Published:Updated:

`ஆண்களைப் பார்த்தாலே அலறி அழுவாள்!' - பாலியல் கொடுமையை அனுபவித்த உராங்குட்டான் குரங்கு

`ஆண்களைப் பார்த்தாலே அலறி அழுவாள்!' - பாலியல் கொடுமையை அனுபவித்த உராங்குட்டான் குரங்கு
`ஆண்களைப் பார்த்தாலே அலறி அழுவாள்!' - பாலியல் கொடுமையை அனுபவித்த உராங்குட்டான் குரங்கு

`காலம் கலி காலம் ஆகி போச்சுடா....’ என்னும் வைரமுத்து பாடல் வரிகள் உண்மை என்பதை மனித இனம் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் செய்தியை அன்றாடம் கடக்கிறோம். ஒரு சில மனிதர்கள் ஒரு படி மேலே போய், விலங்குகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். சில நாள்கள் முன்னர் மும்பையில் குடிபோதையில் இருந்த 4 பேர் சேர்ந்து தெரு நாயைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதேபோன்ற கொடூர சம்பவம் இந்தோனேசியாவில் 2003-ல் நடந்தது. மனித உருவில் திரியும் மிருகங்கள் சிலரால் உராங்குட்டான் குரங்கு ஒன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து இன்றுவரை அந்தக் குரங்கு மீண்டு வரவில்லை. என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.. 


 

 `உராங்குட்டான்’ என்பது அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் உள்ள ஒரு வகை குரங்கு. மழைக்காடுகளில் காணப்படும் இந்தக் குரங்குகள் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன. மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள மழைக்காடுகளை அழித்து பனை எண்ணெய் மரங்களை நடும் வேலையில் பன்னாட்டு நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது உராங்குட்டான் குரங்குகள்தான். அப்படி இந்தோனேசியாவின் போர்னியா காட்டில் இருந்து துரத்திவிடப்பட்ட உராங்குட்டான் குரங்கு ஒன்று தன் குட்டியுடன் அருகில் இருந்த கரேங் பாங்கி என்னும் கிராமத்துக்குள் புகுந்தது. அதன் போதாத நேரம் பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் கைகளில் சிக்கியது. அந்தப் பெண் தன் ஆட்களை வைத்து உராங்குட்டானிடம் இருந்து குட்டியை திருடினார்.  உராங்குட்டான் குட்டியின் ரோமங்களை சவரஞ்செய்து பாலியல் தொழிலில் அதை ஈடுபடுத்த முடிவு செய்தார். காரணம், உள்ளூர் பனை எண்ணெய் விவசாயிகள் மலிவான விலைக்கு பாலியல் உறவு கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பவர்கள்.

உராங்குட்டான் குட்டியின் மீது வாசனைத் திரவியங்களை பூசப்பட்டது. ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. விவசாயிகள் சிலர் உராங்குட்டான் குட்டியுடன் பாலியல் உறவு கொள்வதை வாடிக்கையாக வைத்துக்கொண்டனர். உராங்குட்டானைவிட உருவத்தில் இரண்டு மடங்கு எடை கொண்ட குண்டான முதியவர் ஒருவர் தினமும் உராங்குட்டான் குட்டியைத் தேடி பெண் வீட்டுக்கு வரத் தொடங்கினார்.  சிலர் புதிய அனுபவத்தைப் பெறவும் உராங்குட்டானைத் தேடி வந்தனர்.  இரண்டு தினங்களுக்கு ஒருமுறை உராங்குட்டான் குட்டியின் ரோமங்கள் சவரஞ்செய்யப்பட்டது. உராங்குட்டானுடன் ஒரு இரவு தங்குவதற்கு 3 டாலர் வசூலிக்கப்பட்டது. அந்தப் பெண், குட்டியை அடித்துத் துன்புறுத்தி வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தார்.


சில மாதங்களில் கிராம மக்களுக்கு இந்த விவகாரம் தெரிய வர, அந்தப் பெண்ணின் மீது வனத்துறையில் புகார் கொடுத்தனர். 35 ஆயுதமேந்திய போலீஸார் அந்தப் பெண்ணின் வீட்டைச் சுற்றி வளைத்து உராங்குட்டான் குட்டியை மீட்டனர். அந்தப் பெண்ணுக்கு உள்ளூர்வாசிகளின் ஆதரவு இருந்ததால் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. உராங்குட்டான் காப்பகத்துக்கு வந்து அதிகாரிகளைக் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி அவர்கள் மிரட்டியுள்ளனர். கிராம மக்களில் சிலர் என்ன நடந்தது என்பதை ஊடகங்களுக்குச் சொன்ன பிறகுதான் உராங்குட்டான் குட்டிக்கு நடந்த கொடூரம் வெளியே தெரிய வந்தது.  போர்னியோ உராங்குட்டான் சர்வைவல் பவுண்டேசன் என்னும் அமைப்பு, மீட்கப்பட்ட அந்த உராங்குட்டானை தத்தெடுத்தது. போர்னியோ உராங்குட்டான் காப்பகத்தில் வளர்த்தனர். இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது அந்த உராங்குட்டான் குட்டி எப்படியிருக்கிறது என்பது குறித்து சர்வைவல் பவுண்டேசன் அமைப்பின் இயக்குநர் மைக்கேல் dailymail ஊடகத்திடம் விவரித்துள்ளார். 

`2003-ல் தான் இவளை மீட்டோம். ஓர் இருட்டு அறையில் உடலில் ரணங்களுடன் அமர்ந்திருந்தாள். அவள் கால்களில் சங்கிலி கட்டப்பட்டிருந்தது. மிகவும் குட்டியாக இருந்தாள். இப்போது வளர்ந்துவிட்டாள். சில ஆண்டுகள் ஆண்களைப் பார்த்தாலே அலறி அழுவாள். பயத்துடன் பதுங்கிக் கொள்வாள். போனி என்று இவளுக்குப் பெயர் வைத்தோம். இவளை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்தப் பெண், உள்ளூரில் அந்தஸ்து பெற்றவர் என்பதால் போனியைக் கொன்றுவிடுவார் என்று அஞ்சினோம். எனவே, உராங்குட்டான் காப்பகத்துக்கு வந்து மாதத்துக்கு ஒருமுறை போனியை வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று அந்தப் பெண்ணுக்கு அனுமதி அளித்தோம். போனி, ஒவ்வொரு முறையும் அந்தப் பெண்ணைப் பார்க்கும்போதும் அலறி அழுது, மலம் கழித்துவிடுவாள். போனியை அவர்கள் அனைவரும் அவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக போனியின் பயத்தைப் போக்கினோம். 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது போனி ஆண்களைப் பார்த்தால் பயப்படுவது கிடையாது. சுதந்திரமாக காப்பகத்தின் மரங்களில் தாவி விளையாடுகிறாள். அவளுடன் ஏழு உராங்குட்டான் குரங்குகள் வசிக்கின்றன. ஒரே பிரச்னை மட்டும்தான். காப்பகத்திலிருந்து தீவுக்குள் கொண்டு போய்விட்டால், பயத்தில் மீண்டும் காப்பகத்துக்கே வந்துவிடுகிறது. சிறுவயதில் போனி சந்தித்த அந்த வலிமிகு அனுபவம்தான் இந்தளவுக்கு வெளி உலகின்மீது பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது’ என்று பேசியுள்ளார்.

Image Credits : BORNEO ORANGUTAN SURVIVAL FOUNDATION