Published:Updated:

காட்டுக்குள் நுழைய 'ரெட் சிக்னல்'... நாட்டு மாடுகள் அழியும் அபாயம்!

காட்டுக்குள் நுழைய 'ரெட் சிக்னல்'... நாட்டு மாடுகள் அழியும் அபாயம்!
காட்டுக்குள் நுழைய 'ரெட் சிக்னல்'... நாட்டு மாடுகள் அழியும் அபாயம்!

ஏற்கெனவே பல சிக்கல்களைச் சந்தித்துவரும் நாட்டு மாடுகள் தற்போது வனத்துறையின் முடிவால் திருவண்ணாமலையில் மேலும் ஒரு சிக்கலை எதிர்கொண்டு நிற்கின்றன.

ந்தக்கருப்பன், அழுக்குமறையன், ஆளைவெறிச்சான், கட்டைக்காரி, குண்டுக்கண்ணன், குள்ளச்சிவப்பன், நெட்டைக்காலன், பொங்குவாயன்...இப்படி ஒன்றா, இரண்டா? 92 வகை நாட்டு மாடுகள் இன்று வரலாற்று குறிப்பேட்டில் வெறும் பெயர்களாக மட்டுமே இருக்கின்றன. ஒருகாலத்தில் வீட்டுக்கு வீடு நின்றுகொண்டிருந்த மாடுகளின் இடத்தை இன்று டிராக்டர் ஆக்கிரமித்திருந்தாலும், இன்னும் சிலர் பாரம்பர்யத்தைக் கைவிடமால் நாட்டு மாடுகளை வளர்த்து வருகின்றனர். ஆனால், அதற்கும் தற்போது சிக்கல் உண்டாகியிருக்கிறது.

"சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு, பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு" என்று உற்சாக குரலில் முணுமுணுத்துக் கொண்டு இருக்கும் மாட்டுக்காரர் வாசு, கனத்த குரலில் கண்களில் நீர் வடிய "எல்லா மாடுகளையும், அடிமாட்டு விலைக்கு வித்துடணுமுங்க" என்று சொல்வதைக் கேட்டு அவரிடம் தொடர்ந்து பேசினோம். 250 நாட்டு மாடுகளுக்குச் சொந்தக்காரர் இவர். மூன்று தலைமுறையாக மாடுகளை வைத்து பிழைக்கும் குடும்பம் இவருடையது.

"திடீரென ஏன்ணே இப்டி சொல்றீங்க?" எனக் கேட்டோம்.

"என்ன புள்ள சொல்றது, மூணு தலைமுறையா மாடுகளைதாம் குல சாமியா வளத்துகிட்டு வர்றோம். ஆறு மாசம் வயல்வெளி, பாக்கி ஆறு மாசம் காடுன்னு அதுங்களும் நல்லாதான் வளந்துச்சு. இதுக்கு அப்புறம் இதுங்கள வச்சு சமாளிக்க உடம்புல வலு இல்லய்யா" என்று சொல்லும் வாசுவின் புலம்பலுக்கு காரணம் திருவண்ணாமலை பகுதியைச் சுற்றியுள்ள வன அதிகாரிகள்தான்.

தமிழ்நாட்டில் நாட்டு மாடுகள் வைத்திருப்பவர்கள் பலரும் மாடுகளை ஆறு மாதம் வயல்வெளிகளில் வளர்த்தது முடித்து, மழைக் காலங்களில், அதாவது புரட்டாசி முதல் தை மாதம் வரை காட்டில் மாடுகளை விட்டு வளர்ப்பது மூன்று தலைமுறை வழக்கமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. 

கடந்த 50 ஆண்டுகளாகக் கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி காடு, ரெட்டியார்ப்பாளையம் காடு, வேப்பூர் காடு மற்றும் செங்கம் தாலுக்கா புளியாம்பட்டி காடு, சாத்தனூர் அணைக்குட்பட்ட காடுகள் என திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளில் மழைக் காலங்களில் நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். மழைக்காலங்களில் மாடுகளை நிலப்பரப்பில் பராமரிப்பது கடினம் என்றும், உணவுப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருப்பாதாலும் இம்முறை பின்பற்றப்படுகிறது. காடுகளில் மாடுகளை மேய்ச்சல்க்கு விட மாடு ஒன்றுக்கு தலா 4 ரூபாய் கொடுத்து பாஸ் எடுத்து கொண்டு மாடுகளை விட வேண்டும் என்ற திட்டம் வழக்கில் இருந்தது. 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் காடுகளில் ஆடு, மாடுகளை விடுவதற்கு பாஸ் தேவையில்லை என்றும் அனைத்து ஆடு, மாடுகளுக்கும் இலவசம் என்றும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. அன்று முதல் இன்று வரை மாடுகளை, அனைவரும் இலவசமாக மேய்ச்சலுக்கு விட்டுப் பிழைப்பு நடத்துகின்றனர்.

"இத்தனை நாள் நல்லாதான் போச்சு புள்ள... ஆனா, இந்த வருஷம் வன அதிகாரிங்க மாடுகளை மேய்ச்சலுக்கு கட்டுக்குள்ள அனுமதிக்க மாட்றாங்க. எவ்வளவோ கெஞ்சி பாத்துட்டோம்; காரணம் கூட சொல்ல மாட்றாங்க. மேல் அதிகாரிங்க விடக்கூடாதுன்னு சொல்றாங்கன்னு ஒத்த வார்த்தையில எங்க வாயை அடச்சுடுறாங்க. எல்லாத்துக்கும் மேல மாட்டுக்கு இவ்வளவுன்னு கணக்கு போட்டு 200 மாட்டுக்கும் ஒரு கணிசமான தொகை எங்களுக்கு கொடுங்க; அப்போதான் மாடுகளை காட்டுக்குள் அனுமதிப்போம்ன்னு சொல்றாங்க. இந்த நிலைமை நீடிச்சா எல்லா மாட்டையும் அடி மாட்டு விலைக்கு வித்துட வேண்டியதுதான்" என்று குமுறும் வாசுவின் குரலில் அவரின் வாழ்வாதாரம் மட்டுமில்லை; இந்தப் பகுதியைச் சுற்றியிருக்கும் ஒட்டு மொத்த நாட்டு மாடுகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருக்கிறது.  

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா வனவர் வெங்கட்ராமன் கூறியதாவது, "உள்ளூர் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கிறோம். வெளியூர் மாடுகளைத்தான் அனுமதிப்பதில்லை. காரணம், வெளியூர் மாடுகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் சேர்வதால், வன விலங்குகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் அவற்றின் இனப்பெருக்கம் குறையவும் வாய்ப்புண்டு." என்றார். மேலும், இத்தனை ஆண்டுகள் மக்கள் அரசு ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாகத்தான் மாடுகளை காட்டில் விட்டுச்சென்றதாகவும், இப்போது மாடுகளை அனுமதிக்கக்கூடாது என வன அலுவலர் கூறியிருப்பதால்தான் அனுமதிப்பதில்லை என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மேய்ச்சல் காடுகள் உண்டு; இனி அந்தந்த மாவட்ட மாடுகள் அந்தந்த காடுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு ஏன் அனுமதிப்பதில்லை என மாவட்ட வன அழுவறான கிருபா சங்கரிடம் கேட்டோம். "காட்டில் மேய்ச்சலுக்கு, உள்ளூர் மாடுகளை அனுமதிப்பதில் எந்த ஒரு தடையும் இல்லை. வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து விடப்படும் மாடுகளைத்தான் அனுமதிப்பதில்லை. மேலும், வெளியூர் மாடுகளை அனுமதித்தால் காட்டில் உள்ள வன விலங்குகளுக்கு வீண் தொந்தரவு அதனால் அனுமதி மறுக்கப்படுகிறது. இதுநாள் வரை பாஸ் சிஸ்டம் இருந்தது. அப்போதுகூட உள்ளூர் மாடுகளுக்குத்தான் அனுமதி. வெளியூர் மாடுகள் எப்படி காட்டுக்குள் வந்தது என்று தெரியவில்லை. கடந்த ஆண்டு வரை வந்ததாகக் கூறுகிறார்கள் ஆனால் எனக்கு ஏதும் தெரியவில்லை. இனிமேல் வெளியூர் மாடுகள் மேய்ச்சல் காடுகளையோ அல்லது புறம்போக்கு காடுகளையோ தான் பயன்படுத்தவேண்டும். அவரவர் மாட்டிற்கான உணவை அவரவர்கள்தான் ஏற்பாடு செய்யவேண்டும்" என்றார்.

முறையான மேய்ச்சலுக்கு வழி இல்லாமல், காடுகளுக்குள்ளும் செல்ல அனுமதி கிடைக்காமல், இறுதியாக அடிமாடாகச் செல்லும் நிலை நாட்டு மாடுகளுக்கு வரும்முன்னர் இந்தப் பிரச்னைக்கு அரசு தீர்வுகாணவேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு