Published:Updated:

ஓசூரில் ஊருக்குள் நுழைந்த காட்டுயானைகளால் பரபரப்பு

ஓசூரில் ஊருக்குள் நுழைந்த காட்டுயானைகளால் பரபரப்பு
ஓசூரில் ஊருக்குள் நுழைந்த காட்டுயானைகளால் பரபரப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் சுற்றித் திரிந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிகோட்டை தாலுக்காக்கள் வனம் சார்ந்த பகுதியாக உள்ளது. இந்த இரு தாலுக்கா பகுதிகளை ஒட்டி கர்நாடகா, ஆந்திரா மாநில வனப்பகுதியும் இருக்கிறது. எனவே இப்பகுதியில் கோடை காலத்தில் யானைகள் நடமாட்டம் சர்வசதாரணம்.

ஓசூரில் ஊருக்குள் நுழைந்த காட்டுயானைகளால் பரபரப்பு

இந்தாண்டு மழையின்றி கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் குடிநீரும், உணவும் கிடைக்காமல் யானைகள் கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களுக்கு படையெடுத்து வருகின்றன. கடந்த ஐந்து மாதங்களாகவே இந்த வட்டாரத்தில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் வருவதும், உடனே உள்ளூர் மக்களும், வனத்துறையும் இணைந்து அந்த யானைகளை வெடி வெடித்து பக்குவமாக வனப்பகுதிக்குள் விரட்டி விடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.-

இந்த நிலையில் கடந்த மாதம் 30&க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம், கோபசந்திரம் தட்சிணதிருப்பதி கோயிலை ஒட்டிய தென்பெண்ணையாற்றை ஒட்டி இருந்த விவசாய பயிர்களை சேதப்படுத்தியதால், வனத்துறையினர் அவைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்த யானைகள் நான்கு குழுக்களாக சிதறி ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு திசையை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

அதில் மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் என நான்கு யானைகள் தனியாகப் பிரிந்தது கிருஷ்ணகிரி&பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சூளகிரி, செட்டிப்பள்ளி பகுதிகளில் விளைநிலங்களை சேதப்படுத்தியவாறு கர்நாடகா மாநிலம் மாலூர் பகுதிக்கு சென்றன. அங்கேயும் விளைநிலங்களை சேதப்படுத்தியதுடன், ஒருவரை அடித்துக் கொன்று, மூன்றுபேரை தாக்கி காயப்படுத்தியது.

ஓசூரில் ஊருக்குள் நுழைந்த காட்டுயானைகளால் பரபரப்பு

இதனால் கர்நாடக மாநில வனத்துறையும், உள்ளூர் மக்களும் அந்த நான்கு யானைகளை மீண்டும் தமிழக பகுதிக்கே விரட்டியடித்துள்ளனர். இதனால் பாகலூர் வழியாக மீண்டும் ஓசூரை நெருங்கிய நான்கு காட்டுயானைகளும் இன்று அதிகாலை ஓசூர் நகருக்குள் நுழைந்திருக்கிறது. பஸ் ஸ்டேண்டு, ராம் நகர், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை, வ.ஊ.சி நகர், ஓம்சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்திருக்கிறது.

காலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் வந்த பொதுமக்கள் யானைகளை வைத்து யாரோ காசு வசூல் செய்கிறார்கள் என நினைத்து சாதாரணமாக யானைகள் அருகில் நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். சிறுவர்கள் யானைகளுக்கு பின்னால் தொடர்ந்து சென்றும் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். சற்றுநேரத்தில் வனத்துறை குழுவினர் வந்து பொதுமக்களை எச்சரித்தபடியே யானைகளை விரட்டி வந்ததைப் பார்த்ததும் கூடிநின்று யானைகளை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் தலை தெறிக்க தங்களது வீடுகளுக்குள் ஓடினர்.

##~~##
ஒருவழியாக யானைகள் நான்கும் குடியிருப்பு பகுதியைக் கடந்து டி.வி.எஸ். நகரை ஒட்டியிருக்கும் மத்திய அரசின் பட்டுப் பண்ணைக்குள் தற்போது தஞ்சமடைந்திருக்கிறது. பல ஏக்கரில் மரங்கள் அடர்ந்து நிற்கும் இப்பகுதியில் யானைகள் ஓய்வெடுத்து வருகின்றன. வெயில் நேரத்தில் வனத்துக்குள் விரட்டும் முயற்சி மேற்கொண்டால் யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழையவும் வாய்ப்பிருக்கிறது. எனவே மாலையில் யானைகளை காட்டுக்குள் விரட்டலாம் என்ற திட்டத்தோடு தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டிருக்கிறது வனத்துறை.
எஸ்.ராஜாசெல்லம்