Published:Updated:

தொலைந்துபோகும் பெண் பென்குயின்கள்... காரணங்கள் என்னென்ன?

தொலைந்துபோகும் பெண் பென்குயின்கள்... காரணங்கள் என்னென்ன?
News
தொலைந்துபோகும் பெண் பென்குயின்கள்... காரணங்கள் என்னென்ன?

கீழேயுள்ள ஒளிப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் தெரியும் ஆனந்தமான நடை. கண்களில் தெரியும் அலட்சியம். அந்த ஒற்றுமை அனைத்தும் தொலைந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் அவைதம் குடும்பங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றின் குழந்தைகள் அனாதையாகிக் கொண்டிருக்கின்றன.

து தென்னமெரிக்காவின் தென்கோடிப் பகுதி. ஆயிரக்கணக்கான பென்குயின்கள் தங்கள் கூடுகளை விட்டு வெகுதூரம் வந்து அங்கு தவித்துக் கொண்டிருந்தன. 

அவை மேகெல்லானிக் (Magellanic penguins) என்ற வகையைச் சேர்ந்த பென்குயின்கள். ஆண்டஸ் மலைத்தொடரோடு தொடர்புள்ள பகுதியான பேடகோனியா என்ற பகுதியில் வாழும் கறுப்பு வெள்ளை நிறமுடைய பென்குயின் வகை.

இன்றளவும் லட்சக்கணக்கான மேகெல்லானிக் பென்குயின்கள் அர்ஜெண்டினா, சிலி கடற்கரைகளில் வாழ்கின்றன. இருந்தாலும் இவற்றின் அதிகமான வாழிடங்கள் முக்கியமாக இனப்பெருக்கம் செய்வதற்காகக் காலனி அமைக்கும் பகுதிகள் எண்ணெய் கொட்டும் இடங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. இதன் தாக்கத்தால் இவற்றின் அழிவும் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. இதை உணர்ந்ததால் இவற்றை அழியும் ஆபத்துள்ள உயிரினங்கள் பட்டியலில் சேர்த்துள்ளார்கள். அர்ஜென்டினாவில் மட்டுமே எண்ணெய்க் கழிவுகளால் ஆண்டுக்கு 20,000 முதல் 22,000 பென்குயின்கள் வரை இறந்து கரை ஒதுங்குகின்றன. நம் கடலோரங்களில் பங்குனி ஆமைகள் படும் பாடு நாம் அறியாததில்லை. அதைப் பாதுகாக்கப் பல தன்னார்வலர்களும் பாதுகாப்பு அமைப்புகளும் இயன்றவரை முயன்று கொண்டிருக்கின்றன. அதைப் போலவே அங்கும் பல அமைப்புகள் அவற்றின் காலனிகளில் இருந்து முட்டைகளைச் சேகரித்து பராமரித்து பென்குயின் குஞ்சுகள் பிறந்தவுடன் மீண்டும் கடலில் விடுகிறார்கள். இவற்றின் அழிவுக்குக் கடலில் குறைந்துகொண்டிருக்கும் மீன்வளமும் காரணியாகச் சொல்லப்படுகிறது. முக்கியமாக வளரும்வரை அவற்றுக்கான ஊட்டச்சத்துகளைக் கொடுக்கக்கூடிய உணவுகளான முக்கியமான சில மீன்வகைகள் இல்லாமல் போவது அவற்றின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்குகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காலநிலை மாற்றமும் அவற்றை ஏமாற்றிவிட்டது என்றே சொல்ல வேண்டும். மீன்வளம் பல இடங்களில் குறைந்த அதேசமயம் வேறு சில இடங்களில் அதிகரித்துவிட்டது. அதனால் அவற்றின் வாழிடத்திலிருந்து 40 கி.மீ தூரம் சென்றுதான் இரைதேட வேண்டிய சூழல். ஆண்கள் இரைதேடி 40 முதல் 80 கி.மீ வரைப் பயணம் சென்று திரும்பும்வரை பெண்களும் குழந்தைகளும் கூட்டில் பசியோடு பட்டினி கிடந்தாக வேண்டும். காலநிலை மாற்றத்தால் அதிகமாக உருவாகும் புயல்களும் அவற்றைப் பாடாய்ப் படுத்துகின்றன. இதனால் நீர் புகாத பாதுகாப்பான இறக்கைகள் வளரும் முன்னமே புயலால் நீருக்குள் சிக்கி ஹைபோதெர்மியா என்ற நோய்க்கு ஆளாகி இறக்கின்றன. சமீபமாகப் பிறக்கும் பென்குயின்கள் இனப்பெருக்க காலத்தில் வடக்கு நோக்கி எங்கு இரை அதிகமாகக் கிடைக்கிறதோ அதிலும் விருப்ப உணவான நெத்திலிகள் அதிகம் கிடைக்கிறதோ அங்கு செல்கின்றன. தெரியாத இடம், தெரியாத நீரோட்டம் போன்றவை அவற்றைப் பல சிக்கல்களுக்கு உள்ளாக்குகின்றன. பல சமயங்களில் அவை வழி தெரியாமல் சென்று தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத வேறு இடங்களில் சிக்கிக் கொள்கின்றன. இதனால் பல பென்குயின்கள் குழம்பிப்போய் தொலைந்துவிடுகின்றன.

அப்படியொரு சம்பவம்தான் இப்போதும் நடந்துள்ளது. ஆனால், இதில் மாட்டிக்கொண்ட அனைத்தும் பெண் பென்குயின்கள். மனைவிகள், தாய்மார்கள், பெண் குழந்தைகள் என்று அத்தனையும் கூட்டிலிருந்து எங்கோ தூரமாகத் தொலைந்து போய்விட்டன. தெரியாத இடத்தில் புரியாத நில அமைப்பில் குழப்பத்தோடு தற்போது பசியால் வாடிக் கொண்டிருக்கின்றன. மீன்கள் தேடி அவை செல்லும் இடப்பெயர்வு வருடத்தின் இரண்டாம் பாதியில் நடைபெறும். அப்போது வடக்குப் பக்கமாக உருகுவே, பிரேசில் போன்ற நாடுகளுக்குச் செல்லும். அங்கு கிடைக்கும் சுவையான நெத்திலி மீன்களை ருசித்துச் சாப்பிடும். சொல்லப்போனால் அங்குதான் இவை வீட்டிலிருப்பதைப் போலவே உணருகின்றன. அந்தப் பயணத்தில் அடிக்கடி தங்கள் கணவரை, மனைவியை, தாயைத் தொலைத்துவிடும் பென்குயின்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்லவே தனிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கடந்த பத்து வருடங்களாக ஆய்வாளர்கள் இந்தப் பிரச்னையை ஆய்வுசெய்து வருகிறார்கள். சொல்லப்போனால் அவற்றைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வழிதான் தெரியவில்லை. தங்கள் இனப்பெருக்கக் கூடுகளிலிருந்து பல நூறு மைல்கள் வழிதெரியாமல் நீந்திச் சென்றுவிடும் பென்குயின்கள் திரும்பிவரும் வழிதெரியாமல் அங்கேயே மாட்டிக் கொள்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் வெளியான ஓர் ஆய்வின் முடிவுகள் ஆயிரக்கணக்கிலான பென்குயின்கள் இப்படித் தொலைந்து போவதைக் கண்டுபிடித்துள்ளனர். அதில் பலவும் பசியால் வாடி மரணித்துக் கரை ஒதுங்குவது வேதனை. அப்படிக் கரை ஒதுங்கியவற்றை ஆராய்ந்தபோது உணவு கிடைக்காமல் இறுதியில் பிளாஸ்டிக்கை உண்டு இறந்துபோன பென்குயின்களும் அடக்கம். அதே மாதிரியான ஒரு நிகழ்வும் இப்போது மீண்டும் நடந்துள்ளது. வழக்கமாக அப்படித் தொலைந்துபோகும் கூட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களாக இருக்கும். ஆனால், இப்போது தென்னமெரிக்காவின் தென்கோடிப் பகுதியில் தொலைந்துவிட்ட இந்தப் பென்குயின் கூட்டத்தில் அதிர்ச்சிகரமாக அனைத்துமே பெண்கள். 

அந்த ஆய்வுக்குழுவின் தலைவரான டகாஷி யமமோடோவுக்குக் (Takashi Yamamoto) குழப்பம் தாங்கவில்லை. என்னதான் நடக்கிறது? ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? ஏன் பெண் பென்குயின்கள் இப்படித் தொலைந்து போகின்றன? என்ற கேள்விகளுக்கு விடைதேடிப் புறப்பட்டார். 

அதைக் கண்டுபிடிப்பதற்காக எட்டு ஆண்களும் ஆறு பெண்களும் கொண்ட பென்குயின் குழுவை ஜி.பி.எஸ் கருவி பொருத்திக் கண்காணித்தார். அதன்படி 2017-ம் ஆண்டு இனப்பெருக்க காலத்தில் இனப்பெருக்கம் முடிந்தவுடன் அவை எங்கெல்லாம் செல்கின்றன, எங்கு தொலைந்து போகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. பல மாதங்களாகக் கண்காணித்ததில் அதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள அவர்களால் முடிந்தது. பொதுவாக ஆண் பென்குயின்கள் இடப்பெயர்வின்போது பெரும்பாலும் நீண்டதூரம் செல்வதைவிட அவை அதிக ஆழம் செல்லவே முயல்கின்றன. அதன்மூலம் அவற்றின் வாழிடமான பேடகோனியாவுக்கு அருகிலேயே இருக்குமாறு ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளும். ஆனால், பெண்கள் கடலோரத்திலேயே நீந்துகின்றன. மீன்களைத் தேடிக்கொண்டே செல்லும்போது தூரம் அறியாமல் வெகுதூரம் சென்றுவிடுகின்றன. அதனால் தங்கள் துணை, குழந்தை அனைத்தையும் விட்டுப் பிரியவேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.

தெற்கத்திய நாடுகளான உருகுவே, பிரேசில், அர்ஜென்டினா போன்ற நாடுகளைச் சுற்றியுள்ள கடலோரங்களில் நீரோட்ட வேகம் அதிகமாக இருக்கும். அதனால் அவை மேலும் அதிக தூரத்துக்கு அடித்துச் செல்லப்படுவதால், தங்கள் வாழிடத்திலிருந்து வெகுதொலைவில் தொலைந்துவிடுகின்றன. 

Photo Courtesy: Takashi Yamamoto

ஆண் பென்குவின்களைவிடப் பெண் குவின்கள் அதிகமாக நீரோட்ட வேகத்தோடு நீண்ட தூரம் சென்றுவிடுவதற்கு அவற்றின் உடல் எடையும் ஒரு காரணம். இந்த வகைப் பென்குயின்களில் ஆணைவிடப் பெண் சிறியதாக இருக்கும். அதனால் அவற்றால் வேகமான நீரோட்டத்தைக் கடக்க முடியாமல் சிரமப்பட்டு அடித்துச் செல்லப்படுகின்றன. இந்தக் காரணங்களைக் கண்டுபிடிக்க உதவிய யமமோடோவின் ஆய்வு மேகெல்லானிக் பென்குயின்களின் பிரச்னையைத் தீர்ப்பதற்கான முயற்சியின் முதல்படி மட்டுமே. விரைவில் அதைச் சரிசெய்தாக வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கிறார் டகாஷி யமமோடோ.

"இவை அனைத்துக்குமே காரணம் எண்ணெய்க் கழிவுகளும், கடல் போக்குவரத்தும்தான்.  அவற்றின் வாழிடத்துக்குள் மனிதர்கள் புகுந்து கபளீகரம் செய்வதால் வந்த வினைதான் இது. அவற்றின் குழந்தைகளை அநாதைகளாக்காதீர்கள். இடப்பெயர்வு முடிந்து திரும்பும் பென்குயின்களில் பெண்களின் எண்ணிக்கை இப்படிக் குறைந்துகொண்டே போனால் வருங்காலத்தில் அந்த இனமே இல்லாமல் போய்விடும். நாம் உண்டாக்கிய பிரச்னைகளிலேயே மிகக் கொடூரமான விளைவு இது. அவற்றைத் தனியாக விடுங்கள். அவற்றை வாழவிடுங்கள்" என்று வேதனைப்படுகிறார் யமமோடோ.