Published:Updated:

``பாம்புக்கு வைத்தியம் பண்ணி வீட்ல வச்சிருந்தோம்!" - விலங்குகளை அரவணைக்கும் இளைஞர் படை

விலங்குகளை மீட்டு சிகிச்சையளிக்கும் குழு என்றாலே சென்னையைச் சேர்ந்த குழுக்களும், மீட்பர்களும் மட்டும்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், அதே அளவுக்கு மண்மணம் கொஞ்சும் மதுரையிலும் விலங்குகளை அரவணைத்து வருகின்றனர் இளைஞர்கள் சிலர்.

``பாம்புக்கு வைத்தியம் பண்ணி வீட்ல வச்சிருந்தோம்!" - விலங்குகளை அரவணைக்கும் இளைஞர் படை
``பாம்புக்கு வைத்தியம் பண்ணி வீட்ல வச்சிருந்தோம்!" - விலங்குகளை அரவணைக்கும் இளைஞர் படை

`ம்மா.. லொள்.. க்கீக்கீ.. பக்பக்.. டபடபடப..' இந்த உயிரொலிகள் காற்றின் அலைவரிசையோடு இணையாமல், உயிர்சூழ் உலகம் பூரணமாகிவிடப் போவதில்லை. மதுரை நகரில் ஆதரவற்ற விலங்குகளின் உடல்நலத்தில் அக்கறைகொண்டு ஆக்கம்நிறைந்த பணிகளில் ஈடுபட்டுவருகின்றது, இளம் தன்னார்வலர்களை உள்ளடக்கிய குழுவொன்று. இந்த மீட்புக் குழுவின் பெயர், 'ஃப்ரண்ட்ஸ் ஆஃப் அனிமல்ஸ் - மதுரை'. இந்தக் குழுவினரின் ஒவ்வொரு செயல்பாடும் நமது தினசரிகளைக் கேள்வி கேட்கின்றன. இவர்கள், மதுரைச் சாலைகளிலும் தெருக்களிலும் ஆதரவின்றி நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் விலங்கு, பறவை, ஊர்வன போன்ற உயிரினங்கள் குறித்தத் தகவல்களை நண்பர்களிடமிருந்து பெறுகின்றனர். அவற்றைத் தேடிச்சென்று மீட்டெடுத்து மருத்துவச் சிகிச்சை அளித்துப் பராமரிக்கின்றனர். அவை குணமாகி உடல்நலம் திரும்பியதும், விரும்புகிறவர்களிடம் தத்துக்கொடுத்துவிடுகின்றனர். அதோடு விடாமல், அடிக்கடி விசாரித்து, தத்தெடுத்தவர்கள் அவற்றை வளர்ப்பதற்கும் உதவிபுரிகின்றனர்.

2017-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இந்தக் குழுவை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர், மதுரையின் பொறியியல் பட்டதாரிகளான கரண், மதன்பாபு, சௌந்தர்யா மூவரும். தெற்குமாசிவீதி வீரராகவப் பெருமாள் கோயில்தெரு பகுதியில் உள்ள மதன்பாபுவின் வீட்டில் அவரைச் சந்தித்து இந்த `ரெஸ்கியூ டீம்’ ஐடியா குறித்துக் கேட்டோம். ``சின்ன வயசிலேயே உயிர்கள் மேல எனக்கு அளவில்லாத அன்பு. காலேஜ் அப்போ ஒருநாள், அங்கிருந்த புட்பால் கோர்ட்ல சிக்கிக்கிட்ட ஒரு நாய்க்குட்டியை மீட்டேன். என்னால உயிர் ஒண்ணு  பொழச்சிருந்ததை யோசிக்க சந்தோசமா இருந்துச்சு. உயிரோட்டமான அந்த முதல் உணர்வுதான் என்னை இங்க வரைக்கும் கூட்டிட்டு வந்திருக்கு. மத்தபடி, டீம் ஐடியாலாம் கரண்தான். இப்போ வந்திருவான்" என தேவசேனாவுடன் விளையாடிக்கொண்டே பேசுகிறார். தேவசேனா, துல்லியமான அறிவாற்றல் மிகுந்த நாட்டு நாய். இதுவும், மதனின் மீட்பால் உயிர்த்ததுதான். மீட்கும்போது, குட்டி. இப்போது, ஆள் உயரத்துக்கு எழும்பி மார்பில் கால்வைத்து முகம் பார்க்கிறது. மதனுக்கு நாய் என்றால் மிகவும் விருப்பம். நாய் இனங்களையும், அவற்றைக் கையாளும் உத்திகளையும் துல்லியமாய் அறிந்து வைத்திருக்கிறார். எல்லாம் பட்டறிவு!

``நாட்டு நாய்ங்க, குறிப்பா பெண் நாய்ங்கதான் காவலுக்கு உகந்ததுங்க. ரொம்ப புத்திக்கூர்மையாவும் இருக்கும். ஆனா, தத்தெடுக்கிறவங்க கலப்பின நாய்களைத்தான் கேட்கிறாங்க. அதுவும் பெண் நாயின்னா உதிரப்போக்கு ஆகுமேன்னு பயப்படுறாங்க. நாங்க, தத்துக்கொடுக்கும் முன்னமே அதுங்களைச் சுத்தப்படுத்தி இனப்பெருக்கக் கட்டுப்பாடு பண்ணித்தான் தருவோம். கலப்பினங்கள் சுணங்கிப்படுத்திரும். ஆனா, நாட்டு நாய்ங்க அப்பிடியில்ல. அதுக, நம்ம மண்ணுக்கானதுங்க. இந்த இனத்தை அழியவிட்டுறக் கூடாது"- மதனின் பேச்சில் செயலுக்கான வேகம் தெரிகிறது. மூவரின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டோர், கைகோத்து ஒன்றிணையத் தொடங்கி தற்போது 50 இளைஞர்கள் இந்தக் குழுவில் உள்ளனர். ஆர்வம் தவிர இந்தப் பணியில் வேறென்ன உந்துதலாக இருந்துவருகிறது என்று மதனிடம் கேட்டோம். 

``ஒரு நிகழ்வைச் சொல்றேன். மதுரை சூர்யாநகர். ஜெர்மன் ஷெப்பர்டு ரகப் பெண்நாயோட வயித்துல கட்டிவந்ததால வளர்த்தவங்க தூக்கியெறிஞ்சிட்டாங்க. எங்க டீம் பையன் பார்த்து எங்களுக்குத் தகவல் சொல்லிட்டு, நாய் எங்கேயும் போயிடாதபடி மூணு மணிநேரமா கண்காணிச்சுக்கிட்டே இருந்தான். நாங்க வந்து ரொம்ப நேரமாப் போராடினோம். யாருக்கும் சிக்காம நழுவுச்சு, கடிக்க வந்துச்சு. எங்க டீம் பசங்க நாலஞ்சுபேரு சுத்தினதால பயந்துக்கிட்டே நின்னுச்சு. நாயிக்கு முன்னாடி நான் போயி பின்னாடி ஒருத்தனை நிறுத்தி தள்ளச் சொன்னேன். முடியலை. சட்டுன்னு ஒரு யோசனை. அந்தப் பையனை முன்னுக்க நிறுத்திக் கூப்பிடச் சொன்னேன். லேசா முன்ன நகர்ந்துச்சு. நான் பின்னாடி மெள்ள மெள்ள தள்ளி வண்டியில ஏத்திட்டோம். நாய்க்கிட்ட அவ்ளோநேரம் நின்னு பத்திரமா கவனிச்சிக்கிட்டதால அவனை நம்பியிருக்கு. உதவிக்குத்தான் வந்திருக்கோம்ன்னு புரிஞ்சிக்கிட்டு முரண்டு பிடிக்கிறத நிறுத்திருச்சு. மீடியம் சைஸ் கப்புல தண்ணி குடுத்தோம். ஒன்றரை கப் குடிச்சிச்சு. தாகம் தணிஞ்சு எங்களை நிமிர்ந்து பார்த்துச்சே, அன்பும் நன்றியும் கலந்த ஒரு பார்வை! என்னோட வாழ்நாள் பூஸ்ட்டுன்னா அந்தப் பார்வையோட ஞாபகம்தான். அதெல்லாம், அனுபவிச்சாதாங்க அந்த உணர்வுல லயிக்க முடியும்!” எனச் சொல்லி, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டார். ``அப்புறம், பழங்காநத்தம் அரசு மருத்துவர்கிட்ட கொண்டுபோய் தெர்மல்ஹீட் கொடுத்துக் கட்டியைச் சரிபண்ணி நாயைக் குணமாக்கினோம்.” என்று மீட்பின்போது தனக்கு நேர்ந்த, உந்துதல் தருகின்ற உருக்கமான அனுபவத்தைப் பகிர்ந்தார். குழுவினர் சிலரும் வந்திருந்து தங்கள் அனுபவங்களைக்கொட்டினர். 

மீட்கப்பட்ட ஒரு நாட்டுநாயை ரேபிஸ் தாக்கியிருப்பது தெரியவந்திருக்கிறது. `கருணைக்கொலை செய்யலாம்’ என மற்றவர்கள் சொன்னதை மறுத்துவிட்டனராம், இவர்கள். தங்கள் பணியில் எந்த உயிரும் கொல்லப்படக் கூடாது என்பதே இவர்கள் கொள்கை. இதுபற்றி மதன், ``ஒருநாள்னாலும் நிம்மதியா வாழுமிங்க. அதை விட்டுட்டு அதோட வாழ்நாளைக் குறைக்கிறதுக்கு நாம யாரு? நோய் தாக்கினா சிகிச்சைக்கொடுப்போம், மற்ற உயிர்களை அண்டவிடாமல் பார்த்துப்போம். அவ்வளவுதான். அதுபாட்டுக்க வாழ்ந்திரும். நாயைக்கட்டிப்போடுறதும், அதோட இயல்புல இருந்து மாத்துறதும்தான் வன்கொடுமை. நாயை நாயா வளர்க்கணும்!” என்று ஆற்றாமை மிகுதியால் வெடித்துப் பேசுகிறார்.

உண்மைதான். நாய்கள் மாதிரிச் செல்லப் பிராணிகளாய் வீட்டில் வளரும் உயிர்களால் எந்த நோயும் நமக்குப் பரவுவதில்லை. அளவுக்கு அதிகமாய் நெருங்கிக்கொஞ்சுவது, சாப்பாட்டை ஊட்டிவிட்ட கையால் சாப்பிடுவது போன்றவற்றால்தான் அவற்றிடமிருந்து மனிதர்க்கு நோய் பரவுகின்றது. தவற்றையெல்லாம் நம்மிடம் வைத்துக்கொண்டு, ஏதுமறியாத அந்த உயிர்களை `ச்சூ..போ’ என்று விரட்டுவதில் என்ன அர்த்தம்? அந்தக் காலங்களில் வாசல்தெளிப்பதில்கூட உயிரினங்கள்மீதான அன்பு இருந்துள்ளது. மண்தரையிலும் சிறுசிறு திட்டுகளிலும் தேங்கியிருக்கும் நீரை, அப்பகுதித் தெருக்களில் திரியும் நாய்களும் பூனைகளும் பறவைகளும் பருகிச்செல்லும். ஆனால் இன்றைய இந்தச் சுயநல நாள்கள், மனிதர்களை மனிதர்களாய் விட்டு வைக்காமல் நகர்கின்றன. ``வெயில் காலத்தில மண்பானைகள் வாங்கி நகரத்து நண்பர்களுக்கு இலவசமாய்க் கொடுப்போம். மொட்டை மாடியில, வீட்டு வாசல்கள்ல தண்ணி ஊத்தி வைக்கச் சொல்லுவோம். தாகமெடுக்கிற உயிருங்க வந்து குடிச்சிட்டுப் போகுங்க” என்கின்றனர் இவர்கள்.

``நாய் மட்டுமில்லீங்க, வீட்டில 40 புறா வளர்த்தேன். எல்லாத்தையும் நண்பனுக்குக் கொடுத்துட்டேன். எனக்கு இருக்கிற முதல்குறை, இதுகளை பார்த்துக்கிறதுக்கு இடமில்லைங்கிறதுதான். அம்மா அப்பா யாருமே வீட்டில இதுங்கள வச்சிருக்கிறதுக்குப் பயப்படுவாங்க. நாய்க்குட்டியை மீட்டெடுத்தா, வீட்டுக்குத் தெரியாம ஹெல்மெட்டுக்கு உள்ள வச்சு மாடிக்குக்கொண்டு போயிருவேன். இப்பிடி நிறைய பண்ணியிருக்கேன். அடிபட்டுக்கெடந்த பாம்பை வைத்தியம் பண்ணிட்டு என்வீட்லதான் வச்சிருந்தேன். இப்போவரைக்கும் வீட்டில யாருக்கும் தெரியாது” எனச் சொல்ல, சரியான நேரத்தில் வீட்டுக்கு வந்து, மதன் விட்ட இடத்தில் பேச்சைத் தொடர்ந்தார் கரண். ``அந்தப் பாம்பை ட்ரீட்மென்ட்டுக்குத் தல்லாகுளம் அரசு மருத்துவர்கிட்ட கொண்டுபோயிருந்தேன். வழக்கமா இவர்கிட்ட நாயெல்லாம் கொண்டுவந்திருக்கேன். அந்த ஞாபகத்தில, `என்ன நாயி?’ன்னு கேட்டாரு. `நாய் இல்லைங்க, பாம்பு’ன்னு சொல்லி, பாம்பை எடுத்துக்காட்டுனேன். டக்குன்னு பாம்பைப் பார்த்ததும் மனுஷன் லைட்டா ஜெர்க்காயிட்டாரு. அப்புறம், கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி, பாம்புக்கு நல்லபடியா ட்ரீட்மென்ட் பண்ணித் தந்தார்” என்று, டாக்டரை அதிர வைத்த கதையை கலகலவெனச் சிரித்தபடியே சொன்னார். 

இவர்கள், பறவைகள் ஏதேனும் நலமற்றுக்கிடந்தால் அவற்றை மீட்டு மருத்துவம் பார்த்து, குணமானதும் பறக்க விட்டுவிடுகின்றனர். புதிய வகைப் பறவையெனில், அதைப்பற்றி அறிந்துகொள்ள இக்குழு நாடுவது, திருமங்கலம் அரசு மருத்துவர் ரவீந்திரன் நடராஜனை. பறவை ஆர்வலர் இவர். பட்சிராஜனேதான். பறவைகள் வளர்ப்பதை ரவீந்திரன் விரும்பமாட்டார். அதன் இயல்பில் அது பறந்து திரிவதைக் காதலிப்பவர், இவர். ``நைஜான்னு ஒரு பறவையை எடுத்துக் குணமாக்கிப் பறக்கவிட, ரவீந்திரன்சார்தான் உதவிசெஞ்சார்” என்கிறார், கரண். 

``மதுரைத் தெற்குவாசலில் கிடந்த ஒரு பறவையையெடுத்து `பட்சிராஜனிடம்’ விசாரித்தோம். அதுக்குப்பேரு, `இராப்பக்கி’யாம். நைட்லதான் திரியுமாம். சோழவந்தான், வாடிப்பட்டின்னு வயக்காட்டுப்பக்கம்தான் இருக்கும்ன்னு விவரம் சொன்னார். `இராப்பக்கி’ சாப்பிடுறதுக்கு நெடுஞ்சாலைகள்ல அடிபட்டுச் செத்துக்கிடக்கும் பட்டாம்பூச்சி, புழுக்களை பத்துப் பேர் இணைந்து சேகரிச்சோம். அப்புறம், ட்ரீட்பண்ணி வனத்துறையிடம் கொடுத்தோம்” என்று சொல்லும்போதே கரணின் முகம் பொலிவுறுகிறது. சேலம் டாக்டர் கிரிஷ்அசோகன் பாம்புக்கும் மயிலுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார். எல்லீஸ் நகரில் கண்டெடுத்த 4 மயில்களை அவரிடம் கொடுத்துச் சிகிச்சையளித்து வனத்துறையிடம் ஒப்படைத்திருக்கின்றனர், இக்குழுவினர். வீட்டு விலங்குகளைத் தவிர காட்டுவிலங்குகள், அரியவகை உயிரினங்களைக் கண்டெடுத்தால் வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்ததன் பின் அவற்றை மீட்டு முடிந்தவரையிலும் மருத்துவம் பார்த்து, துறையினரிடம் ஒப்படைக்கின்றனர். தமிழக வனத்துறை அலுவலகத்தில் போதுமான அதிகாரிகள் அவசியம், விலங்கியல் வல்லுநர்கள் வனத்துறைக்கு அதிகமாகத் தேவைப்படுகின்றனர் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

``உடம்பு சரியில்லாத உயிர்களை ட்ரீட் பண்ணி எங்க வீட்டில யாருக்கும் தெரியாதபடி மாடியில வச்சிருப்பேன். யாருக்காவது தெரிஞ்சுப் போச்சுன்னா ஃப்ரண்ட்ஸ் யார் வீட்டுக்குக்காச்சும் கைமாத்திவிட்டிருவேன். டீம் தோழிகள் சுப்பு, ஷீலா, சிவானி, மகா இவங்கதான் மாத்தி மாத்தி வளர்ப்பாங்க.” என்று சொல்கிற கரண், தன் டீம்மேட்ஸ்களை அறிமுகம் செய்துகொண்டே போகிறார். ஆனையூர் நந்தினிக்கு நாய் பயம். ஆனால், பூனைமீது அவ்வளவு இஷ்டம். எப்பேர்ப்பட்ட பூனையிடமும் ஐந்தே நிமிடத்தில் பழகி அதனுடன் விளையாடத் தொடங்கிவிடுகிறார். மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் மருத்துவராய்ப் பணிபுரியும் திவ்யாவுக்கு அணில், குருவி மாதிரிச் சின்னச் சின்ன உயிர்கள்மேல் தீராத ஆசை. ``வேலை பார்க்கிறதால இந்த வளர்ப்புப் பணிகள்ல கவனம்செலுத்த முடியலைன்னு ரொம்பக் கவலைப்பட்டுட்டு இருக்கேன்” என்று கூறுகிற திவ்யா, தன்னால் இயன்ற வகையில் இந்தப் பணிகளுக்குப் பண உதவிகளைச் செய்துவருகிறார். 

``டீம் பசங்க போஸ்டுகள் போட்டா, கண்டுக்க மாட்றாங்க. இவ ஒரு போஸ்ட் போட்டா உடனடி ரெஸ்பான்ஸ்” எனச் சொல்லி சௌந்தர்யாவைப் புகழ்கின்றனர். மீட்கப்பட்டுக் குணமான உயிரினங்களின் விவரத்தைத் தன்னுடைய சமூகவலைதளப்பக்கங்களில் பகிர்ந்து, தத்தெடுக்க விரும்பும் நபரை அடையாளம் கண்டிட, குழுவினருக்கு உதவிசெய்வதே சௌந்தர்யாவின் தலையாய பணி! இவர்கள் ஒருபுறம் நிற்க, குழுவின் மையமாய்க் களவீரர்கள் இயங்குகின்றனர்;. பொறியியல் பட்டதாரிகளான காண்டீபன், உலகேஷ், நிரேஷ் ஆகியோர் கரண் மற்றும் மதன்பாபுவோடு களத்தில் நின்று காரியம் சாதிக்கின்றனர். மதுரை `ஊர்வனம்’ அமைப்பைச் சேர்ந்த விஸ்வா, சகா, கார்த்தி, சாம் ஆகியோர் பாம்பு பிடிப்பதில் வல்லவர்கள். இவர்களும் குழுவுக்குத் துணையாகக் கைகொடுக்கின்றனர்.

வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு இவர்களே மருத்துவம் பார்த்துவிடுகிறார்கள். மாட்டை வளர்க்கின்ற ஏழை உரிமையாளர்களால் அவற்றை முறையாகப் பராமரிக்க இயலுவதில்லை. பராமரிக்குமாறு பலமுறை சென்று அறிவுறுத்துகின்றனர். அடுத்தகட்டமாகத் தாங்களே பணம்திரட்டி மருந்துகள் வாங்கிக்கொடுக்கின்றனர். தனது மாடுகள்மீது இவ்வளவு அக்கறை காட்டுவதால், உரிமையாளர்களும் ஈடுபாட்டோடு தாங்களாகவே மருந்துகள் வாங்கி மாடுகளுக்குக் கொடுத்துக் கவனிக்கத்தொடங்கிவிடுவர். மாட்டின்மீது மட்டுமல்ல, எந்த உயிர்களின்மீதும் இப்படித்தான் அன்பைச்செலுத்துகின்றனர். உரிமையாளர்களிடமிருந்து எந்த உயிரையும் இவர்கள் பிரிக்க விரும்புதில்லை.

அவனியாபுரம் அரசு மருத்துவர் சரவணன், இவர்களின் இந்தப் பணியால் ஈர்க்கப்பட்டு நிறைய உதவிகளைச் செய்துவருகிறார். அரசு மருத்துவர்கள் பழங்காநத்தம் ஜெயகோபி, ஒத்தக்கடை ரேவதி, சேலம் தனியார் மருத்துவர் அமர்நாத் போன்ற மருத்துவர்கள், திண்டுக்கல் `லயிகா கிளினிக்’, மதுரை தல்லாகுளம் `பாலிகிளினிக்’ போன்ற தனியார் மருத்துவமனைகள் எனக் கால்நடை மருத்துவத்துக்கு நிறைய ஆட்கள் இக்குழுவினரோடு உதவியாகவும் நட்பாகவும் எப்போதும் இணைந்திருக்கின்றனர். ``நாங்கள் இதற்காக யாரிடமும் நிதிகள் கேட்டுப்பெற்றதே இல்லை” எனக்கூறும் இவர்களுள் பெரும்பான்மையானோர் கல்லூரி மாணவர்களும், வேலைதேடும் பட்டதாரிகளும்தான். இந்தப் பணிக்காக அனைவரும் தங்களிடமுள்ள பணத்தைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனாலும் ஈடுபாடுள்ளவர்கள், தாமாக முன்வந்து பணஉதவிகள் செய்தால் இவர்களால் இன்னும் விரிவாக இந்தச் செயல்பாட்டை முன்னெடுக்கமுடியும் என்பதை இவர்களின் ஆர்வமும் வேகமும் நமக்கு நன்றாய் உணர்த்தியது. விடைபெறும்போது அவர்கள் நிறைவாய் இப்படிச் சொன்னார்கள், ``மீட்புக்குழுக்கள் சென்னையில்தான் இருக்கின்றன என்ற நிலையை மாற்றி, மதுரையில் இந்தக் குழுவை மிகப்பெரிய அளவில் கொண்டுவருவோம்”.

பகுத்துண்டுப் பல்லுயிர் ஓம்புதல் நமது மண்சார்ந்த மனிதத்தின் பண்பு. உணவு, இடம், வாழ்வு என அத்தனையையும் எல்லோரோடும், எல்லாவற்றோடும் பகிர்ந்துகொள்ளவேண்டியது சூழலியல் தேவை. அந்தத் தேவைகள் இந்த நூற்றாண்டில் ஏனோ இன்னும் பூர்த்தியாகிடவே இல்லை. தன்னைச் சக மனிதனுக்கே முழுமையாய்ப் பகிர்ந்துகொடுக்க முன்வராதபோது எங்கே பிற உயிரினங்களுக்குத் தன்னைப் பகிரக் கொடுப்பான்? ஆனால், இந்த ஏனையோருக்கெல்லாம் முன்னுதாரணமாய்த் திரண்டு நிற்கின்றது இந்த இளையோர் கூட்டம்.