Published:Updated:

`ஒரே ஒரு எறும்புக்கூட்டம்... கோடிக்கணக்கான நண்டுகள் குளோஸ்!' - ஒரு தீவின் சோகக்கதை

மாற்றம் ஒன்றே மாறாதது என்று பலரும் கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால் மாற்றத்திற்கு ஏற்ப மாறமுடியாத உயிரினங்களுக்கு இயற்கை எவ்வளவு கொடியது என்பதை உணர்த்தும், இந்த நண்டுகளின் கதை!

`ஒரே ஒரு எறும்புக்கூட்டம்... கோடிக்கணக்கான நண்டுகள் குளோஸ்!' - ஒரு தீவின் சோகக்கதை
`ஒரே ஒரு எறும்புக்கூட்டம்... கோடிக்கணக்கான நண்டுகள் குளோஸ்!' - ஒரு தீவின் சோகக்கதை

ந்தியப் பெருங்கடலில் இருக்கும் சிறிய தீவின் பெயர் கிறிஸ்துமஸ் தீவுகள். நண்டுகளின் சாம்ராஜ்யம் அது. பல லட்ச வருடங்களாகத் தனித்துவிடப்பட்டிருக்கும் இந்தத் தீவில் பல்வகையான நண்டுகள் வாழ்கின்றன. இந்த நண்டுகளின் முன்னோர்கள் கடலிலிருந்து இங்கு வந்திருந்தாலும், எந்த அச்சுறுத்தலும் இல்லாத இந்த சொர்க்க பூமியில் குடியேறி நிலத்தில் வாழக் கற்றுக்கொண்டுள்ளன இந்த நண்டு இனங்கள். பல லட்சம் வருடங்களாக நடந்துள்ள பரிணாம வளர்ச்சி இது. ஆனால் என்னதான் நிலத்துக்கு ஏற்ற வாழ்க்கைமுறைக்கு மாறிவிட்டாலும் முட்டைகள் இடுவதற்கு இவை கடலுக்கே செல்கின்றன.

சிவப்பு நண்டுகளின் அணிவகுப்பு

அப்போதுதான் இயற்கையின் அற்புத நிகழ்வுகளில் ஒன்றான சிவப்பு நண்டுகளின் அணிவகுப்பு நடக்கிறது. மூன்றிலிருந்து ஐந்து கோடி நண்டுகள் இனப்பெருக்கக் காலத்தில் தீவின் நடுவில் இருக்கும் காடுகளிலிருந்து கடலை நோக்கி நகரத்தொடங்குகின்றன. உலகமெங்கும் இந்தத் தீவைப் பற்றி மக்கள் அறிய இந்த நிகழ்வும் ஒரு முக்கியக் காரணம். இதில் ஆண் நண்டுகள் முதலிலேயே கடற்கரையை அடைந்து சிறிய இடங்களைக் கைப்பற்றி வைத்திருக்கும். இதை மற்ற ஆண்களிடமிருந்து இவை பாதுகாக்கவேண்டும். பெண் நண்டுகள் வந்துவிட்டபின் இவற்றில் ஆண் நண்டுகளுடன் புணர்ந்து முட்டைகளை இடும். அதை சில நாள்களுக்குத் தனது உடலினுள் இருக்கும் ஒரு பையில் பாதுகாத்து இறுதியாகக் கடலில் விடுகின்றன. இரவு அலைகளில் முட்டையிடுவதில் இவற்றில் சில மூழ்கி உயிர் இழக்க வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் அடுத்த தலைமுறையைக் கொண்டுவருவதே அவற்றின் முக்கிய உந்துதலாக இருக்கிறது. எனவே இந்தத் தியாகத்தைச் செய்யவும் அவை தயங்குவது இல்லை. இந்த மொத்தச் சுழற்சியும் நிலவை வைத்தே நிகழ்கிறது. இரவில் இவை இடும் கோடிக்கணக்கான முட்டைகளால் கடற்கரையின் அருகே இருக்கும் கடலின் நிறமே மாறிவிடுகிறது. இதிலிருந்து வரும் நண்டு லார்வாக்கள், 3-4 வாரங்கள் வரை கடலிலிருந்து வளர்ச்சியில் அடுத்தகட்டத்தை அடைந்தபின், காடுகளை நோக்கி நகரும்.

பொதுவாக இந்தக் கட்டத்திற்குள்ளேயே இதில் பல ஆயிரம் மடிந்திருக்கும். கடலில் இந்த லார்வாக்கள் பல உயிரினங்களுக்கு இரையாகின்றன. அதற்காகத்தான் நண்டுகள் ஆயிரக்கணக்கில் முட்டை இடுகின்றன. சில நண்டுகள் லட்சம் முட்டைகள் கூட இடுமாம். இதில் எப்படியும் ஒரு சொற்ப அளவாவது உயிர்பிழைத்து வந்துவிடும். இதுவும் சாதாரணமாக நடப்பதுதான். இந்தப் பாதிப்புகளால் இவற்றின் எண்ணிக்கை எந்த ஒரு விதத்திலும் பாதிக்கப்படுவது இல்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நண்டுகளில் பல இனப்பெருக்கக் காலத்தில் கரையை அடைவதேயில்லை. அதற்கு இந்தத் தீவுக்குப் புதிதாக வந்த ஒரு சிறிய உயிரினம்தான் காரணம்.

மஞ்சள் எறும்புகள் (Yellow Crazy Ants)

அது வேறு எதுவுமில்லை ஒரு சாதாரண எறும்புக் கூட்டம்தான். `Yellow Crazy Ants' எனப்படும் இந்த மஞ்சள் எறும்புகள் கப்பல் இடிபாடுகளில் இந்தத் தீவுகளுக்கு வந்து சேர்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இவற்றை வேட்டையாட எந்த உயிரினங்களும் இந்தத் தீவில் இல்லாததால் தங்கள் அயராத உழைப்பின் மூலம் தீவு முழுவதும் பரவி பெரிய காலனிகள் அமைக்கத் தொடங்கியிருக்கின்றன இவை. எறும்புகளின் கடின உழைப்பைப் பற்றிச் சொல்லித்தான் தெரியவேண்டுமா? இந்தச் சிவப்பு நண்டுகள் இனப்பெருக்க அணிவகுப்பின்போது இந்தக் காலனிகளுக்குள் தெரியாமல் நுழைந்துவிடுகின்றன. அப்படி வரும் அந்த நண்டுகளை உடனடியாக தாக்கத் தொடங்குகின்றன இந்த எறும்புகள். இத்தனை வருடங்கள் எந்த ஓர் ஆபத்தையும் காணாத நண்டுகள் எந்தத் தற்காப்பும் இல்லாமல் இவற்றைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. இந்த மஞ்சள் எறும்புகள் நண்டுகளின் வாய், கண் ஆகியவற்றில் அமிலத்தன்மைகொண்ட தனது எச்சிலைத் தெளிக்கவே, பல நண்டுகள் குருடாகின்றன. எங்குச் செல்வதெனத் தெரியாமல் அங்கும் இங்கும் சுற்றி விரைவில் மடிந்துவிடுகின்றன இவை. இந்த எறும்புகளால் மட்டும் எண்ணிக்கையில் இதுவரை இரண்டு கோடிக்கும் மேலாகக் குறைந்துள்ளன இந்தச் சிவப்பு நண்டுகள். இது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

எறும்புகளால் மடிந்த நண்டு

இந்தத் தீவுகளில் மனிதர்கள் குடியேறியதில் கூட இத்தனை பாதிப்புகளை காணவில்லை இந்த நண்டுகள். பெரும்பாலும் இந்த இனப்பெருக்க சமயங்களில் பல சாலைகளை இந்த நண்டுகள் கடக்க நேரிடும். அப்போது வாகனங்களில் அடிபட்டுத்தான் சில நண்டுகள் இறக்க நேரிடும். அதுவும் இந்த நண்டுகளின் வெளிப்புறம் சற்றே கடினமாக இருப்பதால் அப்படி நடக்கையில் வண்டிகளின் டயர்களை பஞ்சர் செய்துவிடுகின்றன இவை. எனவே இயற்கையின் இந்த அற்புத நிகழ்வு தங்களால் கெட்டுவிடக் கூடாது என்று சாலைகளை இவை கடக்க பாலங்கள் அமைக்கப்பட்டன. அதே சமயம் டயர்களும் முக்கியம்தானே. இதுமட்டுமல்லாமல் பல முயற்சிகள் கடலை நோக்கிய இவற்றின் அணிவகுப்பைப் பாதுகாக்கச் செய்யப்படுகிறது. இவற்றைக் காண சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப் பல உயிரினங்களுக்குக் கிடைக்காத மனிதர்களின் அரவணைப்பு இருந்தும் எறும்புகளால் குறைந்துகொண்டே வருகின்றன இந்த நண்டுகள்.

உலகின் பெரும்பாலான தீவுகளின் நிலைமை இதுதான். பல லட்ச வருடங்களுக்கு முன்பு தனித்துவிடப்படும் நிலப்பரப்புகளே அவை. இதில் குடியேறி பல தலைமுறைகள் வாழும் உயிரினங்கள் தனிமையிலேயே வாழ்கின்றன. எனவே, அவை ஒரு சிறிய மாற்றத்திற்கும் பழக மறுக்கின்றன. சமீபகாலங்களில் அழிந்த இனங்களில் சுமார் 80 சதவிகிதம் தீவுகளைச் சேர்ந்தவை என்பது இதற்குச் சான்று.

இதில் மனிதர்களாகிய நாமும் கற்றுக்கொள்ள ஒரு முக்கியப் பாடம் ஒன்று இருக்கிறது. இந்த உலகில் மாற்றங்கள் என்பது இன்றியமையாதது. அதுவும் மனிதர்களாகிய நாம் மாற்றங்கள் ஏற்படுத்துவதாலேயே திளைத்து இத்தனை தலைமுறைகள் பிழைத்து உலகின் முக்கிய உயிரினமாக இன்று திகழ்ந்துவருகிறோம். இதேபோல நமது அன்றாட வாழ்க்கையிலும் தொழில்நுட்பம் தொடங்கி நம்மைச்சுற்றிப் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். உலகம் எப்படியும் போகட்டும் நான் எப்போதும் செய்வதைத்தான் செய்வேன் என்று இருத்தல் கூடாது. மாறும் உலகுக்கு நாம் தயாராவது அவசியம். வரும் மாற்றங்களை அரவணைப்பது அவசியம். இல்லை என்றால் இந்த நண்டுகளின் முடிவுதான் நமக்கும்!