Published:Updated:

`தயவுசெஞ்சு எங்க சின்னத் தம்பியை விட்ருங்க!"... யானைக்காக உருகும் கிராமம்

சின்னத் தம்பி ரொம்ப சாதுவானவன். ஓட்டைப் பிரிச்சு வீட்டுக்குள்ள இருக்கிற அரிசியை பையோடு தூக்கிட்டுப்போறது... ஊருக்கு மத்தியில உள்ள குட்டையில வந்து விளையாடுறதுன்னு அவன் அடிக்கிற லூட்டிகள் கொஞ்ச நஞ்சமல்ல.

`தயவுசெஞ்சு எங்க சின்னத் தம்பியை விட்ருங்க!"... யானைக்காக உருகும் கிராமம்
`தயவுசெஞ்சு எங்க சின்னத் தம்பியை விட்ருங்க!"... யானைக்காக உருகும் கிராமம்

``அவன் செய்யுற சேட்டைகளை நினைச்சு எங்களுக்குச் சிரிப்புதான் வருமே ஒழிய,  பயம் அண்டாது. எங்க வாழ்க்கையில இதுவரைக்கும் எத்தனையோ யானைங்களைப் பார்த்திருக்கோம். ஆனால், இவன் வேறமாதிரி. பேருக்குத்தான் காட்டு யானை. ஆனால், எங்க வீட்ல ஒருத்தன் மாதிரி. எப்போதும் எங்களையே சுத்திசுத்தி வர்றான். எந்த இடைஞ்சலும் தர்றதில்லை. யாரையும் தாக்குறதில்லை. அவனை இங்கிருந்து பிடிச்சிகிட்டுப் போக ஃபாரஸ்ட்காரங்க திட்டம் போட்ருக்காங்கன்னு சொல்லும்போது மனசு கிடந்து அடிச்சுக்குது. அவனை தொந்தரவு செய்யாம அவன்போக்குல விட்டுருங்க”  ஆனைகட்டியையொட்டியுள்ள ஏராளமான பழங்குடியின கிராம மக்கள் `சின்னத் தம்பி’ என்ற காட்டு யானைக்காக கண்ணீர்கசிய மன்றாடுவதைப் பார்க்கும்போது நெக்குருகிப்போகிறது.

கோவை  ஆனைகட்டி  மலையையொட்டிய வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் சின்னத் தம்பி, விநாயகன் என்கிற இரண்டு காட்டு யானைகள் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக இடையூறு செய்கிறது. விவசாய நிலங்களைச் சேதப்படுத்துகிறது. என்ற குற்றச்சாட்டை அப்பகுதி விவசாயிகள் நீண்ட நாள்களாக முன்வைத்து வந்தார்கள். அதனையடுத்து, நான்கு கும்கிகளை வரப்பாளையம் வனத்தையொட்டிய பகுதியில் நிறுத்தி வைத்திருக்கிறது வனத்துறை. அந்த யானைகளைப் பிடித்து வேறு இடத்துக்குக் கொண்டு செல்வதற்காகத்தான் வனத்துறை கும்கிகளை களம் இறக்கியுள்ளது என்று தகவல் பரவ ஆரம்பித்தது. இதனையடுத்து பழங்குடியின மக்களும், சமூக ஆர்வலர்களும் யானைகளைப் பிடிக்கக் கூடாது என்று எதிர்த்து `எங்களையும் வாழவிடுங்கள்’ என்று யானைகள் சார்பாக ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியுள்ளார்கள். இந்த விவகாரம் விஸ்வரூபமெடுக்கவும் யானைகளைப் பிடிப்பதற்காக கும்கிகளை நிறுத்தவில்லை என்று விளக்கமளித்துள்ளது. ஆனாலும் மக்கள் அதை நம்பத்தயாராக இல்லை.

காட்டு யானைகளைப் பிடிக்கக் கூடாது என்று சொல்லும் பழங்குடியின மக்களைச் சந்தித்தோம். `சின்னத் தம்பியைப்’ பற்றிக் கேட்டதுமே ஜம்புகண்டியைச் சேர்ந்த ராஜேந்திரனின் முகத்தில் சிரிப்பு தவழ்கிறது, ``யானைங்க ஒரு இடத்துக்கு வந்தா அதே இடத்துல மூணு மாசம் டேரா போட்டுரும். ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு விதமா இருக்கும். ரெகுலரா வர்ற யானைங்களுக்கு ஊருக்குள்ள ஏதாவது பேரு வெச்சிருவாங்க. செவ்வாழை, மக்னா, மொன்ன வாலு, ரவுடி ரங்கம்மான்னு பல யானைகள் இங்கே இருக்குது. ரவுடி ரங்கம்மா மோசமானவ... எதுக்கும் அசைஞ்சு கொடுக்க மாட்டா ராக்கெட் விட்டாலும் அதைப் பிடிச்சு வீசுவா... அவளைக் கண்டா ஒரு பயம் இருந்துட்டே இருக்கும். ஆனால், சின்னத் தம்பி அப்படி இல்லை. ஆரம்பத்திலிருந்தே சாதுவானவன். ஓட்டைப் பிரிச்சு வீட்டுக்குள்ள இருக்கிர அரிசியை பையோடு தூக்கிட்டுப்போறது... ஊருக்கு மத்தியில உள்ள குட்டையில வந்து விளையாடுறதுன்னு அவன் அடிக்கிற லூட்டிகள் கொஞ்ச நஞ்சமல்ல. சொன்னா நம்புவீங்களான்னு தெரியல ஒருவீட்ல  சமையல்கட்டுக்கு நேரா உள்ள ஓட்டைப் பிரிச்சு தும்பிக்கையை மட்டும் கரெக்ட்டா சோத்துப் பானைக்கு விட்ருக்கான். 

அந்த வீட்டம்மா, தும்பிக்கையில் நாலு அடியைப் போட்டதும் அப்படியே விட்டுட்டுப் போயிட்டான்னா பாத்துக்கோங்களேன். ஆரம்பத்துல ஒரு பெரிய யானையோடு ஜோடி சேர்ந்து வந்ததால இவனுக்கு சின்னத் தம்பின்னும் அந்தப் பெரிய யானைக்குப் பெரிய தம்பின்னும் பேராகிப் போயிருச்சு. இவன் ஊருக்கே செல்லப்பிள்ளை மாதிரி சுத்திக்கிட்டு திரியுறான். இவனால சின்னச் சின்ன தொல்லைகள் இருந்தாலும், பெரிய அளவுல பிரச்னை எதுவுமில்லை. இவனை பிடிச்சுட்டுப்போய் வேற இடத்துல விடுறது எந்த வகையிலும் நியாயம் இல்லை. என்று வார்த்தைக்கு வார்த்தை யானைகளை தங்களில் ஒருவனாக இணைத்துப் பேசும் ராஜேந்திரன், `எப்ப என்ன நடக்குமோங்குற பயம் ஒவ்வொரு நிமிஷமும் எங்களுக்கும் இருக்குதான். இந்த யானையைப் பிடிச்சுட்டுப் போயிட்டா அது சரி ஆகிருமா? என்று கேட்கிறார்.

கொண்டனூர் புதூரைச் சேர்ந்த பொன்னம்மாள், ``சின்னத் தம்பி மட்டுமல்ல, விநாயகன் உட்பட எந்த யானைங்களாலும் எங்களுக்குப் பிரச்னை இல்லை. இந்தக் காட்டுல இருக்குற யானைங்கதான் எங்களுக்கு சாமி. என் வயசுக்கு நான் எத்தனையோ யானைங்களை பார்த்துட்டேன். திண்ணையில தூங்கிட்டு இருக்கும்போது பக்கத்துல வந்து நின்னுருக்கு. காட்டுக்குள்ள போகும்போது எதிர்ல வந்து மறைச்சுருக்கு. கையெடுத்துக் கும்பிட்டு அப்படியே நின்னா... தும்பிக்கையைத் தூக்கி சரணம் வச்சுட்டுப் போயிட்டே இருக்கும். உங்கள கல்லால அடிச்சா, பட்டாசுபோட்டு வெடிச்சா பார்த்துட்டு சும்மா இருப்பீங்களா.. அப்படி அதைத் தொந்தரவு செய்யும்போதுதான் ஏதாவது எசக்குப்பிசக்கா பண்ணிவிட்ரும். நானும் ஒரு ஏக்கர்ல விவசாயம் பண்றேன். விதைக்கும்போதே `நீ எடுத்துக்கிட்டது போக, மீதியை எங்களுக்குக் குடுன்னு’ வேண்டிதான் விதைப்பேன். என் நிலத்துல பலதடவை பயிர்களை சாப்பிட்டுருக்கு. ஆனா முழுசா சூரையாடினது இல்ல. அதுக்குப் போகதான் நமக்குன்னு நினைச்சுப்பேன். அதுவும் ஒரு உசுருதான.. எம்மாம்பெரிய ஜீவன். அது வயித்துப் பசிக்கு வெளில வருது. அடிச்சித் துரத்தாம அதுங்களையும் வாழவிடணுங்க என்று நெகிழவைக்கிறார். 

இந்தச் சூழலில் இன்னொருபக்கம், அந்த யானைகளைப் பிடித்து வேறு இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற குரலும் விவசாயிகள் மத்தியில் கேட்கிறது, சேம்புக்கரையைச் சேர்ந்த வெள்ளியங்கிரியிடம் பேசினோம், ``நான் அஞ்சு ஏக்கர்ல விவசாயம் பண்ணியிருக்கேன். ஜாலியா விளையாடுது. லூட்டி அடிக்கிது. மனுஷங்களை எதுவும் செய்யுறதில்லைன்னு சொல்றதெல்லாம் விவசாயம் பண்ணாம இருக்கிறவங்களுக்கு வேணும்னா நல்லா இருக்கலாம். ஆனால், பல ஆயிரம் செலவழிச்சு நட்ட பயிர்களையெல்லம் சீரழிக்கும் யானைகளை எந்த விவசாயியும் தொல்லை இல்லைன்னு சொல்ல மாட்டான். என்னதான் கட்டுக்குள்ள விரட்டினாலும், ஒரு ரவுண்டுபோயிட்டு திரும்பவும் வந்திருது. இங்கே யானைங்க பிரச்னையால விவசாயத்தையேவிட்டுட்டு கூலிவேலைக்குப் போறவங்க நிறைய பேர் இருக்காங்க. வெளியில இருக்கும் சிலபேர், யானைங்க நாசம் பண்ணும் பயிர்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு கொடுக்குதேன்னு செலவழிச்சதுல நாலுல ஒருபங்குகூட நஷ்ட ஈடு கிடைக்காது. நாங்க என்ன பண்றது சொல்லுங்க? பயிர்களை சாப்பிட்டு ருசி கண்ட யானைகளை எவ்வளவுதான் கன்ட்ரோல் பண்ணாலும், அது திரும்பவும் காட்டைவிட்டு வெளிலவர்றதுலதான் குறியா இருக்கும். அந்த யானைங்களைப் பிடிச்சு வேற இடத்துல விட்டுட்டு. புதுசா யானைங்க விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்கிறார்.

யானைகளுக்கு ஆதரவாகப் போராடிவரும் சமூக ஆர்வலர் ஜோஸ்வாவிடம் இதுகுறித்துப் பேசினோம், ``இதற்கு முன்பு யானைகளைப் பிடிப்பதற்காகத்தான் கும்கிகளைக் கொண்டு வருவார்கள். முதுமலையிலிருந்து யானைகளைக் கொண்டு வந்து நிறுத்துவதற்கு எக்கச்சக்கமா செலவாகும். எவ்வளவு நாள்கள் இவர்கள் கும்கியை வைத்து காட்டு யானைகளை விரட்டுவார்கள்.? அப்படி விரட்டினாலும், அந்த இரண்டு யானைகளும் மீண்டும் வெளியில் வராது என்பதற்கு என்ன நிச்சயம்? இவர்கள் ஏதோவொரு முடிவோடுதான் கும்கியைக் கொண்டு வந்தார்கள். யானைகளுக்கு ஆதரவான குரல் வலுத்ததும் இப்போது இல்லை என்கிறார்கள். பொறுத்திருந்து பார்த்தால்தான் என்ன நடக்கிறது என்பது தெரியும். பொதுவாக யானைகள் ஒரே இடத்தில் நீண்ட நாள்கள் தங்காது. ஆனால், சின்னத் தம்பியும், விநாயகனும் பல வருடங்களாக இங்கேயே இருக்கின்ற அதற்கான காரணத்தை வனத்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும். யானைகளுக்குச் சொந்தமான காடுகளை ஆக்கிரமிக்கப்படுவதையும், யானைகளுக்கு இடையூறாக விதிகளை மீறி கட்டடங்கள் எழுப்பப்படுவதையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு  இருந்துவிட்டு, இறுதியில் யானைகள் மீது பழிசுமத்தி வெடி வைத்து விரட்டுவது எந்த வகையிலும் நியாயமே கிடையாது. இந்த நிலத்தின் மீது நமக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ... அதே உரிமை எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறது. வெடி வைத்து விரட்டுவது, கும்கிகளை வைத்து மிரட்டுவதெல்லாம் தற்காலிகத்தீர்வுதான். நிரந்தரத்தீர்வை நோக்கி அரசு நகர வேண்டும். வனத்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றார்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேசனிடம் விளக்கம் கேட்டோம், ``எவ்வளவோ விளக்கம் கொடுத்தும் தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள். யானைகளைப் பிடித்து வேறு இடத்துக்கு கொண்டு செல்வதற்காகக் கும்கிகளை கொண்டுவரவில்லை. இவ்வளவு நாள்களாகக் காட்டிலிருந்து வெளியேறும் காட்டு யானைகளை எங்களுடைய டிப்பார்ட்மென்ட் ஆட்களை வைத்து மீண்டும் காட்டுக்குள் விரட்டினோம். இப்போது கும்கியை வைத்து விரட்டுகிறோம் அவ்வளவுதான். யானையைப் பிடிப்பதற்காக இல்லை என்கிறார் தீர்க்கமாக.