Published:Updated:

'இந்த ரோமியோவுக்கு ஜூலியட் கிடைச்சாச்சு!' உலகின் கடைசித் தவளையின் காதல்

'இந்த ரோமியோவுக்கு ஜூலியட் கிடைச்சாச்சு!' உலகின் கடைசித் தவளையின் காதல்
News
'இந்த ரோமியோவுக்கு ஜூலியட் கிடைச்சாச்சு!' உலகின் கடைசித் தவளையின் காதல்

அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கையை மீட்டெடுத்து மீண்டும் வெளியிடுவது எப்போதுமே எளிதான காரியமாக இருந்ததில்லை. ஆனால், அதைச் செய்தாக வேண்டிய தேவை இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் இவ்வுலகின் ஒவ்வோர் உயிருக்குமே வாழ உரிமையுண்டு.

வன் பெயர் ரோமியோ. பொலிவியக் காடுகளில் 10 ஆண்டுகளுக்குமுன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். அப்போது அவன் இனத்தில் உயிரோடு இருந்தது அவன் மட்டும்தான். இல்லை அப்படித்தான் அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தோம். அதுவும் பத்து வருடங்களாக. ஒவ்வோர் ஆண்டின் காதலர் தினத்திலும் கொச்சபம்பா இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் தம் துணையோடு மகிழ்ந்திருக்கும். ஆனால், பாவம் ரோமியோ மட்டும் தனக்கான ஜூலியட் இன்றித் தனியே தவித்துக் கொண்டிருப்பான்.

ரோமியோ, செஹென்காஸ் (Sehuencas water frog) இனத்தைச் சேர்ந்த நீர்த்தவளை. 2009-ம் ஆண்டு பொலிவியக் காட்டுக்குள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டான். அவன் இனத்தைச் சேர்ந்த தவளைகளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இத்தனை ஆண்டுகளாக அவன் இனத்தைச் சேர்ந்த ஒரு தவளைகூடக் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் வாழ்வைத் தனிமையிலேயே கழித்தான் நம் ரோமியோ. அவனுக்குப் பிறகு செஹென்காஸ் இனத் தவளைகளே இருக்காது. அந்த இனமே அழிந்துவிடும் அபாயம் இருந்தது. ரோமியோவோடு அந்த இனமே அழிந்துபோக விடக்கூடாது என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர் அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள். பொலிவியாவில் மட்டுமே காணப்படும் எண்டெமிக் உயிரினமான செஹென்காஸ் நீர்த்தவளைகளைத் தேடி பொலிவியக் காடுகள் முற்றிலும் சுற்றினார்கள். நாள் கணக்கில் மாதக்கணக்கில் இல்லை, ஆண்டுக்கணக்கில்.

அவனுக்காக இணையத்தில் இணைதேடி விளம்பரங்களும் தரப்பட்டன. ஏதாவது மூளையில் யாரிடமாவது தற்செயலாக இதே இனத்தைச் சேர்ந்த பெண் தவளை இருந்துவிடாதா என்றதொரு நப்பாசை. அந்த விளம்பரங்கள் மூலமாகத் தங்கள் தேடுதல் வேட்டைக்கும் காடுகளுக்குள் மற்ற செஹென்காஸ் தவளைகளைத் தேடிச் செல்வதற்கும் நிதியுதவி திரட்டினார்கள். அந்த முயற்சிகள் வீணாகவில்லை. பத்தாண்டுகளாக நடந்த தேடுதலுக்குப் பலன் கிடைத்தது. நம் ரோமியோவுக்கு ஜூலியட்டும் கிடைத்துவிட்டாள். மூன்று ஆண் செஹென்காஸ்களும், இரண்டு பெண் செஹென்காஸ்களும் கிடைத்தன. அதில் ஒன்று மட்டும் இளம் பருவத்தது. மற்றவை இனப்பெருக்கம் செய்யும் வயதை எட்டியிருந்தன. அவற்றிடம் இருக்கும் பூஞ்சைத் தொற்றுகளைக் குணமாக்குவதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிகிச்சைகள் முடிந்தவுடன் ரோமியோ தன் ஜூலியட்டைச் சந்திப்பான். அதன்பின் அவர்களுக்குள் ஏற்படும் காதல் நடக்கவிருக்கும் இன அழிவைத் தடுக்கும். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

Photo Courtesy: Robin Moore, Global Wildlife Conservation

இந்தத் தேடுதலுக்குத் தலைமை தாங்கியவர் கொச்சபம்பா அருங்காட்சியகத்தின் தலைமை ஊர்வன ஆய்வாளர் தெரசா கமாச்சோ படானி. ரோமியோவைப் போன்ற தவளைகளைக் காட்டுக்குள் கண்டுபிடித்தவுடன், ``ரோமியோவின் ஜூலியட் கிடைத்துவிட்டாள்" என்று இன்பப் பூரிப்பில் சொன்னவரும் அவர்தான்.

``கடந்தாண்டு காதலர் தினத்தில், ரோமியோவுக்குக் காதலி கிடைக்க வேண்டுமென்று நிதியுதவி அளித்த அனைவருக்குமே நன்றி. இனி அவன் தனி ஆள் இல்லை. அவன் இனமும் அழிவிலிருந்து காப்பாற்றப்படும்" என்று உதவியவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் தெரசா படானி. படானியும் அவரது குழுவும் மார்ச் மாதம்வரை தங்கள் தேடுதலைத் தொடரவுள்ளனர். இன்னும்கூட காட்டுக்குள் இவை காணப்பட வாய்ப்புகள் உண்டு. அதோடு இன்னும் எங்காவது இந்த வகைத் தவளைகள் வாழ்கின்றனவா என்று தேடிப் பார்ப்பதன் மூலம் அவை எந்த மாதிரியான வாழ்விடங்களில் வாழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்த ஆய்வுகள் எதிர்காலத்தில் ரோமியோ உட்பட அனைத்து செஹென்காஸ் நீர்த்தவளைகளையும் பராமரிப்பிலிருந்து விடுவித்து காட்டுக்குள் விடும்போது உதவலாம்.

கண்டுபிடிக்கப்பட்ட அந்தத் தவளைகளை அருங்காட்சியகத்துக்குக் கொண்டு வந்தாயிற்று. ஒருவழியாக வெற்றியடைந்து விட்டோம் என்று முழுமையாக மகிழ்ச்சியடைய முடியாது. முக்கியமான கட்டமே இனிதான் தொடங்கவிருக்கிறது. 

காப்பிடத்தில் வைத்து இந்த உயிரினத்தைப் பாதுகாப்பது குறித்து ஏற்கெனவே ஆய்வாளர்களுக்கு அனுபவம் உண்டு. இத்தனை ஆண்டுகளாகத் தனிமையில் வாடிய ரோமியோவை எந்தவித மனோவியல் சிக்கல்களும் இல்லாமல் பயமின்றி நிம்மதியாக வாழும் அளவுக்குப் பராமரித்து உள்ளார்கள். அந்த அனுபவம் அவர்களுக்கு மற்றவற்றைப் பராமரிப்பதிலும் உதவும். இனி செய்ய வேண்டியது செஹென்காஸ் தவளைகளின் இனப்பெருக்கச் செயல்முறையை ஆய்வு செய்யவேண்டும். அதேசமயம், இந்த வகைத் தவளைகள் இன்னமும் காட்டில் வாழ்கின்றனவா என்பதைத் தேடவேண்டும். அப்படி வாழ்ந்தால் அவற்றைக் கவனித்து இனப்பெருக்கச் செயல்முறையைப் புரிந்துகொள்ள முயலவேண்டும். 

கடந்த 10 ஆண்டுகளாக இந்த இனத்தைச் சேர்ந்த ரோமியோ ஒருவனை மட்டுமே பார்த்துப் பழகிவிட்டார்கள். இவை எந்த மாதிரியான சூழலில் இனப்பெருக்கம் செய்யும், இனப்பெருக்கக் காலத்து அழைப்பு எப்படியானது என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டும். இவைபோக சுதந்திரமான சூழலில் அவை சந்திக்கும் பிரச்னைகளையும் பதிவு செய்தாக வேண்டும். சொல்லப்போனால் இனிதான் வேலையே தொடங்குகிறது. இந்தப் பத்தாண்டுகளாகச் செய்தது எல்லாம் ஆரம்பகட்ட வேலைகள் மட்டுமே. இந்த செஹென்காஸ் நீர்த்தவளைகள் பற்றி இதுவரை சேகரித்துள்ள தகவல்களை வைத்து ஒரு திட்டத்தை உருவாக்கலாம். அதன்மூலம் நீண்டகாலத் திட்டத்தைத் தீட்டுவதற்கான வேலையில் இறங்கலாம். அந்தத் திட்டம் எதிர்காலத்தில் ரோமியோவின் குழந்தைகளைக் காட்டுக்குள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வைப்பதாக அமையவேண்டும். அதன்மூலம் அந்த இனத்தையே அழிவிலிருந்து காப்பாற்றுவதாக அமையவேண்டும்.

வனத்தில் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் வாழும் நீர்த்தவளை இனம் இது. இவற்றின் எண்ணிக்கை குறையக் காரணம் அங்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மீன் இனங்கள். புதிதாக அறிமுகமான குளத்து மீன்கள் அப்பகுதி வனங்களில் ஆதிக்க உயிரினங்களாக மாறின. அவை இந்தத் தவளைகளின் முட்டைகளைச் சாப்பிட்டுத் தீர்த்தன. ஆதிக்க உயிரினங்களாக மாறிய அந்தப் புதியவகைக் குளத்து மீன்கள் இவற்றின் வாழிடங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கின. அது செஹென்காஸ் நீர்த்தவளைகளின் எண்ணிக்கை இவ்வளவு மோசமாகக் குறைய மிக முக்கியக் காரணம். அதுபோக சிட்ரிட் (Chytrid) என்ற வகை நோய்த்தொற்றும் அவற்றை அழிக்கத் தொடங்கின. சிற்றாறுகளில் வாழ்ந்துகொண்டிருந்த இவற்றின் எண்ணிக்கை அழிவதில் இந்த நோய்த்தொற்று பெரும்பங்காற்றியது. இந்தச் சிக்கல்களையும் சரிசெய்தாக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவற்றையும் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது படானி தலைமையிலான ஆய்வுக்குழு. இனப்பெருக்கக் காலம் முடிந்து புதிதாகப் பிறக்கப்போகும் ரோமியோவின் குழந்தைகளைக் காட்டுக்குள் சுதந்திரமாக விடுவதற்குமுன் இவற்றையும் சரிசெய்தாக வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Photo Courtesy: Stephane Knoll, Museo de Historia Natural Alcide d’Orbigny

அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கையை மீட்டெடுத்து மீண்டும் வெளியிடுவது எப்போதுமே எளிதான காரியமாக இருந்ததில்லை. ஆனால், அதைச் செய்தாக வேண்டிய தேவை இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் இவ்வுலகின் ஒவ்வோர் உயிருக்குமே வாழ உரிமையுண்டு. அந்த உரிமையை வழங்கவேண்டிய, அவை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித்தர வேண்டிய கடமை மனிதர்க்கு உண்டு.

ஸ்பெயின் மற்றும் தான்சானியாவில் இதேபோன்று அழியும் நிலையிலிருந்த தேரை இனங்களையும் பல தவளை இனங்களையும் காப்பாற்றி மீண்டும் இனப்பெருக்கம் செய்யவைத்து எண்ணிக்கையை அதிகப்படுத்தினர். அதேசமயம் அவற்றுக்கு வனத்துக்குள் இருந்த வாழ்விடச் சிக்கல்களைச் சரிசெய்து மீண்டும் சுதந்திரமாகவும் வாழ வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அதேபோன்ற வெற்றிக் கதையாக ரோமியோவின் கதையும் மாறவேண்டும். அதுவே படானியின் ஆசை. பொலிவிய மக்கள் அனைவரின் ஆசையும்கூட. ஜூலியட்டோடு சேர ரோமியோ காத்திருக்கிறான். இந்தக் காதலர் தினத்தை அவன் தனியாக வேதனையோடு கழிக்க வேண்டியதில்லை. ரோமியோ ஜூலியட் சேர்ந்துவிடுவார்கள். ஒரு காதல் ஓர் இனத்தையே அழிவிலிருந்து மீட்டெடுத்துவிடும்.