Published:Updated:

``சிரிச்ச மாதிரிதான் என் முன்னாடி வரணும்... இல்லைன்னா!” - மனித முகங்களை டீகோட் செய்யும் ஆடுகள்

நீங்கள் வாய்ப்பு கிடைத்தால், ஓர் ஆட்டின் முன் நின்று சிரித்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்!

``சிரிச்ச மாதிரிதான் என் முன்னாடி வரணும்... இல்லைன்னா!” - மனித முகங்களை டீகோட் செய்யும் ஆடுகள்
``சிரிச்ச மாதிரிதான் என் முன்னாடி வரணும்... இல்லைன்னா!” - மனித முகங்களை டீகோட் செய்யும் ஆடுகள்

பொதுவாக, வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என விரும்பும். சில விலங்குகள் மனித மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பிக்கும். ஆனால், சில தருணங்களில் மனித மனம் மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டுமென்று சில விலங்குகள் நினைக்கும். அந்த வகையில் ஆடுகள் எப்போதும் மனித முகங்கள் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகின்றனவாம். `கோபம் கொண்ட முகங்களையோ அல்லது கோபம் கொண்ட குரலில் ஒலி எழுப்புபவர்களையோ அது விரும்புவதில்லை' என்கிறது, சமீபத்திய ஆய்வு. இது நாய்களுக்கும் பொருந்துமாம். (இதைத் தெரிந்து கொண்டுதான் நாய்களையும் ஆடுகளையும் முன்னோர்கள் அழைப்பதற்குக் கொஞ்சும் சங்கேத ஒலிகளை எழுப்பினார்களோ என்னவோ)

ஓப்பன் சயின்ஸ் ஆய்வில் வெளியிட்ட தகவல்களின்படி `ஆடுகள், புன்னகைக்கும் முகங்களையே அதிகமாக விரும்புகின்றன'. ஆராய்ச்சியாளர்கள் முழுவதுமாக மறைக்கப்பட்ட சோதனைக் கூடத்தில் ஆடுகளை வளர்க்கும் பரிச்சயமான ஆட்களின் புகைப்படங்களை வைத்து சோதனை செய்தனர். அவர்களின் சிரிக்கும், கோபப்படும் இரண்டு கறுப்பு - வெள்ளை (black and white) புகைப்படங்களை ஆடுகளின் முன்னால் காட்டினர். அதேபோல கோபமான முகம், சிரித்த முகமாக மாற்றி படங்கள் காட்டப்பட்டன. அந்த இரண்டு செயல்களிலும் ஆடுகள் சிரித்த முகங்களைக் கொண்ட புகைப்படங்களையே அதிகமாக விரும்பியிருக்கின்றன. அதைப் பலகட்டங்களாகப் பரிசோதித்த பின்னர் சோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளனர். ஆசையாக வளர்க்கும் ஆடுகள் தவிர, உணவுக்காக வளர்க்கப்படும் ஆடுகளும் மனித மனங்களை எளிதில் புரிந்துகொள்ளும் தன்மை படைத்தவை. 

பிரேசிலில் உள்ள ஷா பவுலோ ஃபெடரல் யுனிவர்சிட்டியில் (Federal University of São Paulo) ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியியல் துறைப் பேராசிரியர், காரின் சாவல்லி ரெடிகோலோ (Carine Savalli Redigolo) பேசும்போது, ``விலங்குகளை எப்படி நிர்வகிக்கிறோம் என்பது பற்றி விவாதிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மனிதர்கள் தங்கள் முகங்களைக் கோபமாகவோ அல்லது மகிழ்ச்சியாகவோ வைத்திருக்கலாம். ஆனால், வளர்க்கும் விலங்குகளைப் பார்த்தால் அம்மனிதர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மனிதர்களை வாசிப்பதில் மிருகங்கள் அசாத்திய திறமை கொண்டிருப்பது உண்மைதான். அந்த வகையில் ஆடுகள் மகிழ்ச்சியான முகங்களையே அதிகமாக விரும்புகின்றன என்று ஆராய்ச்சி சொல்லியிருப்பது உண்மைதான். உதாரணமாக, நாய்கள் மனித நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதில் மிகவும் திறமையுள்ளவையாக இருக்கின்றன. மேலும், நாய்களால் காட்சி மற்றும் ஒலி உணர்ச்சி தகவலை ஒருங்கிணைத்து உணர முடியும். இவை தவிர, குதிரைகள் கூட மனித முகங்களிலிருந்து உணர்ச்சியுள்ள மதிப்புகளை உணரும் தன்மை கொண்டிருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு விலங்கும் அதன் தன்மையிலிருந்து எப்போதுமே மாறாது. அதனால் ஆடுகளை வளர்ப்பவர்கள் அதன் முன்னர் கொஞ்சம் கோபமாக முகத்தை வைத்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

ஆடுகளுக்கு நடத்தப்பட்ட சோதனையின் போது, புன்னகைக்கும் நபரின் புகைப்படம் ஆடுகளின் வலது பக்கத்தில் வைக்கப்படும் போது எடுக்கப்படும் முடிவு மிக முக்கியமானது. காரணம், ஆடுகளின் மூளை சமச்சீர் இல்லாதது. இடப்பக்கம் வைக்கும்போது எந்த உணர்ச்சிகளையும் ஆடுகள் வெளிப்படுத்தாது. உதாரணமாக, நாய்களுக்கு மூளையின் இடது அரைக்கோளப் பகுதியில்தான் புரிந்துணர்வுத் திறன் இருக்கும். இந்த வகையான சோதனையைத்தான் ஆடுகளில் சோதனை செய்து முடித்திருக்கிறோம். அதை வெளிப்படையாகவே ஆட்டுப் பண்ணைகளில் பரிசோதித்துப் பார்த்திருக்கிறோம். மற்றவர் நம்மை எதிர்நோக்கும்போது அவர்களின் முகம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புவோம். அதேபோலத்தான் ஆடுகளும் மனித முகங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைக்கின்றன. இனியாவது ஆடுகளைப் பார்த்தால் மகிழ்ச்சியாக முகங்களை வைத்துக் கொள்ளுங்கள்" என்கிறார், ரெடிகோலோ,

நீங்கள் வாய்ப்பு கிடைத்தால், ஓர் ஆட்டின் முன் நின்று சிரித்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்!