Published:Updated:

``யானை வளர்ப்பு குறையிறதுலயும் அரசியல் இருக்குங்க!" சொல்லும் 'யானை வீடு' ஹரிஷ்

'யானையை வளர்க்கிறேன்ங்கிற பேர்ல மனிதர்கள் துன்புறுத்துறாங்க' - விலங்குநல ஆர்வலர்களின் முதல் வாதம் எப்போதும் இதுதானே? 

``யானை வளர்ப்பு குறையிறதுலயும் அரசியல் இருக்குங்க!" சொல்லும் 'யானை வீடு' ஹரிஷ்
``யானை வளர்ப்பு குறையிறதுலயும் அரசியல் இருக்குங்க!" சொல்லும் 'யானை வீடு' ஹரிஷ்

ரலாற்றில் மனித இனம், காட்டில் வாழும் எல்லா விலங்குகளையும் வளர்த்ததில்லை. மனிதனுக்குப் பயன்பட்ட காட்டு விலங்குகளை மட்டும்தான் கட்டுப்படுத்திப் பழக்கத் தொடங்கினான். நாளடைவில் அவை மனிதனிடம் நட்பாய் நெருங்கிவிட்டது. யானைகளுக்கு அத்தகு நெருக்கம் உண்டு. பல்லுயிர்ச் சூழலில், யானை வளர்ப்பு என்பதும் இயற்கையோடு இயைந்ததுதான் என்கின்றனர் மேற்கண்ட வாதத்திற்கு எதிர்க்குரல் கொடுப்பவர்கள். ஒருபுறம், இந்திய யானை இனங்கள் அழிந்து வருகின்றன. இன்னொரு புறம், கோயில்களில் யானை வளர்ப்பது குறித்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.. இந்தச் சூழல் குறித்து மதுரை யானை வளர்ப்பில் பிரசித்தி பெற்ற ‘யானை வீட்டு’க்காரர்களிடம் பேசச் சென்றிருந்தோம்.

மதுரை தல்லாகுளம் பகுதியில், ‘யானை வீடு’ என்றால் அங்குள்ள அனைவருக்கும் வழி தெரியும். 'யானை கொஞ்சம் வெளியே போயிருக்கு, இங்க பக்கத்துலதான்' என்றதும், 'அங்கேயே போவோமே' என்றோம். தென்னங்கீற்றுகளை ருசிபார்த்துக்கொண்டிருந்தது, 'லட்சுமி'. அதன் சேட்டைகளை ரசித்துக்கொண்டே, யானை வீட்டுக்காரர்டம் பேச்சுக்கொடுத்தேன்.

"நான்கு தலைமுறைகளாக யானைகளோடு பழகி வருகிற குடும்பம் எங்களோடது. அப்பாவோட தாத்தா பல ஊர்களில் யானைப் பாகனாக இருந்தவர். அரசு ஏலம்விட்ட யானைகளை தாத்தா ராஜாராம் வாங்கி வளர்க்கத் தொடங்கினார். அடுத்து அப்பா ரெங்கன், இப்போ, நான் ஹரிஷ். யானைதாங்க எங்க வாழ்க்கை!” என தங்கள் வம்சத்தின், யானை அளவிலான வரலாற்றை அதன் வால் அளவுக்குச் சுருக்கிச் சொன்னார்.

எதிர்பாராத விபத்துகள் நடைபெறுவதால், தமிழகக் கோயில்களில் யானை வளர்ப்பதைப் பற்றிப் பெருத்த விவாதங்கள் இப்போது நடக்கின்றதே எனக் கேட்டதற்கு, “பழக்கப்படுத்தப்படும் யானைகளுக்குத்தான், வசதிகளும் சூழலியல் வாய்ப்புகளும் அதிகம். காட்டில் வாழ்வதைவிட, மனிதர்களிடம் வளருகின்ற யானைக்குத்தான் வாழ்நாள் அதிகரிக்கின்றன. யானை, மிகவும் சாது. அவற்றின் இயல்புகளைப் புரிந்து நடந்துகொண்டாலே போதும்” என்கிறார் ரெங்கன். 

காட்டில் வாழும் தகுதியை பழக்கப்படுத்திய யானைகள் இழந்துவிடுகின்றன; மனிதப் பழக்கம் கொண்ட யானை குட்டியைக் கூட காட்டு யானைக் கூட்டங்கள் சேர்த்துக் கொள்வதில்லை. இதனால்தான் யானைகளை அதிகமாக மனித பழக்கத்துக்கு ஈடுபடுத்த வேண்டாம் என விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாற்றுப்பார்வையை முன்வைக்கின்றனர் இருவரும்.

மேலும், “யானைகளை வனத்துறையினர் பயிற்றுவித்து வளர்ப்பதைப் போலத்தான் வீடு, கோயில்களிலும் வளர்க்கப்படுகின்றது. அங்குசங்களும் சங்கிலிகளும்அவற்றைப் பயிற்றுவிப்பதற்குத்தானே அன்றி அதனைத் துன்புறுத்துவதற்கல்ல” என விளக்கினார். தங்கள் காலத்துக்குப் பின்னால், யானை வளர்ப்பு அழிந்துவிடுமோ என அஞ்சுவதாகக் கூறுகின்றனர், இருவரும்.

பாகன்கள் குறித்துக் கேட்டேன். “என் முன்னோர் காலத்தைவிடவும் இப்போதெல்லாம் யானைப் பயிற்றுநர்கள் மிகவும் குறைவாகவே கிடைக்கின்றனர். வருமானம் இல்லாததால் இதில் யாரும் ஆர்வம் காட்டுவதுமில்லை. விபத்துகள், பயிற்றுநர் குறைவு போன்றவற்றையெல்லாம் காரணமாக்கி யானை வளர்ப்பைத் தடுக்க முயல்கின்றனர். ஜல்லிக்கட்டுக்காளை இனத்துக்கு எதிராக நடைபெற்ற அரசியல், யானை இனத்துக்கு எதிராகவும் நடக்கின்றது” என ஆதங்கப்பட்டார், ஹரிஷ்.

யானை வளர்ப்புப் பற்றிக் கூறும்போது, “எங்களிடம் தற்போது இரண்டு யானைகள் உள்ளன. கடச்சனேந்தலில் உள்ள எங்களது பண்ணை வீட்டில் இவை நிம்மதியாக வளர்கின்றன. உணவு, ஓய்வு, பயிற்சி, மருத்துவம் என எதிலும் எந்தக் குறையும் இல்லை. எங்கள் சார்பில் அரசாங்கத்துக்கு வைக்கின்ற கோரிக்கையொன்று உண்டு” என, தந்தை ரெங்கன் இடைவெளி விட்டதும், மகன் ஹரிஷ் தொடர்கிறார்.

“தமிழகத்தில் வளர்க்கப்படும் தனியார் யானைகள் அனைத்தும் பெண் யானைகளே. காட்டில் வாழ்கின்ற இயல்புடனேயே அவற்றை வளர்க்கிறோம். ஒரேயொரு குறை என்றால், அப்படி வளர்க்கப்படும் யானைகள் இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பில்லாமல் போவதே. வனத்துறையிடம் இருக்கின்ற ஆண் யானைகளோடு, இவை போன்ற தனியார் யானைகள் இனப்பெருக்கம் கொள்வதற்கு அரசு அனுமதி தரவேண்டும். அப்போதுதான், இந்தியாவில் அழிந்துவருகின்ற யானைகளின் இனம் மீடேறும்” என்று வேண்டுகோள் விடுக்கும் ஹரிஷ், பல்வேறு நாடுகளுக்கும் சென்று யானை வளர்ப்பு, யானைகளின் இனப்பெருக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து அரசிடம் கோரிக்கை மனுக்களையும் அளித்துள்ளார். சுயதொழில் செய்துவரும் ஹரிஷ், அதில் வரும் பங்கினை யானை பராமரிப்பிற்குச் செலவிடுகிறார். அழிந்துவரும் இந்த இனத்தைக் காப்பதற்குப் பிரத்யேக இணையதளம் மூலம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.

வழித்தடங்களை அழித்தல், மனிதர்கள் ஊடுருவி வனங்களை நாசமாக்குதல், தந்தத்துக்காக வேட்டையாடுதல் போன்றவற்றினால் இந்திய யானை இனங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இந்நிலையில் யானைகளின் பாதுகாப்பில் இதுபோன்ற யானை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், யானை ஆர்வலர்கள் போன்றவர்களையும் உள்ளடக்கி, பாதுகாப்பு திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும்.