Published:Updated:

45 நாள்களாக தண்ணி காட்டும் `அவ்னி' புலி... மகாராஷ்டிரா காட்டின் `திக் திக்' நிமிடங்கள்!

சோனாபாய் போஸ்லே என்ற 60 வயது மூதாட்டி வனத்தின் எல்லைப் பகுதிக்குள் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றிருந்தபோது தாக்கப்பட்டார். அதுதான் அவ்னியின் முதல் தாக்குதல்.

45 நாள்களாக தண்ணி காட்டும் `அவ்னி' புலி... மகாராஷ்டிரா காட்டின் `திக் திக்' நிமிடங்கள்!
45 நாள்களாக தண்ணி காட்டும் `அவ்னி' புலி... மகாராஷ்டிரா காட்டின் `திக் திக்' நிமிடங்கள்!

``அவளின் அறிவுக்கூர்மை எப்போதுமே எங்களுக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்துள்ளது. அதுவும் இப்போது இரண்டு குட்டிகளுக்குத் தாய் என்பதால் அவள் சற்று அதிக முன்னெச்சரிக்கையோடு இருக்கிறாள். இந்தத் தேடுதல் வேட்டை ஒரு வருடத்துக்கு நீடித்தாலும் ஆச்சர்யமில்லை. அதற்குத் தகுதியுடையவள்தான் அவ்னி."

என்கிறார் மாநில வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரி ஏ.கே.மிஷ்ரா. ட்ரோன் கேமராக்கள், 200-க்கும் அதிகமான ஆயுதம் ஏந்திய வனக்காவலர்கள், உயிருடன் பிடிப்பதற்கு மயக்க ஊசித் துப்பாக்கிகள், கூண்டுகள், விலங்குநல மருத்துவர்கள் என்று அனைத்தையும் வைத்துக்கொண்டு 45 நாள்களாகத் தேடிக்கொண்டிருக்கிறது மகாராஷ்டிரா வனத்துறை. ஆனால், இன்னமும் 13 பேரின் மரணத்துக்குக் காரணமான அந்தப் பெண் புலியைப் பிடிக்க முடியவில்லை. முழுக்க அடர்த்தியான தாவரங்களைக் கொண்ட அந்த வனப்பகுதியில் பதுங்கித் திரிவது எளிதுதான். பிறந்து 10 மாதங்களே ஆன இரண்டு குட்டிகளை வைத்துக்கொண்டிருக்கும் 6 வயதுப் பெண் புலிக்கு இத்தனையையும் தாண்டி மறைந்திருப்பது எளிதல்ல. இருந்தும் தன்னைச் சுட்டுக்கொல்ல வனத்துறை போராடிக்கொண்டிருக்கும்போது அனைவருக்கும் தண்ணி காட்டிவிட்டு அவள் தன் குட்டிகளோடு சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறாள் அவ்னி.

பந்தர்கவாடா, மகாராஷ்டிராவின் யாவத்மாலா மாவட்டத்தில் அமைந்துள்ளது. அங்கிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள டிபேஷ்வர் வனவிலங்கு சரணாலயத்தில் 9 புலிகள் வாழ்கின்றன. அந்தச் சரணாலயத்திலிருந்துதான் இந்தப் பெண் புலி வந்திருக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது. 170 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட அந்த வனப்பகுதியில், வனத்துறையால் அவ்னி (Avni) என்று பெயரிடப்பட்ட அவளைத் தவிர மேலும் ஒரு பெண் புலியும் ஆண் புலியும் இருக்கின்றன. அந்த வனத்தையொட்டியே 18 கிராமங்கள் இருக்கின்றன. ஆனால், 2016-ம் ஆண்டு வரை புலிகளால் யாருமே தாக்கப்படவில்லை. முதல் தாக்குதல் நடந்தது 2016-ம் ஆண்டு ஜூன் முதல் தேதியில். 

சோனாபாய் போஸ்லே என்ற அறுபது வயது மூதாட்டி வனத்தின் எல்லைப் பகுதிக்குள் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றிருந்தபோது தாக்கப்பட்டார். அதுதான் முதல் தாக்குதல். இவ்வளவு ஆண்டுகளாகப் புலிகள் நடமாட்டம் இருந்தும்கூட இப்படியொரு தாக்குதல் இதுவரை நடந்ததே இல்லை. வனத்துறையால் புதிதாக அங்கு விடப்பட்ட புலிதான் இதற்குக் காரணமென்று அரசல் புரசலாகக் கிராம மக்கள் மத்தியில் பேசப்பட்டது. ஆனால், வனத்துறை அந்தப் புலி அப்படி எதுவும் செய்யவில்லை என்று தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். அடுத்த 3 மாதங்கள் மக்களும் சற்றே ஆசுவாசமடைந்த சமயம், செப்டம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் தொடர்ச்சியாக இரண்டு தாக்குதல்கள்; 2 பேர் புலி வேட்டைக்கு இரையானார்கள். அக்டோபர் 30-ம் தேதி 4 வது வேட்டை. அதுவும் இந்த வேட்டை விவசாய நிலத்திலேயே நடந்தது. மக்களின் பீதியும் வனத்துறையின் கண்காணிப்பும் அதிகமானது.

எல்லா கிராமங்களிலும் அனைவரும் இரவில் நெருப்புப் போட்டுக் கண்காணிப்பில் ஈடுபடத் தொடங்கினார்கள். அடுத்த 9 மாதங்கள் எந்தப் பிரச்னையுமில்லை. மக்களுக்குச் சற்று தைரியம் வரத் தொடங்கியது. அந்தத் தைரியத்தை அவள் நீடிக்கவிடவில்லை. 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 5 வது வேட்டையும் நடந்தது. இப்படியாக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர் மற்றும் 2018 ஜனவரி வரை தொடர்ச்சியாக நடந்த வேட்டைகளில் மொத்தம் 5 பேர் வேட்டையாடப்பட்டனர். ஆகஸ்ட் மாதத்தில் 4, 10, 28-ம் தேதிகளில் அடுத்த 3  வேட்டைகள். இவை அனைத்துமே புலி வேட்டையில் பலியிழந்தவர்கள். அவற்றில் 5 வேட்டைகள் அவ்னியின் தாக்குதலில் நடைபெற்றது சாட்சிகளோடு நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஜனவரி மாதம் ராமாஜி என்பவர் பத்தாவதாக வேட்டையாடப்பட்ட பொழுதே மக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

ஆகஸ்ட் 4 ம் தேதி கொல்லப்பட்ட 60 வயதான குலாப்ராவு மோகஷே தனது 40 ஆடுமாடுகளைத் தினமும் காட்டுக்குள் மேய்க்கச் செல்கின்றார். அவரைப் போலத்தான் வேட்டையாடப்பட்ட மற்றவர்களும். அக்கம்பக்கம் கிராமங்களில் சுமார் 30,000 கால்நடைகள் இருக்கின்றன. நாளொன்றுக்குக் குறைந்தது 100 பேர் அவற்றைக் காட்டுக்குள் மேய்ச்சலுக்கு நடத்திச் செல்கிறார்கள். ஒருவகையில் இதுவும்கூடக் காரணம்தான். மக்கள் காட்டுக்குள் இப்படிச் செல்வது வனவிலங்குகளை மனரீதியாகப் பாதிக்கும், அவை தங்கள் பாதுகாப்புக்காகக்கூட முதலில் தாக்கியிருக்கலாம். அதன்பின் அதுவே தொடர்ந்திருக்கலாம். வேட்டையாடப்பட்ட 13 பேரில் 11 பேர் கால்நடை மேய்ப்பவர்கள். அனைவரும் வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்குச் சென்றபோதுதான் வேட்டையாடப்பட்டனர். இரண்டு தாக்குதல்களே விவசாய நிலத்தில் நடந்திருக்கின்றன.

இருந்தும் அவ்னியைக் கொல்ல வேண்டுமென்று மக்கள் குரலெழுப்பத் தொடங்கினார்கள். ஆகஸ்ட் வேட்டைகளின்போது அவ்னியைக் கொல்வதற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அதை எதிர்த்து விலங்குநல ஆர்வலர்களின் சட்டப்போராட்டம் உயர்நீதிமன்றம் வரை சென்றது. அவ்னியைக் கொல்வதற்கான முதல் உத்தரவு மாதம் ஒரு தாக்குதல் வீதம் நடந்த தொடர்ச்சியான 5 வேட்டைக்குப் பிறகு ஜனவரி மாதம் வந்தது. அப்போது நடந்த கண்காணிப்பில் அவள் கர்ப்பமாக இருப்பது தெரிய வரவே, 31-ம் தேதி உயிருடன் பிடித்தால் போதுமென்று உத்தரவு தளர்த்தப்பட்டது. பிப்ரவரி மாதம் தனது இரண்டு குட்டிகளோடு அவ்னி வலம் வருவதைக் காமிரா டிராப்களின் மூலம் கண்டறிந்தனர். சூழ்நிலை கடினமானது. அச்சமயத்தில் எந்த முடிவையும் எடுக்கமுடியாது. எடுக்கும் முடிவு அவளின் குட்டிகளையும் பாதித்துவிடக் கூடாது என்பதால் பொறுமை காத்தனர். ஆனால், ஆகஸ்ட் மாதம் நடந்த 3 தாக்குதல்கள் நிலைமையை மாற்றிவிட்டது. மீண்டும் சுட்டுக்கொல்ல உத்தரவு வழங்கப்பட்டது. தன் தாய் மனித வேட்டையாடுவதை அருகிலிருந்து கவனித்த அவ்னியின் இரண்டு குட்டிகளும் தற்போது மனித வாடையை நுகர்ந்து பழகியிருக்கும். மனித மாமிசத்தை ருசித்துப் பழகியிருக்கும். அதனால் அவற்றையும் பிடிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது நீதிமன்றம். ஆர்வலர்கள் செப் 6-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை 11-ம் தேதி உச்சநீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து அவ்னியை மேன் ஈட்டர் (Man eater) என்று அறிவித்தது.

புலியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்யவேண்டும், ஒருவேளை அதுமுடியாமல் போனால் சுட்டுக்கொல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவ்னியைக் கொல்ல உத்தரவு கிடைத்தவுடன் ஹைதராபாத்திலிருந்து ஷாஃபத் அலி கான் என்ற வேட்டைக்காரர் வரவழைக்கப்பட்டுள்ளார். அவர் விலங்கு வேட்டையை ரசித்துச் செய்யுமளவுக்கு மோசமானவர். அவ்னியை உயிருடன் பிடிக்க வாய்ப்பு கிடைத்தால்கூட அதைச் செய்யமாட்டார். அவ்னியின் வாழ்க்கையை இவர் கையில் கொடுப்பது ஆபத்தான திட்டமென்று இவருக்கு எதிராகப் பல ஆர்வலர்கள் குரலெழுப்பி வருகின்றார்கள்.

இரண்டைத் தவிர மற்ற அனைத்து வேட்டைகளும் வனத்துக்குள் நடந்திருக்கின்றன. அவ்னி மனித மாமிசத்துக்குப் பழகிவிட்டதென்று சொல்லப் போதுமான ஆதாரங்கள் இல்லையென்று வாதிடுகிறார்கள் விலங்குநல ஆர்வலர்கள். அவள் மனிதர்களை எதிர்பார்த்து ஊருக்குள் வரவில்லை, தற்செயலாக வாய்ப்பு கிடைத்ததால் இது நடந்துள்ளது. அதுவும் ஒவ்வோர் வேட்டைக்கும் இடையில் நீண்ட நாள்கள் இடைவெளி இருப்பதும் அதை நமக்கு உணர்த்துகிறது. உண்மையிலேயே மனித மாமிசத்துக்கு அவள் ஆசைப்பட்டிருந்தால் பத்தாவது வேட்டைக்குப் பிறகு அடுத்த மூன்று வேட்டைகளை நடத்துவதற்குமுன் 7 மாதங்கள் இடைவெளி விட்டிருக்க மாட்டாள். இது மனித வேட்டையாடிய மற்ற புலிகளின் பழக்கத்திலிருந்து அவளை வேறுபடுத்துகிறது.

அவ்னியைப் பற்றிச் சிந்திக்கும்போது சென்ற ஆண்டு சந்திரபூரில் 2 பேரைக் கொன்ற புலி நினைவுக்கு வருகிறது. அதன் தலைவிதியை நிர்ணயிக்கக் குழு அமைத்தார்கள். அவர்கள் அந்தப் புலியை வார்தா மாவட்டத்திலுள்ள போர் (Bor Wildlife sanctuary) வனவிலங்கு சரணாலயத்துக்கு இடம் மாற்றினார்கள். அங்கும் இருவரைக் கொன்றது. சுட்டுக் கொல்வதைப் பற்றி ஆலோசனைக்கூட்டம் நடந்துகொண்டிருந்த சமயம் அவளே மின் வேலிகளில் சிக்கி இறந்துவிட்டாள். இத்தகைய சூழ்நிலைகளை எப்படிச் சமாளிக்க வேண்டுமென்பதில் இன்னமும் நாம் கற்றுக்குட்டிகளாகவே இருக்கிறோமோ என்ற சந்தேகம் அச்சம்பவத்தின்போது தோன்றியது. அதேபோலத்தான் இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவின் 200 புலிகளில் 30% பந்தர்கவாடா, சந்திரபூர் போன்று காப்புக்காடுகளுக்கு வெளியே உள்ள பாதுகாப்பற்ற காடுகளில் வாழ்கின்றன. அதாவது அவற்றின் வாழிடங்கள் இன்னமும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்படவில்லை. அது ஏனென்ற காரணங்களும் இதுவரை சொல்லப்படவில்லை. மனிதர்களுக்கு மட்டுமல்ல  விலங்குகளுக்கும் நன்மை பயக்கும் விதத்தில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். இதை அரசியலாக்கி அதன்மூலம் முடிவுகள் எடுக்கக் கூடாது. விலங்குகளின் நடத்தைகளைக் கவனித்து அவற்றையும் புரிந்துகொண்டாலொழிய இதுபோன்ற பிரச்னைகளை நாம் ஆரோக்கியமான முறையில் தீர்க்கமுடியாது.

இப்போது புலிகளைத் தேடுவதில் நிபுணத்துவமுடைய ஒரு குழுவை மத்திய பிரதேசத்திலிருந்து வரவழைத்துள்ளார்கள். அவர்களோடு வரவழைக்கப்பட்ட 5 யானைகளில் ஒன்றுக்குக் கடந்த 4ம் தேதி மதம்பிடித்து விட்டதால் அனைத்து யானைகளையும் திருப்பி அனுப்பிவிட்டார்கள். மறைந்து நகர்வதற்குத் தகுந்த பச்சை நிற உடைகளில் 200 வனக்காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். புனேவிலிருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு ட்ரோன் கேமராக்கள், அதிகபட்சம் இருவர் மட்டுமே பயணிக்கும் ஒரு பாராகிளைடர், புலித்தடங்களை வைத்து அதை மோப்பம் பிடிப்பதற்காக இரண்டு இத்தாலிய வகை வேட்டை நாய்கள், 90 கேமரா டிராப்கள் அனைத்தும் இப்போது அவ்னியைத் தேடி அலைந்துகொண்டிருக்கின்றன. இவ்வளவு செய்தும் அவ்னி 45 நாள்களாக யாரிடமும் எதனிடமும் சிக்காமல் மறைந்து வாழ்ந்துவருகிறது. 

மே மாதம் வேட்ஷி என்ற அணைக்கு அருகில் அவளை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பும் நழுவிவிட்டது. அணைச் சுவருக்கு மேல் ஒரே உந்துதலில் தாவிக் குதித்துத் தப்பித்துச் சென்றவள் அவ்னி. அவள் அவ்வளவு எளிதில் சிக்கிவிடுவாளென்று தோன்றவில்லை. 

``இந்த ஆண்டு கோடைக்காலம் சற்று அதிகமாகவே நீண்டுவிட்டது. அதிலேயே தப்பியவள் அடுத்து வரவிருக்கும் மழை மற்றும் குளிர்காலங்களிலா சிக்குவாள்!"

என்கிறார் அவ்னியை வேட்டையாட வனத்துறையால் அழைத்துவரப்பட்ட ஷாஃபத் அலி கான்.

அவளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவளுக்குத் தெரியும். இருந்தும் ஒரு மாவட்டத்தையே தனக்குப் பின்னால் சுற்ற விட்டுவிட்டுக் குட்டிகளோடு சுதந்திரமாகத் தன் காட்டுக்குள் வாழ்ந்து கெத்துக் காட்டுகிறாள் அவ்னி.