Published:Updated:

யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு? ஈஷா யோகா மையத்தில் ஆய்வு!

யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு? ஈஷா யோகா மையத்தில் ஆய்வு!
யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு? ஈஷா யோகா மையத்தில் ஆய்வு!

கோவை: யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டடடங்கள் கட்டப்பட்டுள்ளதா? என கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யானை-மனித மோதல் உச்சத்தை எட்டிவரும் நிலையில், அந்த மோதல்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது யானைகள் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதுதான். யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி, வழிபாட்டு தளங்கள், கல்வி நிறுவனங்கள் என 20க்கும் மேற்பட்டோருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டுள்ள கோவை ஈஷா யோகா மையமும் இந்த ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. 100 ஏக்கருக்கும் மேல் அமைந்துள்ள இந்த மையம், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடடத்தை இடித்து அகற்ற வேண்டும் எனக்கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பை தடுக்க தவறியது ஏன்? என்பது குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது.

##~~##
இந்நிலையில், ஈஷா யோகா மையம் அமைந்துள்ள போளூவாம்பட்டி வனச்சரகப்பகுதியில் தலைமை வன பாதுகாப்பு அலுவலர் சிங்கார் தலைமையில் இன்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஈஷா யோகா மையம் மற்றும் சில கல்வி நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக தலைமை வன பாதுகாப்பு அலுவலர் சிங்காரிடம் பேசியபோது, “யானை-மனித மோதலை தடுக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
மேலும், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்படும். அதன் அடிப்படையில் விதிமீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,”என்றார்.
கோவை பகுதியில் 20க்கும் அதிகமான முக்கிய நிறுவனங்கள் இந்த ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கியுள்ள நிலையில், இந்த ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ஜெ.ரவி