் மிகவும் ஆபத்தானது. உயிர்களின் மீதான இரக்கமற்ற தன்மையைச் சிறுவனின் இதயத்தில் விதைத்துக்கொண்டிருக்கும் பெரியவர்களே இங்குக் குற்றவாளிகள். இவ்வாறான பழக்கங்களை ஊக்குவிப்பது, அவர்கள் வளரும்போது தனக்கு எதிரே இருப்பது வேறு உயிரினமாயினும், மனிதராகவே இருப்பினும் அவர்களை எந்தவிதக் குற்றவுணர்ச்சியுமின்றிக் காயப்படுத்தப் பழகிவிடுவார்கள். இதனால்தான் மற்ற உயிரினங்களின் மீது செய்யப்படும் கொடுமைகள் மனிதர்கள் மீதான கொடுமைகளுக்கு எதிரான விளைவுகளைப் போலவே கடுமையாக இருக்கவேண்டுமென்று விலங்குநல ஆர்வலர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். ``பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சிந்தனையைச் சிறுவர்கள் மனதில் மட்டுமன்றிப் பெரியவர்கள் மனதிலும் விதைக்கவேண்டியது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது.

காப்பாற்றிய நாய்க்கு மரண தண்டனை விதித்த காவல்துறை:

Photo Courtesy: Kylo Bristollive/WS

அவர்கள் இங்கிலாந்தின் பிரிஸ்டால் நகரத்தில் குடியிருக்கும் கணவன்-மனைவி. அதே வீட்டில் அவர்களுக்கு முன்னால் ஒரு பாலியல் வன்கொடுமை குற்றவாளி குடியிருந்தான். அவனைத் தாக்குவதற்காக 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த வீட்டுக்குள் புகுந்துவிட்டனர். அந்த நபர் தற்போது இங்கே இல்லை என்பதையும், இவர்களுக்கும் அவனுக்கும் எந்தவிதச் சம்பந்தமுமில்லை என்பதையும் கணவன்-மனைவி இருவரும் எவ்வளவோ விளக்கிச் சொன்னார்கள். ஆனால், மனம் முழுவதும் வன்முறையை நிரப்பி வைத்திருந்த கும்பல் இவர்கள் சொன்ன எதையும் நம்புவதாக இல்லை. இருவரையும் கடுமையாகத் தாக்கத் தொடங்கினார்கள். மிகக் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்தார்கள். அங்கே ஒரு கறுப்பு லேபரேடர் நாய் ஓடி வந்தது. அதன் பெயர் கைலோ. அதன் எஜமானர்கள் அடிவாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் அனைவரையும் கடுமையாகக் குரைத்து மிரட்டுவதும் கடிப்பதுமாக 20 பேருக்கும் நடுவே புகுந்துவிட்டது. வெறி பிடித்ததுபோல் கடுமையாகத் தாக்கிய கைலோ அவர்கள் தூக்கி வீசியபோதும்கூட தனது காயங்களைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அவர்களைத் தாக்கியது. அதன் கடிகளைத் தாங்கமுடியாமல் 15 பேர் ஓடிவிட்டனர். 5பேர் மட்டும் பின்வாங்காமல் அதன் எஜமானர்களைத் தாக்கிக் கொண்டேயிருப்பதைக் கண்ட கைலோ ஐவரையும் விடாமல் கடித்து அவர்கள் அந்த வீட்டைத் தாண்டி ஓடும்வரை துரத்தியது. உடல் முழுவதும் காயத்தோடு திரும்பிவந்த கைலோ அடிபட்டுக்கிடந்த எஜமானர்களைக் காப்பாற்ற பக்கத்துவீட்டுக்காரரை உடன் அழைத்துவந்தது.

கைலோ மட்டும் வராமல் போயிருந்தால் கணவன்-மனைவி இருவரும் அன்றே இறந்திருப்பார்கள். காவல் துறை அதிகாரிகள் வந்தபோதும் கைலோ அவர்களைக் கண்டு ஆபத்தானவர்கள் என்றெண்ணிக் குரைத்தபடி வழிவிடாமல் நின்றது. அதனால் அதன் உரிமையாளர் ஓர் அறைக்குள் விட்டுப் பூட்டிவிட்டார். காவல்துறை அதிகாரிகள் விசாரணையை முடித்துவிட்டுத் திரும்பிச் சென்றபோது அறைக்கதவைத் திறந்துவிட்டார் உரிமையாளர். தனது எஜமானர்கள் தாக்கப்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத கைலோ அவர்களும் எதிரிகள் தானென்று நினைத்து ஓடிச்சென்று இருவரையும் கடித்துவிட்டது. அதன் உரிமையாளர்களான கணவன்-மனைவி இருவரும் அதிகாரிகளிடம் உள்ளதை விளக்கி எவ்வளவோ மன்னிப்பு கேட்டனர். ஆனால், அதிகாரிகள் கைலோ மிக ஆபத்தானது என்றும் அதை விட்டுவைக்க முடியாதென்றும் கூறி அழைத்துச்சென்றுவிட்டனர். தற்போது கைலோவைக் கருணைக்கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள். தங்கள் உயிரைக் காப்பாற்றிய கைலோ, எந்தச் சூழ்நிலையில் அப்படி நடந்துகொண்டது என்பதை விளக்கிக்கூறி அவர்கள் அதைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தனது எஜமானனைக் காப்பாற்றிய நிம்மதியிலும், அவர்களை பிரிந்து வாழும் வேதனையிலும் இருக்கிறது கைலோ. தான் சாகப்போவது தெரியாமலிருக்கும் அது, தெரிந்தாலும் பொருட்படுத்தப்போவதில்லை. ஏனென்றால், சாகப்போவதைவிட எஜமானர்களை மீண்டும் யார் காப்பாற்றுவார்கள் என்பதே அதன் தலையாய வேதனையாக இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு