Published:Updated:

"55 வயசுல ஒரேமுறைதான் பஸ்ஸில் போயிருக்கேன்.. !" - மலைக்கவைக்கும் கிராமவாசி மருதை

"எங்க அண்ணன் பொன்னுச்சாமி, விடாம எனக்குப் பொண்ணு பார்த்தார். எட்டூரு சீமையிலயும் எனக்குப் பொண்ணு கிடைக்கலை. 'பேசாம சோலியப் பாருங்கண்ணே. மாடுகளை மேய்ச்சுக்கிட்டே காலத்தை ஓட்டிக்கிறேன்'ன்னு சொன்னேன்" என்றபோதே, அவரது கண்களில் கல்யாண ஏக்கம்.

"55 வயசுல ஒரேமுறைதான் பஸ்ஸில் போயிருக்கேன்.. !" - மலைக்கவைக்கும் கிராமவாசி மருதை
"55 வயசுல ஒரேமுறைதான் பஸ்ஸில் போயிருக்கேன்.. !" - மலைக்கவைக்கும் கிராமவாசி மருதை

சைக்கிளில் போனவர்கள் வண்டியிலும், வண்டியில் போனவர்கள் காரிலும் போகும் அபரிமிதமான வளர்ச்சியடைந்துள்ள காலமிது. எட்டுத்திக்கும் நிறைந்திருக்கும் ஆண்ட்ராய்டு மொபைல்களால் `வைரல்' யுகமாகிவிட்ட இன்றைய நாகரிக வாழ்க்கையில், நடந்து போகவோ, எந்தவொரு செயலையும் நின்று நிதானித்துச் செய்யவோ யாருக்கும் நேரமும் இல்லை; விருப்பமும் இல்லை. ஆனால், ஐம்பத்தைந்து வயதான மருதை என்பவருக்கு பஸ்ஸில் போவதே அலர்ஜியாக இருக்கிறது. இத்தனை வருடங்களில் ஒரே ஒருமுறை மட்டுமே பேருந்தில் பயணித்துள்ளாராம். ஆச்சர்யமாக இருக்கிறதா.. ஆம். உண்மைதான். அந்த ஒருமுறை பஸ்ஸில் பயணம் செய்தபோதும், தலை சுற்றியதுடன் வாந்தியும் எடுத்து மயங்கி விழுந்துவிட்டாராம். அன்று முதல் `பஸ் சவாரி போதுமடா சாமி. இனி எம்மாம் தூரமா இருந்தாலும் நடராஜா சர்வீஸ்தான்' என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் மருதை. திருமணம் செய்து கொள்ளாமல் மாடு மேய்க்கும் தொழில் செய்யும் மருதையின் கதை நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் அடங்கிய தெற்கு அய்யம்பாளையம்தான் மருதையின் சொந்தஊர். கரூர் மாவட்டத்தின் தென் கடைக்கோடி எல்லையில் கடவூரின் தெற்கு மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது இந்த ஊர். வறட்சி மிகுந்த இந்த ஊரில், தன் அண்ணனின் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார் மருதை. பதினைந்து மாடுகளை வைத்து மேய்த்து வருகிறார். மனிதர்களோடு  பேசுவதை அவ்வளவாக விரும்பாத இவர், மாடுகளோடுதான் தன் சம்பாஷனைகளையும், ஸ்நேகத்தையும் கொண்டுள்ளார். ``ஏய் செவலை, உனக்கு வயிறு கழிசலா இருந்துச்சே. நேத்துக் கொடுத்த மருந்து வேலை செஞ்சுச்சா? உடம்புக்கு இப்ப தேவலமா?" என்று அன்பாக (!?) விசாரிக்கிறார்.இவரின் வார்த்தைகள் புரிந்தோ,என்னவோ அந்தச் செவலைக் காளையும், லேசாகத் தலையாட்டுகிறது.

வடக்குப் பக்கம் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுவிடம், ``ஏய் லட்சுமி, நேத்து மாதிரி அல்லாட்டம் காட்டாம ஒழுங்காப் பால் கறக்க மடிய விடணும். என்னா புரிஞ்சுதா?" என்று செல்லமாகக் கோபம் காட்டுகிறார். தன் காலடியில் ஓடிவந்து அண்டிய சிறு கன்றுக்குட்டியின் கழுத்தில் கைவைத்து, துளாவியபடியே லாகவமாக உன்னியைப் பிடுங்குகிறார். மாடுகளுடனான மருதையின் அன்னியோன்னியம் சட்டென நமக்குப் பிடிபட்டு விட்டது.
 

``எனக்கு இந்த மலைகளும், இந்த மாடுகளும்தான் உலகம் தம்பி. அஞ்சாவதுவரைக்கும் படிச்சேன். அதுக்குமேல இந்த மண்டைக்குள்ள படிப்பு ஏறலை. காடு, மலைன்னு சுத்துறதைப் பொழப்பா வச்சுக்கிட்டேன். சின்ன வயசில இருந்தே ஆடு, மாடு மேய்க்கிறதுதான் என் தொழில். அதிகமா யார்கிட்டயும் பேச்சுவார்த்தை வச்சுக்கமாட்டேன். பொழுதுவிடிஞ்சா மாடு ஓட்டுற பொழப்புதான். அதை மேய்ச்சுத் திரும்ப ஓட்டிக்கிட்டு வர்றதுக்குள்ள பொழுது சாஞ்சிரும். பால் கறந்துட்டு, மாடுகளைக் கட்டிவச்சு, அதுங்களுக்கு வைக்கோலை அள்ளிப் போட்டுட்டு வீட்டுக்குப் போவேன். இதுல எங்கே மனுசங்களோட சரிசமமா நின்னு வெட்டிக் கதை பேசுறது? அதுக்கப்புறம், வீட்டுல இருக்கிற சோத்தைத் தின்னுட்டுப் படுத்தேன்னா, உங்க வீட்டுத் தூக்கம், எங்க வீட்டுத் தூக்கம் இல்லை, கும்பகர்ண தூக்கம் தூங்குவேன். இப்படியேதான் என் வாழ்க்கை தொடங்குச்சு. வாலிப வயசானதும் எனக்குக் கல்யாணம் பண்ண பொண்ணு பார்த்தாங்க. பொண்ணு கிடைக்கலை. `மாடு மேய்க்கிற ஆளை யாரு கட்டுவா?'ன்னு நினைச்சிருக்கலாம். நான் கலங்கி நிக்கலை. `நெஞ்சம் உண்டு; நேர்மை உண்டு ஓடு ராசா...'ன்னு மாடுகளைப் பத்த ஆரம்பிச்சுட்டேன். எங்க அண்ணன் பொன்னுச்சாமி, விடாம எனக்குப் பொண்ணு பார்த்தார். எட்டூரு சீமையிலயும் எனக்குப் பொண்ணு கிடைக்கலை. 'பேசாம சோலியப் பாருங்கண்ணே. மாடுகளை மேய்ச்சுக்கிட்டே காலத்தை ஓட்டிக்கிறேன்'ன்னு சொன்னேன்"

என்றபோதே, அவரது கண்களில் கல்யாண ஏக்கம். கணநேரத்தில் அதை ஒரு செருமலில் கடந்துவிட்டு தொடர்ந்து பேசுகிறார்.

``எங்கண்ணன் வயல் வேலையைப் பார்த்துக்குவார். நான் மாடு மேய்க்கிறதப் பார்த்துக்கிறேன். காலையில் பதினோறு மணிக்கு பழைய சோறை சாப்பிட்டுவிட்டு மாடுகளை ஓட்டுவேன். அப்படியே கோட்டைக்கரை, மாமரத்துப்பட்டி, வலையப்பட்டி, சேவாப்பூர்னு மாடுகளை ஓட்டிக்கிட்டுப் போய் மேய்ப்பேன். மதியச் சாப்பாடு வெறும் தண்ணிதான். நல்லா மேய்ச்சுட்டு, பொழுது மசமசங்குற அந்தி நேரத்துல வீட்டுக்கு ஓட்டி வருவேன். பத்து வயசுல ஆரம்பிச்ச இந்தப் பொழப்பு, இன்னைய வரைக்கும் ஓயலை. ஆனால், மாடுகள் ஒவ்வொண்ணும் என்மேல அன்பா இருக்கும்ங்க. என் முகத்தைப் பார்த்தாத்தான் அதுங்க தண்ணி குடிக்கும்; வைக்கோல் சாப்பிடும். அதுக அசைவு எனக்குப் புரியும். நான் பேசுற பேச்சை அதுங்க விளங்கிக்கும். மாடுகளோட வாழ்ற எனக்கு இப்படி வாழ்றதுதான் புடிச்சுருக்கு. நல்ல துணிமணிகூட போடமாட்டேன். அப்புறமா, எனக்கு பஸ்ல போறதே புடிக்காது. எங்கூருக்கு பஸ் விட்டு, ஆவுது பத்து வருஷத்துக்கும் மேல. ஆனா, பஸ் பயணம் எனக்கு ஆகலை. ஒரு தடவை அண்ணன் பையன் கல்யாணம் முடிச்சிருக்கிற பொண்ணு ஊரான பண்ணப்பட்டிக்கு, எல்லாரும் கூப்புடுறாங்களேன்னு பஸ்ஸூல போனேன். அப்படியே `கிறுகிறு'ன்னு தலை சுத்திப்போய், வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழுந்துட்டேன். அன்னையில இருந்து, `இனி பஸ்ஸூல போகக்கூடாது'ன்னு வைராக்கியமா இருக்கேன். இதனால், கரூருக்குக்கூடப் போனதில்லை.

எங்கண்ணன் எவ்வளவோ தடவை கூப்பிட்டும், பஸ்ஸூல போறதுக்கு பயந்துகிட்டே, `நா வரலைண்ணே'ன்னு மறுத்துடுவேன். மத்தபடி,1,000 அடி உயரம் கொண்ட கடவூர் மலையைச் சடார்ன்னு ஏறிக் கடந்துடுவேன். பத்து கிலோமீட்டர் சுத்தியுள்ள ஊர்கள்ல வசிக்கும் சொந்தக்காரங்க வீடுகள்ல நல்லது, கெட்டதுன்னா, `இந்தா வாரேன்'ன்னு என் காலை நம்பி நடந்தே போயிருவேன். மறந்துகூட பஸ்ல ஏறிட மாட்டேன். நடந்தே போறது, பழைய சோற்றை மோர் ஊத்திச் சாப்பிடுறது, நல்லாப் படுத்துத் தூங்குறது, உடம்புல வேர்வை வழிய உழைக்கிறதுன்னு நான் வாழ்றதால, நான் சின்னத் தலைவலின்னுகூட இதுவரைப் படுத்ததில்லை. செல்போன், டி.வி-ன்னு எல்லாரும் ஆடம்பர வாழ்க்கைக்கு மாறிட்டாங்க. நான் மறந்தும் அதுகப் பக்கம் போனதில்லை. போன் எப்படிப் பேசறதுன்னுகூட எனக்குத் தெரியாது. ஆனா, நல்லா உழைக்கத் தெரியும். அதனால, உடம்புல எந்த வியாதியும் இல்லை. இன்னைக்கு பலரும் உடம்பால உழைக்கிறதில்லை. வாகனங்கள்ல பயணிக்கிறது, தகாத உணவை உண்ணுறதனால, ஏகப்பட்ட நோய்களை உடம்புல வாங்கிக்கிறாங்க. பெண்களும் உணவு சமைக்க, பயணம் போகன்னு எல்லாத்துலயும் விஞ்ஞானத்துக்கு மாறிட்டாங்க. உடல் உழைப்பு குறைஞ்சு போனா, அவங்க உடம்புகள்ல நோய்கள் கூடத்தானே செய்யும்?.எனக்கு எந்த நோயும் இல்லைங்கிறதாலே சந்தோஷமா வாழ்றேன்" என்றபடி, ``மாடு ஒண்ணக் காணும். பார்த்துட்டு வர்றேன்" என்றபடி, தொலைவில் தெரிந்த மலையை நோக்கி விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினார் மருதை.

`இந்த நவீன யுகத்திலும் இப்படி ஒருத்தரா?!' என்று நமக்குத்தான் அவரைப் பார்த்து மலைப்பாக இருந்தது. மருதை வாழும் வாழ்க்கையைத்தான் நம் முன்னோர்களும் வாழ்ந்துள்ளனர். ஆனால், இது சரியா, தவறா என்பதை விவாதிக்காமல், இந்தக் காலத்திலும் இப்படி வாழும் அவரின் மனப்பலத்தைப் பாராட்ட வேண்டும்.